Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 01, 2012

Scanning of inner heart ( Scan Report No.48 )

                                         சுத்திச்சுத்தி வந்தீக !

சாவித்திரி வீடு :

" அம்மா "
" சுசீலா , நீ இன்னுமா கிளம்பலே ? பாத்திரத்தை அடுக்கின கையேடு ரெக்கை கட்டிக் கிட்டு பறப்பியே ! "
" அம்மா, செலவுக்கு பணம் வேணும் ? "
 " அதானே பார்த்தேன். வரப்போற ரெண்டு மாசத்துக்கான பணத்தை ஏற்கனவே அட்வான்ஸா வாங்கியாச்சு. இன்னும் பணம் பணம்ன்னா, பணம் என்ன எனக்கு மரத்திலா காய்க்குது ?  என்னைக்காவது நீ  நேரத்துக்கு வேலைக்கு வந்திருக்கியா ? வீட்டைப்   பெருக்குகிறேன்னு துடைப்பத்தை தூக்கி கிட்டு இங்கேயும் அங்கேயும் டான்ஸ்  பண்ண வேண்டியது . பாத்திரத்தை அரைகுறையா தேய்ச்சுப் போட்டுட்டு ஓட வேண்டியது . நீ துவைக்கிற துணியில் என்னிக்காவது அழுக்கு   போயிருக்கா ? லீவு நாளில் திரும்பவும் நான் போட்டு துவைக்கிறேன். உனக்கு வேலையை ஒழுங்கா செய்ய முடியலே . காசை மட்டும் கணக்கா வாங்கிடுவே "
" கோவிச்சுக்காதேம்மா. பெயிண்ட் அடிக்கிற வேலைக்குப் போய் அது   கீழே விழுந்து வீட்டில் முடங்கிக்கிடக்கு . வருமானம் நின்னு போச்சு. தெனம் செலவுக்கும் மருந்து செலவுக்கும் சேர்த்து நான் வழி பண்ணியாகணும். உன்னை விட்டா எங்களுக்கு யாரும்மா குடுத்து உதவுவாங்க. எங்களைப் போல ஏழை பாளைங்களுக்கு உங்களைப்போல ஆளுங்க தானேம்மா  குடுத்து உதவணும். கடனாவாவது குடு தாயீ . திருப்பிக் குடுத்திடறேன்."
"  ஹூம்  எங்க வீக்நெசை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க " என்று சொல்லிய சாவித்திரி, " இதோ பாரு 300 ரூபாயை கடனா தர்றேன். திருப்பி தந்திடணும். மீதி 200 உன் புருசனோட மருந்து செலவுக்கு நான் தந்ததா இருக்கட்டும் " என்று சொல்லிவிட்டு  " என்னங்க, சுசீலாவுக்கு ஒரு 500 ரூபா குடுத்து அனுப்புங்க என்றாள். முருகன் பணத்தை எடுத்து நீட்ட " நல்லதும்மா " என்று சொல்லி முகம் மலர அங்கிருந்து நடந்தாள் வேலைக்காரி சுசீலா.
" என்னடி இது ?  மாசக் கடைசியும் அதுவுமா அவளுக்கு பணத்தை வாரிக் குடுக்கிறே ? " என்றார் முருகன்.
" பாவங்க .. நம்ம வீட்டில் வேலை பார்க்கிறா . நாம குடுத்து உதவாட்டா பிறகு யார்தான் குடுத்து உதவுவாங்க ? " என்று சமாதானம் சொன்னாள் சாவித்திரி .

சாவித்திரி வேலை பார்க்கும் அலுவலகம்  : 

" ஸார். ஹௌசிங் லோன் அப்ளை பண்ணி இருந்தேன். அந்த பேப்பெர்ஸ்
கொஞ்சம் சீக்கிரம் மூவ் ஆனால் ....." என்று சாவித்திரி சொல்லி முடிக்கும் முன்பாகவே, " உங்களுக்கு  என்னென்ன சலுகைகள்  உண்டுன்னு தெரிஞ்சு கரெக்டா அப்ளை பண்ணிடுங்க. ஆனா உங்க கடமை என்னென்ன என்கிறதைப்  பத்தி யோசிக்கவே மாட்டேங்கிறீங்க ." என்றார் மானேஜர்
" ஏன் ஸார் அப்படி சொல்றீங்க . நாங்க எல்லாம் வேலை பார்க்காமலா இந்த ஆபீஸ் இவ்வளவு நாளும் ரன் ஆகிறது. ஸார், அரசாங்கம் நமக்கு வருசத்துக்கு ஒரு தடவைதான் இன்கிரிமென்ட் தருது. வருசத்துக்கு  ரெண்டு தடவைதான் பஞ்சப்படி தருது. ஆனால் என் ஹவுஸ் ஓனர் மாசா மாசம் வாடகையை உயர்த்தி கேட்கிறான் .குடுக்கிற வாடகையை மிச்சம் பிடிச்சால் ரெண்டு வீடு கட்டிடலாம் போலிருக்கு. அதான் ...   கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க ஸார் . உங்களுக்கு  புண்ணியமாப் போகும் " என்று கெஞ்சலான குரலில் சொன்னாள் சாவித்திரி.
" பார்க்கிறேன் "
 " ரொம்ப தேங்க்ஸ் ஸார் "
" பார்க்கிறேன்னு மட்டும்தான் நான் சொன்னேன்  "
" நீங்க அப்படி சொன்னாலே மேட்டர் முடிஞ்சா மாதிரிதான் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சாவித்திரி
தனது உதவியாளரை அழைத்த மானேஜேர் ரகுநாதன்  " அந்தம்மா ஹௌசிங் லோன் பேப்பெர்ஸ் எல்லாத்தையும் மேலிடத்துக்கு அனுப்பிடுங்க.  பாவம், அவங்க கஷ்டத்தை சொல்றாங்க . நம்ம கையிலிருந்தா பணத்தைக் குடுக்கப் போறோம் ? பேப்பெர்ஸ் தானே அனுப்பப் போறோம் . அதை உடனே நீங்க செஞ்சிடுங்க " என்றார் கண்டிப்பான குரலில்.

மந்திரியின் வீடு

"வணக்கம்யா " என்று பணிவாக வணங்கி நின்றார்  மானேஜேர் ரகுநாதன்
" என்னைய்யா ? அந்த டிரான்ஸ்பர் விசயம்தானே ? " என்றார் மந்திரி வெகு அலட்சியமாக
" ஆமாம். நான் இங்கேயும் , என் குடும்பம் மதுரையிலுமா இருந்து கஷ்டப் படறோம். ரெட்டிப்பு செலவு. பாமிலியை மெயிண்டைன் பண்ண ரொம்பவும் திணற வேண்டியதா இருக்கு. நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணினா நான் என்னோட பாமிலியோடு திரும்பவும் மதுரையில் செட்டில் ஆகிடுவேன்.  உங்களைத்தான் மலை போல நம்பி இருக்கிறேன் " என்றார்  மானேஜேர் ரகுநாதன் பணிவாக
" இதை எல்லாம் கரெக்டா வந்து கேளுங்க . ரோடு மைண்டேனன்ஸ் எதுவும் சரியில்லே ஊரை சுத்தி சாக்கடை தண்ணி ஓடுதுன்னு மீடியாவில் கிழிகிழின்னு கிழிக்கிறாங்க .அதெல்லாம் உங்க கவனத்துக்கு வரலே அப்படித்தானே. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட் இருக்கு. அவங்க அவங்க வேலையை செய்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் நீங்க பண்ற தப்புக்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமா அரசாங்கம் சரி இல்லேன்னு  சொல்லிடறாங்க. இந்த சின்ன சின்ன வேலையை செய்து முடிக்க கூடவா  நாங்க வரணும் ? ஆர்டர் போடணும் ? மாசா மாசம் சம்பளம் வாங்கிறீங்க தானே ? "
" முடிஞ்சவரை செய்கிறோம் ... இருந்தாலும் ஒவ்வொரு வேலைக்கும் நாங்க  ...." என்று ரகுநாதன்  ஆரம்பித்ததுமே, " சரி சரி நான் பார்க்கிறேன் " என்று விடை கொடுத்த அமைச்சர், உதவியாளரை அழைத்து " இந்த ஆள் அடிக்கடி வந்து போறானேப்பா . அவன் கேஸ் என்னன்னு பார்த்து முடிச்சிடுங்க " என்றார்

சுசீலாவின் வீடு 

வீட்டுக்கு வெளியில் ஆரவாரம் கேட்கவும் , குடிசையை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள் சுசீலா
" இந்தாம்மா, கவுன்சிலர் எலேக்சன் வரப்போகுதில்லா , அதுக்கு ஓட்டு
 கேட்டு  அண்ணன் வந்திருக்கிறார் " என்று ஒருவர் சொல்ல , " இந்த தொகுதியில்  எங்க கட்சி சார்பா நிற்கிற அரங்கனுக்கு உங்க பொன்னான வாக்கைப் போட்டு ஜெயிக்க வைக்கணும்  " என்றார் அமைச்சர்
"தேர்தல் வரும்போதுதானே உங்களுக்கு எங்க ஞாபகம் வரும். போனதடவை எங்க தெருவுக்கு குழாய்த் தண்ணி கொண்டு வரோம்னு சொன்னீங்க " என்று  சொல்ல ஆரம்பிக்கும்போதே " இந்தாம்மா, முதல்லே அண்ணன் என்ன சொல்றார்னு கேளு. ஒவ்வொரு தொகுதியா ஒவ்வொன்னா செஞ்சுகிட்டு தானே வர்றோம்" என்று மற்றொருவர் சொல்ல, " அம்மா... உங்களைத் தான் நம்பி இருக்கிறோம். உங்க வாக்கை எங்கள் வேட்பாளருக்கே அளிக்கணும் " என்று அமைச்சர் பணிவாகக் கேட்க, " சரிங்கய்யா , வீடு தேடி வந்து,  வீட்டு வாசலில் நின்னு கேட்கிறீங்க . கண்டிப்பா நீங்க சொல்ற ஆளுக்கே போடறோம்" என்று சுசீலா  சொன்னதும், கூட்டம் அங்கிருந்து நகர்ந்து அடுத்த வீட்டை முற்றுகையிட, மிகுந்த கர்வத்துடன் குடிசைக்குள் நுழைந்தாள் சுசீலா 

No comments:

Post a Comment