Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, February 16, 2012

Stories told by Grand -Ma ( Story number - 9 )



                                          எல்லாம் நன்மைக்கே !!

     ( இந்த  சிறுகதை  " சுபவரம் " மாத இதழில் வெளியாகியுள்ளது )

" ஆச்சரியமாயிருக்கே!. ரெண்டு பேரும் ஒரே இடத்தில இருந்தும் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் வீடு இவ்வளவு அமைதியா இருக்கே?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பாட்டி.
" பாட்டி, நான் ரொம்ப கோபமா இருக்கிறேன்" என்றான் பிரபு.
" அவன் கோபத்திலே இருக்கிறான். உனக்கு என்னடி ஆச்சு? நீயும் 'உம்'ன்னு இருக்கியே, ஏன் ?'
"அவனுக்கு என்ன கோபம்? யார் மேலே கோபம்னு கண்டு பிடிக்க என்னோட மூளையை கசக்கி பிளிஞ்சிண்டு இருக்கிறேன்" என்று பதில் வந்தது மனோவிடமிருந்து.
"இல்லாத ஒன்றை எப்படி பாட்டி கசக்கி பிழிய முடியும்?" என்று கேட்டான் பிரபு.
" பாரு பாட்டி, எனக்கு மூளை இல்லேங்கிறான்" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் மனோ.
"அழாதேடி. அண்ணன்தானே. விளையாட்டுக்கு சொல்றான். அதை பெரிசா எடுத்துக்கலாமா?" என்று சமாதானம் செய்தாள் பாட்டி.
"நிஜந்தான் பாட்டி. இவளுக்கு முன்னே தலையை எக்ஸ்ரே எடுத்தோம். எக்ஸ்ரே ரிப்போர்ட் பார்த்ததுமே டாக்டர் ' இவளுக்கு தலையில் எதுவுமே இல்லைன்னு சொன்னார் பாட்டி"
" போடா. எனக்கு அடிக்கடி தலைவலி வந்துட்டு இருந்தது. தலையில் ஏதாவது கட்டி இருக்குமோனு மம்மி பீல் பண்ணினாங்க. அதனாலே டாக்டர்ட்ட அழைச்சிட்டு போனாங்க. என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் எக்ஸ்ரே எடுக்க சொன்னார். ரிபோர்ட் நெகடிவா வரலே. மம்மிக்கு தைரியம் சொல்றதுக்காக டாக்டர் தலையில் எதுவும் பயப்படும்படியா இல்லே'ன்னு சொன்னார். அதை நீ இப்போ மாத்தி சொல்றே. பாட்டி அவன் ஏன் கோபமா இருக்கிறான்னு கேளேன் பாட்டி. அதை தெரிஞ்சுக்காட்டா எனக்கு போன தலைவலி திரும்பவும் வந்துடும் பாட்டி" என்றாள் மனோ.
 பிரபுவின் தலையை செல்லமாக வருடிவிட்ட பாட்டி, "என்னடா கோபம் ? யார் மேலே கோபம்?" என்று கேட்டாள்.
" பாட்டி, நீ கேட்கிறதாலேதான் சொல்றேன். இந்த மனோ கழுதைக்காக இல்லே."
"எப்படியோ, நீ விஷயத்தை சொன்னா போதும். சொல்" என்றாள் மனோ.
" பாட்டி, இந்த கிராமத்து பசங்க எல்லாரும் சேர்ந்து டவுனுக்கு போறாங்க. அங்கே போய் எக்சிபிசன், சினிமா எல்லாம் பார்த்துட்டு வருவாங்களாம். நானும் வர்றேன்னு சொன்னேன். அதுக்கு, 'நாங்க செகண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு வர மிட் நைட் ஆயிடும். திரும்பி வர பஸ் கிடைக்காது. நாங்க நடந்து வருவோம். நீ பட்டணத்து பையன். உன்னாலே ரொம்ப தூரம் நடக்க முடியாது. அதனாலே நீ வேண்டாம்'ன்னு சொல்லிட்டு அவங்க எல்லாரும் போய்ட்டாங்க பாட்டி. எனக்கு அழுகை அழுகையா வருது" என்றான் பிரபு.
" அட அசடே, இதுக்கு போய் அழலாமா? உன்னோட நல்லதுக்குதானே சொல்லி இருக்காங்க. எதையும் ஈசியா எடுத்துக்க பழகிக்கணும். எது நடந்தாலும் அது நன்மைக்குதான்னு நினைக்க பழகிக்கணும்" என்றாள் பாட்டி.
" டேய் அண்ணா. பாட்டி அதுக்கு கூட ஒரு கதை வச்சிருப்பா" என்று மனோ சொல்ல "அப்படியா?" என்பதுபோல் பாட்டியை பார்த்தான் பிரபு.
" ஆமாம்" என்ற பாட்டி, எழுந்து போய் ஒரு தட்டில் அதிரசம், முறுக்கு எல்லாம் கொண்டு வந்து வைத்து விட்டு, " இதை சாப்பிட்டுகிட்டே கதை கேளுங்க" என்றாள்.
"ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் கடல் கடந்து போய் அந்நிய நாடுகளில் பொன், மணி, முத்து இவற்றை எல்லாம் விற்று காசாக்கி விட்டு வருவான். ஒரு தடவை இவன் கப்பலில் போயிட்டு இருக்கும் போது பயங்கர மழை, சூறாவளி காற்று தாக்கியதில்  இவன் பயணம் செய்த கப்பல் கவிழ்ந்து போச்சு. பயணிகள் நாலா பக்கமும் போய் விழுந்தார்கள். கடல் அலையும், காற்றும் அவர்களை  ஒவ்வொரு  திசைக்கு இழுத்துட்டு போச்சு. நம்ம வியாபாரி கையில் கிடைச்ச ஒரு மரக்கட்டையை கெட்டியா பிடிச்சுகிட்டான். அலைகள் அவனை ஒரு தீவில் கொண்டு போய் தள்ளியது. மனுசங்க யாருமே இல்லாத தீவு அது. காடு முழுக்க மூங்கில் மரங்கள், காட்டு செடிகள், பழ மரங்கள்தான் இருந்தது. தன்னோட நிலையை நினைச்சு அழுத வியாபாரி, பிறகு மனசை தேத்திகிட்டு, அங்கு கிடைச்ச கம்பு, செடி கொடியை வச்சு ஒரு கூடாரம் போட்டு கிட்டான், கடலில் மீன் பிடிச்சு சாப்பிட்டான், அந்த தீவில் கிடைத்த காய், கனியை சாப்பிட்டு நாளையும் பொழுதையும் ஓட்டிட்டு இருந்தான். ஒருநாள் அவன் காட்டுக்குள்ளே போய் பழம் எடுத்துட்டு வாறதுக்குள், இவனோட கூடாரம் தீ பிடிச்சு எரிஞ்சு போச்சு."
  "ஆளே இல்லாத இடத்தில் கூடாரத்துக்கு நெருப்பு வச்சது யார் பாட்டி?" என்று பிரபு கேட்க, " அதானே! வெரி குட் கொஸ்டின் " என்றாள் மனோ.
" நான்தான் முதலிலேயே சொன்னேனே. அந்த தீவில் மூங்கில் மரங்கள் நிறைய இருந்துதுன்னு. மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று காற்றில் உரசும் போது தீப் பற்றி கொள்ளும். அப்படி பற்றிய நெருப்புதான் இவன் கூடாரத்தில் விழுந்ததில், கூடாரம் எரிஞ்சு போச்சு. இதை பார்த்த வியாபாரி அழுதான். ஊரும் உறவும் மெச்ச ராஜ வாழ்வு வாழ்ந்த நான், இன்னிக்கு இந்த தீவில் யாருமில்லாத அனாதையா, ஒரு பிச்சைக்காரனைவிட கேவலமான நிலையில் இருக்கிறேன். நான் இங்கு உயிரோடு இருக்கும் விஷயம் இன்னும் யாருக்கும் தெரியாது. வெயில் மழையிலிருந்து தப்பிக்க கையில் கிடைச்ச செடி கொடியை வச்சு ஒரு கூடாரம் போட்டிருந்தேன். அதுவும் எரிஞ்சு போச்சு. கடவுளே, எல்லாரும் உன்னை கருணாமூர்த்தின்னு சொல்றாங்க. அது பொய். நீ கண்ணற்ற பாவி. உன்னை கும்பிடறது, நம்புவது எல்லாமே வீண்தான்"னு சொல்லி கதறி அழுதான். அழுதழுது மயக்கமாயிட்டான். அப்படி எவ்வளவு நேரம் கிடந்தான் என்பது அவனுக்கே தெரியாது.
அவன் முகத்தில் குளிர்ந்த தண்ணீர் படவும் கண்களை திறந்து பார்த்தான். அவனை சுற்றி மனித முகங்கள். சுவையான உணவின் மணம். இவனுக்கு எதுவுமே புரியலே. இவன் முகத்தை துடைத்து விட்ட ஒருவர், " ஐயா நீங்க யார்? தனியாக இந்த தீவில் என்ன செய்றீங்க? நாங்கள் எல்லோரும் வியாபாரிகள். நிலத்தை விட்டு கிளம்பி வந்து நீண்ட நாட்களாகி விட்டது. அதனால் ஏதாவது ஒரு தீவில் சில நாள் தங்கி விட்டு பிறகு பயணத்தை தொடர
நினைத்தோம். எதாவது தீவு  தெரிகிறதா என்று தேடியபோது இந்த தீவு கண்ணில் தட்டுப்பட்டது. இங்கிருந்து நெருப்பும் புகையும் வருவது தெரிந்தது. மனிதர்கள் வாழும் தீவு என்று நினைத்துக்கொண்டு இங்கு வந்தோம். ஆனால் இங்கு உங்களை தவிர வேறு யாருமே இல்லையே!" என்றார்.
ஆனால் இது எதுவுமே நம்ம வியாபாரி காதில் விழவில்லை. "கடவுளே, நீ உண்மையிலேயே கருணாமூர்த்திதான். இன்னிக்கு இந்த கூடாரம் மட்டும் எரிஞ்சிருக்காட்டா, நான் இங்கு இருக்கும் விஷயம் வெளி உலகுக்கு தெரியாமலே போயிருக்குமே. ஒரு சின்ன துன்பத்தை குடுத்து, அது மூலமா ஒரு பெரிய சந்தோசத்தை குடுத்திட்டே. உன் கருணை மனசை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லாமல் போயிட்டதே. உனக்கு நன்றி கடவுளே"ன்னு சொல்லிட்டு, வந்திருந்தவங்க கிட்டே தன்னோட நிலையை எடுத்து சொல்லி, அவங்க உதவியால் அவனோட வீட்டை அடைந்தான்," என்று பாட்டி சொல்லி க்கொண்டிருக்கும் போது "பெரியம்மா" என்ற குரல் கொடுத்துக்கொண்டே, மணியக்காரர் பாட்டி வீட்டுக்குள் வந்தார்.
வந்தவர், "குற்றாலம் டூர் போகணும்ன்னு என் வீட்டு புள்ளைக ரெண்டு பேரும் போன மாசமே டிக்கெட் புக் பண்ணி இருந்தாங்க. பெரியவனுக்கு உடல்நலம் சீரில்லை. அதனாலே போக வேண்டாம்னு சொல்லிட்டேன். அவன் வராமே நானும் போக மாட்டேன்னு சின்னவன் சொல்றான்.  கொடுத்த பணத்தை திருப்பி தர மாட்டாங்க. ரெண்டு டிக்கெட் வீணா போகுது. நீங்க உங்க பேர புள்ளைங்களை  அனுப்புறீங்களா? பட்டணத்து புள்ளைங்க. குற்றாலம் பார்த்திருக்க மாட்டாங்க. சாப்பாட்டுக்கும் சேர்த்துதான் பணம் கட்டி இருக்காங்க. குளிச்சதும் போட்டுக்க கையில் மாற்று துணி மட்டும் எடுத்துக்க சொல்லுங்க.. வேறு எதுவும் வேண்டாம். இன்னும் அரை மணி நேரத்தில் பஸ் கிளம்பிடும். எப்படியும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிடலாம். புள்ளைங்களை அனுப்புறீங்களா?" என்று கேட்டார்.
"குழந்தைகளா, போறீங்களா?" என்று கேட்டபடியே திரும்பிய பாட்டி, "இங்கேதானே நின்னாங்க. அதுக்குள்ளே எங்கே போனாங்க?" என்று தேட ஆரம்பித்தாள்.
பிரபுவும் மனோவும் டிரெஸ்ஸை எடுத்து வைப்பதில்  மும்முரமாக இருந்தார்கள். " மத்த பசங்க உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போகலைன்னு அழுதியே. சினிமா போயிருந்தா டூரை மிஸ் பண்ணி இருப்பேதானே? பாட்டி சொன்ன மாதிரி 'எல்லாமே நன்மைக்குதான்' என்று மனோ சொல்ல,
"அட ஆமாம்டி" என்றான் பிரபு.
அவர்களுடைய சந்தோசம், பாட்டிக்கும் சந்தோசத்தை தந்தது.
                     








       

No comments:

Post a Comment