Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 20, 2012

Scanning of Inner - Heart ( மனதின் மறுபக்கம் ) Scan Report Number - 21

( ஆனந்த விகடன் நடத்திய "ஓவியமே   கதை சொல்லு " போட்டியில், நான் எழுதிய  இச்சிறுகதை முதற் பரிசாக ரூபாய் 12, 500 /-  பெற்றது.
05 .01 .2003 ஆனந்தவிகடன் இதழுடன் இணைப்பாக வெளியாகியுள்ளது  )
                       
                                மரம் நட்டவள் !

ரெண்டு மணி பஸ்சுலே எப்டியும் அய்யரு வந்துரணும். அத விட்டாக்க, பெறகு நாலு மணி பஸ்ஸுதான் என்று நினைத்தவளாக,  ஆலமர  நிழலுக்குச் சென்று தலைச்சுமையை இறக்கி மரத்தில் சாய்வாக வைத்துவிட்டு, சும்மாட்டுத் துணியை உதறி,  வழியும் வியர்வையைத் துடைத்தாள் செங்காளி. புழுதியைக் கிளப்பி விட்டபடி, தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. இடுப்பிலிருந்த கவரை உருவி எடுத்து , வியர்வைத்துளியை புடவைத் தலைப்பால் மெதுவாக ஒற்றி எடுத்தாள்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய சிவராமன் மரத்தருகில் வந்தார்.

" யாரு... செங்காளியா ?"  என்றார் கண்களை இடுக்கிக் கொண்டு.

"  ஆமாஞ்சாமி .... நிழல்லே வாங்க சாமி .."

"என்னவோ விஷயம் இருக்கும் போலிருக்குதே ! தம்பிக்காரன் கிட்டேயிருந்து லெட்டர் வந்திருக்குதா ?"

" அதென்ன சாமி ? அம்புட்டுச் சரியா சொல்லிபுட்டீக ..." என்று வியந்தாள் செங்காளி.

கவரை வாங்கிப் பார்த்தார் சிவராமன். அவருடைய முகவரி மிகத் தெளிவாக எழுதப்பட்டிருந்தது.  வழக்கமாக செங்காளி பெயருக்குத்தான் லெட்டர் வரும். இப்போது தனிப்பட்ட முறையில் தனக்கு லெட்டர் எழுதுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்தவராக, " செங்காளி,  லெட்டர் எனக்குத்தான் எழுதியிருக்கான். நான் கண்ணாடியை எடுத்துட்டு வரலே ... வீட்டுலே போய்ப் படிச்சுப் பார்த்துட்டு, விவரம் சொல்றேன். நீ அப்புறமா வீட்டுக்கு வாயேன் ..." என்றார் சிவராமன்.

"வேணாம் சாமி ... இன்னிக்கு நான் கருவாடு வச்சிருந்தது   ஆச்சிம்மாக்கு  தெரியும். இன்னும் ரெண்டு நாளைக்கு அந்தத் தெருப்பக்கம் நடக்கக்கூட ஆச்சிம்மா வுடமாட்டாக.   சாமி ...  நீங்க ஆத்தங்கரைப் பக்கமா காத்து வாங்க இப்படித்தானே தெனக்கி வருவீக.  நான் இங்கிட்டு இருக்கேன். வர்றப்பப் படிச்சு சொல்லுங்க .." என்றாள்.

"சரி" என்று பட்டது சிவராமனுக்கு. நடக்க ஆரம்பித்தார்.

" வீட்டுக்குள் நுழையும்போதே, "செங்காளி உங்களைப் பார்த்தாளா ?" என்று கேட்டாள் பர்வதம்.

"ஆமா, அய்யாத்துரை லெட்டர் போட்டிருக்கான்... மாடக்குழியில் கண்ணாடிக் கூடு இருக்கு. எடு ..." என்றார்.

" முதல்லே கை, கால் அலம்பிண்டு சாப்பிடுங்கோ..  என்னத்தப் பெரிசா எழுதி இருக்கப்போறான் ..."இந்த மாசம் ஆயிரம் ரூபா அவசரமா வேணும். உன்னைக் கேட்கவும் கஷ்டமாத்தான் இருக்கு. உன்னை விட்டா வேறு யார் இருக்கா ? சிரமத்தைப் பார்க்காமே, தந்திபோல் இந்த லெட்டரை நெனச்சிக்கிட்டு பணம் அனுப்பு. இதை ... இதைத்தான்  "ஸ்ரீராமஜெயம்" மாதிரி அவன் எழுதற அத்தனை லெட்டரிலும் எழுதறான். ஒரே ஒரு லெட்டரிலாவது "அக்கா, நீ எப்படி இருக்கே ? சாப்பிட்டியா, தூங்கினியானு கேட்டு எழுதியிருப்பானா  ?" என்று படபடத்தாள் பர்வதம்.

" ஏண்டீ .. உன்கிட்டே கண்ணாடிக்கூடுதானே எடுத்து வரச்சொன்னேன். அதுக்கு இத்தனை பேச்சா ?"

கண்ணாடியை எடுத்து அவர் கையில் கொடுத்தவள், அவர் கவரைப் பிரிப்பதை எட்ட நின்று எட்டிப் பார்த்தாள்.

கவரிலிருந்து லெட்டரை எடுத்துப் படித்த சிவராமன், சிறிது நேரம் அமைதியாக இருந்தார். திரும்பவும் , முதலிலிருந்து கடைசி வரை நிதானமாக லெட்டரைப் படித்தார்.

" இப்படி ஒரு பிள்ளைக்குப் படிப்பு தேடிக் குடுக்கிறதுக்குப் பதிலா நாலு தென்னம் பிள்ளை நட்டு தண்ணி ஊத்தியிருந்தா , அது தாக சாந்திக்கு 'இளநி ' குடுத்திருக்கும். இவனெல்லாம் படிச்சு முடிச்சு எந்த சமூகத்தைத் தூக்கி நிறுத்தப் போறான்னு தெரியலே .." என்றார்.

" விசயத்தைச் சொல்லுங்கோ "

" அந்த ராஸ்கல் ஒரு பொண்ணை  விரும்பறானாம்.. இவன்கூட படிக்கிறவ .. பெரிய ஜமீன் பரம்பரையாம்.. அவ குடும்பத்திலே சம்மதம் சொல்லிட்டாளாம்.  ஆனா, இவன் அவங்ககிட்டே 'தனக்கு யாருமே கிடையாது, தான் ஒரு அநாதை'ன்னு சொல்லியிருக்கிறானாம்.  காரணம், அவன் ஜாதி .. ஏழ்மைதானாம்.  நாலு பெரிய மனுசங்க வர்ற இடத்திலே அவங்க நாகரீகத்துக்கு ஏத்த மாதிரி செங்காளிக்கு நடந்துக்க தெரியாதாம். அதனாலே இவளை கல்யாணத்துக்குக்  கூப்பிடலையாம். கல்யாணம் முடிஞ்சதும், அவனுக்கு வசதிப் பட்டா, நல்லா கவனி .. வசதிப் பட்டா .. இவன் ஒரு 'நடை' வந்து போவானாம். அதைத்தான் நாலு பக்கத்துக்கு எழுதியிருக்கான்".
" ஓஹோன்னான்னாம் ... இந்த மாதிரிப் பிள்ளைகளைக் கொன்னாக் கூட பாவமே கிடையாது." என்று படபடத்தாள் பர்வதம். 

" கொல்றது... குழி  தோண்டறதெல்லாம்    அப்புறம். இப்ப செங்காளிக்கு எப்படிச்சொல்றது ? என்ன சொல்றது ? " என்றவர், தலையணையை எடுத்துப்போட்டு ஊஞ்சல் பலகையில் சாய்ந்து கொண்டார்.

பழைய நிகழ்வுகளை மனம் அசை போட்டது.

நேற்றுத்தான் நடந்த மாதிரி இருக்கிறது. ஆனால், பதினைந்து வருடம் ஓடிவிட்டது. சிவராமனின் மூத்த பையன் கோபாலன் தன்னுடைய மேலதிகாரியை அழைத்துக் கொண்டு வருவதாக லெட்டர் எழுதியிருந்தான் . அவர் குற்றாலம் பார்க்க  ஆசைப்படுகிறாராம் . அதனால் அவருடன் துணைக்குச் செல்வதாகவும், வரும் வழியில் அவரை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் எழுதியிருந்ததால், சிவராமன் வீட்டை மட்டுமல்ல.. அக்ரகாரத்தையே அழகு படுத்த முயற்சி எடுத்துக் கொண்டார். 
ரத்தினக் கம்பளம் விரிக்காத குறையாக, வந்தவரை உள்ளே அழைத்துச் சென்றார் சிவராமன் . எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். அவர் அருகிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார். சாப்பிட்டுக் கைகழுவிய  கலெக்டர் கைகளைத் துடைத்துக்கொள்ள கர்சீப்பை எடுக்கும் முன்பாகவே, தன்னுடைய மேல் துண்டை அவர் கைகளைத் துடைத்துக் கொள்ள  நீட்டினார் சிவராமன்.

அன்று சாயங்காலம் தயங்கியபடியே அவர் வீட்டு  வாசலில் வந்து நின்ற செங்காளி " சாமீ" என்றாள் .

" என்னடி.. எங்க வீட்டுக்குக் கலெக்டர் வந்தார் ... பார்த்தியோன்னோ ?"

" பார்த்தேன் சாமி "

" நம்ம கோபாலன்னா    அவருக்கு உசிர் "

" சாமி .. இப்ப வந்துட்டு போனாகளே, அவக எங்க  சாதி சாமி.. ஒன்னு விட்ட ஆயி மவன் அவக.."

" அப்படியா ? உங்க சாதின்னு தெரியும்.. உனக்கு சொந்தம்னு தெரியாமப் போச்சே ! வந்து பேசி இருக்கிறதுதானே ?"

"  அதுக்கில்லே சாமி  ... அவுக எங்க சாதின்னு தெரிஞ்சுமா, வூட்டு உள்ளே வரை வர விட்டீக... ஒண்ணா உட்கார்ந்து சோறு தின்னிங்க ?"

" அட அசடே ..  அவர் என்ன சாதிங்கிறதை  யார் பார்த்தா ? அவர் கலெக்டர் .."
"சாமி, நான் தொட்டுக் குடுக்கிறதை தண்ணி தெளிச்சு எடுக்கிற நீங்க .. இதை எப்படி மனசு ஒப்பி செய்தீக ?"

" அது ... அதுதாண்டி படிப்போட மகிமை ... பதவியோட பெருமை ... அந்த ரெண்டுலே எல்லா மைனஸ் பாயிண்டும் அடிபட்டுப் போயிடறது "

" அடேயப்பா .. எனக்குத் தெரியாமப் போச்சே. அந்தப் படிப்பு படிக்க எம்புட்டு செலவாகும் சாமீ ?"

" எதுக்குக் கேட்கிறே ?"

" அது .... வந்து ... சாமீ ... என் தம்பி...   அய்யாத்துரையை அந்த படிப்புப் படிக்க வைக்கலாமேனுதான் ..."

" ஒ .. வைக்கலாமே . பேஷா படிக்க வைக்கலாம். உங்களுக்குத்தான் கவர்ன்மென்ட் நிறைய சலுகை எல்லாம் தர்றது ! உன் தம்பியும் நன்னா படிக்கிறான். பட்டணத்து ஸ்கூலில் சேர்த்தா நல்லாவே படிச்சு முன்னுக்கு வருவான்."

" சாமீ ... அப்படினா அய்யாத்துரையை டவுன்  பள்ளிக்கூடத்திலே  சேர்க்கலாம் சாமீ "

"டவுனில் சேர்த்தா ஹாஸ்டல் செலவு, போய்ப் பார்த்துட்டு வர்ற செலவுன்னு நிறைய ஆகுமே செங்காளி ."

" நஞ்சை புஞ்சை நிலம் இருக்கு.. வீட்டு மனை இருக்கு. தோட்டம் தொறவு இருக்கு. அதையெல்லாம் வித்தாவுது படிக்க வச்சிடணும் சாமி  .."

" எல்லாத்தையும் வித்துட்டா நீ என்னடி செய்வே ?. உனக்கும் வயசு இருபத்தஞ்சு தாண்டி இருக்குமே. உனக்கு ஒரு கல்யாணம் காட்சிப் பண்ணிப் பார்க்க வேண்டாமாடி  ?" என்றாள் அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பர்வதம்.

" அட ! என்னை விட்டுத் தள்ளு ஆச்சிம்மா. இத்தினி வயசுக்கு மேலே கண்ணாலம் என்ன வேண்டி கிடக்கு ? நான் வயசுக்கு வந்த பிறகு அய்யாத்துரை பிறந்தான். அப்பன் ஆயி ரெண்டுபேரும் காருலே அடிபட்டு செத்த  பிறகு, என் புள்ள மாதிரிதான் அவனை வளர்க்கிறேன். அவன் நல்ல நிலைமைக்கு வரணும்.  அதான் எனக்கு வேணும். அதான் எனக்கு சந்தோசம் ..இந்த வருசமே அவனை டவுன் பள்ளிக்கூடத்திலே  போட்டுறலாம். அதுக்கு என்னென்ன செய்யனுமோ செய்யுங்க " என்று  உறுதியாக சொன்னாள் .

அவள் ஆசைப்பட்ட படியே அலைந்து திரிந்து அய்யாத்துரையை டவுன் ஸ்கூலில் சேர்த்து விட்டார் சிவராமன்.  தம்பியை ஹை ஸ்கூல் வரைப் படிக்க வைப்பாள் என்று எதிர் பார்த்தார்.  ஆனால், எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி காலேஜில் சேர்த்தாள்.  சும்மா சொல்லக்கூடாது. அய்யாத்துரையும் எதிலும் நம்பர் ஒன்னாக இருந்தான். ஐ ஏ எஸ்சுக்காக  அவன் தேர்வு செய்யப் பட்டபோது, செங்காளியைக் காட்டிலும், சிவராமனே அதிக சந்தோச மடைந்தார்.  அந்த ஐ ஏ எஸ் என்ற மூன்று எழுத்தை அய்யாத்துரைக்கு வாங்கிக் கொடுப்பதற்காக செங்காளி பட்ட கஷ்டத்தை அந்த கிராமமே அறியும்.

நல்ல துமணி கிடையாது. சரியான சாப்பாடு கிடையாது. படிப்புக்காக நஞ்சை புஞ்சை எல்லாம்  காலியானது. மிஞ்சியிருக்கிறது  கூரை வீடு மட்டுமே. மற்றவர்கள் நிலத்தில் கூலி வேலை செய்து அவன் கேட்ட போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள்.  இதுதான் கடைசி வருஷம். இந்த வருசப் படிப்போடு இவள் கஷ்டத்துக்கு ஒரு ,முற்றுப் புள்ளி விழுந்து விடும் என்று சிவராமன் எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தார்.

அந்த ராஸ்கல் என்னவென்றால் ஜமீன் பரம்பரையை சேர்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானாம். படிப்பறிவில்லாத செங்காளி அங்கு வந்தால், அவன் அந்தஸ்து குறைந்து விடுமாம். சந்தர்ப்பம் கிடைத்தால் நேரில்  ஒரு முறை வந்து போவானாம். அதை அக்காவிடம் சொல்லும்படி அய்யாதுரை எழுதி இருந்தான். நிம்மதி இல்லாமல் உருண்டு புரண்டு படுத்தபடி இருந்தார் சிவராமன்.

சாயங்காலம் வழக்கத்தைவிட முன்னதாகவே வாக்கிங் கிளம்பினார்.  செங்காளி ஆலமரத்தடியில் உட்கார்ந்திருப்பாள் என்பது  நன்றாகவே தெரியும். என்னென்ன சொல்லலாம், அதை எப்படியெப்படி சொல்லலாம் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டார்.

" தம்பிக்கு இந்த வருஷம் படிப்பு முடியறது. அடுத்தது கல்யாணம்தானே ?" என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.

" ஆமாம் " என்று செங்காளியிடமிருந்து ஒற்றை வார்த்தையாக பதில் வந்தது.

" உனக்கு,  பெண் பார்க்கிற சிரமத்தை உன் தம்பி வைக்கலே "

" கல்யாணம் பண்ணிட்டானா, இனிமேதான் பண்ணப்போகிறானா?"

இதை சற்றும் எதிர்பாராத சிவராமன், " உனக்கு விஷயம் தெரியுமா?" என்றார்.

" சாமீ, நான் வழக்கம்போல, தபால்கார ஐயாவைப் பார்த்ததும், 'ஏதாச்சும் கடுதாசி வந்துருக்கா'ன்னு கேட்டேன். 'உன் பேருக்கு இல்லை. ஐயரு பேருக்குதான் வந்திருக்கு. உன் தம்பி கையெழுத்து மாதிரிதான் இருக்கு'னு இந்த காயிதத்தை குடுத்துட்டுப் போனாக. ' ஒருநாளும் இல்லாத திருநாளா. தம்பி என்னத்துக்காக உங்களுக்கு காயிதம் போடணும்'னு ரோசனை பண்ணிட்டுருந்தேன். நீங்க வந்ததும் வராதுமா கல்யாணப் பேச்சை எடுக்கீக. ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு கூட்டிச்சொல்ல  பள்ளிக்கூடப் படிப்பு வேணுமா என்ன ?  சாமீ, எதுன்னாலும் பரவாயில்லை, உள்ளதை உள்ளபடி சொல்லணும் ... ஒளிக்க வேண்டாம் " .  

விசயத்தை சொன்னார் சிவராமன். 
ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல் செங்காளி அழுது புலம்பவோ, ஆர்ப்பாட்டம் பண்ணவோ இல்லை. அவளுடைய அமைதி அவருக்கு நெஞ்சை கனக்க வைத்தது.

அமைதியாக எழுந்த அவள், சும்மாட்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டாள். 

" சாமீ... உங்க சாதிக்காரங்க, கீழ் சாதின்னு சொல்லி எங்களைத் தள்ளி வச்சிடுதாக. அது நியாயம்னே இருந்துட்டுப் போகட்டும். ஆனா,  படிச்சு முடிச்சு நல்ல நிலைக்கு வந்துட்டா, எங்க சாதிக்காரனே எங்களை ஒதுக்கிறது எந்த வகையில் நியாயம் ?" என்று கேட்டாள்.

சிவராமன், " அதெல்லாம் அந்தக் காலம்..  இப்பல்லாம் சாதியாவது மண்ணாவது..." என்றார்.

" பட்டணத்துலே வேணும்னா அப்படி வித்தியாசம் பார்க்காமே மத்தவக பழகலாம் சாமீ. ஆனா, இன்னிக்கும் நாங்க குடுக்கிறதை நீங்க தண்ணி தெளிச்சுதானே எடுக்கீக. இம்புட்டு என்னத்துக்கு. பக்கத்து ஊர்லே எங்க சாதிசனம் வீட்டுக் கல்யாணம்னு போனேன். அங்கிட்டு ஒரு டீக்கடையிலே காபி குடிக்கப் போனா, எங்களைப் பார்த்திட்டு அலுமினிய டம்ப்ளரில் காபியை  ஊத்தி வெளியில் கொண்டாந்து தந்தான் கடைக்காரப் பையன். இப்ப என் தம்பியே என்னை ஒத்துக்கிட்டான். மத்தவகளை சொல்லி என்ன பிரயோஜனம் ? சாதியை அம்புட்டு சீக்கிரம் ஒழிச்சிட முடியாது. "  என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசியபடி கிளம்பினாள் செங்காளி .

அதன் பிறகு எதுவுமே நடக்காததுபோல் தினமும் அவள் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான், யாருமே எதிர்பார்க்காத வண்ணம், அந்தக் கிராமத்துக்குள் கார்களின் அணிவகுப்புடன் வந்து, சிவராமன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள், ஜமீன்தாரிணி நீலதாட்சாயணி, தன்னை இன்னாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டு. 

செங்காளியை அழைத்துவர ஆளனுப்பினார் சிவராமன்.  

" என்ன காரணத்துக்காக எங்க வீட்டு மாப்பிள்ளை தனக்கு ஒரு அக்கா இருப்பதை மறைச்சார்னு எனக்குத் தெரியாது. ஆனா, விஷயம் தெரிஞ்ச பிறகு, வராமலிருக்க என் மனசு இடம் கொடுக்கலே. ஒருவேளை அவருடைய  ஏழ்மை எங்களுக்குத் தெரிய வேண்டாம்னு நினைச்சிருக்கலாம். இப்போ அவரும் என் பொண்னும்   ஹனி மூனுக்கு சுவிச்சர்லாந்து போயிருக்காங்க. லண்டன் பாரீஸ் எல்லாம் சுத்தி விட்டு ஒரு மாதம் கழித்துதான் இந்தியா வருவாங்க.  அதுவரை பொறுத்திருக்க வேண்டாம்னுதான் நானே கிளம்பி வந்தேன். அவருடைய அக்காவை, என்னுடன் எங்க சமஸ்தானத்துக்கு அழைச்சிட்டுப் போக வந்தேன். நீங்கதான் அதற்கான ஏற்பாட்டை செய்யணும். நீங்கதான் அந்த குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்றதா மாப்பிள்ளையோட நண்பர் மூலமா கேள்விப் பட்டேன். அதான் நேரா, உங்க வீட்டுக்கு வந்தேன்  " என்று விளக்கினாள்.


செங்காளி வந்ததும், விசயத்தை சொன்னபோது, லேசில் சம்மதிக்கவில்லை. சிவராமனும், பர்வதமும் அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்கள் .

பத்து நாட்கள் சென்றிருக்கும். டவுனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் சிவராமன்.  வாசலில்  கார்  ஹார்ன் சத்தம். டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் உள்ளே வந்து, " நான் சாம்பூர் சமஸ்தான மேனேஜர். உங்களை அழைத்து வரும்படி அம்மா உத்தரவு ..." என்றார்.

ஜமீன் மாளிகை முன்பாக கார் நின்றபோது மணி ஒன்றரை. அவரைக் கண்டதும் பணியாட்கள் அனைவரும் சல்யுட் செய்து , வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

" அம்மா உள்ளே இருக்காங்க.  நீங்க எப்போ வந்தாலும், உடனே உள்ளே அழைத்து வரும்படி  உத்தரவு ....  வாங்க " என்று அழைத்துச்சென்ற பணியாள், சாப்பாட்டுக் கூடத்தின் வாசலில் விட்டுச்சென்றான். 
அங்கு அவர் கண்ட காட்சி அவரை வியக்க வைத்தது.

வீட்டில் அத்தனை பணியாட்கள் இருந்த போதிலும்,சாப்பாட்டு மேஜை முன் உட்கார்ந்திருந்த செங்காளிக்கு, ஜமீன்தாரிணி நீலதாட்சாயணி தேவியே உணவு பரிமாரிக்கொண்டிருந்தாள்.  எதிலும் படாமல், நாற்காலியின் விளிம்பில் கோழிக்குஞ்சு மாதிரி நடுங்கியபடி உட்கார்ந்திருந்தாள் செங்காளி; தான் வந்திருப்பதைத் தெரியப் படுத்துவதற்காக தொண்டையை செருமினார் சிவராமன்.

" வாங்க.. உள்ளே வாங்க .." என்று எதிர் கொண்டழைத்தாள் ஜமீன் தாரிணி.

" என்னை அவசரமா வரச்சொன்னதா ..."

"ப்ளீஸ் முதல்லே சாப்பிடுங்க . அப்புறமா பேசலாம்." என்றாள் கனிவுடன்.

சாப்பிட்டதும் அவரை ஹாலில் உட்கார வைத்த நீல தாட்சாயணி, " வித் யுவர் பெர்மிசன் ... நானும் சாப்பாட்டை முடிச்சிட்டு வர்றேன்" என்றாள் 

செங்காளி எங்கே என்று சிவராமன் கண்கள் தேடின. சாப்பாட்டு அறையில் இல்லை. இந்த ஹாலில் இல்லை. எங்கே இருப்பாள் என்ற நினைப்புடன், ஹால் ஜன்னல் வழியாக பார்வையை தோட்டத்தில் மேய விட்டார் மரநிழலில் உட்கார்ந்துகொண்டு புற்களை கைகளால் வருடியபடி உட்கார்ந்திருந்தாள் செங்காளி .

 சாப்பிடப்போன வேகத்திலேயே திரும்பி வந்த நீல தாட்சாயணி தேவி,
" சிவராமன் சார், நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவங்க எங்களோடு ஒட்டுறதா தெரியலை. எங்களை விட்டு தள்ளியே நிற்கிறாங்க. நாங்க கொடுக்கிற டிரஸ் அவங்களுக்கு வேண்டாமாம். அவங்க கொண்டு வந்த துணியைத்தான் போட்டுக்குவேன்னு  பிடிவாதம் பிடிக்கிறாங்க... அது மட்டுமில்லே... இந்த நிமிசமே ஊருக்குப் போறேன்னு சொல்றாங்க. நானே கொண்டு விடறேன்னு சொன்னாலும் வேண்டாம்கிறாங்க. அதான் உங்களை வரச்சொன்னேன். முடிஞ்சா அவங்க மனசை மாத்தி அவங்க எங்களோடு சகஜமா பழக சொல்லுங்க. மறுத்துட்டாங்கன்னா,  நீங்களே அவங்களை பத்திரமா ஊருக்கு அழைச்சிட்டுப் போயிடுங்க. அவங்களை தனியா அனுப்ப எனக்கு இஷ்டமில்லே. " என்றாள் 

" நான் பேசிப் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு தோட்டத்துக்கு விரைந்தார் சிவராமன்.

"என்ன நீ ... அசட்டுப் பெண்ணா இருக்கிறீயே. உன்னை தலையில் வைத்துத் தாங்காத குறையாக் கவனிக்கிறாங்க.   பிறகு ஏன் அசடாட்டம் இங்கே இருக்க மாட்டேங்கிறே ?"

" சாமீ, அவங்க பரம்பரைப் பணக்காரங்க. பரம்பரைப் பணம் வெளிவேசம் போடச் சொல்லாது . புதுசா துட்டைக் கண்டவன்தான் கண்ணு மண்ணு தெரியாமே ஆடுவான். அவங்க குடும்பத்திலே ஒருத்தியா என்னை ஏத்துக்க அவங்க பெருந்தன்மை இடம்குடுக்கும். ஆனா, எனக்குன்னு ஒரு நினைப்பு உள் மனசிலே இருக்கே! அது .. 'இதெல்லாம் தப்பு'ன்னு சொல்லுது. காக்கா, மரத்திலேதான் இருக்கணும். கிளி கூட்டில்தான் இருக்கணும், பாம்பு புத்திலேதான் இருக்கணும்.  அதது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் மதிப்பு மருவாதி  பாதுகாப்பு எல்லாமே. இது கோயில் சாமீ ... இந்த வாசலில் நின்று கும்பிட கூட அருகதை இல்லாத ஜென்மங்க நாங்க. இப்பேர்ப்பட்ட இடத்தில, என் தம்பி ஒரு பகல் வேசக்காரனா வந்து   நுழைஞ்சிட்டாநேனு நினைக்கிறப்ப நெஞ்சு கனக்குது சாமீ . என்னை இன்னிக்கே கூட்டிட்டுப் போயிடுங்க  சாமீ " என்றாள் .

விசயத்தை நீல தாட்சாயணி தேவியிடம் சொல்லி விட்டு கிளம்ப தயாரானார் சிவராமன்.

அவர்கள் காரில் ஏறும் முன்பாக, நீல தாட்சாயணி தேவி செங்காளியின் கைகளைப் பற்றிக்கொண்டு, " எப்போ என்ன உதவி தேவைன்னாலும் தயங்காமே கேட்கணும். செய்ய வேண்டியது என் கடமை " என்றாள்.

" மெய்யாலுமே செய்வீங்களா?"

" சத்தியமா செய்வேன் "

" அப்படின்னா ஒன்னு கேட்கிறேன். நான், இங்கே வந்த மொத நாள் எதைக் கேட்டேனோ அதையேதான் இப்பவும் கேட்கிறேன். நான் இங்கே வந்ததோ,  இருந்ததோ ,தங்கினதோ, என் தம்பிக்கு எப்பவுமே தெரியக்கூடாது. அவன் சிறு பிள்ளைத்தனமா செய்ஞ்ச தப்பை நீங்க பெரிய மனசு பண்ணி மறந்துடணும். கல்யாணத்துக்கு முன்னாடி உங்க கிட்டே தன்னை அனாதைன்னு சொல்லி இருக்கான்.  அது பொய்னு உங்களுக்குத் தெரியும்கிறது , அவனுக்கு எப்பவுமே தெரியக் கூடாது  தாயி !" என்று சொல்லி ஜமீந்தாரினியின் கைகளைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

வாசல் வரை வந்து வழியனுப்பினாள் நீல தாட்சாயணி தேவி.

கார், ஊர் எல்லையைத் தொட்டபோது பொழுது விடிந்து வெகு நேரமாகி யிருந்தது.

" சாமி, நான் மரத்து ஓரமா இறங்கிக்கிறேன். காரை நிறுத்த சொல்லுங்க"

சிவராமன் கை காட்டிய திசையில் கார் நின்றது.காரை விட்டு சிவராமனும் இறங்கிக் கொண்டு டிரைவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

" சாமீ, டவுனுக்குப் போனீங்கன்னா, பிள்ளைகளை பள்ளிகூடத்திலே சேர்க்கிறதுக்கான  பாரம் வாங்கியாருங்க.."

" யாருக்கும்மா ? இன்னும் ஸ்கூல் திறக்க நாள் இருக்கே ?"

" போன மாசம் வைக்கப்பிரி ( வைக்கோல் ) பிரிக்கிறப்ப, பாம்பு கடிச்சு செத்துப் போனானே, எசக்கிமுத்து, அவன் புள்ளைய பள்ளிக்கூடத்திலே சேர்த்து படிக்க வைக்கலாம் "

" உனக்கென்ன பைத்தியமா? ஊட்டி ஊட்டி வளர்த்த தம்பியே உன்னை உறவுனு சொல்லிக்க கூச்சப் பட்டு அனாதைன்னு சொல்லிட்டான். எவன் பெத்த புள்ளையோ  உனக்கு ஒரு வாய் தண்ணி கடைசி காலத்திலே ஊத்தப் போகுதா என்ன ?"

கையில் பிடித்திருந்த துணிப் பையை மரத்தடியில் சாய்த்து வைத்து விட்டு, கலைந்திருந்த கேசத்தை சரி செய்து கொண்ட செங்காளி, " சாமி, முன்னே ஒருக்க  ' இந்த மரத்துக்கு என்ன வயசிருக்கும்'னு கேட்டேன். .. ' என்ன .. ஒரு நூறு , இல்லாட்டா  நூத்து இருபது வருஷம் இருக்கும்னு நீங்க சொன்னீங்க. இந்த மரத்தை நட்டவன் இப்ப இல்லை. ஆனா, தெனிக்கும் எத்தினி பேர் இந்த மர நிழலிலே உக்காருதோம். படுக்கோம். இந்த மரத்தை நடும்போது, 'இது முளைச்சு .. வளர்ந்து ... படர்ந்து வரும்போது நாம உசிரோடு இருக்க மாட்டோமே . பெறகு என்னத்துக்கு இதை நடனும்னு நினைச்சிருந்தான்னா , இன்னிக்கு இந்த மரம் இங்கே இருந்திருக்குமா ? பின்னாலே வரப் போகிறதப்  பத்தி ஏன் சாமி நினைக்கணும்?இன்னிக்கி நம்மாலே என்ன செய்ய முடியுதோ அதை செஞ்சிட்டுப் போகலாம் ? " என்றாள் மிகத் தெளிவாக.

" கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே'ன்னு பகவான் கீதையில் சொன்னதை ரொம்பவும் கனகச்சிதமா வாழ்ந்து காட்டிட்டே.. பகவான் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான். வா .. வந்து வீட்டிலே ஏதாவது சாப்பிட்டுட்டுப் போ " என்றார் சிவராமன்.

" வேண்டாஞ்சாமி . பத்து நாளா நெய்யும் பாலுமா சாப்பிட்டுட்டு, வேலை வெட்டி இல்லாமே உக்கார்ந்தே இருந்ததில் , உடம்பு 'மத மத'னு  இருக்கு. கழனி வரை போய், ஏதாவது நடவு வேலை இருக்கானு  பார்த்துட்டு வர்றேன், பழைய கஞ்சியும், மருமாத்தமும் இருந்தா, ஆச்சிம்மாவை எடுத்து வைக்க சொல்லுங்க சாமீ " என்று சொல்லி விட்டு, அவரின் பதிலுக்குக் காத்திராமல், கழனியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்  செங்காளி .

No comments:

Post a Comment