Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 19, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 151 )


Image result for image of torned chappal
                                                         ஏக்கத்தின் வெளிப்பாடு ?
"ஜூன் மாசம் பக்கத்திலே வந்துகிட்டே இருக்குது. ஸ்கூல் செலவே பட்ஜெட்டில் எகிறுது. இப்பப்போய் இந்த செருப்பு வேறே அறுந்துபோய் சதி பண்ணுதே. சனியன்... தைக்க முடியாதபடி இப்படியா அறுந்து போகணும். அதை சொல்லி என்ன பிரயோஜனம். எவனோ ஒரு புறம்போக்கு போன் பேசிக்கிட்டே வந்து என்மேலே எருமைமாடு மாதிரி மோதிட்டுதே. அந்தப் பள்ளத்தில் நான் கொஞ்சம் ஜாக்கிரதையா தாண்டி இருக்கணும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு சொல்வாங்களே. அந்த மாதிரி செருப்போடு போச்சு. இந்த டேமேஜ் காலில் ஏற்பட்டிருந்தால் டாக்டர் பீஸ் எகிறி இருக்குமே" என்று மனசுக்குள் நினைத்தபடியே செருப்புக்கடைக்குள் நுழைந்தான் சேது.
இவனைக் கண்டதுமே, செல்போனை காதிலிருந்து எடுத்துவிட்டு தலையை உயர்த்தி  அருகிலிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டி "உட்காருங்க " என்று சைகை செய்த இளைஞன், மீண்டும் செல்போனில் ஐக்கியமானான்.
"இந்த செல்போனைக் கண்டுபிடிச்ச படுபாவி..சண்டாளன் யாருனு தெரியலே. அவன்மட்டும் இப்ப என் கையில் கிடைச்சா அவனை அப்படியே கொதிக்கிற சுண்ணாம்பு   காளவாயில் வச்சு   நீர்த்துடணும்" என்று மனதுக்குள் சபித்தான்.
இதே டயலாக்கை வீட்டில் இருக்கும்போது சொல்லி இருந்தால், "எல்லா மனுஷங்களுக்கும் உபயோகமாக இருக்கும்னுதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணை கண்டு பிடிக்கிறாங்க. எதை எதை எந்த நேரத்தில் எப்படி யூஸ் பண்ணணும்கிற அடிப்படை அறிவு இல்லாத மனுஷங்களை அடிச்சு திருத்தறதை விட்டுட்டு கண்டுபிடிப்பாளிகளை குறை சொல்றீங்களே " என்று ஜானு கேட்டிருப்பாள் என்பதும் நினைவுக்கு வந்தது.
இளைஞன் இன்னும் போனில்தான் இருந்தான்.
"காதலின் தீபம் ஒன்று" - பாட்டு டீவியில் போடும்போது கவனிச்சு பாரேன். அந்த பாட்டில் ரஜனி நடக்கிற நடை இருக்குதே .. அது தூள். அப்புறம் பழைய பாட்டு ஒண்ணு..."காவியமா நெஞ்சில் ஓவியமா"னு அதுல கூட சிவாஜி சூப்பரா நடப்பாருடா.. நம்ம விஜயகாந்துக்கு ஆயுதமே வேண்டாம். காலே போதும். தூக்கிப்போட்டு பந்தாடிடுவார். அப்புறம் நேத்து பேஸ்-புக்கில் ஒரு மேட்டர்டா. ஒருத்தன் மொட்டைமாடி சுவரில் நின்னுகிட்டு என்னென்னவோ செய்றான். பார்க்கறச்சே அப்படியே உடம்பே புல்லரிக்குதுடா. எனக்கும் அப்படி செய்யணும்போல இருக்குது. அட..கடல் அலைலே மிதந்துகிட்டு என்னென்ன வித்தை காட்டுறாங்க. அதெல்லாம் எப்படிடா ?" என்று வியந்து போய் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
தலையை நிமிர்த்தி ஒரு நொடி நேரம் சேதுவைப் பார்த்த இளைஞன் மீண்டும் செல்போனில் ஐக்கியமானான்.
"டேய் .. நம்ம லைஃப் முடியறதுக்குள் இந்தியா பாகிஸ்தான் பார்டரில் இருக்கிற வாகா ப்ரோக்ராமை எப்படியாவது பார்த்துடணும்டா . அன்னிக்கு டீவியில் பார்த்தேன். நம்ம ஜவான்க காலை எவ்வளவு உயரத்துக்குத் தூக்கி லெஃப்ட் ரைட் போடறாங்க தெரியுமா! கால் வலிக்காதா என்ன! பார்க்கறச்சயே உடம்பு புல்லரிக்குதுடா !" என்று அவன் சொன்னதை சேதுவும் கேட்டான்.
பார்க்க ரசிக்க எத்தனையோ விஷயம் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுட்டு இந்த புறம்போக்கு ஒவ்வொருத்தர் நிக்கிறதையும் நடக்கிறதையும் ரசிக்கிற ஜென்மம் போலிருக்கு என்று நினைத்து பொறுமை இழந்த சேது, "போனை முடிச்சிட்டுதான் கஸ்டமரை கவனிக்கிறதா ஐடியா இருந்தா அதை முதலிலேயே சொல்லிடு. நான் வேறே கடையை பார்த்துக்கிறேன்" என்று கத்தினான்.
"இல்லே ஸார் .. இப்போ வந்திடுவாங்க."
"கஸ்டமரைக் கவனிக்கிறதைவிட துரைக்கு போன் முக்கியமா போச்சாக்கும்?"
"அப்படியில்லே. என்னாலே முடியாது ஸார் "
"ஓஹோ..முதலாளி வர்க்கமா?" என்று சேது இளக்காரமாக கேட்க, "நோ ஸார் " என்று பதட்டமான குரலில்  சொன்ன இளைஞன் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து கீழே குதித்தான்.
குதித்த வேகத்தில் தடுமாறி தரையில் உருண்டான். அவனைப் பிடித்துத் தூக்கிய சேது அப்போதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தான். அவனுடைய உருவ அமைப்பு தொடைக்கு கீழ் உள்ள பகுதியே இல்லாமல் இருந்தது.      
"இது என்னோட பிரெண்ட்ஸ் நடத்துற கடை. அவங்க சாப்பிட வெளியில் போயிருக்காங்க. டைம் பாஸுக்கு நான் இங்கே வருவேன். அவங்க வெளியில் போறச்சே நான் கடையை பார்த்துப்பேன். மத்தபடி என்னாலே எங்கேயும் ஏற இறங்க எதையும் எடுத்துக்காட்ட முடியாது சார். இன்னும் அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க" என்று கெஞ்சும்குரலில் சொல்ல, மீண்டும் தனது பழைய இடத்தில் அமர்ந்தான் சேது. இளைஞனின் போன் பேச்சின் காரணம் அவனுக்கு இப்போது புரிந்தது. தன்னிடம் இல்லாத ஒன்று,  தன்னால் முடியாத ஒன்று மற்றவர்களிடம்  இருந்தால் அதை எண்ணி ஏங்குவதும் ரசிப்பதும்தானே மனித இயல்பு. அதைத்தானே இந்நேரம் வரை செய்திருக்கிறான். அவனிடம் போய் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டேனே என்று தன்னை நினைத்து வெட்கப்பட்டான் சேது. 

No comments:

Post a Comment