DEAL ..OK..?
"கொஞ்சமாவது மனச்சாட்சி வேண்டாமா? சம்பளம் வாங்கிக்கொண்டு தானே சர்வீஸ் பண்றாங்க .. ப்ரீ சர்வீஸ் எதுவும் பண்ணலையே. பிறகு ஏன் இவங்க செய்ற வேலைக்கு நாம் பணம் கொடுக்கணும். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அவன் தலையிலே நச்சுனு நாலு அடி அடிக்கணும் போல இருந்துச்சு .." என்று மொபைலில் இரைந்து கொண்டிருந்தாள் வசந்தி.
"ஹாய் மம்மி என்ன கோபம்..உங்க சத்தம் வாசல் வரை கேட்குது " என்றபடி வாசலில் செருப்பை கழட்டி போட்டபடியே கேட்டான் ஸ்ரீராம்.
"என்னடா இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டே .. க்ளாஸ் கட் அடிச்சிட்டு வந்துட்டியா ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் வசந்தி.
"இன்னிக்கு ஏதோ டீச்சர்ஸ் மீட்டிங்காம். அதனாலே ஒரு மணி நேரம் முன்னாடியே ஸ்கூலை பூட்டிட்டு எல்லாரும் மீட்டிங் போயிட்டாங்க. நாங்க வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டோம். தட்ஸ் ஆல் .. அப்பா சொல்லியிருந்த விஷயமா பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் போயிருந்தியா .. இவ்வளவு பணம் வேணும்னு டீலா . அதான் இந்தக் கோபமா ?" என்று கேஷுவலாக கேட்டான் ஸ்ரீராம்.
"ஆமாம்.. இவங்களை எல்லாம் அந்த ஆண்டவன் தான் கேட்கணும். சரி.. சரி..காஃபி ஸ்நாக்ஸ் எதாவது வேணுமா ?"
"அட போங்க மம்மி..நீங்க ஆண்டவன் கிட்டே டீல் பேசுவீங்க.. மனுஷங்க மனுஷங்க கிட்டே பேசறாங்க.. தட்ஸ் ஆல்.."
"என்னடா சொல்றே ?"
"ஆமா.. நாம எல்லாரும் சாமி முன்னாலே நின்னு 'எனக்கு அதை செஞ்சு குடு .. உனக்கு இதை செய்றேன்..அதை செய்றேன்'னு அக்ரிமெண்ட்.. அதான் டீல்.. போடுறோம்தானே ..மனுஷன் அதையே கொஞ்சம் மாத்தி கேட்கிறான்.. "குடு' செய்றேங்கிறான்"
"அதெல்லாம் ஒரு சந்தோஷமான வேண்டுதல்டா.."
"எப்படியோ .. டீல் டீல்தானே.. அந்தக்காலத்திலேயே நம்ம அவ்வைப்பாட்டி சாமி கிட்டே , 'நான் உனக்கு பால், தேன், பாகு, பருப்பு எல்லாம் தாரேன்..நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா, என்று கேட்டது எழுத்து வடிவில் புத்தகத்தில் இருக்கு.. இதுக்கு என்ன சொல்றீங்க? என்று கண் சிமிட்டிக் கேட்டான் ஸ்ரீராம்.
வாயடைத்துபோய் நின்றாள் வசந்தி.
No comments:
Post a Comment