Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, October 01, 2018

ஓஹோ ! அப்படியா?! (01)




                                                    
   1 ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு என்றொரு பழமொழி உண்டு. ஆஸிட் எனப்படும் அமிலம் சில பொருட்களை  நொடிப் பொழுதில் சிதைக்கும் வீரியம் கொண்டது. கைதவறிக் கீழே விழுந்தால் நொடிப்பொழுதில் சுக்கு நூறாகிவிடும் தன்மை கொண்டது கண்ணாடி. ஆனால் வீரியம் வாய்ந்த அமிலம் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்கப்படுகிறது. சக்தி வாய்ந்த ஒன்று பலவீனமான ஒன்றில் அடங்கிப்போய்விடுகிறது.

2 எறும்பும் தன் கையால் எண் சாண் (எட்டு சாண்) என்பார்கள். சாண் என்றால் ஒரு முழத்தில் பாதி. முழம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடி நீளம். இப்போது சாண்  முழக்கணக்கு கிடையாது. அடி, அங்குலம், மீட்டர்  போன்றவை வழக்கத்தில் உள்ளது. ஒவ்வொருவரும் தனது உடல் உயரத்தை அவர்கள் கையால் அளந்து பார்த்தால் அவர்கள் கை அளவில் எட்டு சாண் இருப்பார்கள். எறும்புகூட அதன் கை அளவில் அளந்து பார்த்தால் எட்டு சாண் இருக்குமாம்.

3 முட்டாள்களோடு தர்க்கம் செய்யக்கூடாது.  அவர்களுக்கு புத்திமதி சொல்வதாக நினைத்துக் கொண்டு வாதம் செய்யக்கூடாது.  ஏனென்றால் பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்பது தெரியாமல் போய்விடும் . குரங்குக்கு புத்திமதி சொல்லப்போய் குருவி தனது கூட்டை இழந்தது  (கதை) தெரியுந்தானே.

4 எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி  என்றொரு சினிமாப் பாடல் உண்டு. (எட்டடுக்கு மாளிகை என்பதை  எட்டு மாடிக் கட்டிடம் என்று சிலர் நினைப்பார்கள்.) நமது உடல் அமைப்பு 1 பாதம், 2 கால், 3 வயிற்றுப் பகுதி 4 நெஞ்சுப்பகுதி  5 தோள்பட்டை 6 கழுத்து  7 முகப்பகுதி 8 தலை எனப்படும் சிரசு என எட்டு அடுக்குகளைக் கொண்டது.
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் என்றால் என்னைத் தனது தலைமேல் வைத்துக் கொண்டாடிய தலைவன் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். எண்சாண் (எட்டு சாண்) உடம்புக்கு சிரசே  பிரதானம். (முதன்மையானது). 

5 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி என்பார்கள். உடலுக்கு ஒன்பது வாசல் என்றும் சொல்வார்கள். அந்த ஒன்பது வாசல் என்னவென்றால் இரண்டு கண்கள் + இரண்டு காதுகள் +  மூக்குத் துவாரம்  இரண்டு   +   வாய் + மலம், சிறுநீர் வெளியேற்றும் இரண்டு பகுதிகள். ஆக மொத்தம் ஒன்பது துவாரங்கள்  - ஓட்டைகளை ஒன்பது மாலுமிகள்  என்றும், உடலை  ஓட்டைக் கப்பல் என்றும்  சொல்கிறார்கள்.

6 உழைப்பின் பயன் எல்லோருக்கும் கிடைத்து விடாது. எதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.  அதிர்ஷ்டம் இல்லை என்று  உழைக்காமல் இருக்க முடியாது. அவர்களுக்கான தேறுதல் வார்த்தைதான் கடமையைச் செய். பலனை எதிர்பாராதே. கொழுக்கட்டை செய்வதற்காக உரலில் மாவு இடிக்கிறோம். கொழுக்கட்டை ரெடியானதும் "இந்தா உரலே, நீ நல்லா மாவாக்கினே. நீ ரெண்டு கொழுக்கட்டை சாப்பிடு" என்று யாரும் கொடுக்கப் போவதில்லை. குதிச்சு குதிச்சு மாவு இடிச்சாலும் குந்தாணிக்கு கொழுக்கட்டை கிடையாது. (குந்தாணி என்றால் நெல், அரிசி குத்த பயன்படுத்தப்படும் பெரிய சைஸில் உள்ள  உரல்)   

7 ஒரு வேலை செய்யும் போது முழுக்கவனமும் அதில் இருக்க வேண்டும்.Work while you work; Play while you play என்று நர்சரி வகுப்பிலேயே கற்றுத் தருகிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு வேலையை செய்ய நினைத்தால் எந்த ஒன்றிலும் முழுக்கவனம் இராது. உருப்படியாக செய்ய முடியாது. அதைசூசகமாக சொல்வதுதான் குரைக்கிற நாய் கடிக்காது என்பது. எல்லா நாயும் குரைக்கும். கோபம், எரிச்சல் வந்தால் எல்லா நாயும் கடிக்கும். ஆனால் ஏதாவது ஒன்றைக் கடித்துக் கொண்டிருக்கும்போது நாயால் குரைக்க முடியாது. குரைக்க நினைத்தால் வாயில் இருக்கும் ஒன்றைக் கீழே போட்டு விட்டுத்தான் குரைக்க ஆரம்பிக்கும்.இது புரியாமல், அந்த நாய் நல்லா குரைக்குதே . அதனால் அது கடிக்காது என்று தப்புக் கணக்குப் போட்டு அதன் வாய்க்குள் கையை விடக்கூடாது.

8 விஞ்ஞானம் வளர்ந்த பின்னும் இன்னும் நமது குழந்தைகளுக்கு நரிக்கதை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று சிலர் கிண்டலடிப்பார்கள். அதில் உள்ள நீதிவழியை எண்ணிப் பார்க்க வேண்டும். பந்தலில் தொங்கும் திராட்ஸை கிடைக்காதுனு தெரிஞ்சதும், நரி திராட்ஸை கொடியை அழிக்க நினைக்கலே. ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு "இந்தப்பழம் புளிக்கும்; நமக்கு வேண்டாம் " என்று நினைத்துக் கொண்டு திராட்ஸையை மறந்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டது. கிட்டாதாயின் வெட்டென மற. இந்த பக்குவம் எல்லாருக்கும் வந்து விட்டால், ஒருதலைக் காதல் கொலைகள் நடக்காது. 

9 முயற்சி, வாய்ப்பு, திறமை போன்றவை இருந்தால் நாம் நினைத்த இலக்கை எட்டிப் பிடிக்கலாம். ஆனால் முதுமை என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. அஞ்சிலும் பிஞ்சிலும் அநியாயமாக போய்ச் சேருகிறவர்கள் எத்தனை எத்தனை பேர். முதுமை என்பது ஒரு சிலருக்கே கிடைக்கக் கூடிய வரம். ஒரு சிலருக்கு சாபமும் அதுதான் என்றாலும் பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரிக்கக் கூடாது. 

10 புவியியல் அமைப்பில் நான்கில் மூன்று பகுதி தண்ணீர்தான் உள்ளது என்கிறார்கள்.  மிகப்பெரிய நீர்நிலை கடல்தான் என்றாலும் கடலுக்குள் (மீன் பிடிக்க, மற்ற காரணங்களுக்காக) செல்பவர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரைக் கையோடு கொண்டு செல்ல வேண்டும். பேர்தான் சமுத்திரம்.   குடிக்க தண்ணீர்  கிடைக்காது.

No comments:

Post a Comment