Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 24, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 13


    
                                                                                  வழிகாட்டி  !?
( நான் எழுதிய இச்சிறு கதை அவள் விகடனில் வெளியாகியுள்ளது )

"பஸ் பத்து நிமிஷம் நிற்கும். அதற்குள்ளே சாப்பாடுக்கு போறவங்க போயிட்டு வந்திடலாம்" என்ற கண்டக்டரின் அறிவிப்பைத் தொடர்ந்து "நான், நீ" என்று போட்டி போட்டுக்கொண்டு பயணிகள் பஸ்சிலிருந்து இறங்க ஆயத்தமானார்கள். 
சூடாக ஒரு கப் பால் குடித்துவிட்டு வரலாமென்ற நினைப்பில் மனைவியின் பக்கம் திரும்பியவர்  அவளது ஆழ்ந்த உறக்கத்தைக் கண்டு, பஸ் கிளம்ப ஆரம்பித்ததிலிருந்தே தன்னுடன் பேச்சுத் துணையாக இருந்தவரிடம், "வாயிலே கொசு போறதுகூட தெரியாமே தூங்கிறதப் பாருங்க சார். வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வரை என் தம்பி மகன் காரில் அழைச்சிட்டு வந்தான், ஒரு நிமிஷங்கூட வாய் மூடாமே, " அப்பிடிப் பார்த்து ஓட்டு. எதிரே சைக்கிள்காரன் வர்றான். அவன் மேலே மோதிடாதே"னு பஸ் ஸ்டாண்ட் வர்றதுக்குள் அவனை ஒரு வழி பண்ணிட்டா.  இப்ப யாரோ ஒருத்தன் வண்டி ஓட்டறான், எதைப்பத்தியும்  கவலைப் படாமே என்ன ஒரு நிம்மதியா தூங்கிறா பாருங்க " என்றார் சந்திரசேகர். 
" அதான் சார் உலகம். முன்னே பின்னே தெரியாத எவனோ ஒரு மூன்றாம்  மனுசனை நம்புகிற மனம் நம்ம வீட்டு மனுசங்களை நம்ப மறுக்கிறது. தெரியாமலா சொன்னாங்க, தோட்டத்து பச்சிலைக்கு மவுசு குறைவுதான்"னு என்றார் சக பயணி.
மூளையில் பொறி தட்டியது போன்ற உணர்வு.
"நமக்கு தெரிஞ்சு பிறந்த வளர்ந்த பையன் ரமேஷ். அவனிடமிருந்த ஒரு சில பிடிவாத குணத்தை பெரிய விசயமா நினைச்சு அவனை ஒதுக்கு வச்சிட்டு தரகர் சொன்ன வரனைப் பார்க்க கிளம்பி வந்திட்டோம். அந்த வரன் மட்டும் எல்லா வகையிலும் ஒழுங்கா இருப்பான் என்பது என்ன நிச்சயம்.  புனிதம்னு நினைச்சு முன்னே பின்னே தெரியாத கங்கையில் ஆழம் தெரியாமல் இறங்கி, அவஸ்தைப் படறதைவிட, நமக்கு நல்லா   தெரிஞ்ச சாக்கடையில் இறங்கி அதை சுத்தம் செய்யலாமே " என்று அறிவு அலார மணி அடித்தது.
உடனே   தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வேகமாகத் தட்டி எழுப்பி " எழுந்திரு. சீக்கிரம் இறங்கு" என்றார்.
அதுக்குள்ளே  ஊர் வந்துட்டுதா?" என்று கண்ணைக் கசக்கியபடி கேட்ட மனைவியிடம், " இல்லே, நாம போக வேண்டிய ஊர் எதுன்னு தெரிஞ்சிட்டுது. நாம போய் பார்க்க நினைச்ச நாகர்கோயில் வரன் வேண்டாம்; நீ சொன்னபடி உன் அண்ணன் மகனுக்கே நம்ம வசந்தியைக்  குடுக்க முடிவு பண்ணிட்டேன்" என்றார்.
" ஏனுங்க, நானும் வருசக் கணக்கா, மாசக் கணக்கா உங்ககிட்டே சண்டை போட்டு பார்த்தேன். அப்பல்லாம் வேண்டாம்னு சொல்லி பிடிவாதமா இருந்தீங்க.  வேறே ஒரு வரனை பார்க்கிறதுக்காக கிளம்பி வந்து பஸ்சில் ஏறி உட்கார்ந்து, பாதி தூரம் வந்த பிறகு, என் அண்ணன் பையனுக்கே வசந்தியைக் குடுக்கலாம்னு சொல்றீங்க. எப்படி மனசு மாறுனீங்க?"  என்று ஆச்சரியமாகக் கேட்ட மனைவியிடம், " எல்லாத்துக்கும் காரணம் சார்தான். நாம போக வேண்டிய இடம் எதுன்னு நமக்கு வழி காட்டியது சார்தான். உன் அண்ணன் வீட்டு சம்பந்தம் செட்டில் ஆகிறதுக்கு நீ சாருக்குத்தான் நன்றி சொல்லணும்" என்ற சந்திரசேகர், கையில் லகேஜ்ஜை எடுத்துக் கொண்டு, " ரொம்ப நன்றி சார். நாங்க இங்கே இறங்கி, வர்ற பஸ்ஸை பிடிச்சு ஊர் போய் சேருகிறோம்" என்று சொல்லி மனைவியுடன் பஸ்ஸை விட்டு இறங்கினார்.
"அப்படி பெரிசா என்னத்தைப் பண்ணிட்டோம் ?" என்ற குழப்பத்தில் இருந்தார் சக பயணி.


.


.


No comments:

Post a Comment