Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, July 22, 2019

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (40)

எல்லாமே வயித்துக்குத்தான்டா 


மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கவலைகளை யாரிடமாவது கொட்டி விட்டால் தேவலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துசாமி, உயிர் நண்பன் ரங்கனின் வீட்டுக்கு விரைந்தார்.
வீட்டுக் கதவை தட்டுவதற்காக கதவில் கைவைத்ததுமே, கதவு திறந்து கொண்டது.
"ரங்கா, கதவை  சரியாக தாழ் கூடபோடாமல் உள்ளே அப்படி என்ன தான் செய்றே?" என்று கேட்டபடி ஹாலுக்குள் நுழைந்தவர், கையில் சாப்பாட்டு தட்டை ஏந்தியபடி, ரங்கன் டீவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், "என்னப்பா .. இவ்வளவு லேட்டா சாப்பிடறே ! அதுவும் வெறும் மோர் சாதம். சைட் டிஷ் எதுவும் இல்லையா? எங்கே உன்னோட தர்மசிகாமணி. நான் வேணும்னா வீட்டிலிருந்து கொண்டு வர சொல்லவா? ஒரு போன் அடிச்சா போதும். இரண்டே நிமிஷத்தில் என் பையன் டூ வீலரில் எடுத்து வந்துடுவான்" என்றார் உண்மையான அக்கறையுடன்.
"வீட்டிலே அவ இல்லே. பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்னு நேத்து ராத்திரியே கிளம்பிப் போனா.  நாளைக்குத்தான் வருவா .. வா. உட்கார் "
"என்னப்பா இது வெறும் சாதம் ! என் பையனை சாப்பாடு எடுத்துட்டு வர சொல்றேன் "
"வேண்டாம்ப்பா .. என்ன சாப்பிடறோம் என்கிறது முக்கியமில்லே. அதை எவ்வளவு சுதந்திரமா சாப்பிடறோங்கிறதுதான் முக்கியம்."
"சாப்பிடறதில் அப்படி என்னப்பா சுதந்திரம் வேண்டிக் கிடக்கு?"
"இந்த ஒருவாய் சோத்துக்காகத்தான் எத்தனையோ பேர், யார்யாரிட மோ கையேந்தி நிக்கிறாங்க. ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஆஸ்டலில் தங்கி இருக்கிறவங்க கூட,  அவங்க அலவ் பண்ற டைமில்தான் சாப்பிட முடியும். முன்னாடி போனா மீல்ஸ் ரெடியாகலேன்னு சொல்வாங்க. லேட்டா போனா சீக்கிரம் வர்றதுக்கென்ன. இப்போ இதுதான் இருக்குனு எதையோ ஒன்னை குடுப்பாங்க. அவங்க குடுக்கிறதைத்தான் சாப்பிட முடியும். ஒரு சில கூட்டத்துக்கு மணியடிச்சாதான் சோறு. சாப்பாட்டுப் பந்தி சீக்கிரம் முடியாதா? மீந்ததை நமக்கு எப்போ போடுவாங்கனு எத்தனை ஜீவன்கள் விஷேச வீடுகள் முன்னே காத்துக் கிடக்குது. ஒரு சாண் வயித்துக்கு, ஒருவேளை சாப்பாட்டுக்கு மத்தவன் கொடுத்தால்தான் உண்டு ங்கிற நிலையில் இருக்கிறவங்க எத்தனை பேர்.  ஆனா இப்போ நான் எனக்கு வேண்டியதை, எனக்கு வசதிப்பட்ட நேரத்தில், நானாக எடுத்துப் போட்டு சாப்பிடறேன். அதுதான் சுதந்திரம் " என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ரங்கன். 
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் முத்துசாமி.
"என்ன யோசிக்கிறே?"
"உன்னோட  இத்தனை காலம் பழகியும், எதையும் ஈஸியா எடுத்துக்கிற பக்குவம் எனக்கு இல்லாமே போச்சேன்னு நினைச்சிட்டு இருந்தேன் "  

No comments:

Post a Comment