Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 01, 2019

சிந்திப்போம் ! செயல்படுவோம் !!


விமானப்படை வீரர் அபிநந்தன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது. 
மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்வதை விட மனதிற்கு நிம்மதி / ஆறுதல் அளிக்கிறது.
பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி.
இந்த சமயத்தில் என் ஆழ்மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
ஆனாலும் சொல்லியே தீருவதென்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
இன்றைய தினம் நாங்கள் இந்தியர் - நீங்கள் பாகிஸ்தானியர்.
ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் அல்லவா !
நம் தந்தை / தாய்வழி முன்னோர்கள் ஒன்றிணைந்து இந்த மண்ணுக்காகத்தானே போராடினோம். வெற்றி பெற்றோம்.
ஏதேதோ மாறுபட்ட சிந்தனைகள் / மாறுபட்ட கருத்துக்கள் / மாறுபட்ட செயல்கள் ஒரு நாட்டை இரு கூரு ஆக்கினாலும், நீங்கள் எங்கள் சொந்த சகோதரர்கள் தானே !
நாட்டுக்கு நாடு மாறுபட்ட கொள்கைகளால் / செயல்பாடுகளால்  கருத்து வேறுபாடுகளால் பகை மூள்கிறது. போர் புரியும் சூழ்நிலை உருவாகிறது. எந்த நாடாகட்டும் ; வீரனாகட்டும். அவர்களுக்கிடையேயான  தனிப்பட்ட பகைமை காழ்ப்புணர்ச்சியால் மோதிக் கொள்வதில்லை.
அவரவர் நாடு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள்.
நாட்டைக் காக்க போரில் உயிரை விடுவது ஒருவகையான சோகம். ஆனால் சிறைப்படும் போது அவர்கள் நிலையை எண்ணி அவரவர் வீடும் / நாடும் படும் துயரம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.
ஒரு விமானியை ஒப்படைப்பதன் மூலம் உங்கள் பெருந்தன்மையை நிலை நாட்டி விட்டீர்கள். நன்றி! நன்றி! நன்றி!
சிறைப்படும் எந்தவொரு வீரனும் மனிதாபிமானத்தோடு, அவர்கள் கவுரவம் சிறிதும் குறையாதபடி நடத்தப்பட  வேண்டும்.
(இது இன்றைக்கு நான் சொல்கிற ஒரு விஷயம் அல்ல. பல வருடங்களுக்கு முன்பே இதே கருத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதினேன். அது படக்கதையாக தினமணி -சிறுவர்மணியில் வெளியானது. இந்த தளத்திலும் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனது  அப்பா, பெரியப்பா , தம்பி எல்லோருமே ராணுவத்தில் பணி புரிந்தவர்கள். 
எனது அப்பா, பெரியப்பா இருவருமே முதலாம் உலகப்போரின் போதே ராணுவ சேவையில் இருந்தவர்கள்.
எனக்கு ராணுவத்தில் சேர ரொம்ப ஆசை இருந்தது. ஆனால் எனது இளம்பிராயத்தில் அது நடைபெற முடியாத ஒன்று.
ஹை-ஸ்கூலில் படிக்கும்போது N.C.C.ல் சேர்ந்திருந்தேன். நான்தான் எங்கள் பிரிவுக்கு லீடர். 
N.C.C.ல் இருந்ததற்கே அக்கம்பக்கத்தினரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி இருக்கிறேன். (ஒரு பொம்பளைப்பிள்ளை ஆம்பிளைங்க மாதிரி பேன்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு திரிவியா என்று முகத்துக்கு நேராகவே கேட்பார்கள். இது அந்தக்காலம்; இப்போதுள்ள பெண்கள் உடை போட்டு இருக்கிறார்களா இல்லையா என்று நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவு உடை மாற்றம் வந்துவிட்டது.)
விண்ணுக்கு ஏவுகணை அனுப்ப போட்டி போடும் நாட்டோரே, நல்லோரே, உங்களிடம் பணிவாக ஒரு விண்ணப்பம்.  அவரவர் பிறந்த மண்ணில் மனிதர்களாக வாழ வழி காட்டுங்களேன்.
பிறக்கும்போது எல்லோருமே குழந்தைகள் தானே !
தீவிரவாதி என்கிற முத்திரையோடு எந்தக் குழந்தையும் பிறந்ததில்லையே. அந்த பட்டதை அவர்களுக்கு வழங்கியது, வளர்ந்து ஆளான பிறகு  அவர்களது நடத்தையும் / நாடும்தானே.
அது எங்கு எப்படி எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதை சரி செய்ய முயற்சி செய்யுங்களேன்.
மனிதனுக்கு எல்லாம் தெரியும் ; ஆனால் மனிதனாக வாழமட்டும் தெரியாது என்ற கருத்தை பொய்யாக்கும் வண்ணம் உலக நாடுகளின் சிந்தனையும் செய்கையும் இருக்கட்டுமே.
வாழ்வது ஒருமுறை ! அதை வாழ்த்தட்டும் பல தலைமுறை !!

No comments:

Post a Comment