Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, November 28, 2018

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (37)


கோபத்தின் உச்சியில் இருந்தாள் சாரதா. மகன் வரவை எதிர்பார்த்து அவள் கண்கள் வாசற்படியை ஸ்கேன் செய்து கொண்டிருந்தது.
அவள் தவிப்பைக் கண்ட மகாதேவன் "என்னடி ஆச்சு? ஏன் இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டை சுத்திச்சுத்தி வர்றே ? மணி இப்போ நாலுதான் ஆகுது. உன் பிள்ளை வந்து சேர இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்குது. வழியில் எங்காவது டிராஃபிக் ஜாமில் மாட்டிட்டு இருப்பான். இப்போ உனக்கு என்ன பிரச்னை?" என்று கேட்டார்.
"சம்பந்தியம்மா ஃபோன் பண்ணினா. பேச்சு வாக்கில் 'உடம்பே சரியில்லை. சமைக்க முடியலே. சாதம் மட்டும் வச்சேன். நேத்து வச்ச சாம்பார் இருக்குது. அதை வச்சுதான் இன்னிக்கு பொழுதை ஓட்டணும்னு சொன்னா."
"அது அவங்க பிரச்னை. நீ ஏன் அல்லாடறே ?"
"நான் பெத்து வச்சிருக்கேனே ஒண்ணு ... நம்ம வீட்டு ஜென்மம். அதுவும் அந்த சாப்பாட்டைத் தானே சாப்பிடும் "
"ஆமா...........அதுக்கென்ன ?"
"அதுக்கென்னவா ? நம்ம வீட்டில் மத்தியானம் செஞ்ச சாப்பாட்டை ராத்திரிக்கு சாப்பிட மாட்டேன்பான். காலையில் அரைச்ச சட்னி ஆகாது. ராத்திரி சாப்பிடும் முன்னாலே ஃபிரெஷா அரைச்சு வை என்பான். மாமியார் வீட்டில் எதைப் போட்டாலும் சாப்பிடுவானா? குழந்தை பெத்த மகளுக்கு பத்திய சாப்பாடு. மருமகனுக்கு பழைய கறி. இதையே இந்த வீட்டில் நான் செஞ்சா, என் மூஞ்சியிலேயே சாப்பாட்டுத் தட்டை விசிறி அடிப்பான். சாப்பாடு விஷயத்தில் என்னென்ன மாதிரி கண்டிஷன் போடுவான்ங்கிறதெல்லாம் மறந்து போச்சா ?" என்றாள் ஆக்ரோஷமாக.
" முட்டாள் மாதிரி பேசாதே. சாப்பாடு விஷயத்தில் வீட்டில் அத்தனை கண்டிஷன் போடுறவன், வெளியிடத்தில் சூழ்நிலையை அட்ஜஸ்ட் பண்ணி தன்னை மாத்திக்கிறான்னு சொன்னா, அவனை நினைச்சு பெருமைப்படணும். ஏதோ சாப்பாட்டையே பார்க்காதவன் மாதிரி அது வேணும், இது வேணும்னு கேட்காமே நம்ம குடும்ப மானத்தை காப்பாத்தறானேனு நினைச்சு சந்தோஷப்படு !" என்றார் அமைதியான குரலில். 
சாரதா யோசிக்க ஆரம்பித்தாள்  

No comments:

Post a Comment