Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 08, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 30

( ஆனந்த விகடன் நடத்திய " ஓவியமே கதை சொல்லு " போட்டியில் நான் 
எழுதிய இச்சிறுகதை மூன்றாம் பரிசாக ரூ.5000/- பெற்று  15.12.2002 விகடன் 
இதழுடன் இணைப்பாக இடம்  பெற்றிருந்தது )

                                            மணி கட்டலாம் வாரீகளா ?

 மதிய உணவு இடைவேளை நேரத்தில் அன்றைய செய்திதாளில் பார்வையை 
ஓடவிட்டுக் கொண்டிருந்த ஹெட் மாஸ்டர் தணிகாசலம், வாசலில் நிழலாடுவது 
போல் உணர்ந்தார்..
நிமிர்ந்து பார்த்து " யெஸ் ..  கம் இன் " என்றார் .

உடனே, மாணவர் கூட்டம் மொத்தமும் உள்ளே நுழைந்து  ஹெட் மாஸ்டர்
டேபிளைச் சுற்றி  அரை வட்டத்தில் நின்றது.
'எப்படி ஆரம்பிப்பது ' என்பதுபோல் அனைவர் முகத்திலும் ஓர் கேள்விக்குறி .
 தயக்கம் அதைப் புரிந்து கொண்ட  தணிகாசலம்,  " சரவணன் .. சொல்லுப்பா ..
என்ன விஷயம் ?" என்றார் 
" சார் .. நாளைக்கு செப்டம்பர் அஞ்சாம் தேதி...  டீசெர்ஸ் டே ..:" என்றான் 
" யெஸ் ..  ஐ . நோ .."
" இந்த ஆசிரியர் தினத்தை ஒரு புதுமையான முறையில் கொண்டாட ஆசைப் 
படுகிறோம் !"
" அது என்ன 'புதுமை'ங்கிறதை நான் தெரிஞ்சுக்கலாமா ? "
தொண்டையை சரி செய்யும் பாவனையில் கனைத்துக் கொண்ட பிரபு, "இந்த 
வருஷ 'டீசெர்ஸ் டே'க்கு எல்லா டீசெர்ஸ்ம்,  ஸ்டுடண்ட்ஸ் பெஞ்சில் 
உட்கார்ந்திருக்கணும் . ஸ்டூடண்ட்ஸ் யாராவது ஒருத்தர் பாடம் நடத்தணும் .
அதுக்கு உங்க பெர்மிஷன் வேணும்... . நீங்களும் கண்டிப்பா வரணும் .  அதான் 
எங்களோட ரிக்வெஸ்ட் " என்றான்.
மௌனமானார் தணிகாசலம். அந்த மௌனம், அவர்களுக்குள் ஒரு வித 
பரப்பரப்பை  ஏற்படுத்தியது.
" சார், நீங்க கண்டிப்பா சம்மதிக்கணும். அதுதான் நீங்க எங்களுக்குக் கொடுக்கப் 
போற டீசெர்ஸ் டே கிப்ட் "  என்றான்  பிரபு.
" சரி, உங்க கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் . ஆமா .. நாளைக்குப் பாடம் 
எடுக்கப் போறது யார் ? " என்று கேட்டார் தணிகாசலம்.
" ரொம்ப தாங்க்ஸ் சார் .. நாளைக்கு உங்க முன்னாலே நிற்கப் போவது 
டென்த் ஸ்டாண்டர்ட் "பி" செக்ஸன் , சிவகுமார் சார் " என்றான் பிரபு பணிவாக
" ஒல்லியா, கண்ணாடி போட்டுட்டு  இருப்பானே ... அந்த சிவகுமாரா ?"
" யெஸ் சார்  " என்றான் பிரபு அழுத்தம் திருத்தமாக.
' சரி.. போகலாம் ' என்ற வார்த்தை வெளிவந்த அடுத்த கணமே, அனைவரும் 
அந்த இடத்தை விட்டு ஓடினார்கள், விஷயத்தை மற்றவர்களுக்கு  தெரிவிக்க .

" சாதாரணமாக அதிர்ந்து பேசக் கூட தெரியா த சிவகுமாரா நாளைக்குப் பாடம்
 எடுக்கப் போகிறான்... நம்ப முடியவில்லையே !.. பாடத்தில் ஏதாவது கேள்வி
 கேட்டால் கூட தயங்கித் தயங்கி பாதி பதிலைச் சொல்லிவிட்டு மீதி
 வார்த்தைகளை மென்று விழுங்கும் சிவகுமாரா பாடம் நடத்தப் போறான் ? ..
இவனைப் புத்திசாலி வரிசையிலும் சேர்க்க முடியாது .. முட்டாள்கள்
வரிசையிலும் சேர்க்க முடியாது... எல்லாப் பாடங்களிலும் 'ஜஸ்ட் பாஸ்
 மார்க் ' வாங்குபவன் இந்த சிவகுமார்... டீசெர்ஸ் கண்ணுக்குத் தெரியாத
 ஏதோ ஒரு திறமை இவனிடம் ஒளிந்திருக்குமோ ? " என்று நினைத்துக்
 கொண்டார் தணிகாசலம்.
மறுநாள் காலை மிகச் சரியாக ஒன்பதரை மணிக்கு, எல்லா ஆசிரியர்களும் ,
தலைமை ஆசிரியர் குறிப்பிட்டிருந்த  அறையில் கூடியிருக்க,தணிகாசலமும்
வந்து சேர்ந்தார்.
சம்பிரதாய வணக்க முறைகளுக்குப் பிறகு, மாணவர்களின் கோரிக்கையையும், 
அதற்கு தான் சம்மதம் தெரிவித்தது பற்றியும்  சொல்லி விட்டு " இன்னிக்கு
நம்ம டீச்சர் டென்த்  'பி '  செக்சன் சிவகுமார் ! ' என்றார் தணிகாசலம்.
அதைக் கேட்டதும் ஏளனச் சிரிப்பொலியும் , " சோடாப் புட்டி கண்ணாடி 
மாட்டிட்டு 'தேவாங்கு' மாதிரி இருக்குமே, அந்த சிவகுமாரா என்ற கேள்வியும்
வந்தது பார்வதி டீசெரிடமிருந்து .
" ஸ்டூடண்ட்டை, ஒரு டீச்சர் இதுமாதிரி விமரிசனம் பண்றதை நான் 
கண்டிக்கிறேன் " என்றார் தணிகாசலம் கோபமாக. 
அடுத்த நிமிடமே அங்கு சிரிப்பொலி அடங்கியது.
" ஒரு ஸ்டுடென்ட் உங்களை எந்த அளவுக்கு மதிக்கணும்னு நீங்க நினைக்கிறீங்களோ 
அதே மரியாதையை நீங்க சிவகுமாருக்கு கொடுத்தே ஆகணும்.... இது 
என்னுடைய கட்டளை"  என்று சொன்ன தணிகாசலம், முதல் வரிசையில் 
தமிழ் பண்டிட் விநாயக மூர்த்திக்கும், சயின்ஸ் டீச்சர் வரதராஜனுக்கும் 
நடுவில்  வந்து உட்கார்ந்து கொண்டார்.
" மே ஐ கம் இன் சார் " என்ற சன்னமான குரலைக்  கேட்டு தணிகாசலம் எழுந்து 
நிற்க, மற்றவர்களும்  எழுந்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் .
வகுப்பறைக்குள்  சிவகுமார் வந்ததும், " குட் மார்னிங் சார் " என்றார் 
தணிகாசலம்.
" யெஸ் .. தாங்க்யூ ..  ஜென்டில் மென் .. வெரி .. வெரி .. குட் மார்னிங் " என்றான் 
சிவகுமார் பணிவாக.
' இவன் அப்படி  என்னத்தைப் பெரிசா கிழிச்சிடப் போறான்  ' என்ற நினைப்பில் 
உட்கார்ந்திருந்த ஆசிரியர்கள், சிவகுமாரின் அசத்தலான 'பதில் வணக்கத்தால்' 
ஆடிப் போனார்கள் .
" மாணவர்களின் கோரிக்கையை ஏற்று , இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த 
தலைமை ஆசிரியருக்கு என் தலையாய வணக்கம். ... இப்படி ஒரு 
கோரிக்கையை  உங்கள் முன் வைக்கக் காரணம் என்ன தெரியுமா ? ... ஆசிரியர் 
பணி  மிகவும் மகத்தானது.அதை உணர்ந்துதான், இந்த அரசாங்கம்,  "ஆசிரியர் 
தினம் " என்று பெயரிட்டு, ஆசிரியராக இருந்து இந்திய ஜனாதிபதி பதவி வரை 
உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தைப் பெருமைப் படுத்துகிறது.
ஒரு தலை சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் முக்கிய பணியில், ஆசிரியர்களின் முயற்சி 
மகத்தானது. Tomorrow can only be what you have made today ":
என்று சொல்லிவிட்டு தலையைத் தாழ்த்தினான் சிவகுமார்.
" யெஸ் ..  நிட்சயமாக.. ! " என்பதுபோல் தலையை அசைத்து அதை 
ஆமோதித்தார்  தணிகாசலம்.
மேஜை மீதிருந்த பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டு பிளாக் போர்டில் 
எழுதப் பட்டிருந்த வாசகங்களைச் சுட்டிக் காட்டிய சிவகுமார் , " பூமியானது 
நிலத்தாலும் நீராலும் சூழப்பட்ட கிரகம் என்று இங்கே எழுதப்பட்டிருப்பது 
பூகோள ரீதியாக மிகவும் சரி.  ஆனால் இன்றைய காலகட்டத்தில், பூமியை 
சாதி, மதம் என்ற கெட்ட கிரகம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த ஜாதியும் மதமும் கடவுள் படைத்ததா ..? இல்லை ... மனுஷங்களாகிய 
நாம் பிரித்தது.... இன்று அவை நம்மைப் பிரிக்கின்றன. .. சார் .. நம்ம ஸ்கூலில் 
இந்துக்கள் , கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் என்று அனைத்து மதத்தினரும் 
இருக்கிறோம் . நமக்குள் பிரிவினை உண்டென்றால் அது சாப்பாட்டு 
விஷயத்தில் மட்டுமே. அதாவது .. ஒரு சிலர்  சைவம்.. .. மற்றவர்கள்  அசைவம் என்பதால்,  சாப்பாட்டு வேளைகளில் மட்டுமே பிரிந்து கொள்கிறோம். மற்றபடி  எந்தக் கடவுளை 
வழிபாடுவது என்பது குறித்து  
நமக்குள் எந்தவிதமான அபிப்ராய பேதமும் வந்ததில்லை.  ஆனால்.. இன்றைக்கு  உலகம் முழுவதும் ஏதோ ஒரு மதத்துக்காக ஏதோ ஒரு கூட்டம் 
வெறிபிடித்து அலைகிறது. இரண்டு யானைகள் தங்கள் பலத்தை நிரூபிக்க 
மோதிக்  கொள்கின்றன. இந்தப் போராட்டத்தைக் கண்டு குள்ள நரிகள் 
கொண்டாட்டம் போடுகின்றன. ஆனால், மற்ற சிறு விலங்குகள் பாடோ 
திண்டாட்டம். யானைகளைப் பொருத்தவரை, அவற்றின் பக்கம்   நியாயம் 
இருக்கலாம் ..  ஆனால், அதற்காக மற்ற விலங்குகள் பாதிக்கப் படுவது  எந்த 
வகையில் நியாயம் ?
இன்றைக்குச் சொல்கிறோம், எங்கள் தேவை எல்லாம் பக்கத்து வீட்டு ராமனின்  நட்பு ... எங்கள்  வகுப்பில் படிக்கும் இப்ராஹீம் நட்பு..  எதிர்  வீட்டு லாரன்சின் 
சிநேகிதம் .. மனித நேயம் என்பது நம்முடைய மூச்சாக இருக்க வேண்டும்.  
மதம் என்பது நம்முடைய மேலங்கி... மேலங்கியைக் காப்பாற்றுவதற்காக ,
மனித மூச்சை நிறுத்தும் வேலையை யாராவது செய்யலாமா ? நெவெர் ! "
என்று சொல்லி நிறுத்தினான் சிவகுமார்.
" சிவகுமார், தண்ணி  வேண்டுமா? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டுப் பேசலாமே ? " என்றார் உதவித் தலைமை ஆசிரியர் அப்துல்லா.
" தாங்க் யூ .. சார், இன்னும் அஞ்சு நிமிஷம்... நான் சொல்ல வந்ததை சொல்லி 
முடிச்சிடறேன். முதலிலேயே சொன்னேன் ... ஆசிரியப் பணி  மனித
சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறதென்று ... ஜென்ட்ல் 
மென் ... நீங்கள் எத்தனையோ அறிஞர்களை உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் 
விஞ்ஞானிகளை  உருவாக்கியுள்ளீர்கள்.. கலைஞர்களை, கவிஞர்களை ,
விளையாட்டு வீரர்களை ..  இப்படி எத்தனையோ பேரை ! ... இனி மனிதர்களை 
மனித சமுதாயத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.  உலகம் முழுவதும் 
ஜாதியும் மதமும் இறைந்து கிடந்தாலும், அதற்கு முழு அங்கீகாரம் கிடைப்பது 
பள்ளியில் தான் 
ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போதே 'அது என்ன ஜாதி, என்ன மதம் ' என்று கேட்டு பதிவு செய்கிறோம். அது பள்ளிப் பருவம்  முடிந்து, கல்லூரிப் 
பருவம், வேலை தேடும் பருவம் வரை தொடர்கிறது. அதை ஆரம்பத்திலேயே 
கிள்ளி  எரிந்து விட்டால், எங்கிருந்து வரும் ஜாதி, மதப் பிரச்சினை ? எது எதற்க் 
கெல்லாமோ  போராட்டம் நடததுகிறோம். அப்படியிருக்க ஆரம்பப் பள்ளி 
நிலையிலேயே இந்தப் பிரிவினை அகற்றப் படவேண்டுமென்று  நாமெல்லாம் 
போராடினால் என்ன ?
ஒரு ராமனுக்காகவும் , ஒரு அல்லாவுக்காகவும் இத்தனை உயிர்கள் 
பலியாவது  தேவைதானா ?  நமக்கு ராமர் கோயிலும் வேண்டாம் ; மசூதியும் 
வேண்டாம். அந்த இடத்தில் ஒரு ஆஸ்பத்திரி கட்டுவோம். .. நோய் என்று 
வரும்போது மட்டும் தான் மனிதன், " எத்தைத் தின்றால் பித்தம் தீரும் , அதைத் 
தின்போம் " என்ற நிலைக்குத்   தள்ளப்படுகிறான். டாக்டர் இந்துவா , முஸ்லிமா
கிறிஸ்தவரா என்று யோசிப்பதில்லை. தனக்கு வலி நிவாரணம் கொடுக்கும் 
டாக்டர் அவன் கண்ணுக்குத் தெய்வமாகத் தெரிகிறார்
 .
அந்த அடிப்படையில் நாம் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திரும்பவும் 
சொல்கிறேன், .. எங்களுக்குக் கடவுள் வேண்டாம் ..  ஜாதி வேண்டாம் .. மதம் 
வேண்டாம் .. மனித நேயம் மட்டுமே தேவை!  எங்களது வேண்டுகோளுக்கு 
இணங்கி இங்கு வந்து இதுவரை பொறுமை காத்த உங்கள் அனைவரையும்  
எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் " என்று கூறி வணக்கம் செய்தான் 
சிவகுமார்.
பலத்த கை தட்டலால் அவன் பேச்சை ஆமோத்தித்தனர்  ஆசிரியர்கள்.
தனது இடத்தை விட்டு எழுந்து சிவகுமார் அருகில் வந்த தணிகாசலம் 
" சிவா .. இப்படி ஒரு யோசனை உனக்கு எப்படி  உதயமானது ? " என்றார்.
" இங்கு மட்டும் இல்லை சார் .. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 
இதே டாபிக் பற்றிதான் ஸ்டுடென்ட்ஸில் யாராவது ஒரு சிலர்  
விவாதித்துக்  கொண்டு இருப்பார்கள். அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டின்படி  இந்த முயற்சியை ரகசியமாக மேற்கொண்டு இன்று 
அரங்கேற்றம்  செய்கிறோம் " என்றான் பணிவாக .
" நீ சொன்னது அனைத்துமே உண்மைதான். நியாயம்தான் . நான் மறுக்கப் 
போவதில்லை. அரசாங்க ஆணைக்கு உட்பட்டே அனைத்துக் காரியங்களும் 
நடைபெறுகின்றன . அரசாங்க ஆணையைப் பிறப்பிப்பவர்கள் அரசியல் 
வாதிகள். அந்த அரசியல் வாதிகள் எப்படிப் பதவிக்கு வருகிறார்கள் ? ஜாதியின் 
பெயரால் ... ஜாதிப் பெயரைச் சொல்லி வோட்டு  வாங்கி பதவிக்கு வருபவர்கள்  ஜாதிப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவார்கள் என்று நாம் நம்புவது  முட்டாள் 
தனமல்லவா ? மனித சமுதாயத்திலிருந்து ஜாதி மதத்தைப் பிரிக்க 
வேண்டுமானால் , முதலில் அதை அரசியல் வாதிகளின் பிடியிலிருந்து 
மீட்க வேண்டும் .பூனைக்கு மணி கட்டுவது யார் ?  அப்படி யாராவது மணி கட்ட
முன் வந்தால் , ஒரு ஆசிரியராக இல்லாமல், ஒரு மனிதனாக என்னுடைய  
முழு ஒத்துழைப்பையும்  அவர்களுக்குக் கொடுப்பேன் . அதைத்   தவிர  வேறு 
எந்தவித உத்திரவாதத்தையும் என்னால் தர முடியாது . என்னுடைய 
இயலாமைக்காக நான் நிஜமாகவே வெட்கப் படுகிறேன். .. சாரி .. மை டியர் யங் 
டீச்சர் " .. என்று கூறி சிவகுமாரின் தலையை விரல்களால் வருடினார்  
தணிகாசலம்



No comments:

Post a Comment