Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 27, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No:9

     

நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் ? !

( நான் எழுதிய இச்சிறுகதை 10 . 10 . 1992  தினமணி சுடரில் வெளியாகியுள்ளது)

இராமநாதன் அண்ட் கோ  ஊழியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும், கேட்பதா வேண்டாமா என்று கிசுகிசுத்து தயங்குவதுமாக இருந்தனர். தனது அறையின் வாசலில் கேட்ட சலசலப்பைக் கொண்டே வந்திருப்பவர்கள் யாரென்பதைப் புரிந்து கொண்ட இராமநாதன் சுழல் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். சலசலப்பு அடங்கி அமைதி நிலவியது.  
"என்ன?" என்று கண்களாலேயே கேள்விக்குறி போட்டார்.
பிறகு "வாருங்கள், எல்லோரும் அறைக்குள் அமர்ந்து பேசலாம். வாசலில் கூட்டம் போடுவது கெட்ட பழக்கம்" என்றபடி அனைவரையும் அறைக்குள் அழைத்து சென்றார். 
" உம். இப்போ நீங்க சொல்ல நினைப்பது என்னவென்பதை யாராவது ஒருவர் சொல்லுங்க" என்றார்.
" வந்துங்க ." என்று இழுத்தார் சூப்பர்வைசர்  சுந்தரராஜன்.
" கமான். சொல்ல வந்ததை சொல்லுங்க. என்ன தயக்கம்?" என்று உற்சாகப் படுத்தினார் இராமநாதன்
"ஐயா, வழக்கமாக நம்ம கம்பெனி குழந்தைகளை வரவழைத்து, அவர்களில் பள்ளியில் யார் அதிக மார்க் வாங்கினார்களோ அவர்களுக்கு பணமோ பொருளோ அன்பளிப்பாகக் கொடுப்பீங்க"
" ஆமாம்"
" நம்ம கம்பெனி பியூன் சுப்பையா மகன் எந்தவொரு வகுப்பிலும் சராசரி மார்க்குக்கு மேல் வாங்கியதே கிடையாது. இங்கு வந்ததும் இல்லே.  அவன்   உங்களிடமும் எந்த வருசமும் பரிசு வாங்கினதில்லே. இந்த வருஷம் பெயில் வேறு ஆகியிருக்கிறான்.  அப்படி யிருக்க அவனுடைய படிப்பு செலவு பூராவையும் நீங்களே ஏற்றுக் கொள்வதாகவும், அவன் என்ன படிக்க விரும்புகிறானோ அதை படிக்க வைக்க போவதாகவும் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் போவதாகவும் இன்றைக்கு சொல்லியிருக்கீங்க.  இவ்வளவு வருசமா, ஒரு குழந்தையோட தகுதியையும், திறமையையும் வச்சுதான் பண உதவி செஞ்சிருக்கீங்க. இந்த வருஷம் எந்தவொரு தகுதியும் திறமையும் இல்லாத ஒரு பையனுக்கு, அளவுக்கு அதிகமாக உதவி செய்வது ஏன் என்பதுதான் எங்கள் எல்லோருடைய சந்தேகமும். ஐயாதான் தயவு செய்து விளக்கம் சொல்ல வேண்டும்" என்றார் சுந்தர ராஜன் பணிவாக.
இதைக் கேட்டு கலகலவென்று வாய் விட்டுச்சிரித்த இராமநாதன், " நியாயமான சந்தேகந்தான், பதில் சொல்கிறேன்" என்று சொல்லி தொண்டையை சரி செய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
"போன வாரம் ஒரு நெருங்கிய உறவினரை வரவேற்க எக்மோர் ஸ்டேசன்  வரை செல்ல வேண்டியதிருந்தது. கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் அருகில் செல்லும்போது என்னோட கார் ரிப்பேர் ஆகிவிட்டது. திடீரென்று மனசுக்குள் சிறு குழந்தைகள் போல ஒரு ஆசை, எலெக்ட்ரிக் ட்ரெயினில் போக வேண்டுமென்று. வண்டியை சரிபார்த்து எடுத்துட்டு போகும்படி டிரைவரிடம் சொல்லி விட்டு கோடம்பாக்கம் ஸ்டேசனில் டிக்கெட் எடுப்பதற்காக நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன் . 
அப்போது  சுமார் ,பத்து வயசு சிறுவன் ஒருவன் என் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றான். அவன் கையில் சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் ஒன்று இருந்தது. " சார். இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஐம்பது பைசா கொடுங்களேன்" என்றான்.
"வேண்டாம்" என்று மறுத்தேன். 
"ப்ளீஸ். இந்த புக்கை வச்சுகிட்டு ஒரு அம்பது பைசா குடுங்க சார். இதை இப்பதான் தாம்பரம் ஸ்டேசனில் வாங்கினேன்" என்றான்.
அவனுடைய செயல் வேடிக்கையாகவும் ,  விநோதமாகவும் இருந்தது. அவனைப் பற்றி விசாரித்தேன். 
" என் பேரு சிவா. என்னோட அப்பா பேர் சுப்பையா. அவர் இராமநாதன் அண்ட் கோவில் பியூன் ஆக வேலை பார்க்கிறார். எங்க வீடு தாம்பரத்தில் இருக்கிறது. இன்று ஸ்கூல் லீவ் என்பதால் மாம்பலத்தில் உள்ள  சித்தி வீட்டுக்குக் கிளம்பினேன். தாம்பரம் ஸ்டேசனில் உள்ள கடையில்தான் இந்த புத்தகத்தை வாங்கினேன். செங்கல்பட்டு பாசஞ்செர் ட்ரெயின் வரவும் அதில் ஏறிட்டேன்.  புத்தகம் படிக்கும்  ஆவலில், மாம்பலம் ஸ்டேசனில் வண்டி நின்றதை கவனிக்கலே. வண்டி மூவ் ஆனதும்தான் கவனித்தேன். வேறு வழியில்லாமல் நான் கோடம்பாக்கம் வரை வரும்படி ஆகிவிட்டது. இப்போ நான் திரும்பவும் மாம்பலம் போகணும்.  அதற்கு டிக்கெட் எடுக்கணும். ஐம்பது பைசா குறைவா இருக்குது சார். இந்த புக்கை எடுத்துகிட்டு ஒரு ஐம்பது பைசா தந்தால் போதும் சார் " என்று கெஞ்சினான்.
"அவனை சோதித்து பார்ப்பதற்காக, " ஏன் தம்பி. இந்த பக்கம் வருகிற ட்ரெயினில் ஏறி அடுத்த ஸ்டேசனில் இறங்கிடுவதுதானே? ஒரே ஒரு ஸ்டேசன் தானே. அதற்குள் உன்னிடம் யார் வந்து டிக்கெட் கேட்கப் போறாங்க? " என்றேன்.  உடனே பதறிப்போய் " அது தப்பு சார். முதல் தடவை நான் செய்தது என்னை அறியாமலே செய்த தப்பு. அதற்கு மன்னிப்பு உண்டு. கோடம்பாக்கம் ஸ்டேசனிலிருந்து மாம்பலம் போக டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும் டிக்கெட் இல்லாமல் பயணம் செஞ்சு , திரும்பவும் அதே தப்பை தெரிஞ்சே செய்யக்கூடாதே. எங்க அப்பா அடிக்கடி சொல்வார் "தவறுகள் மன்னிக்கப்படலாம். ஆனால் தப்புகள் தண்டிக்கப்படனும்"ன்னு. நான் டிக்கெட் வாங்காமே, மாம்பலம் வரை பயணம் செய்ஞ்சா , ஸ்குவாட் பிடிக்கிறாங்களோ இல்லையோ, எங்க அப்பா ரொம்ப கோபப்படுவார்.  ப்ளீஸ் சார். ஒரே ஒரு ஐம்பது பைசா குடுங்க " என்றான். 
நான் ஐம்பது பைசா குடுத்ததும், கையிலிருந்த சிறுவருக்கான கதை புத்தகத்தை என்னிடம் கொடுத்து விட்டு ஓடிவிட்டான்.  அந்த பையன் டிக்கெட் இல்லாமல் சட்ட விரோதமாக பயணம் செய்யவும் விரும்பலே. அதே சமயம் இனாமாக யாரிடமிருந்தும் எதையும் பெறவும் விரும்பலே.  அந்த நல்ல குணத்துக்காகத்தான் அவனுக்கு உதவி செய்ய விரும்பினேன். நல்ல வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நல்லவனாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எந்த வசதியும் இல்லாத ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு பையன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கூட தவறு செய்ய விரும்பவில்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட உயர்ந்த குணம்.  எவ்வளவு உயர்ந்த பண்பு. நாட்டிலே, படித்தவர்கள் ஆயிரம் பேரை வெகு சுலபமாக கண்டு பிடித்து விடலாம். ஆனால் ஒரு நல்லவனை, நேர்மையானவனைக் கண்டு பிடிப்பது கடினம். அப்பேர்ப்பட்ட ஒரு நல்லவன், நாம் தேடாமலே, நம் கண்களில் தென்படும் போது அவனை கௌரவிக்க வேண்டியது நம்ம கடமையாச்சே.  நம்ம நாட்டு எதிர்காலம் இளைஞர்கள் கையில்தானே இருக்கிறது. எல்லோரும் சிவா மாதிரி இருந்திட்டா, நாடு எவ்வளவு நன்றாக இருக்கும்.  இவ்வளவு நாளும் நான் கொடுத்த பணமும் பரிசும் மற்றவர்களின் திறமைக்காக.  சிவாவின் படிப்பு செலவை நான் ஏற்றுக் கொண்டது அவனுடைய நேர்மைக்காக. வசதி, வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தால். சிவா படிப்பிலும் தன்னுடைய முத்திரையைப் பதிப்பான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இப்போ சொல்லுங்க, சிவாவை தேர்ந்தெடுத்து நான் உதவி செய்வது சரியா தப்பா என்பதை !" என்று சொல்லி விட்டு ஊழியர்களை  பார்த்தார் இராமநாதன்.
"பெரியவங்க எது செய்ஞ்சாலும் அதில் ஒரு நியாயமிருக்கும்கிறதை புரிஞ்சு கிட்டோம். சிவாவிற்கு நீங்க உதவி செய்வதில் எங்களுக்கும் சந்தோசமே!" என்று சொல்லி விட்டு கலைந்து சென்றார்கள் ஊழியர்கள். .

No comments:

Post a Comment