Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 09, 2012

Scanning of inner-heart (Scan Report No. 50 )

                                        கர்வம் நியாயம்தானே ?

" குளிச்சு முடிச்சிட்டியா ? " என்று பாத் ரூம் கதவோரமாக நின்று கொண்டு   கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் லட்சுமியம்மா
" இதென்னம்மா கேள்வி ? குளிச்சு முடிச்சிருந்தா வெளியே வந்திருப்பேனே ? இப்ப என்னதான் பிரச்சினை உனக்கு ? " என்று கடுப்பாக கேட்டாள் பத்மினி.
" அந்த குரங்கு சாமி வந்திருக்கான்டி ? "
" ஐயோ அம்மா , அவன் பேர் குரங்கு சாமி இல்லே. கு. ரங்கசாமி "
" ஆமாம், துடைப்பக் கட்டைக்கு எந்தப் பெயரா இருந்தா என்ன ? "
" அவரை உட்கார சொன்னியா ? என்ன ஏதுன்னு விசாரிச்சியா ? "
" இல்லே அவனை நம்ம வீட்டு வாசலில் பார்த்ததுமே எனக்கு கையும் ஓடலே. காலும் ஓடலே.   ஏண்டி அவன் கையில் ஒரு பேப்பர் வேறு வச்சிருக்கிறான்.நீ எழுதின ஏதாவது இன்னிக்கு பேப்பரில் வந்திருக்கா ? சண்டை கிண்டை போட வந்திருப்பானோ ? " என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டாள் லட்சுமி.
" ஐயோ, அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா . நீ அவரை உள்ளே வந்து உட்கார சொல்லு. குடிக்க ஏதாவது கொடு. இதோ நான் ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன் " என்ற பத்மினிக்கு தாயின் கவலை நியாயமாகவே பட்டது.
கிட்டத்தட்ட 24 குடித்தனக்கார்கள் இருக்கும் ஒரு இடத்தில், அத்தனை பேரையும் விட்டு விட்டு, தன்னைத் தேடி வந்து ஏதாவது வம்பு வளர்க்கவோ,குத்தலாகப் பேசவோ மட்டம் தட்டி பேசவோ ஆரம்பிக்கிறார் என்றால் அதற்கு  என்ன காரணம் இருக்க முடியும் என்பது இன்று வரை பத்மினிக்கு புரியாத புதிராகவே இருந்தது. இவ்வளவுக்கும் அவள் இங்கு குடி வந்து முழுதாக மூன்று மாதம் கூட ஆகவில்லை. கொடுக்கல் வாங்கல் என்று எந்த தொடர்பும் கிடையாது. மற்ற குடித்தனக் காரர்கள் எல்லோரும் அன்பாக ஆசையாக " வாங்க, எழுத்தாளினியம்மா . தண்ணீர் பிடிக்க நீங்க கூட வரிசையில் நிற்கணுமா  என்ன ?  மிஞ்சிப் போனா ஒரு குடம் இல்லாட்டி ஒரு வாளி குடிதண்ணீர் பிடிக்கப் போறீங்க . வந்தீங்களா, பிடிச்சீங்களா , போனீங்களானு இருங்க. " என்று சொல்ல இவர் மட்டும் " ஏன் எழுத்தாளன்னா, அவன் என்ன பெரிய இவனா ? அவனுகளுக்கு தலையில் என்ன கொம்பா முளைச்சிருக்கு ? " என்று முகத்தில் அடித்தாற்போல கேட்டபோது, அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை பத்மினி .
மற்றொருமுறை " என்னவோ ஊர் உலகத்தில் இல்லாத எழுத்தை தேடி கண்டு பிடித்தா  எழுதிக் கிழிக்கிறார்கள் . எல்லாம் தமிழில் உள்ள 247 எழுத்தை வச்சு தானே எழுதறாங்க " என்று கேட்டார்
" நீங்க சொல்றது ரொம்ப சரி சார் .  எல்லா ரைட்டர்ஸ்ம் தமிழில் உள்ள 247 எழுத்துக்களை வச்சுதான் எழுதுறாங்க. ஆனால் எந்த எழுத்தோட எந்த எழுத்தை சேர்த்தா, சேர்த்து மாலையா கோர்த்தா  அது அருமையான கதையா கவிதையா உருவெடுக்குங்கிறது ஒரு பக்குவப் பட்ட கலைஞனுக்கு தான் தெரியும். அது ஒரு கலை.. கடவுளோட கிப்ட் . அது சாமான்யத்தில் எல்லாருக்கும் கிடைச்சிடாது  " என்ற பத்மினி, அப்படி ஒரு உணர்ச்சி வேகத்தில் எதற்காகப் பேசினோம் . பேசி அவரோட மனசை நோகடித்தோம் என்று தனக்குத் தானே பல முறை  நொந்து கொண்டிருக்கிறாள். பத்திரிக்கைகளிலும் சானல்களிலும் பரபரப்பாக பேசப் படுகிற படைப்பாளி நான் என்ற தோரணையில் நான் என்றுமே நடந்து கொண்டதில்லையே . பிறகு ஏன் இந்த மனிதர் தேவையில்லாத வார்த்தைகளை சொல்லி என்னை தலை சுற்ற வைக்கிறார் என்றெல்லாம் நினைத்து குழம்பி இருக்கிறாள். அவரை நினைத்து அம்மா பயப்படும் போதெல்லாம், வீட்டை காலி செய்துவிட்டு வேறு எங்காவது போய்விடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறாள். 
" சீக்கிரம் வெளியில் வாடீ " என்று லட்சுமியம்மா பரபரப்பாகக் கூறியதும் தலையில் சுற்றிய துண்டுடன் வெளியில் வந்த பத்மினி, " வாங்க சார் , உங்க காலடி எங்கள் வீட்டு மண்ணில் பட்டதென்றால் , எங்க வீடு, எங்க வீட்டோடு சேர்த்து நாங்களும் பாக்கியம் பண்ணி இருக்கிறோம்னு நினைக்கிறேன் " என்று  போலித்தனமில்லாத வார்த்தைகளை வெளியிட்டாள்.
" காலங் கார்த்தாலே உங்களை டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்கிறேன் " என்றார் ரங்கசாமி சோபா விளிம்பில் நெளிந்தபடியே.
" நோ .. நோ .. நாட் அட் ஆல் .. என்ன சாப்பிடறீங்க ?"
" அதெல்லாம் எதுவும் வேண்டாம்.  என்னோட பேரும் இன்னிக்கு பேப்பரில் வந்திருக்கு " என்றார் சந்தோசமான குரலில்.
" ரியலி ? நீங்க கூட கதையெல்லாம் எழுதுவீங்களா ? சொல்லவே இல்லையே  சார் " என்றாள் உண்மையான குதூகலத்துடன்
" ஊஹும் .. ஒரு காலத்தில் எழுதினேன். ஆனால் நான் எழுதின எதுவும் பத்திரிக்கையில் வெளிவரவே இல்லை. அப்புறம் நிறுத்திட்டேன் "
" இல்லே சார் நீங்க தொடர்ந்து எழுதிகிட்டே இருந்திருக்கணும் ..எப்படியோ இப்போ உங்க பேர்  பிரசுரம் ஆயிட்டுதானே ? .. கொண்டாங்க பார்க்கலாம் " என்று பத்மினி சொன்னதுமே.கையிலிருந்த பத்திரிக்கையைப் பிரித்து
" இதோ "  என்று காட்ட , ஆர்வமாக வாங்கிப் படித்த பத்மினி " உங்க மகளுக்கு வரன் தேடறீங்களா ? இது மணமகன் தேவை விளம்பரம்தானே ? உங்க பேர், வீட்டு அட்ரஸ் எல்லாம் வந்திருக்கு "
" அப்பப்பா .. ஒரு விளம்பரத்துக்கே என்னமா பணத்தைக் கறக்கிறாங்க . ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பணம் என்றுதானே ரேட் பேசறாங்க . போற போக்கைப் பார்த்தா ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சார்ஜ்  பண்ணுவாங்க போலிருக்கு  "
" அட, பணத்தைப் பார்த்தா முடியுமா ? இருந்த இடத்திலிருந்தே நமக்கு வேலை ஆகுதே ! அதுதானே முக்கியம் .   சார் நான் ஒன்று கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்கதானே ? "
" கேளும்மா   நீ என் பொண்ணு மாதிரிதான் "
" உங்க சொந்த செலவில் ஒரு விளம்பரம் குடுத்துருக்கீங்க . உங்க பேர் பேப்பரில்  வந்திருக்கு. அதுக்கே நீங்க  இவ்வளவு சந்தோசப் படறீங்க . பத்திரிக்கைகள்  ஒரு எழுத்தாளனின்  மனக் கருத்தை ஏற்றுக் கொண்டு , அதை பக்கம் பக்கமா பிரசுரித்துவிட்டு  அதற்காக பணமும் தருகிறது. அதை எத்தனையோ லட்சம் பேர் படிக்கிறாங்க . அதை நினைச்சு ஒரு எழுத்தாளன் சந்தோசப் பட்டா , கர்வப் பட்டா அதில் என்ன தப்பிருக்கிறது ? தனது தலையில் கொம்பிருக்கிறதா அவன் நினைச்சா அது தப்பா ? ..  சார் உங்க மனசை புண் படுத்தறதுக்காக இதை நான் சொல்லலே . என்னோட ஆதங்கத்தை உங்க கிட்டே சொல்றேன். அவ்வளவுதான் " என்றாள் பத்மினி 
" ஸாரிம்மா " என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் ரங்கசாமி.தனது மீதிருந்த அவரின் காழ்ப்புணர்ச்சிக்கான காரணம் பத்மினிக்கு நன்றாகவே புரிந்தது.




No comments:

Post a Comment