Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 17, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 38


 ( நான் எழுதிய இச்சிறுகதை 26.01.1992 " தினமணி கதிரி" ல் வெளியாகியுள்ளது )

  
             மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சி !!

" கிணீங்க் "
" ............ "
" கிணீங்க் , கிணீங்க் ..... க் .....க்  "
"இந்தாப்பா .. துக்காராம்,மேனேஜர் ரெண்டாவது முறையா மணி யடிக்கிறாரே காதில் விழலே ? " என்றார் ஆபீஸ் சூப்ரென்ட் , மூக்குக் கண்ணாடியை சரி  செய்து கொண்டே
" இதோ " என்று ஓடினான் துக்காராம்.
மேனேஜர் ரூமுக்குள் தலையை நீட்டி " யெஸ் ..  ஸார்  " என்றான் 
" கம் இன் ஸைட் .. அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் எங்கேப்பா .? "
" எடுத்தாறேன் ஸார்  "
" என்னப்பா .. மணி பத்தாகுது .. இன்னும் ரிஜிஸ்டர் என் டேபிளுக்கு வந்து 
சேரலே ? "
" இன்னும் அந்த அம்மா வரலே ஸார்.  " 
" எந்த அம்மா ? "
" அதான் ஸார்.. நளினியம்மா .. அவங்க இன்னும் வரலே " 
" யார் ... அவங்க ? .. இங்கே என்னவாக இருக்காங்க ? "
"  அசிஸ்டெண்ட் "
" அசிஸ்டெண்ட் தானே ? ஆபிசர் இல்லையே .. அவங்க ஆபீஸ் வர்ற வரை அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் வெளியே போட்டு வைத்திருப்பதற்கு  ? போய் சூப்ரென்ட் ஸாரை வரச் சொல் "
" சரி ஸார் .."

"குட்மார்னிங்  " என்றவாறே மெதுவாக மேனேஜர் ரூமுக்குள் நுழைந்தார் 
ஆபீஸ் சூப்ரென்ட் 
" மணி  பத்தாகியும் என்  டேபிளுக்கு  அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் வந்து 
சேரலே . ஏன்னு கேட்டா .. நளினி மேடம் வந்து சேரலேன்னு பதில் வருது.
ஏன் ஸார் .. அந்தம்மா வந்த பிறகுதான் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் குளோஸ் பண்ணனும்னு  ஏதாவது ரூல்ஸ் இருக்கிறதா , என்ன ?  நான் தெரியாமத்தான் கேட்கிறேன், அப்படி ஏதாவது உண்டா ? " 
" இல்லே ஸார் " என்று இழுத்தார் ஆபீஸ் சூப்ரென்ட்
" பின்னே ? "
" அந்தம்மா வர்றதுக்கு முன்னாடி குளோஸ் பண்ணிட்டா 'காச்ச்மூச்ச் ' ன்னு கத்தும் " 
" ஏன் கத்தறாங்க ? " 

"வீட்டை விட்டுக் கிளம்பி பஸ் பிடித்து வந்து சேரும் அவஸ்தை எனக்குத்தானே தெரியும்! அதுக்குள் ஏன்  குளோஸ் பண்ணீட்டீங்க  அட்டெண்டன்ஸ்சை என்று  அலறுவாங்க "
" ஏன் ஸார் . உங்களுக்கெல்லாம் வாய் கிடையாதா ? "
" வாய் இருக்கு .. ஆனா, ' வாய்ஸ் 'த்தான் இல்லே  "
" அப்படின்னா ? "
" அந்த அம்மாக்கு அரசியல்வாதிகளிடம் நல்ல செல்வாக்கு உண்டு . நாம 
ஏதாவது கேட்டுட்டா போதும் . உன்னை விட்டேனா பார், அது இதும்பாங்க 
படிச்ச லேடியா , லட்சணமா பேச மாட்டாங்க... அவங்க வாய்க்கு பயந்தே 
அவங்க எது செஞ்சாலும் இங்கே யாரும் கண்டு கொள்வது இல்லே. ஆனா, அதைக் கூட அந்த அம்மா தனக்கு கிடைக்கிற கௌரவம் என்று நினைக்கிற டைப் .. இன்னும் சொல்லப் போனா, அவங்களை யாராவது கேள்வி கேட்டால் ,நாலஞ்சு ரௌடிகளை விட்டு அடிக்கச் சொன்னால் கூட, நாம  ஆச்சரியப் படறதுக்கு இல்லே .."
" ஓஹோ ? அவ்வளவு நல்லவங்களா !? "
" என்னத்தைச் சொல்றது  ஸார் .. "
" லேட்டாக வருவாங்க .. சரி .. வந்து  .. அவங்க வேலையையாவது ஒழுங்கா செய்வாங்களா.. மாட்டாங்களா ? "
"அவங்க ஒரு வேலையை செஞ்சா, அதிலே இருக்கிற தப்பிக் கண்டு பிடிச்சு சரிசெய்ய ரெண்டு பேர் வேணும். அதைவிட அவங்களிடம் எந்த வொரு வேலையையும்    கொடுக்காமே இருப்பதே நிம்மதியான பாடு ஸார் .."
" அப்ப அந்த அம்மா இங்கே  என்னதான் செய்றாங்க ? "
"பத்து மணிக்கு மேலே வந்து  அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுட்டு , அந்த களைப்பு தீர ஒரு அரை மணி நேரம் சேரில் சாய்ந்து  உட்காருவாங்க. ஸ்ரீராமஜெயம் எழுதி முடித்து விட்டு, பக்கத்து சீட் விமலாவை துணைக்கு அழைச்சிட்டு காண்டீன்க்குப் போனா, திரும்பி வர கொறஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும். காப்பி குடிச்ச களைப்பு தீர கொஞ்ச நேரம் ரெஸ்ட் .. இடையிலே கொஞ்ச நேரம் , முதல்நாள் டிவி ப்ரோக்ராமை அனலிஸ்  செய்வாங்க. அப்புறம் மாமியார் தொல்லை, அந்த வார தொடர் கதைகளின் விமரிசனம், இதெல்லாம் பேசி முடியறதுக்குள் லஞ்ச் டைம் வந்துடும். லஞ்சை  ரெண்டு மணிக்குள் முடிச்சிட்டு வந்துட்டாங்கன்னா அது அந்த சீட் செய்த புண்ணியம். பழையபடி , கதை  புக், காபி ..ன்னு ஆபீஸ் டைமே முடியும் நேரம் வந்துடும். இதற்கிடையில் ரொம்பவும் போரடிச்சா,ஏதாவது பைலைப்  புரட்டிப் பார்ப்பாங்க. இதுதான் ஸார் அவங்களோட  வொர்க்சட்யூல்..."
" உங்களுக்கு இங்கே என்ன போஸ்ட் ? "
" ஆபீஸ் சூபரின்ட்டேன்ட்.."
" இதைச் சொல்ல  உங்களுக்கு வெட்கமா இல்லே ?.. ஏன் ஸார் .. வேலையே செய்யாமே ஒரு லேடி இவ்வளவு காலமா சம்பளத்தை மட்டும் வாங்கிகிட்டு போறாங்கன்னு சொன்னா,ஒரு ஆபீஸ் சூபரின்ட் டேன்ட்.. நீங்க எப்படி ஸார் அதை பார்த்துகிட்டு பொறுமையா இருக்கலாம் ? எப்படி அந்த போஸ்ட்டில் அவங்களை கன்டினியூ பண்ண விட்டீங்க ? "
" சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது.. எனக்கு உங்க வயசில் ஒரு பையன் இருக்கிறான்.  இன்னும் மூன்று மாசத்தில் நான் ரிடைர்ட் ஆகிவிடுவேன்.நீங்க உத்யோகத்துக்குப் புதுசு. இந்த ஆபீஸ்க்கும்  புதுசு. வேலைக்கு வந்து சேர்ந்த புதிதிலே,  எனக்கும் உங்களைப் போலத்தான் ரத்தம் கொதிக்கும் ,உடம்பு சூடாகும்  இந்த மாதிரி அநியாயங்களைக் கண்டு ... பிறகு, கவர்மெண்ட் ஆபீஸ்னா  இப்படித்தான் இருக்கும்கிறதும் பழகிப் போச்சு. இதுவேபிரைவேட் கம்பெனியா இருந்தால் , முதல் மாச சம்பளம் கொடுக்கும்போதே டெர்மினேசன் ஆர்டரையும் கையில் கொடுத்து வெளியில் அனுப்பி இருப்பாங்க. இது கவர்மெண்ட் ஆபீஸ் ஆச்சே.! என்ன செய்றது ? ஒருத்தன் ரெண்டு இட்லி சாப்பிட்டான்னா , அவனுக்கு மேலே மேலே இட்லி குடுத்து கிட்டே இரு. முதலில் குடுத்த ரெண்டு இட்லியையே சாப்பிட முடியாமே  உட்கார்ந்திருந்தான்னா,  அதை வாங்கி வேறே யாராவது சாப்பிடறவன் கிட்டே குடு.. இதுதான் ஸார்  கவர்மெண்ட் ஆபீஸ் பாலிசி. இப்ப நான் ' இட்லி 'ன்னு சொல்றது  வேலையைத்தான்." 
" இதை எப்படி ஆரம்பத்திலேயே கவனிக்காமே விட்டீங்க ? "
"அதுதான் சொல்கிறேனே ஸார் , அந்த அம்மா அரைமணி  நேரம் ஏதாவது 
வேலை செஞ்சா, அதிலுள்ள தப்பை கண்டு பிடிச்சு சரி செய்ய நமக்கு அரை நாளாகும். அதை விட பேசாமே , நாம முதலிலேயே அந்த வேலையை பத்து நிமிஷத்தில் முடிச்சிடலாம். இதை எல்லாம் அவங்க கேவலமா நினைக்கிறதே கிடையாது. தனக்கு சாதகமா நினைக்கிறாங்க !. சின்னக் குழந்தையா ஸார்  அடிச்சு திருத்த ? "
தலையில் அடித்துக் கொண்டார் மேனேஜர். " சரி .. அந்த அம்மா வந்ததும் 
என்னை வந்து பார்க்க சொல்லுங்க .. "
" யெஸ்  .. ஸார் " என்று சொல்லி முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியில் வந்தார் ஆபீஸ் சூபரென்ட் .
" இந்தாப்பா .. துக்காராம் ..நளினி மேடம் வந்தாச்சா ? "
" வந்தாச்சு சார் . காப்பி குடிக்க போனாங்க .."
" அந்த அம்மா வந்ததும் , அவங்களை மேனேஜர் வர சொன்னதா சொல்லு "

நளினி ஸீட்டில் வந்து உட்காரும் போது மணி பதினொன்றை தாண்டி 
இருந்தது.
" நளினிம்மா .. உங்களை  மேனேஜர் வர சொன்னாராம் "
" காலங் கார்த்தாலே வேறே வேலையே கிடையாது அந்த ஆளுக்கு ! " என்று முனகிக் கொண்டே மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் நளினி.
" கூப்பிட்டீங்களா ? "
" யெஸ் .. டேக்  யுவர் சீட் .. நான் பங்க்சுவாலிடியை   ரொம்பவும் மதிக்கிறேன் " 
" மதியுங்க .. அதுக்கு நான் என்ன பண்ணனும் ? "
" நாளையிலிருந்து 9.30க்கு முன்பாக ஆபீசில் இருக்க நீங்க முயற்சி 
பண்ணுங்க "
" ஏன் ஸார் .. பஸ் ஒழுங்கா வந்து சேர்ந்தா நானும் வந்து சேர மாட்டேனா ? "
" அப்போ இவ்வளவு நாளும் பிடிச்ச பஸ்சுக்கு  முந்தின பஸ் பிடிச்சு வர ட்ரை பண்ணுங்க "
" புரியாத ஆளா இருக்கீங்களே . பஸ் கிடைக்கிறதே கஷ்டம் . பாதி நாள் பஸ்பிரேக்  டவ்ன் . இல்லாட்டி பஸ்  ஸ்ட்ரைக்.. என்ன பண்ண சொல்றீங்க ? "
" லிஸன் .. மேடம், பஸ் பிரேக்  டவ்ன் என்கிறது எப்பவாவது நடக்கிறது. பஸ் ஸ்ட்ரைக்கின் போது  நீங்க லேட்டா  வந்தா உங்களை யாரும் கேள்வி கேட்கப் போறதில்லே. மற்ற நாட்களில் சீக்கிரமா வர முயற்சி பண்ணுங்க .நாளைல்லேருந்து கரெக்டா 9.30க்கு அட்டெண்டன்ஸ் குளோஸ் பண்ணும்படி ஆர்டர் போட்டு விட்டேன்."
" ஏன் ஸார்  பேச மாட்டிங்க ? என் அவஸ்தை எனக்குதான் தெரியும். காலைலே எழுந்து குழந்தைகளை ஸ்கூல்க்கு ரெடி பண்ணிட்டு .. நான் கிளம்பி ..."
" ஸ்டாப் .. ஸ்டாப் யுவர் நான்-சென்ஸ்.. நீங்கள் காலையில் 9.30க்கு ஆபீசில் இருக்க வேண்டும். அதைத்தான் நான் சொல்வேன், உங்க பாமிலி ப்ராப்ளம் எதுவும் எனக்குத் தேவையில்லை. "
" நான் என்ன சொல்ல வந்தேன்னா .."
" நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் ..ப்ளீஸ் .  டூ வாட் ஐ ஸே.."
" ஸார் ..என்னைப்  பத்தி .."
" ப்ளீஸ் கோ அண்ட் டூ  யுவர் வொர்க். டோன்ட் வேஸ்ட் மை டைம்  "

ஆத்திரமாக வெளியேறிய நளினி, கோபமாக ஸீட்டில் வந்து உட்கார்ந்தாள் .
" என்ன நளினி ? " என்றாள் , பக்கத்து    ஸீட் விமலா மெதுவாக.
" அதான் .. போன வாரம் புதுசா ஒண்ணு  வந்து சேர்ந்திருக்கே. அதுக்கு நான் யாருன்னு தெரியாது. எவ்வளவு தைரியம் இருந்தா என்னைப் பார்த்து வேண்டாத கேள்வி எல்லாம் கேட்பான். நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன். என் பதினைந்து வருஷ செர்விஸ் எங்கே ?நேத்து வந்த இவன் எங்கே ? ஸீனியர் என்கிற மரியாதை தெரியாத ஆளு .விமலா.. வா.. நாம போய் காப்பி குடிச்சிட்டு வரலாம். கண்ட சனியனோடும் கத்திக் கத்தித் தலையை வலிக்கிறது " என்றவாறே விமலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு காண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பஸ் ஸ்டாப் அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சவாரிக்காக காத்திருந்தான் வைரமுத்து. காலையில் அம்மா சொன்னது காதிலேயே ஒலித்துக் கொண்டு  இருந்தது. அம்மாவின் பேச்சில் நியாயம் இருந்தாலும், இத்தனை வருஷம்  கட்டிக் காத்த லட்சியத்தை, தன் மானத்தை அடகு வைப்பதா ? " ஏண்டா வைரம், படிச்சு பட்டதாரியானா வேலை கிடைக்கும்னு சொன்னே. தகப்பன் இல்லாத உன்னை வாயைக் கட்டி வயித்தைக் கட்டி படிக்க  வச்சேன். வருஷம் அஞ்சாகியும் உனக்கு வேலை கிடைக்கலே. வாடகை ஆட்டோ ஓட்டறே .அதுலே வர்ற வருமானம் எங்கே செலவுக்குக் கட்டுபடியாகுது  ?   மீட்டருக்கு மேலே அவனவன் வாய் கூசாமே அஞ்சு பத்துன்னு வாங்கறான் . நீ ஒரு ரெண்டு ரூபா கேட்கவே கூச்சப் படறே ! கேட்டா உனக்கு மனச்சாட்சி இடம் 
குடுக்க லேங்கிறே . உனக்கு மனச்சாட்சி இருக்கிறதாலே வீட்டுக்காரன்,
வீட்டு வாடகை கேட்காமே இருப்பானா ?இல்லே,மளிகைசாமா னெல்லாம் கொறைஞ்ச விலையில் கிடைக்குதா ? உன் தங்கச்சியை வேறே அடுத்த மாசம் பிரசவத்துக்கு கூட்டியாறனும் . ஒரு ஆத்திரம் அவசரத்துக்காவது கையிலே ஒரு நூறு ரூபாக் காசு இருக்க வேண்டாமா ? அவ பெத்துப் பொழைச்சு புருஷன் வீடு போற வரைக்குமாவது தினமும் ஒரு பத்து ரூபா ஜாஸ்தியாக் குடுத்தியான்னா   நல்லாயிருக்கும் !" என்று திரும்பத் திரும்ப சொல்லியிருந்தாள் . லட்சியத்துக்கும், வறுமைக்கும் நடுவில் பெரியதொரு போராட்டமே நடந்தது.

ஆபீசை விட்டு வெளியே வந்த நளினியின் மனம் முழுக்க வெறுப்பு. 
நேற்றைக்கு வந்த ஒருவன், நாக்கு மேலே பல்லைப் போட்டு பேசிவிட்டானே என்கிற  ஆங்காரம். பஸ் வரும் வரை காத்திருக்கப் பொறுமையில்லை .
" ஏம்ப்பா .. ஆட்டோ .. . கே.கே.நகர் வரை வர்றியா ?"
"வர்றேம்மா மீட்டருக்கு மேலே ஒரு ரெண்டு ரூபா  போட்டுக்டுங்கம்மா " 
என்று இழுத்தான் வைரமுத்து.
" ம்..ம் .."
"வீடு வந்ததும் மீட்டரைப் பார்த்து பணத்தைக் கொடுத்தாள் நளினி . பணத்தை எண்ணிய வைரமுத்து, " மேல்கொண்டு ரெண்டு ரூப தர்றதா சொன்னீங்களே "என்றான்.
" ஏம்ப்பா.. வரவு செலவு கணக்குப் போட்டுப் பாத்து தானே,   கணக்குப் பண்ணி மீட்டருக்கு இவ்வளவு பணம்னு ரேட் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. பிறகு என்ன ?  மீட்டருக்கு மேலே கீழே எல்லாம் பணம் கேட்கிறே ? காசைநேர்வழியில் சம்பாதிக்கணும். செய்யற தொழிலில் கொஞ்சமாவது ஒரு நேர்மை ..மனச்சாட்சி இருக்க வேண்டாமா ?" என்று கூறி ஒரு பழைய இரண்டு ரூபாய்த் தாளை விட்டெறிந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் நளினி .
கீழே விழுந்த நோட்டை எடுக்காமலே வைரமுத்து வண்டியைக் கிளப்பினான் .


     
  

No comments:

Post a Comment