Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 29, 2017

DEAR VIEWERS,

Image result for image of saraswati

HAPPY SARASWATHI  POOJA!

இனி மேட்டருக்கு வரலாம். நாம் பார்க்கிற ஒரு சில சாதாரண காட்சிகள் , தற்செயலாக நம் காதில் விழுகிற சில வார்த்தைகள்கூட பெரிய அளவில் நமக்குள்   பாதிப்பை உண்டாகும் - அது சந்தோசமாகவும் இருக்கலாம். கவலை யான ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால் அவை நம் மலரும் நினைவுகளாக பயணிக்க ஆரம்பித்து விடும். 
உங்களுக்குத்  தெரிந்திருக்கும் "கோகுலம்" குழந்தைகளுக்கான மாத இதழ் என்பது. (அதில் நான் எழுதும் புதிர்கள் வெளியாகின்றன. இப்போ அது அல்ல மேட்டர்.)
இந்தமாத அக்டோபர் 2017 கோகுலம் பத்திரிகையில் பிரபலங்களுடனான சந்திப்பு பகுதியில் கிரேஸி மோகன் இங்கிலீஷ் ரைம்ஸ் இரண்டை தமிழில் சொல்லி இருந்தார். அதை படித்ததும் கிட்டத்தட்ட  இருபது மூன்று அல்லது இருபத்தைந்து வருடங்கள் பின்னோக்கி போக ஆரம்பித்து விட்டேன் நான் .
கிரேஸி மோகனின் நர்சரி ரைம்ஸ் தமிழாக்கத்தைப் போல எங்கள் வீட்டுக் குழந்தைகள் BABA BLACK SHEEP என்ற பாடலை சென்னைத் தமிழில் பாடுவார்கள் 
"பாபா கறுப்பாடு கம்பிளி கிம்ப்ளி கீதா ?
கீதண்ணாத்தே கீது மூணு கம்பளி கீது
ஒண்ணு நம்ம அக்காளுக்கு 
ரெண்டு நம்ம தங்கச்சிக்கு 
மூணு நம்ம மச்சானுக்கு 
வேறே கம்பளி லேது !
பாடி முடித்துவிட்டு இது மாதிரி ஒரு ரைமை உன்னாலே உங்க ஊர் தமிழில் பாட முடியுமா என்று சவால் விடுவார்கள்.
நான் உடனே பாடுவேன்  நெல்லைத் தமிழில் :
" யம்மா இங்கிட்டு வாயேன் 
ஆசையா முத்தமொன்னு தாயேன் 
எலைலே சோத்தை வச்சிட்டு 
ஈயை அங்கிட்டு ஓட்டு "
இதைக் கேட்டு சிரிப்பை அடக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இப்போது புற்றீசல்கள் போல டீவீ சேனல்கள் வெளியாகின்றன. அப்போ Door Dharsan / Sun TV தவிர வேறு எதுவும் கிடையாது.
இரவு நேரத்தில்  ஏழு மணிக்கு மேல்தான் டீவீ பார்ப்போம். (நான் ஆபீஸ் முடிந்து வரணும். அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைங்க ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஹோம் ஒர்க் முடிக்கணும். அதனால்  )
அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் ஒரே சிரிப்பு சத்தமாகத்தான் இருக்கும். ஆரம்ப காலத்தில் அக்கம்பக்கத்து வீட்டினர் ரொம்பவும் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் எல்லோரும் அதோ எக்ஸாம்க்கு ப்ரிபேர் ஆகிற மாதிரி ரொம்ப சின்ஸியரா டீவீ ப்ரோக்ராமை பார்த்துட்டு இருக்கிறப்ப எங்க வீட்டில் மட்டும் சிரிப்பு சத்தம் கேட்டால் என்னவென்று விசாரிக்கத்தானே செய்வார்கள். அங்கு நடப்பதைக் கவனிப்பார்கள். சிரிப்புக்கான காரணம் தெரிந்ததும் அவர்களும் சிரித்து விட்டுப் போய்விடுவார்கள். பிறகு அது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது.
ஆனால் அம்மா என்னை தினமும் திட்டுவாள் - "ஏழு கழுதை வயசாச்சு. சின்னப் பிள்ளைகளை கூட்டி வச்சிட்டு கூத்தடிக்கிறே ! வெட்கமா இல்லையா ?" என்று. நான் காதிலேயே வாங்க மாட்டேன்.
டீவீ யில் ஒரு சீரியல்  ஸீன் ஓடிக்கொண்டிருக்கும். அது ஒரு சோக காட்சியாக கூட இருக்கும். அதை நாங்கள் காமெடி சீன் ஆக மாற்றி விடுவோம்.
இப்போ மீம்ஸ்/DUBSMASH என்று  வருகிற விஷயங்களை எங்கள் வீட்டிலுள்ள  குழந்தைகள் அந்த காலத்திலேயே செய்வார்கள்.
ஆச்சி மசாலா விளம்பரம் ஒன்று வரும். அதில் குஷ்பூ சொல்வார் : "ஊரிலிருந்து அத்தை வந்திருக்காங்க. இந்தக்கால பொண்ணுங்களுக்கு வத்தக்குழம்பு வைக்கத் தெரியுமானு கேட்டாங்க. வச்சேன் ஒரு சூப்பர்  வத்தக் குழம்பு. அப்புறம் ஆறு பாக்கெட் ஆச்சி மசாலா தூள் வாங்கிட்டுப் போனாங்க !"
அந்த விளம்பரம் ஆரம்பிக்கும்போதே  அதே டயலாக்கை எங்கள் வீட்டுக் குழந்தைகள் கோரஸாக   "ஊரிலிருந்து அத்தை வந்திருக்காங்க. இந்தக்கால பொண்ணுங்களுக்குவத்தக்குழம்பு வைக்கத்தெரியுமானு கேட்டாங்க. வச்சேன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை. அப்புறம் ஆறு மாசம் அவங்க எழுந்திரிக்கவே இல்லை!"  .
இந்தமாதிரி டயலாக் அடித்த குழந்தைகள் எல்லோரும் இன்று அவர்களின் குழந்தைகள் சொல்வதைக் கேட்டு ரசித்து /  சிரித்துக்  கொண்டிருக்கிறார்கள். காலத்தின் மாற்றம்.!! ஆனால் நினைக்கும்போது ஒரு உற்சாகத் துள்ளல் எழுகிறதென்னவோ உண்மைதான் !! 

No comments:

Post a Comment