Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 30, 2012

படிக்க வேண்டும் !

புத்தகம் படிக்கிறது என்பது இப்போது மிகவும் குறைந்து வருகிறது. குழந்தைகளுக்கு உடலுக்கு நல்லது என்று வகை வகையான உணவு கொடுக்கிறோம். வைட்டமின் மாத்திரை மருந்து என்று விதம் விதமாக வாங்கிக் கொடுக்கிறோம்.  ஆனால் படிப்பதற்கு புத்தகங்களை ( பாடப் புத்தகம் தவிர ) பத்திரிக்கைகளை எத்தனை குடும்பங்களில் வாங்கிக் கொடுக்கிறோம் ?

சிறுவயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் எல்லோருக்கும்  உண்டு. எனது அப்பா இரவு நேரங்களில், குழந்தைகள் எக்ஸாம்க்கு படிப்பது போல படிப்பார். வாடகை வீடுகளில், இரவு 9 மணிக்கு மேல் electric light use பண்ணுவதை வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் கெரஸின் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பார். நான் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, நான் வீட்டில் இருந்த நேரத்தை விட லைப்ரரியில் இருந்த நேரம்தான் அதிகம். இன்று என் அம்மாவிற்கு 86 வயது.  இந்த வயதிலும் சரி, கண்ணில் பத்திரிக்கை தட்டுப் பட்டுவிட்டால் அதைப் படித்து முடித்து விட்டுதான் மறு வேலை பார்ப்பார்.

 ஒரு 50 வருடத்திற்கு முன்பான கால கட்டத்தில், இப்போது வருவது போல  இப்போது இருப்பதுபோல, பத்திரிக்கைகள் வந்ததில்லை. விகடன், குமுதம், கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, ராணி என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் பத்திரிகைகள் வெளி வந்தன. ஒவ்வொரு பத்திரிக்கை -க்கும்  ஒரு தனித் தன்மை இருந்தது. விகடன் அட்டைப்படத்தில் வரும் ஜோக்ஸ் எப்பேர்ப் பட்ட சிடுமூஞ்சியையும் சிரிக்க வைத்து விடும். குமுதத்தில் தரமான சிறுகதைகள் வெளி வரும். குமுதத்தில் வெளியான  சாண்டில்யனின் சரித்திர நாவல்களை கையில் எடுத்தால், அதைப் படித்து முடிக்குமுன் கீழே வைக்க மனசு வராது. சரித்திர நாவல்களுக்கு கல்கி, துணுக்கு செய்திகளுக்கு கல்கண்டு --  சினிமா செய்திகளுக்காகவே பேசும்படம் ..   இப்படி ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு தனிப் பட்ட தன்மை இருந்தது.  எனது கசின்ஸ்க்கு கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் சொல்வதுதான் வேத வாக்கு. ( அவர் எழுதிய  " சங்கர்லால் துப்பறிகிறார் " கதைத் தொகுப்பு விறுவிறுப்பும் வேகமும் கொண்டது. ) அவர்.  காப்பி குடிப்பது உடல் நலனுக்கு கேடு என்று ஒரு முறை கல்கண்டில் எழுதினர். அதைப் படித்த தினத்திலிருந்து காப்பி குடிப்பதை அவர்கள் நிறுத்தி விட்டார்கள். எனது பாட்டியம்மா அடிக்கடி சொல்லும் சுலோகம் : " அந்த தமிழ்வாணனை நம்ம வீட்டுக்கு ஒருமுறை கூட்டிட்டு வரணும்".  " ஏன்ம்மா ?" என்று கேட்போம் " நிறைய சினிமா பார்க்கக் கூடாதுன்னு நான் சொன்னா நீங்க கேட்க மாட்டீங்க அவக  சொன்னா கேட்பீங்க . அதனாலே அவகள  விட்டு, சினிமா பார்க்கக் கூடாதுன்னு சொல்ல வைக்கணும் " என்று பதில் சொல்வார் . இதை ஏன் சொல்கிறேனென்றால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் மரியாதை கொடுத்தோம். வெள்ளிக் கிழமை எப்போது வரும் என்று காத்திருப்போம் - விகடன் படிப்பதற்காக. அதில் மணியன் எழுதிய தொடர்கதைகளைப் படிக்கும்போது புத்தகம் படிக்கிற உணர்வு உண்டாகாது.  ஏதோ சினிமாப் படம் பார்ப்பதுபோல இருக்கும். கதையில் வரும் காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் வர்ணித்து இருப்பார். இந்த சம்பவம் நடந்த காலத்தில் , நாங்கள் திருநெல்வேலியில் இருந்தோம். மணியன் மெட்ராஸ் நகரில் நடக்கும் காட்சிகளை எழுத்தில் கொடுக்கும்போது, அதைப் படித்து விட்டு  மெட்ராஸ்  ( இப்போதைய சென்னை ) பார்க்க வேண்டும் என்று எத்தனை நாள் 
ஏங்கி இருக்கிறோம். ஸ்கூல் நாட்களில் கூட படுக்கையை விட்டு லேட் ஆக எழும்பி இருக்கிறோம். ஆனால் ஞாயிறன்று அதிகாலையில் எழும்பி விடுவோம். அன்றுதான் " குமுதம்  " வீடு தேடி வரும். நான்தான் முதலில்
படிப்பேன் என்று எங்களுக்குள் சண்டையே வரும். இந்த சண்டையில் அப்பாவும் கலந்து கொள்வார்.  ஒருவரை மற்றவர் வெறுப்பேற்றுவதற்காக வேண்டுமென்றே பத்திரிக்கையை அட்டை TO  அட்டை திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டிருப்போம்.

புதன் கிழமை காலையில்தான் " ராணி " வரும். ஆனால் கடைகளுக்கு முதல் நாளே, அதாவது செவ்வாய்க் கிழமை இரவில் வந்து விடும். அதற்காக கடைக்குப் போய்  காத்துக் கிடப்போம். ஒரு முறை கடைக்கு புத்தக லோட் வர
தாமதமாகி, அதன் பிறகு புக் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது, நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்து விட்டதால் . வீட்டுக்கு வந்து அடி வாங்கிய அனுபவம் உண்டு.

கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். நினைத்தால் போதும், உடனே படகில்
துடுப்பு ஏந்தி பவனி வரும் முரட்டுப் பெண் அவள்.  சிறுவயதில், என்னை நானே   பூங்குழலியாக  கற்பனை செய்துகொண்டு கற்பனைப் படகில் பவனி வந்திருக்கிறேன்.  படகில் போகும் ஆசையை 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான்  சென்ற பொது தீர்த்துக் கொண்டேன். அங்கு இருந்த 5 நாட்களில் ,
4 தினம் முழுக்க படகில்தான் சுற்றி வந்தோம். சமீபத்தில் கல்கி நிறுவனம் மலிவு விலையில்  கல்கி எழுதிய கதைகளை வெளியிட்டபோது ஒரு செட் வாங்கி வைத்து விட்டேன். RETIRE ஆனதும் படிப்பதற்காக.( எனது தங்கையின் மகன் ஒரு புத்தப் புழு. சரித்திரக் கதைகள் படிப்பதில் ஆர்வம் காட்டுவான்  )
கல்கி எழுதிய " பார்த்திபன் கனவு " எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.

ஆனால், இப்போது என்னிடம் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இன்னும் சொல்லப் போனால் இல்லாமலே போய் விட்டது. காலத்துக்கு ஏற்றபடி பத்திரிக்கைகள் தங்களது தனித் தன்மையை மாற்றிக் கொண்டன. அந்த மாற்றங்களை எங்களால் ஏற்க முடியவில்லை என்பது முதல் காரணம். படிக்க நேரமில்லை என்பது இரண்டாவது காரணம்.

இன்றைக்கும் நான் கவனிக்கும் ஒரு விஷயம். ஒவ்வொருவரும் அவர்கள் TASTE க்கு தக்கபடி எதையோ படிக்கிறார்கள். அதைப் பற்றி மற்றவர்களிடம் விவாதித்து நான் பார்த்ததில்லை.  ஆனால் குறுக்கெழுத்துப் புதிர்களை மட்டும்  மற்றவர்களை சந்தேகம் கேட்டு DISCUSS  பண்ணியே   விடை எழுதுகிறார்கள்.
நானுமே அப்படித்தான். என்னதான் தலை போகிற அவசரம் இருந்தாலும் சரி  - குறுக்கெழுத்துப் புதிர் என் கண்ணில் பட்டு விட்டால் போதும். விடையை எழுதி விட்டுதான் மறுவேலை பார்ப்பேன்.

ஒரு ஆள். எல்லாருக்கும் எல்லாம் கொடுக்க கூடியவர்தான். ஆனால் அவர் வாங்கும் பத்திரிக்கைகளை மட்டும்  யாருக்கும் இரவல் தர மாட்டாராம். காரணம் கேட்டால், " ஒருத்தன் காசு கொடுத்து வாங்கி, அத்தனை பேரும் இரவல் வாங்கியே படிக்க ஆரம்பித்து விட்டால் , பத்திரிக்கை நடத்துகிறவன் பொழைப்பு என்னாவது ? அவனை நம்பி பத்திரிக்கை ஆபீசில் வேலை பார்க்கிறவங்க பொழைப்பு என்னாவது  ? " என்பாராம். " உடம்பை வளர்க்க எவ்வளவோ செலவு பண்றோம். மூளையை வளர்க்கவும் கொஞ்சம் செலவு பண்ணுங்களேன் " என்று அட்வைஸ் பண்ணுவாராம்.

மற்றொருவர், தனது நண்பர்களுக்கு எப்போதுமே  புத்தகங்களைத்தான்  பரிசாக அளிப்பாராம். புத்தகத்தின் அட்டையில், அந்தப் புத்தகம் , தன்னால்  இன்னாருக்குக் கொடுக்கப் பட்டது என்ற விவரத்தையும்  குறிப்பிடுவாராம். ஒருமுறை அவர் பழைய புத்தகம் விற்கும் கடைக்கு சென்றபோது, நண்பர் ஒருவருக்கு இவர் பரிசாக கொடுத்த புத்தகம் அங்கு இருப்பதைக் கண்டு, அதை விலை கொடுத்து வாங்கி, அந்த நண்பரிடம் கொண்டுபோய் கொடுத்தாராம்.  நண்பர் அசடு வழிந்துகொண்டு, " பழைய புக்ஸ்  பத்திரப்படுத்தி வைக்க  பீரோ இல்லை " என்றாராம். இவர், மறுநாளே நண்பர் வீட்டுக்கு ஒரு பீரோவை இனாமாக அனுப்பி வைத்தாராம்.

இணைய தளத்தில், என்னதான் விஷயங்கள் வந்தாலும், அதை நாம் எவ்வளவுதான் படித்தாலும் . ஒரு புத்தகத்தை கையில் விரித்து வைத்துக் கொண்டு, பஸ்ஸுக்காக காத்திருக்கும் நேரத்தில் பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டும், வீட்டில்  நின்று கொண்டும், நடந்து கொண்டும், படுத்துக் கொண்டும், அடுக்களையில் சமையல் வேலையை, புத்தகமும் கையுமாக கவனித்து கொண்டும் படிக்கிற சுகத்தை இணைய தளம் தருகிறதா ?

குறும்பு செய்திகளுக்கு பத்திரிக்கைகளில் பஞ்சமே இல்லை. ஒரு பிரபலம். மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணப் பட்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் உயிர் போய்  விடும் நிலைமை. இந்த விசயத்தை மிகவும் அவசரமாக  " இன்னார் உயிர் பிரிந்து விட்டார் "  என்று செய்தி வெளி
யிட்டது ஒரு பத்திரிகை.  ஆனால் எப்படியோ பிரபலம் பிழைத்துக் கொண்டார். பிரபலத்தின் குடும்பத்தினர், பத்திரிக்கை மீது தங்கள் கோபத்தைக் காட்ட,
மறுநாள் " இன்னார் இன்னும் இறக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் " என்று செய்து வெளியிட்டதாம் அந்த குறும்புக் கார பத்திரிக்கை.

குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொடுங்கள் . தரமான புத்தகங்களை  வாங்கிக் கொடுங்கள். ( இதை சொல்லும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு 13 வயது . எனது கஸின்க்கு  15 வயது. அவன் கையில் " காதல் " என்றொரு பத்திரிக்கையைப்
பார்த்ததும், நான் ஆச்சரியத்துடன் " என்ன சித்தி. உன் பிள்ளையாண்டன்  காதலைப் பற்றி படிக்க ஆரம்பித்து விட்டான்?" என்று கேட்டேன். சித்தி சிறிதும் தயங்காமல், " படிக்கட்டுமே . அதில் என்னதான் எழுதி இருக்கிறார்கள் என்று
படித்துத் தெரிந்து கொள்ளட்டுமே " என்றாள்.

நமக்கு தெரிந்திருப்பது மிகவும் கொஞ்சம் என்பதையே, நாம் நிறைய விசயங்களைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொள்ள முடிகிறது . அந்த ஒரு காரணத்திற்காகவாவது படிக்கும் பழக்கத்தை அவர்களுக்குள் உருவாக்க வேண்டும்.

( கொசுறு செய்தி : 1990 -- , நான் எழுதிய  சிறுகதைகள், புதிர்கள், நாளிதழ்களில் வெளியாக ஆரம்பித்த  கால கட்டம் அது. பத்திரிக்கையை என் தோழியிடம் காட்டி, "  நான் எழுதின கதை வந்திருக்கு " என்று சந்தோசமாக சொல்வேன்.
" இதோ பாருங்க கண்ணம்மா, நாளிதழ் எல்லாம் செய்திக்குதான் முன்னுரிமை தருவாங்க. போனாப் போகுதுன்னு உங்க கதையைப் போட்டிருப்பாங்க. கதைகளுக்காகவே வர்ற பத்திரிக்கை குமுதம், விகடன் கல்கி எல்லாம் இருக்கு. அதில் என்றைக்கு உங்க கதை வருதோ அன்னிக்குத்தான் உங்களை ஒரு WRITER ன்னு ACCEPT பண்ணுவேன் " என்று சொல்லி, பலூனில் ஊசி குத்தற மாதிரி குத்துவாங்க. ( தோழிக்கு பாரதியார் மீது மதிப்பும், பாரதியின் கவிதைகளிடம் வெறித்தனமான காதலும் உண்டு. அதனால் என்னை கண்ணம்மா என்று அழைப்பார். ) நான் எழுதிய சிறுகதைகள் விகடனில்  வெளியாகி , குமுதத்தில் வெளியாகும் வரை காத்திருந்தேன். குமுதத்தில் ஒரு சிறுகதை வெளியானதும் ஓடி சென்று  " இப்போ என்ன சொல்றீங்க ? " என்றேன். வாங்கிப் படித்துப் பார்த்து விட்டு, " வாங்க வெளியே போயிட்டு வரலாம் " என்று  சொல்லி  என்னை வெளியில் அழைத்துப் போனார்கள். சரி , நமக்கு ஏதோ TREAT தரப் போறாங்க போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு , எங்கே போகிறோம் என்பது தெரியாமலே அவர்களுடன் போனேன்.
( எனக்குள்  ஒரு சந்தோசம் - எந்தப் பத்திரிக்கைகளை  சிறுவயதில் நாம் ஆசைப்பட்டு படித்தோமோ அதே பத்திரிக்கைகளில் எனது படைப்பும் வெளியாகியுள்ளதே. அதை நிறைய பேர் படிப்பார்களே  என்று )
என் தோழி என்னை அழைத்து சென்ற இடம், அடையாரில் உள்ள ஒரு லைப்ரரி ( ஆபீஸ்லிருந்து கொஞ்ச தூரத்தில்  உள்ளது ).
" இதோ பார்த்தீங்களா கண்ணம்மா , இங்கே எத்தனை ராக்ஸ் இருக்கு, அதில் எவ்வளவு புத்தகம் இருக்குன்னு. ஆயிரக்கணக்கான பேர் எழுதின நூத்துக் கணக்கான புத்தகம். இங்குள்ள  அலமாரியில் ஏதாவது ஒரு மூலையிலாவது நீங்க எழுதின புக்ஸ் இடம் பிடிக்கணும். அப்பத்தான் நான் உங்களை நான் WRITER ன்னு ஒத்துக்குவேன். நீங்க பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பற காலம் போய், அவங்க வந்து " எங்க பத்திரிக்கைக்கு எழுதுங்கன்னு கேட்கணும்   " என்று சொன்னார்கள்.

தோழி இந்த மாதிரி சொன்னதும், எனக்கு ரோஷம் வந்து நிறைய எழுத ஆரம்பிச்சிருப்பேன்னு நினைத்து விடாதீர்கள். பத்திரிக்கைக்கு எழுதி அனுப்புவதை அன்றோடு நிறுத்தி விட்டேன். கதை எழுதும் விசயத்தில் எனக்கும் பத்திரிகைகளுக்கும் CONTACT என்பதே இல்லாமல் போய்விட்டது.)


No comments:

Post a Comment