Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 29, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 28

( நான் எழுதிய  இச்சிறுகதை T ராஜேந்தரின் உஷா 15.04.1996 இதழில்  வெளியாகியுள்ளது )

                                          ஏமாறச் சொன்னது  நானோ ?

கண்ணாடி முன் நின்று தலை முடியை படிய வாரிய குமார், பின்பு ரஜனி 
ஸ்டைலில் கலைத்து விட்டுக் கொண்டான். உடம்பை அரை வட்டமாகத் 
திருப்பி பின் பக்கமாக ஷர்ட்டை இழுத்துவிட்டு பேண்டுக்குள் செருகிக் 
கொண்டான்.கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்வதா வேண்டாமா என்று 
மனதுக்குள் நடந்த பட்டி மன்றத்தில், போட்டுக் கொள்வது என்றே முடிவானது .
அரவிந்துடன் பேசும்போதே கண்டிப்பாக கூலிங் கிளாஸ் போட்டு கண்ணை 
மறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனதின் எண்ணங்கள் 
கண்களில் வெளிப்படுவதை மற்றவர் அறியாமல் மறைக்க முடியும்.
 " அடியே,வித்தாரக் கள்ளி, நீ என்னை ஏமாற்றிவிட்டு எவனுடன் வாழ்ந்துவிடப் 
போகிறாய் என்பதையும் பார்த்து விடுகிறேன் !" என்று மனதுக்குள் கறுவிக்
கொண்டான்.
வேலைக்காக அலைந்து களைத்துப் போன குமார், கடைசி முயற்சியாக 
வேலையிலிருக்கும் பெண்ணிற்காக வலை விரித்துப் பார்த்தான். சாந்தாவை சந்திக்க நேர்ந்தது தற்செயல்  விபத்துதான். அதன் பிறகு , கார்ட்,கவர் வாங்கும் சாக்கில் தினமும் போஸ்ட் ஆபீஸ் சென்று வர 
ஆரம்பித்தான் .தினமும் வந்து போகும் பேர்வழி என்பதால், அவனைப் பார்த்தவுடனே கவர்,கார்டை எடுத்து நீட்டினாள்  சாந்தா. ஒருநாள் நாசூக்காக அவளிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
"இதோ பாருங்க மிஸ்டர், எனக்கு இந்த காதல் கீதல்ல எல்லாம் நம்பிக்கை 
கிடையாது. ஏதாவது பேசுவது என்றால் எங்க வீட்டில் வந்து முறையோடு 
பேசுங்க " என்று  நறுக்குத் தெறித்தாற்போல்   சொல்லி விட்டாள்.
இதைவிட பெரிய அவமதிப்பை அவள் வீட்டில் குமார் சந்திக்க நேர்ந்தது.  
எடுத்த எடுப்பிலேயே பெருங்குரலில் அவள்  தந்தை கத்த ஆரம்பித்து விட்டார்
" ஏண்டா, வேலை வெட்டியில்லாத உங்களுக்கெல்லாம் உழைச்சுப் போட ஒரு 
பொண்ணு வேணும். அப்படித்தானே?  உன்னோட ஒருவேளை சோத்துக்கே 
உங்க அப்பன் கையை எதிர்பார்த்து நிற்கிறே, இந்த அழகில் உனக்கு எதை நம்பி 
பெண் கொடுக்க முடியும் ?" என்று முகத்திலடித்தாற்போல் கேட்டு, முதுகில் 
அடிக்காத குறையாக துரத்தி விட்டார்.
வேலை பார்க்கிற பெண், நகை நட்டோடு வந்தால் அதை வைத்து ஏதாவது 
பிசினஸ் பண்ணி பெரிய ஆளாகிவிடலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது.
சாந்தாவை தனியாக சந்தித்து, நகை பணத்தை எடுத்துக்கொண்டு தன்னோடு 
வந்துவிட்டால் ஒருமாத காலம் வெளியூரில் தங்கிவிட்டு பிறகு இங்கு வந்து 
விடலாம். அதற்குள் மற்றவர்களின் கோபம் தணிந்து விடுமென்று 'வேப்பிலை 
அடித்து'ப் பார்த்தான்.
" ஏய் , மிஸ்டர், இனிமேல் ஒரு நிமிஷம் இங்கே நின்றால் கூட உன்னைப் பற்றி 
போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். பிறகு நீ மனைவி இல்லாமலே 
மாமியார் வீட்டுக்குப் போயிடுவே" என்று அரக்கத் தனமாகக் கூறிவிட்டாள்.
" நீ வாழ்ந்து விடுவதை நானும் பார்த்து விடுகிறேன் " என்று சவால் விட்டு 
வந்தவன் அதைச் செயலிலும்   காட்ட ஆரம்பித்தான்.
இது நடந்து இரண்டு வருடங்களாயிற்று. ஏதோ குமாரின் கைங்கரியத்தால் 
சாந்தாவிற்கு வந்த வரனெல்லாம் தட்டிப் போனது. வேலை தேடி டில்லி 
சென்ற குமார் ஒரு மாதம் கழித்து நேற்று தான் சென்னை வந்தான். வந்தவனுக்கு 
தான் எவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சாந்தாவிற்குத்
திருமணம் ஆகிவிட்டதாம். இந்த நினைப்பே எரிச்சலைத் தந்தது. இன்று 
வைக்கப் போகும் வெடியில் சாந்தாவின் வாழ்வே வெடித்துச்சிதற  வேண்டும் 
என்று விநாயகரை வேண்டிக் கொண்டான். சாந்தாவின் கணவன் அரவிந்த் 
வேலை பார்க்கும் இடத்தை தேடிப் போனவனுக்கு  அதைவிட பெரிய 
அதிர்ச்சி காத்திருந்தது. இந்த அரவிந்த் தன்னுடைய கல்லூரி நண்பனாச்சே 
என்று ஒரு கணம் தயங்கினான். வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் 
பின் நேரடியாகக்  களத்தில் இறங்கினான்.
" ஏம்ப்பா, உனக்கு வேறே பொண்ணே கிடைக்கலயா? இருந்திருந்து இந்த 
சாந்தாதான் உனக்குக் கிடைச்சாளா?" என்று நேரடித் தாக்குதலில் இறங்கினான்.
" நீ நினைக்கிறது தப்பு குமார். இப்போதான் நான் நிம்மதியா இருக்கிறேன். என் 
மனைவி சாந்தா கல்லூரியில் படிக்கிற நாளில் யாரோ ஒருவனை நம்பி 
வீட்டை விட்டுப் போனவதான். இவ நகை பணத்தை அவன் எடுத்துக் கொண்டு 
இவளை ரெட் லைட் ஏரியாவில் விற்றுவிட்டு ஓடிட்டானாம். என் மனைவியோட 
பேர் பம்பாய் போலீஸ் ரிக்கார்டில் பதிவாகி இருக்காம். அதன்பிறகு யார்யாரையோ 
பிடிச்சு எப்படீ எப்படிஎல்லாமோ தப்பி சென்னை வந்து, தன்னுடைய 
குடும்பத்துடன் செட்டில் ஆனாளாம். இதை எல்லாம் என் மனைவியே என்னிடம் 
சொல்லிவிட்டாள் " என்றார் அரவிந்த் நிதானமாக.  
ராட்டினத்தில் ஏறாமலே தலை சுற்றியது குமாருக்கு. " அடியே  சண்டாளி ,
இப்படி வேறு கதை சொல்லி வைத்திருக்கிறாயா?" என்று மனசுக்குள் நினைத்த 
குமார்,  " இவ்வளவு தெரிந்தும் ஒரு நடத்தை கேட்ட பெண்ணை திருமணம் 
செய்யும் அளவுக்கு உனக்கு என்ன வந்து விட்டது " என்றான் படபடப்பாக.
" உனக்குத்தான் என் தங்கை விமலாவை  தெரியுமே.நம்ம காலேஜ் மேட் 
பாஸ்கரை விரும்பினா. அதை நாங்க எதிர்க்கவும் கட்டின புடவையோடு 
வீட்டை விட்டு  அவனோடு ஓடி விட்டாள். பாஸ்கர் வீட்டிலும் இவங்க 
காதலுக்கு பயங்கர எதிர்ப்பு. ரெண்டு பேருக்கும் வேலை இல்லாத நிலையிலே 
பொழைப்புக்கும் வேறொரு  வழியும்  இல்லேன்னு தெரிஞ்சதும் தற்கொலை 
பண்ணிகிட்டாங்க.  அவங்க பாடியைக் கூட பார்க்கக் குடுத்து வைக்கலே.
அவர்கள் வச்சிருந்த டைரி மூலமா விஷயம் தெரிந்து கொண்ட போலீஸ் , 
ஒரு வார காலத்துக்குப் பிறகு அவங்க மரணச்செய்தியை சொன்னது..
அதற்குப் பிறகு எல்லாரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள் .
எல்லாமே காலம் கடந்த ஞானோதயம். ஏதோ ஒரு நிமிஷம் மனசு மாறி அந்த 
இளம் ஜோடியை  ஆசிர்வாதம் பண்ணி இருந்தால் , இளங்குருத்துக்கள் 
இருந்த இடம் தெரியாமல் போயிருக்காதே என்று மனச்சாட்சி என்னைக் கொல்ல 
ஆரம்பித்தது.  அந்தத் தப்புக்குப் பிராயச்சித்தமாக காதல் விவகாரத்தில் சிக்கி 
சீரழிந்த போன யாராவது ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்று 
நினைத்திருந்தேன்.. அதை எனக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லி 
வைத்திருந்தேன். ஒருநாள் சாந்தாவே என்னைத் தேடிவந்து தன்னோட 
கதையை சொன்னாள் . எனக்கும் சாந்தாவைப் பிடித்துவிடவே பெரியவங்க 
ஆசீர்வாதத்தோடு  அவளைத்  திருமணம் செய்து கொண்டேன் " என்றான் அரவிந்த் .
" எப்படியோ , நீ சந்தோசமாக இருந்தால் சரி " என்றான் குமார், வேறு என்ன 
சொல்வது என்பதை அறியாதவனாக. 
அவன் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு சாந்தா கைகொட்டிச்சிரிப்பது 
போல ஒரு பிரம்மை. எனவே திரும்பிப் பார்க்காமலே நடக்க ஆரம்பித்தான்..
 

No comments:

Post a Comment