Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, July 21, 2012

" அடடே " உதவியாளர்கள் !


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். மனைவி மட்டுமல்ல ; நல்ல குழந்தைகள், நல்ல குடும்பம், நல்ல வேலை  எல்லாமே இறைவன் கொடுக்கிற வரம்தான். இந்த வரிசையில் சிலர் இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாகவும், பலர் சபிக்கப் பட்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள் . இப்போது இதுவல்ல பிரச்சினை. இந்த வரிசையில் நல்ல உதவியாளர்கள் ( வேலையாட்கள் ) கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம் தான்  என்பதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு அவனை வேலையை விட்டு விலக்கவும் வழி இல்லாமல், வைத்து வேலை வாங்கவும் வழி இல்லாமல் எத்தனை பேர் தவிக்கிறார்கள் என்று அனுபவப் பட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

ஒரு சில முதலாளிகள் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் " நாம் இந்த ப்ராஜெக்டை தொடங்குவது  ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் வேலை செய்ய 
சரியான  நபர்கள் கிடைப்பதுதான் கடினம். இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் , வேலைக்காரன்  என்ற பெயரில் ஒரு மடையனை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். வேலையை விட்டு அனுப்பி விடலாம் என்று நினைத்தால் அவன் குடும்பம்தான் என் கண் முன்னே வந்து நிற்கிறது. இப்போ 
பாருங்க வேடிக்கையை .." என்று சொல்லிவிட்டு, தனது வேலைக்காரனை பெயர் சொல்லி அழைத்தார். அடுத்த கணமே ஓடி வந்து பணிவாக நின்றான் அவன். அவனிடம் " நீ எங்க வீட்டுக்குப் போய் நான் இருக்கிறேனா என்று பார்த்துவிட்டு வா " என்றார்,
" சரி " என்று தலையாட்டி விட்டு வேகமாக வெளியில் ஓடி போனான்  அவன்.
" பார்த்தீர்களா ? " என்று நண்பர்களிடம் கேட்டார் முதலாளி.
வெளியில் ஓடி வந்த வேலையாள், அவனுடன் அமர்ந்திருந்த மற்ற வேலையாட்களிடம்  " எங்க முதலாளியைப் போல ஒரு மடையனை எங்குமே பார்க்க முடியாது. அவர் வீட்டுக்குப் போய், அவர் இருக்கிறாரா என்று நான் பார்த்து விட்டு வரணுமாம். ஏன், இவர் கையில்தான் " செல் போன் " இருக்குதே. வீட்டுக்குப் போன்  போட்டு கேட்பதுதானே ! " என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு  விரைந்தான் அவன். 

ஒரு அலுவலகம். அதிகாரி தன்னைப் பார்க்க வந்திருந்த நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அவரது உதவியாளர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரை நண்பருக்கு அறிமுகப் படுத்திய அதிகாரி, " இந்த அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரும்  ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு வந்து  என் நேரத்தைப் பாழடித்து விட்டுப் போவார்கள். நான் இங்கு வந்து இத்தனை வருடத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் இதுவரை எந்தவொரு பிரச்சினையையும் எடுத்துக் கொண்டு இங்கு வரவில்லை. " என்று பெருமையாக அறிமுகப் படுத்தினார். நண்பருக்கு மிகவும் ஆச்சரியம். அதிகாரியிடம் விடைபெற்று வெளியில் வந்த அவர் , அதிகாரி அறிமுகப் படுத்திய உதவியாளரை தேடிக் கண்டு பிடித்து  " பிரச்சினை இல்லாமல் உங்களால் மட்டும் எப்படி இருக்க முடிகிறது. அந்த ரகசியத்தை எனக்கு சொல்லுங்களேன்  " என்றார். " ஸார் , அலையில்லாத கடல் உண்டா ? பிரச்சினை இல்லாத மனுஷன் என்று எவராவது உண்டா ?. இந்த ஆபீசின் மிகப் பெரிய பிரச்சினையே இந்த அதிகாரிதான். யாராவது போய், பிரச்சினை கிட்டேயே பிரச்சினைக்கு தீர்வு கேட்பார்களா ? எல்லாம் எங்கள் தலை விதி !" என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டார். சந்தேகம் கேட்ட நபர் அசந்து போனார்.

ஒரு நாட்டின் அதிபர், ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளரை உடனடியாக தொடர்பு கொள்ள நினைத்து அவரே நேரடியாக  நிறுவனத்துக்கு போன்  செய்தார். போனை எடுத்த பெண்ணிடம் " போனை உடனே தலைவருக்கு  கொடு " என்று கட்டளையிட்டார் . அந்தப் பெண் " மன்னிக்கவும். இன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு  மிகப் பெரிய பிரச்சினை. அது விஷயமாக தொடர்ந்து மீட்டிங்கில் இருந்த அவர் இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றார். ஒரு மணி நேரத்திற்கு தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதனால் உங்கள் அழைப்பை அவருக்குக் கொடுக்க முடியாது  "  என்றாள் .
"பேசுவது யாரென்று தெரியாமல் நீ பேசிக் கொண்டிருக்கிறாய். நான் இந்த நாட்டின் அதிபர் பேசுகிறேன் " என்று இரைந்தார் அதிபர்.
" வணக்கம் ஸார். நீங்கள் இந்நாட்டு அதிபர் என்ற வகையில் உங்களிடம் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு . ஆனால் என்னை வேலைக்கு அமர்த்தி சம்பளமும் கொடுப்பது இந்த நிறுவனம், இந்த நிறுவனத்தின் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கீழ்ப் படிய வேண்டியது  என்னுடைய கடமை. அதே சமயம் உங்கள் கட்டளைக்கு பணிய வேண்டிய பொறுப்பும் எனக்கு உண்டு. எங்கள் பாஸ் எழுந்ததும் உடனடியாக நீங்கள் அழைத்த விஷயத்தை சொல்கிறேன் " என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள். பாஸ் ஓய்விலிருந்து திரும்பியதும் அதிபர் அழைத்த  விசயத்தை அவருக்கு தெரிவித்தாள் .
அவளை மிகவும் கடிந்து கொண்ட அவர், உடனடியாக அதிபருக்கு போன் செய்து நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு   " அந்தப் பெண்ணை இப்போதே வேலையிலிருந்து விலக்கி விடுகிறேன் " என்றார்.
" அதை உடனடியாக செய்யுங்கள். வேலையை விட்டு விலக்கிய கையோடு அவளை எனது மாளிகைக்கு வேலைக்கு அனுப்புங்கள். இங்கு நிறைய உதவியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை, விசுவாசமுள்ள வேலையாட்களுக்கு  இங்கு ரொம்பவும் பஞ்சம். அதனால் உடனே அந்தப் பெண்ணை அனுப்புங்கள்  " என்றார் அதிபர்.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனக்கு தெரிந்த  ஒருவர் SOUTHERN RAILWAY ல் மிகப் பெரிய தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஒருமுறை  அவர் வெளியூர் போய் விட்டு சென்னை திரும்பும் போது 
மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர் " ஸார், டிக்கெட் " என்று கேட்க , இவர் தனது அடையாள கார்டை எடுத்துக் காட்டி இருக்கிறார் . கார்டைப் பார்த்ததுமே அசந்து போன அவர் " சாரி ஸார் . நீங்க யாரென்பது தெரியாமல் கேட்டு விட்டேன் " என்று சொல்ல, அவர் தோளில் தட்டிக் கொடுத்து " இப்படித்தான் இருக்கணும். உனக்கு கொடுக்கப் பட்ட வேலையை நீ சரிவர செய்யணும். இதில் தயவு தாட்சண்யம் , முக்கியஸ்தன் சாமான்யன் என்ற பாகுபாட்டிற்கு இடமே இல்லை. இதே கடமை உணர்ச்சி உனக்கு கடைசி வரை இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு வந்தார்.

ஒரு ஊழியன் தனது கடமையில், கண்டிப்பானவனாக இருந்தால், அவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் மனப்பக்குவம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது ?

No comments:

Post a Comment