வம்பு செய்கிறவர்களைக் கண்டால் ? !
இச்சிறுகதை 25 .11.2006 தினமணி - சிறுவர் மணியில்வெளிவந்துள்ளது )
"பாட்டி, பாட்டி பாரு பாட்டி இந்த பிரபுவை" என்ற மனோவின் அலறலைக் கேட்ட பாட்டி, கையிலிருந்த காயை தூக்கி எறிந்துவிட்டு சமையலறையிலிருந்து ஓடோடி வந்தாள்.
சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி போல சுவரோடு சுவராக ஒட்டி பயந்து நடுங்கியபடி மனோ நிற்க, அவளெதிரில் கையில் பிளய்டுடன் நின்று கொண்டிருந்தான் பிரபு.
"என்னடா இது. ஏன் அவளோடு எந்த நேரமும் வம்பிழுக்கிறே ? பிளய்டை ஏன் கையில் எடுத்தே ?" என்றாள் பாட்டி கோபமாக.
"பாட்டி நீ எங்க ரெண்டு பேருக்கும் கிண்ணத்திலே வேர்கடலை போட்டுக் குடுத்திட் டு போனேதானே. நான் என்னோட கிண்ணத்திலிருந்ததைதான் பாட்டி சா ப்பிட்டுட்டுருந்தேன். அவன்தான் வலிய வந்து அவனோடதை என் கையில் போட்டு சாப்பிடுன்னு சொன்னான். நான் சாப்பிட்டு முடிச்சதும், சத்யா அப்பு எல்லாரையும் கூட்டிட்டு வந்து எங்க மனோ வயித்திலே பெரிய பூதம் இருக்கு. அது எல்லோருடைய சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிடும். அவ வயிறக்கீறி அந்த பூதத்தை உங்க எல்லோருக்கும் காட்டுறேன்னு சொல்லி என்னோட வயிறை பிளைடால் கீற வர்றான். நீ வர்றது தெரிஞ்சதும் சத்யாவும் அப்பும் ஓட்டிட்டாங்க பாட்டி " என்றாள் மனோ பரிதாபமாக.
"அவனுக்குதான் குருவி புத்தியாச்சே . நீ ஏன் அவன்ட்ட கடலை வாங்கினே?"
"அது என்ன பாட்டி குருவி புத்தி ?" என்று கோரசாக கேட்டனர் இருவரும்.
"அது ஒரு வம்புக்கார குருவியை பத்தின கதை"
"கதையா? சொல்லு பாட்டி "
"சமையலை முடிச்சிட்டு வந்து சொல்றேன்.'
"ஊஹூம். இப்பவே சொல்லணும். சமையல் எல்லாம் பிறகு வச்சுக்கோ "
"இப்போ இப்படி சொல்வீங்க. கதை முடிஞ்சதும் சாப்பாடு எங்கேனு நீங்க ரெண்டு பேரும் கேட்பீங்க"
"மாட்டோம். முதல்லே கதை"
"சரி. சொல்றேன். ரெண்டு பேரும் வாலை சுருட்டிட்டு ஒரு ஓரமா உட்காருங்க. நான் போய் அடுக்களையில் இறைஞ்சு கிடக்கிற காயை எல்லாம் எடுத்து வச்சி ட்டு எல்லாத்தையும் மூடி வச்சிட்டு வர்றேன்."
"அதெல்லாம் வேண்டாம். நீ கதையை இப்போ ஆரம்பி" என்றார்கள் இருவரும்.
"சரி. ஒரு ஊரில் ஒரு குருவி இருந்துச்சாம் . அது ரொம்பவும் வம்புக்கார குருவிங்கிறது எல்லாருக்குமே தெரியும். அதனாலே அதைக்கண்டாலே எல்லாரும் ஒதுங்கி போயிடுவாங்க.ஆனா, குருவியோ எல்லாரும் தனக்கு பயப்படறதா நினைசுகிட்டு இருந்துதாம். ஒருநாள் அது களத்து மேட்டில் குப்பையை கிளறும்போது அதுக்கு ஒரு காலணா காசு கிடைச்சுதாம்."
"பாட்டி. களத்து மேடுன்னா என்ன பாட்டி?" என்று கேட்டாள் மனோ.
"லூசு லூசு. பாட்டி கதை சொல்றப்போ நடுவிலே ஏண்டீ பேசறே? நேத்து கோவிலுக்கு போறப்போ ஒரு இடத்திலே நிறைய ஆளுங்க நின்னு நெல்லு தானியமெல்லாம் அளந்துட்டுருந்தாங்க.அந்த இடத்துக்கு களத்து மேடுன்னு பாட்டி சொன்னாதானே ?"
"ஆமாம். சாரி. மறந்தே போயிட்டேன். அதுக்கு போய் ஏன் லூசுன்னு சொல்றே ?" என்று மனோ கேட்க
"லூஸை லூசுன்னு சொல்லாமே வேறே என்ன சொல்ல முடியும். ஜூநியஸ் என்று சொல்லவா முடியும்.? ஆமாம் காலணா காசு என்றால் என்ன பாட்டி?" என்று கேட்டான் பிரபு.
"டேய் லூசு. காசுன்னு பாட்டி சொல்றா.பிறகு எதற்கு டவுட் கேட்கிறே?"
"அப்படித்தான் கேட்பேன். நீ வாயை மூடுடி கழுதை."
"போதும். சண்டையை நிறுத்துறீங்களா இல்லே நான் கதை சொல்றதை நிறுத்தட்டுமா?"
"வேண்டாம் பாட்டி, கதையை சொல்லு"
"களத்து மேட்டில் கிடைத்த காசை எடுத்த குருவி ஒவ்வொருத்தர்கிட்டேயும் போய் "கண்டெடுத்தேன் கண்டெடுத்தேன் காலணா காசு. கேட்டால்தான் தருவேன் கேளுங்க. கை நீட்டி கேட்டால்தான் தருவேன் கேளுங்க" என்று பாட
ஆரம்பிச்சுது. எல்லாருக்கும் இந்த குருவியைபத்தி தெரியும்தானே. அதனாலே அதுகிட்டேயிருந்து காசை வாங்க யாருமே முன்வரலே. ஊர் முழுக்க சுற்றி சோர்ந்துபோன குருவி கடைசியா அரண்மனைக்கு வந்தது. பழைய பல்லவியை பாட ஆரம்பிச்சுது . ராஜா கண்ணில் அந்த குருவி பட்டது. ராஜா அந்த குருவியை பத்தி தெரிந்திருந்தாலும், அந்த குருவி மேல் பரிதாப பட்டார், 'இந்த குருவி சோறு தண்ணி இல்லாமே இப்படி வாய் ஓயாமே சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டே இருக்குதே. தொண்டை தண்ணி வற்றி இந்த குருவி செத்து விடுமோ"னு நினைச்சு பரிதாப பட்டு " குருவியே அந்த காசை என் கிட்டே குடுன்னு' கேட்டார்.
ராஜா கையில் காசை கொடுத்த குருவி "காலணாவுக்கு விதியற்ற ராஜாவா நீங்க? கை நீட்டி என்கிட்டே காசு கேட்டீங்க" என்று பாட ஆரம்பிசுது.
ராஜாவுக்கு கோபம் வந்திட்டுது. உடனே அந்த காசை குருவியின் முன்னால் விட்டெறிந்தார்.
உடனே குருவி "எனக்கு பயந்த ராஜாவா நீங்க? நீங்க எப்படி இந்த நாட்டை அடக்கி ஆட்சி செய்ய போறீங்கனு ' பாட ஆரம்பிசுது.
ராஜா கையை தட்டி சேவகர்களை அழைத்தார்.
அதுவரை அங்கு நடந்ததை யெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராணி "அரசே நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்.அந்த குருவியை விரட்டாதீங்க. அதுக்கே அலுத்துப்போகும் வரை அது பாடி ஓயட்டும், வேலை வெட்டி இல்லாதவங்க ஏதாவது வம்பு பேசி மத்தவங்க நேரத்தை வீணாக்க பார்ப்பாங்க, அவங்க எண்ணத்தை நாம புரிஞ்சுக்கணும். காலமும் நேரமும் அருமையானவை, போனா திரும்பவும் வராது. குருவிக்கு வாய் வலிக்குமேனுதான் கை நீட்டி காசு கேட்டீங்க. உங்க நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு குருவிக்கு அறிவு இல்லை. போனால் திரும்பவும் கிடைக்காத அருமையான நேரத்தை இந்த அற்ப புத்தி படைத்த குருவியின் பேச்சை கேட்பதில் எதற்காக வீணடிக்க வேண்டும். நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் எவ்வளவோ இருக்கு. இதை விட்டுட்டு அதை கவனிக்கப்போகலாமே " என்று சொல்லவும் ராஜா எழுந்து போய் விட்டார். இனிமேலும் அங்கு நின்று பிரயோசனம் இல்லை என்பதை தெரிந்துகொண்ட குருவி. வேறு எங்காவது வம்பு விலைக்கு கிடைக்குமா என்று தேடி சென்றது." என்று கதையை பாட்டி முடித்ததும், "பாட்டி கதை முடிஞ்சிதுதானே. போய் எங்க ரெண்டு பேருக்கும் சூடா சாப்பாடு எடுத்துட்டு வா சீக்கிரம் " என்று பிரபு மனோ இருவரும் ஒரே குரலில் சொல்ல "சாப்பாடுதானே? இதோ சுட சுட முதுகில் வைக்கிறேன்" என்று சொல்லி பாட்டி பொய் கோபத்துடன் கையை ஓங்க, இருவரும் சிரித்தபடி அங்கிருந்து சிறகடித்து பறந்தார்கள்.

No comments:
Post a Comment