Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 20, 2012

TIT BITS


      நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !

ஹலோ, ஒரு நிமிஷம். பெட்ரோல் விலை ஏறினால் போதும், அதுதான் சாக்கென்று அத்தனை பொருட்களின் விலையும் ரெக்கை கட்டிக் கொண்டு ஏறி விடுகிறதே. இப்படி விலை ஏறிக்கொண்டே  போனால் ஏழை பாழைங்க எல்லாம் பிழைக்கிறதா வேண்டாமா என்று  கவலைப்படும் "திருவாளர் பொதுஜன"மா  நீங்க ?

அட, அசட்டு திருவாளர் பொதுஜனமே, கவலையை விட்டுத் தள்ளுங்க.  இந்த, இன்றைய விலைவாசியை நினைச்சி நினைச்சி  நீங்கள் சந்தோசப் படுகின்ற  , எண்ணி எண்ணி ஏங்குகின்ற  நாள் ஒன்று கண்டிப்பாக வரும்.

தமாஷ் இல்லீங்க, அத்தனையும் அக்மார் உண்மை. விலாவாரியா , விளக்கமா சொன்னாதானே உங்களுக்கு புரியும். இப்ப மேட்டருக்கு வருவோம்.

flash - back  இங்கே ஆரம்பிக்கிறது.

45 வருடங்களுக்கு முன்பு. அப்போ எனக்கு வயது 14 . வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க நான்தான் மார்க்கெட்டுக்கு போவேன். அம்மா என்னிடம் 30  பைசா கொடுத்தனுப்புவாள். குழம்புக்கு, கூட்டு அல்லது பொரியலுக்கு என்று காய்கள் வாங்கிக்கொண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் வாங்கிக் கொண்டு வருவேன். ( அதில் நான் 5  பைசா கமிஷன் அடித்து விடுவேன்.  10 தடவை கடைக்குப் போகும்போது ஐந்து, ஐந்து பைசாவாக கமிஷன் அடித்தால் 50 பைசா சேர்ந்து விடும். அந்த காசில் சினிமா பார்ப்பேன். அந்த நாட்களில் நான் ஒரு சினிமா பைத்தியம், சினிமா பைத்தியம் என்று சொல்வதை விட பாட்டுப் பைத்தியம் என்று சொன்னால்தான் பொருத்தமாக  இருக்கும். இப்போ இருக்கிற மாதிரி அப்போவெல்லாம், டேப் ரெகார்டர்,   கம்ப்யூட்டர் ப்ளாபி எல்லாம் ஏது. ? மதராஸ் வானொலி நிலையத்தில் எப்படா பாட்டு போடுவாங்கன்னு, ரேடியோ முன்னாலே தவம் கிடப்போம். சில படங்களில் பாட்டுக்கள் மிக அருமையாக இருக்கும். அதற்காக பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்ப்போம். அப்போவெல்லாம் வாரம் ஒரு படம் ரெலீஸ் ஆகாது.  வருடத்திற்கு 15 படம் வெளியானால் அதுவே அதிகம்.  இனிமே நாம நம்ம மெய்ன் பிக்சருக்கு வருவோம் )

30 பைசா,  sorry , sorry , 25 பைசாவுக்கு நான் வாங்கிக் கொண்டு வரும் காய்கறிகள், ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பத்திற்கு ( அப்பா, அம்மா, நாங்க அக்கா தங்கைங்க அஞ்சு பேர் ) போதுமானதாக இருக்கும். ஆனால்  எங்க அம்மாவோ, " காய் வாங்கவே 30 பைசா அழ வேண்டியிருக்கு.  பூமியில் விளையறதெல்லாம்  எங்கேதான் போகிறதோ?  விலைவாசி ஏன்தான் இப்படி ஏறுதோ தெரியலையே" என்பாள்.

அம்மாவின் புலம்பல் எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். எங்களைப் பொறுத்த வரை அந்த 30 பைசா ஒரு பெரிய விஷயமே இல்லை.  இதைவிட குறைவான விலைக்கு எப்படி கிடைக்கும் என்போம்.

உடனே அம்மா ஆரம்பித்து விடுவாள். " எனக்கு கல்யாணம் ஆகும்போது ஒரு பவுன் தங்கம் விலை 8 ரூபாய்.  எனக்கு சீதனமா உங்க ஆச்சி ஒரு வெள்ளி விளக்கு கொடுத்தா. அதோட விலை ஆறு ரூபாய்தான்.  கால்துட்டு அரைத்துட்டு கொடுத்தாலே பை நிறைய சாமான் வாங்கிட்டு வரலாம். படிக் கணக்குதான் அப்போ. ஒரு துட்டு ஒன்றரை துட்டு  குடுத்தா போதும். படிக் கணக்கில் எண்ணெய் வாங்கி தீபாவளி கொண்டாடிடலாம். இப்போ என்னத்துக்குதான் இப்படி தீஞ்சு போகுதோ தெரியலையே. அப்போ  நாங்க கையில் பணம் எடுத்துட்டு  போய், பையில் சாமான் வாங்கிக் கொண்டு வருவோம். இப்போ பையில் பணம் எடுத்துட்டு போய், கையில் சாமானை வாங்கிட்டு வரும்படி ஆகிவிட்டது   " என்று அலுத்துக் கொள்வாள் . 

"ச்ச்சே, அப்போ நாம பிறக்காமே போயிட்டோமே"ன்னு நானும் எனது சகோதரிகளும் பேசிக் கொள்வோம்.

அதன் பிறகு படிப்படியாக, "படி" காலம் மாறி, கிலோ, லிட்டர் என்று அளவுகள் ஆரம்பமானது.

1969 ல் பணக் கஷ்டம் காரணமாக, ஒரு பவுன் தங்க செயினை , நூறு ரூபாய்க்கு விற்றிருக்கிறோம். ஒரே ஒரு நூறு ரூபாய் குறைவாக இருந்த காரணத்தால்,  வாங்க நினைத்த வீட்டு மனை வாங்க முடியாமல் கை நழுவிப் போனது.  பணக் கஷ்டத்தால், கிட்டத்தட்ட அரை கிரௌண்ட் நிலத்தில் கட்டியிருந்த வீடு ஒன்றை வெறும் 3000 ரூபாய்க்கு விற்கும் சூழ்நிலை.

1977 ல் நான் government service க்கு வந்தேன். temporary post . மாத சம்பளம் 150 ரூபாய்.  தினமும் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு ஆபிஸ் போவேன். போக வர, பஸ்சுக்கு 30 பைசா . காலை மாலை ஒரு காபி. அதற்கு 30 பைசா. மாலையில் பஸ்சுக்கு காத்திருக்கும் வேளையில் நானும் தோழிகளும் சேர்ந்து வேர்க்கடலை வாங்கிக் கொரிப்போம். அதற்கு ஒரு 15 பைசா. ஆக, கொண்டு போகிற ஒரு ரூபாயில் , 25 காசு மிச்சம் பிடித்து விடுவேன்.  ( ஒரு பவன் தங்கம் ரூபாய் 1200 என்பதாக எனக்கு ஞாபகம்.)  20 ரூபாயில் தரமான புடவை கிடைத்தது. ஒன்றரை ரூபாய்க்கு blouse bit கிடைத்தது. ( ஆனால் அதைக்கூட கஷ்டப்பட்டுதான் வாங்க வேண்டிய அளவில் பணப் புழக்கம் இருந்தது. )  1981 ல் எனது சம்பளத்தில் சிறுக சிறுக சேமித்த பணத்தில் கால் சவரனில் ஒரு கம்மல் வாங்கினேன். அதன் விலை அப்போது 384 ரூபாய். இன்றும் அது என்னிடம் பத்திரமாக உள்ளது.  ( பணக் கஷ்டத்தில் விற்க வேண்டிய சூழ்நிலைகளில் கூட அதை நான் விற்க வில்லை.)

இப்போது நான் retirement stage ல் இருக்கிறேன். ஆபீசில் புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் பெண்களிடம் அந்த  கம்மலைக் காட்டி  அதன் விலையை சொல்வேன்.  

" ஐயோ எப்படி மேடம்? , நாங்க  இதே எடை தங்கத்தை அஞ்சாயிரம் குடுத்து வாங்கி இருக்கிறோம் " என்பார்கள்.

அவர்களிடம்,  நான், ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டு ஆபிஸ் வரும் கதையை சொல்வேன்.

" ஐயோ, எப்படி மேடம் ? நாங்க அப்பவே பிறக்காமே போயிட்டோமே " என்பார்கள்.  (இப்படி நிறைய உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் )

ஒரு காலத்தில் விலை உயர்வைக் கண்டு அம்மா அங்கலாய்க்க, அதை கேட்டு நாங்கள் ஆச்சரியப்பட்டு போவோம்.  எனது சிறு வயதில் இருந்த விலைவாசிகளை இன்றைய தலைமுறையினருக்கு நான் சொல்ல, அதைக் கேட்டு அவர்கள் வியந்து போகிறார்கள்.  

 எனவே.,  டியர் யூத், இன்றைய விலைவாசியை மனசில் பதியம்  போட்டு வையுங்க. இன்றைக்கு வருத்தப்பட்டுக்கொண்டே செய்கிற செலவு எல்லாம், பின்னே ஒரு காலத்தில் மிகக் குறைந்ததாக தெரியும். அதை உங்க அடுத்த தலைமுறைக்கு சொல்லி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள் . 

எனி அப்ஜெக்சன் ? 


No comments:

Post a Comment