Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 04, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 23


                               நல்லதொரு குடும்பம் !
 
" என்னடி, பாட்டி எப்படி இருக்காங்க ? " என்று வீட்டுக்குள் நுழைந்ததுமே கேட்டார் முத்துசாமி, ஒரு வார ஆபீஸ் டூர் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியவர்.

"நேற்றே வீட்டுக்கு வந்துட்டாங்க" என்ற ஜோதிமணி, "என்னங்க, நாம என்னவோ,நாராயணன் சார் நம்ம மாதிரி சாதாரண மிடில் கிளாஸ் ஆள் என்று தானே நெனைச்சிட்டுருந்தோம்.அது உண்மையில்லை. அவரோட மூணு அண்ணன் தம்பிங்க,ஒரு அக்கா எல்லாரும் நல்ல  நிலையில் இருக்காங்க. இதிலே ரெண்டு பேர் பாரினில் இருக்காங்களாம். ஒருத்தங்க மும்பையாம். இன்னொருத்தங்க இருக்கிறது கான்பூராம். அம்மாக்கு உடம்பு முடியலை,ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காங்க  என்ற நியூஸ் கிடைச்சதுமே எல்லாரும்ப்ளைட்டில் பறந்து வந்துட்டாங்க. லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருக்காங்க. அப்பப்போ இங்கே வந்து  பார்த்துட்டு போறாங்க.  நாளைக்கு எல்லாருமே கிளம்பி போயிடறாங்க" என்று உபரி தகவல்களைக் கொடுத்தாள் ஜோதிமணி
"வசதி இருந்து என்ன பிரயோஜனம்.கூடப் பிறந்த தம்பி மூன்று பொம்பள  பிள்ளைகளை வச்சுகிட்டு கஷ்டப் படறானே. காணாக் குறைக்கு பெத்த தாயும் அவன்கூடத்தானே இருக்கிறா. தம்பிக்காக இல்லாட்டாலும், தாய்க்காகவாவது ஏதாவது உதவி செய்யலாம்.நல்ல வசதியான  நிலைமையில் இருக்கிறவங்க தாயை தங்களோடு கூடவே வச்சுக்கலாம். அப்படில்லாம்எதுவும் செய்யலே. பணப்பெருமையைக் காட்ட ப்ளைட்டில்  பறந்து வந்துட்டாங்களா?" என்று கிண்டலாக கேட்டார் முத்துசாமி .

" மேடம் " என்ற குரல் கேட்டு எச்சரிக்கையான ஜோதிமணி, " வாயை மூடிகிட்டு சும்மா இருங்க. கூப்பிடறது பாட்டியோட பெரிய மருமகள்தான் "என்று எச்சரித்து விட்டு "உள்ளே வாங்கம்மா, இவர்தான்  என் வீட்டுக் காரர். ஆபிஸ் டூர் முடிந்து இப்பதான் வந்தார். வந்ததுமே பாட்டியைப் பத்தி விசாரிச்சார்.நாராயணன் சார் இங்கு குடி வந்து ஒரு வருடம் தான் ஆகிறது.  அவர் யாரிடமும் அதிகம் பேசினது கிடையாது  ஆனா, பாட்டி இங்கு எல்லாரிடமும் நல்ல பேசி பழகுவாங்க. அதனாலே பாட்டி என்றால் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் " என்றாள்  ஜோதிமணி

"வணக்கம் சார்" என்றாள் வந்த அந்தப் பெண்.

"நீங்க எல்லோரும் லாட்ஜில் தங்கி இருக்கிறதா கேள்விப் பட்டேன் "

"ஆமாம் சார்,நாளைக்கு கிளம்பறோம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்."

" மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு வயதான மாமியாரையும்  வைத்துக் கொண்டு அந்தப் பொண்ணு கஷ்டப்படுகிறது.உடம்புசரி இல்லாத வங்களை பார்க்க வந்தவங்க, அவங்க கூட இருந்து கவனிக்காமே லாட்ஜில் தங்கிட்டீங்க போலிருக்கு"  என்று கேட்டார் முத்துசாமி, மனைவியின் முறைப்பையும் லட்சியம் பண்ணாமல்.

"உங்க கேள்வி நியாயம்தான் சார்.நாங்க இங்கே தங்கும்படியான சூழ்நிலை  இல்லை.  எல்லாருமே  ஏதோவொரு  பிசினசில் இருக்கிறோம் அதிக பட்சம் ஒரு வாரம்தான் தங்க முடியும். மனுஷ மனம் எப்பவும் எதையும்  கம்பேர் பண்ணிப் பார்த்தே பழகிப்போன ஒன்று. ஒரு வாரம்தானேன்னு நாங்க  விழுந்து விழுந்து கவனிப்போம். எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில் கௌரி அத்தையை கவனிச்சுக்கிட்டு  வேலைக்கும் போயிட்டு வர்றா. இந்த ஒரு வார கால எங்களுடைய கவனிப்பு அத்தைக்கு பழக்கப்பட்டு போனால்  கௌரியிடமும் அதை எதிர் பார்ப்பார்கள் . வீட்டில் தேவை இல்லாத சண்டை சச்சரவு வரும். அதை எல்லாம் அவாயிட் பண்ணத்தான்,யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாதபடிக்கு லாட்ஜில் தங்கிட்டோம். சரி .. நான் கிளம்பறேன் சார் , கிளம்பறேன் மேடம்" என்று சொல்லி விட்டு,வந்த அந்தப்பெண் வெளியேறினாள்.

" நான் போய்  பாட்டியை பார்த்துட்டு வர்றேன்." என்று கிளம்பினார் முத்துசாமி.

" அவங்க எல்லாரும் கிளம்பி போன பிறகு , நீங்க போய் பார்க்கலாம். இப்போ போய் எந்த வம்பையும் விலைக்கு வாங்க வேண்டாம் " என்றாள் ஜோதிமணி.

மறுநாள் எல்லோரும் கிளம்பிப்போனதும் பாட்டியைப் பார்க்க சென்றார் முத்துசாமி. 

"என்னம்மா உடம்பு எப்படி இருக்கு.மருந்து மாத்திரை எல்லாம் வேளா வேளைக்கு சாப்பிடணும். அலட்சியம் காட்டக்கூடாது" என்றார் கனிவான  குரலில்.

"அதெல்லாம் சரியா நடக்குது. எந்த குறையும் கிடையாது." என்ற பாட்டி, உள்பக்கம் திரும்பி "கௌரி, சாருக்கு காபி கொண்டு வா " என்றார்கள்,

"வேண்டாம்மா.வரும்போது குடிச்சிட்டுத் தான் வந்தேன்.அம்மா , கேட்கிறேன்னு தப்பா நினைக்க கூடாது.உங்களோட மத்த மகன்க எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறாங்க. இந்தப் பிள்ளை மட்டும் ரொம்ப சிரமத்தில் இருக்கிறாரே என்று மெதுவாக கொக்கி போட்டார் முத்துசாமி.

"எங்க வீட்டையா எல்லாரையும் நல்லா படிக்க வச்சார். ஒரே மாதிரிதான் சொத்து சுகம் எழுதி வச்சார். மத்த மகனுங்க எல்லாரும் முதலில் கிடைச்ச வேளையில் உட்கார்ந்து சொத்து சேர்த்துவிட்டு பிறகு சொந்த தொழில் ஆரம்பிச்சாங்க. இவன் முதலிலேயே சொந்த பிசினஸ் பண்றேன்னு  சொத்தை எல்லாம் நாசம் பண்ணினான். இவன் என்ன செய்வான், இவன் வாங்கி வந்த வரம் அப்படி. உப்பு விற்கப் போனா மழை பெஞ்சுது . மாவு விற்கப் போன காத்தடிச்சுது .  எல்லா சொத்தும் போச்சு. மத்த மகன்க இவனை தங்களோடு கூட வந்து இருக்க,கூடமாட தொழிலை கவனிக்க கூப்பிடறாங்க.இவனுக்கு கௌரவ பிரச்சினை இவனுக்கு பண உதவி பண்ண யாரும் தயாரில்லை. பழையபடி பணத்தை   வீணாக்கி விடுவானு  பயப்படறாங்க. ஏதோ காலம் ஓடுது "  என்றாள்  சலிப்பான குரலில். 

"அப்படின்னா நீங்க மற்ற மகன்களில் யாராவது ஒருத்தர்கிட்டே போய் இருக்கலாமே"

"இல்லேப்பா . நான் இங்கே இருக்கிறதுதான் சரி. என்னை காரணமா வச்சு மத்த பிள்ளைகள் பண உதவி செய்றாங்க. அதை குழந்தைகள் பேரில் சேமிப்பில் போட நான்தான் சொல்லிட்டேன். நாளைக்கு அதுங்க எதிர்காலத்துக்கு ஏதாவது பணம் கையில் இருக்கணுமே. மத்த குழந்தைங்க என்னை அவங்க கூட வந்து இருக்க சொல்லி கட்டாய படுத்துறாங்க. இவனுக்காகத்தான் நான் எங்கேயும் போகாமே இங்கே இருக்கிறேன். இந்த வயதான காலத்தில், என் பிள்ளைக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்றேன் " என்றாள் பாட்டி 

கொஞ்சநேரம் உட்கார்ந்து சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் எதை எதையோ பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.வெளிப்படையாக  பார்க்கும் போது மற்றவர்களின்   செய்கைகள் தப்பாகத்தான் தெரியுது.ஆனால் பேசிப் பார்க்கும் போதுதான் ஒவ்வொருவர் செய்கைக்கு பின்னாலும் எதோ ஒரு தகுந்த காரணம் இருக்கிறது, அது நியாயமாகவும் இருக்கிறது   என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று  தனக்குள் சொல்லிக் கொண்டார்.
  

No comments:

Post a Comment