ஊர் கூடி பால் ஊற்றிய கதை !
" குழந்தைகளா, வரப்போற பொங்கல் பண்டிகைக்காக கோயில், சுற்று பிரகாரம் எல்லாத்தையும் சுத்தம் பண்ற வேலை நடந்திட்டுருக்கும். நீங்களும் பொழுது போகலே, போரடிக்குனு அடிக்கடி சொல்லிகிட்டேதானே இருக்கீங்க. அங்கே போய் கூடமாட ஏதாவது உதவி பண்ணலாம்தானே ?" என்று கேட்டாள் பாட்டி.
"போ பாட்டி, இந்த ஊரில் எத்தனை பேர் இருக்கிறாங்க. அவங்கல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க, நாங்கதான் போய் வேலை செய்யணுமா ?" என்று கேட்டான் பிரபு
"அப்படீல்லாம் சொல்லக்கூடாது. உனக்கு ஒன்னு தெரியமா ? எல்லாராலும் வெகு எளிதாக செய்து முடித்து விடக்கூடிய வேலையை, யாராவது சிலர் செய்வார்கள் என்று எல்லோருமே நினைத்ததால், ஒரு சிலரால் செய்து முடித்துவிடக்கூடிய வேலை, யாருமே செய்யாமல் நின்று போனது"ன்னு சொல்வாங்க " என்று பாட்டி சொல்ல, "அதற்கு ஒரு கதை இருக்குமே " என்று பிரபு சொல்ல, "என்ன அண்ணா, இப்படி கேட்டுட்டே. பாட்டி அதற்கும் கண்டிப்பா ஒரு கதை வச்சிருப்பா " என்று மனோ சொல்ல, இருவருமே பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு "உம். சொல்லு கதையை " என்றார்கள்.
"ஒரு ஊர். அங்கு கடுமையான வறட்சி, மழை இல்லை. நோய்நொடிகள்
அதிகமாயிடுச்சு. அதை சாமி குத்தம்னு அந்த ஊர்க்காரங்க நினைச்சாங்க. அதனாலே அதற்கு பரிகாரமா திருவிழா நடத்தனும்னு நினைச்சாங்க. அந்த ஊரில் ஒரு கோயில் இருந்தது. திருவிழா காலத்தில் அங்குள்ள சாமிக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்பதும் முடிவாச்சுது. அந்த ஊர் தலைவர், வேலைக்காரனை கூப்பிட்டு "திருவிழா வருவதாலும், சாமிக்கு பாலாபிஷேகம் நடக்க இருப்பதாலும் வீட்டுக்கு ஒரு செம்பு பால் தரவேண்டும். திருவிழா அன்னிக்கு கோயில் வாசலில் ஒரு பெரிய குடம் வச்சிருப்போம். அதில் எல்லோரும் பாலை கொண்டு வந்து ஊற்ற வேண்டும். இது கண்டிப்பான உத்தரவு. பால் ஊற்றாதவங்க மேலே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"ன்னு தண்டோரா போட்டுட்டு வா"ன்னு சொன்னார்.
"போ பாட்டி, ஆப்டர் ஆல் ஒரு செம்பு பால். இது ஒரு பெரிய விசயமா ? யாராவது ஒருத்தரே ஒருகுடம் பால் கொடுக்க முடியாதா ?" என்று பிரபு கேட்க "அதானே ?" என்றாள் மனோ.
"அந்த ஊரில் இருக்கிறவங்க கிட்டே போய் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டால்கூட குடுத்திடுவாங்க. ஆனால் ஒரு டம்ளர் பால் கேட்டால் தர மாட்டாங்க. அந்த அளவுக்கு அந்த ஊரில் பாலுக்கு தட்டுபாடு. அதனால்தான் தண்டோரா போட்டு பால் சேர்க்க ஆரம்பிச்சாங்க. திருவிழா அன்னிக்கு காலையிலேயே ஒரு பெரிய ராட்சச சைஸ் குடம் கொண்டு வந்து கோயில் வாசலில் வச்சாங்க. குடத்தோட வாயை மஞ்சள் துணியாலே கட்டி நடுவில் ஒரு சிறு துளை, பால் ஊத்தறதுக்கு வசதியா போட்டு வச்சிருந்தாங்க"
என்று பாட்டி சொல்லும்போதே "ஏன் பாட்டி அப்பிடி பண்ணினாங்க ?" என்று கேட்டாள் மனோ.
"காலையிலேகுடத்தை வச்சிட்டு ஊர்க்காரங்க எல்லாரும் வந்த பிறகு நல்ல நேரம் பார்த்து, பூஜையை ஆரம்பிக்கிறதுக்குள்ளே பாலுக்குள் ஏதாவது தூசி துரும்பு இல்லாட்டா பூச்சி ஏதாவது விழுந்துடக்கூடாதே. அதனால்தான் அப்படி செஞ்சாங்க. இப்போ ஊர்க்காரங்க எல்லாரும் வந்தாச்சு. நல்ல நேரமும் ஆரம்பமாயாச்சு. குடத்தை கோயில் கருவறைக்கு கொண்டு போனாங்க. பூசாரியை தவிர வேறு யாரும் கருவறைக்குள் இல்லை. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயமாக ஆரம்பிச்சு பால் அபிசேகம் பண்ணும் நேரம் வந்தது. குடத்தின் வாயில் கட்டியிருந்த துணியை எடுத்த பூசாரிக்கு ஒரே அதிர்ச்சி. குடத்தில் ஒரு துளிகூட பால் இல்லை. குடம் முழுக்க தண்ணிதான் இருந்துச்சு. "ஒரு குடம் பாலில் ஒரு செம்பு தண்ணீர் விட்டால் யாருக்காவது தெரிந்துவிடவா போகிறதுன்னு நான் நினைச்சமாதிரியே ஊர்க்காரனுக அத்தனை பேரும் நினைச்சு தண்ணியை ஊத்திவிட்டு போயிருக்கானுகளே. சரி அவங்கதான் அப்படின்னா ஊர்த்தலைவர் கூட தண்ணீர்தான் ஊத்தியிருக்கார். பால் அபிசேகம் ஆகபோகுதுன்னு ஊர் கூடி இருக்கு. இப்போ சாமி தலையில் தண்ணீர் ஊத்தினா அது விவகாரமா போயிடுமே. இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சார். யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தார். "ஓ"ன்னு ஒரு சத்தம் போட்டபடி அருள் வந்தவர்போலே ஆட ஆரம்பிச்சார். " ஏன்டா இங்கே ஜனங்க பாலுக்கு இவ்வளவு கஷ்டப்படும்போது எனக்கு என்ன பாலபிசேகம் வேண்டியிருக்கு. உங்களுக்கு இல்லாத பால் எனக்கும் வேண்டாம். இப்பவே இந்த பாலை தண்ணீரா மாத்துறேன். அதை எனக்கு ஊத்துங்கடா. அதை நான் மனசார ஏத்துக்குவேன்"னு ஒரு நாடகம் ஆடினார். குடம் தண்ணீரை சாமி தலையில் ஊற்றி அபிசேகம் பண்ணினார். உண்மை தெரியாத ஊர் ஜனங்க "நம்ம தெய்வத்தோட சக்தியை, மகிமையை என்னன்னு சொல்றது " என்று வியந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு சாமி கும்பிட்டார்கள் " என்று கதையை முடித்தாள் பாட்டி.
"அதனால்தான் சொல்றேன், நல்ல விசயம்னு வரும்போது நம்மாலே முடிஞ்சதை நாமும் செய்யணும். நம்மள விட்டா வேறு ஆளே இல்லையா என்ற நினைப்பில் இருக்க கூடாது. இப்போ நீ கோயிலுக்கு போய் கூடமாட உதவி பண்ணினா, விளையாட்டிட்டு இருக்கிற மத்த குழந்தைகளும், "ஊரிலிருந்து வந்திருக்கிற இவங்களே வேலை செய்றாங்களே. நாமளும் செய்வோம்"ன்னு ஓடி வருவாங்க " என்று பாட்டி சொல்ல, " இவ்வளவுதானே ! விடு கவலையை. இப்போ போய் எந்த அளவுக்கு வேலை பண்ணிட்டு வரோம்னு நீ மத்தவங்களை கேட்டு தெரிஞ்சுகோ " என்று சொல்லிவிட்டு,
"ம். மனோ, நீயும் வாடி "என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பிரபு.

No comments:
Post a Comment