( நான் எழுதிய இச்சிறுகதை 10.09.2005 தினமணி - சிறுவர்மணியில்
வெளியாகியுள்ளது )
வெளியாகியுள்ளது )
அனுபவம்
வகுப்புகள் முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையிலும் கூட தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சிவகுமாரை அழைத்துசொன்னது, "சிவா,சரியான நேரத்துக்கு போட்டி நடக்கிற இடத்துக்குக் கிளம்பிப் போயிடு. உன்னிடம் எல்லா திறமையும் இருக்கு. அந்த ஒரே ஒரு காரணத்தால் தான் உன்கிட்டே இருக்கிற அலட்சியப் போக்கு மன்னிக்கப் படுகிறது. ஸ்கூல்க்கு லேட்டா வர்ற மாதிரி, நாளைக்குப் போட்டி நடக்கிற இடத்துக்கும் போகாதே. உனக்கு அது புது இடம், புது சூழ்நிலை . அங்கே சரியாக காலை ஒன்பது மணிக் கெல்லாம் இருக்கணும். நீ லேட்டாகப் போனா, உன்னை உள்ளே அனுமதிக்க மாட்டாங்க. இந்தப் போட்டியில் மட்டும் நீ முதலில்வந்துட்டா, இந்தப் போட்டியை நடத்துகிற அறக் கட்டளை நிறுவனம் அவர்கள் செலவில் உன்னை வெளிநாட்டுக்கு
அனுப்புவாங்க. மாவட்ட அளவில் நடக்கும் அத்தனை போட்டிகளிலும் இத்தனை வருசமா நீதான் முதல் பரிசு வாங்கிட்டு வர்றே . அதனாலே இந்தப் போட்டியிலும் முதலில் வருவே . அந்த நம்பிக்கை எங்க எல்லோருக்குமே இருக்கு. அதனால்தான் நம்ம ஸ்கூல் சார்பில் உன்னை அனுப்பறோம் .கரெக்ட் டைம்க்கு போயிடு. "
" போயிடுவேன் மிஸ்." என்றான் சிவகுமார் வெகு அலட்சியமாக.
வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அம்மா, நாளைக்குத் தேவையானதை இப்பவே எடுத்து வச்சிட்டு விளையாடப் போ. சைக்கிளில் ' ஏர் ' இருக்கா ன்னு இப்பவே செக் பண்ணி,இன்னிக்கே ரெடி பண்ணி வச்சிடு. நாளைக்குக் காலையிலே 5.30 க்கு கிளம்பினாத்தான் நீ ஆறு மணி பஸ் பிடிக்க முடியும்.அந்த பஸ்சை பிடிச்சாத்தான், ஏழு மணிக்கு வர்ற மெயில்லைப் பிடிச்சு சென்னை போய் போட்டி நடக்கிற இடத்துக்கு சரியான நேரத்துக்குப் போய்ச் சேர முடியும் " என்றாள் .
" அதெல்லாம் போயிடலாம் " என்று சொல்லி விட்டு விளையாடக் கிளம்பிய சிவகுமார் இரவு 9 மணிக்கு மேல்தான் வீடு வந்து சேர்ந்தான்.
மறுநாள் காலையில் ,அப்பாவும் அம்மாவும் "எழுந்திரு சிவா,நேரம் ஆயிட்டுது " என்று சுப்ரபாதம் பாடி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாகக் கிளம்பி பாதி தூரம் வந்ததும் ஏதோ பாட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. வேறொன்றுமில்லை. சைக்கிள் டியூப் வெடித்து விட்டது அவ்வளவு தான்
அப்பா சிறிதும் தயங்காமல், "சிவா, நீ இந்தப் பணத்தை எடுத்துட்டு சீக்கிரம் ஓடு. அப்பத்தான் ஆறு மணி பஸ்ஸைப் பிடிக்க முடியும். நான் தெரிஞ்சவங்க வீட்டில் சைக்கிளை விட்டுட்டு வர்றேன் " என்றார் .
மூச்சிரைக்க ஓடி, பஸ் ஸ்டாப்பை அடைந்தபோது , " என்ன தம்பி , ஆறு மணி பஸ் பிடிக்கவா ஓடி வர்றே ? இப்பத்தான் கிளம்பிப் போச்சு. நான் அந்த வண்டியில் தான் வந்திறங்கினேன். ஒரு நிமிஷம் முன்னேமே நீ
வந்திருந்தா அந்த வண்டியைப் பிடிச்சிருக்கலாமே " என்றார் அங்கிருந்த ஒரு முதியவர் .இதற்குள் அப்பாவும் அங்கே வந்து சேர்ந்து விட்டார் . அன்றைக்கென்று, அடுத்த பஸ் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தது. பஸ் ஏறி ஒருவழியாக ரயில் வே ஸ்டேஷன் சென்றபோது, ' மெயில் கிளம்பிப் போய் ஒர மணி நேரமாச்சே. இன்னிக்கு என்னவோ வண்டி கரெக்ட் டைம்க்கு வந்துட்டு, கிளம்பிட்டுது. அடுத்த பாசெஞ்செர் வண்டி அரை மணி நேரம் கழித்துதான் வரும் " என்று சொன்னார்கள் .
"சிவா, இனிமே நாம அங்கே போயும் பிரயோஜனமில்லே. கால்- டாக்ஸி வச்சு போனாக் கூட, பதினோரு மணிக்கு மேலேயே ஆயிடும். வா வீட்டுக்கு திரும்பிப் போகலாம் " என்றார் அப்பா.
ஒரு நிமிட தாமதத்தால் ஒரு பஸ்ஸை , தவற விட்டுவிட்டு , ஒரு மணி நேர தாமதத்தால் ஒரு ரயிலை தவறவிட்டு, கிடைக்க இருந்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டு, அடுத்த சந்தர்ப்பத்திற்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தபோது அழுகை வந்தது சிவாவிற்கு.
"இப்போ அழுது எந்த பிரயோஜனம் இல்லை. இப்படி ஆயிடும்னு தான் எல்லோரும் படிச்சுப் படிச்சு சொல்றோம். நீ கேட்கலே. இனி மேலாவது
எதையும் சரியான நேரத்தில் செய்யப் பழகிக்கோ " என்றார் அப்பா
மறுநாள் ஸ்கூல்க்குப் போனபோது , சக மாணவர்கள்தான் இதைப் பற்றி பேசினார்களே தவிர ஆசிரியர்கள் யாரும் இதைப்பற்றி பேசவே இல்லை. இது மிகவும் உறுத்தலாக இருந்தது சிவாவிற்கு. அதனால் அவனே நேராக தலைமையாசிரியரிடம் சென்று " மிஸ் ... நேத்து .." என்ற போது , "தெரியும் சிவக்குமார். ஏற்கனவே நீ வருத்தத்தில் இருக்கிறே. தெரிஞ்ச விஷயத்தைப் பத்திப் பேசி உன்னை நோகடிக்க விரும்பலே. அதனால் தான் , உன்னிடம் எதுவும் கேட்காமே இருந்தோம் . இனிமேல் உனக்குப் பொறுப்பு வந்திடும்.' போகிற பாதையில் முள் இருக்கு. பார்த்துப் போ 'ன்னு சொன்னா , எத்தனை பேராலே எச்சரிக்கையாப் பார்த்துப் போக முடியும். ஆனா, ஒரே ஒரு தடவை காலில் முள் குத்திட்டா , எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் கவனமா எடுத்து வைப்பாங்க. மனசைத் தளர விடாதே.இன்னிக்குஒன்று உனக்குக் கிடைக்காததால் அதுஎன்றைக்குமே கிடைக்காதுன்னு நினைச்சிடாதே .ஒரு சிலருக்கு தானாகவே தெரியும். ஒரு சிலருக்கு, மற்றவர்கள் எடுத்து சொன்னால் புரியும். ஒரு சிலருக்கு அனுபவித்தால்தான் புரியும் நேரத்தின் அருமை இப்போ உனக்குப் புரிஞ்சிருக்கும். அதைக் கற்றுக் கொள்ள நீ கொடுத்த விலைதான் அதிகம் . முயற்சி செய்வதை மட்டும் விட்டு விடாதே " என்றார்.
அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
No comments:
Post a Comment