Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 27, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 34

( நான் எழுதிய இச்சிறுகதை ஆனந்த விகடன் 08.12.2002 இதழில் வெளியாகி   
 யுள்ளது )

                                                               அம்மா வரப் போறா !

" பத்மா, இன்னிக்கு அண்ணா போன் பண்ணினார் " என்றான் சுகுமார் , அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதுமே 

" என்னவாம் ? "

" அண்ணிக்கும் அம்மாக்கும் சரிப்பட்டு வரலையாம். நேத்து நடந்த 
சண்டையை  ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்க்கும்படி ஆயிடுச்சாம் .."

" என்னிக்குத்தான் அம்மாக்கும் மத்தவங்களுக்கும் சரிப்பட்டு வந்திருக்கு ?
வயசாக ஆக பக்குவம் வரணும் . ஆனா , அம்மாக்கு அகம்பாவம்தான் 
அதிகமாகிப் போச்சு.. வயசாச்சா.. வெந்ததைத் தின்னோமா, ஒரு மூலையில் 
விழுந்து கிடந்தோமானு இருக்கணும் . அதை விட்டுட்டு எல்லா விசயத்திலும் ' நான், நான்'ன்னு முந்திகிட்டு நாட்டாமை பண்ணப் போனா
தகராறு  வரத்தான் செய்யும்.  அண்ணா வேறே என்ன  சொன்னார் ? "

" இன்னிக்கு ராத்திரி பஸ்சில் அம்மாவை ஏத்தி அனுப்பறாராம் .நான் 
நாளைக் காலையில் பஸ் ஸ்டாண்ட் போய் அம்மாவை  அழைச்சிட்டு
வரணும். "

" உடனே கோயில் மாடு மாதிரி 'சரி. சரி'ன்னு தலையை ஆட்டிட்டிங்களா? "

" பிறகு என்ன செய்யணும்கிறே  ? ஒரு மாசத்துக்குதான் . அங்கே 
நிலவரம் சரியானதும் திரும்பவும் அழைச்சிட்டுப் போயிடுவார் ! "

" அது என்ன கலவர பூமியா ... நிலவரம் சரியானதும்  திரும்பிப் போக ? 
இதோ பாருங்க ... நானும் வேலைக்குப் போறேன். வீட்டுலே  ஒன்னும்
சும்மா உட்கார்ந்திருக்கலே ..வர்றவங்க போறவங்களுக்கெல்லாம்  வடிச்சுக் 
கொட்டி உபசாரம்  பண்ணிட்டு இருக்க என்னாலே முடியாது.
அம்மாவை அனுப்ப வேண்டாம்னு உடனே போன் பண்ணிச் சொல்லிடுங்க.."

" பாவம்டி .. வயசானவங்க ..."

" ஏன் சொல்ல மாட்டீங்க ? என்னைத் தவிர , ஊர் உலகத்தில் இருக்கிற 
அத்தனை   பேரும் உங்க கண்ணுக்குப் பாவமாத்தான்  தெரிவாங்க.."

" அதுக்கில்லேடி  ... ஒரே ஒரு ஆள் வந்து தங்கறதாலே , அவங்களுக்குப் 
பசிக்கு ஒரு வேளை  சாப்பாடு போடறதாலே, நாம எதுலே கொறஞ்சிடப் 
போறோம் ? அவங்களுக்குன்னு தனியா  ஏதாவது செய்யப் போறோமா ? 
நாம சாப்பிடற சாப்பாட்டில் அவங்களுக்கும் ஒரு வாய் ! அவ்வளவுதானே ? நாமளும் மாட்டோம்னு சொல்லிட்டா, பாவம் .. வயசானவங்க .. எங்கே 
போவாங்க? இதோ பாருடி .. நம்மைப் பெத்தவங்களை நாம எப்படிப் 
பார்த்துக்கிறோமோ, நடத்தறோமோ ,அதே மாதிரிதான் நம்ம குழந்தைங்க 
நம்மை நடத்தும். அதை நினைவில் வச்சுக்கோ .."

" இதோ பாருங்க, உங்க சமாதானம்  எதுவும் எனக்குத் தேவையில்லை. 
இப்பவே அண்ணாக்கு போன் பண்ணி அம்மாவை அனுப்ப வேண்டாம்னு 
சொல்றீங்களா..  இல்லே நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்குப்
போகட்டுமா ?" 

" அம்மா வீட்டுக்குப் போகப் போறீயா ? "

" ஆமாம் ! ஏன் ..போகக் கூடாதா ? "

" அதுக்கில்லே .. நாளைக்கு அவங்களே  இங்கே வரப் போறாங்களே ! "

" என்னது ? "

" ஆமாம்...  அம்மாவை அனுப்பி வைக்கிறதா போன் பண்ணினது உங்க 
அண்ணன்தான் ! " என்றான் சுகுமார் நிதானமாக 

" எங்க அண்ணனா போன் பண்ணினார் ? சரியான கழிசடை ! பொண்டாட்டியை அடக்கி வைக்கத் துப்பில்லாமே , அம்மாவை பஸ்
ஏத்தி அனுப்பறானாமா ? சரி .. சரி.. உங்க வேலையை எல்லாம் சீக்கிரம் 
முடிச்சிட்டு, நேரத்தோட படுத்துத் தூங்குங்க .. அப்பத்தான் நாளைக்குக் 
காலையில் எழுந்திரிச்சு ,  சீக்கிரம் பஸ் ஸ்டாண்ட் போக வசதியா இருக்கும் ! "
என்றாள் பத்மா.

No comments:

Post a Comment