Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, September 07, 2016

DEAR VIEWERS

Image result for images of cute babies



கதை சொல்லியபடி குழந்தைக்கு (பேத்தி) சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தேன்.     அப்போது  அங்கு வந்த எங்கள் வீட்டு வாரிசு, "மனுஷன் செவ்வாய்க்கிரகத்துக்குப் போக முயற்சி பண்ணிக்கிட்டிருக் கிறான்.  நீ இன்னும் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லி குழந்தையை ஏமாத்திட்டு இருக்கிறே !" என்றான். 
"பாட்டி மட்டுமா சுட்டாள்? பாட்டிகிட்டே இருந்து வடையை காக்கா சுட்டுது . காக்கா கிட்டே இருந்து நரி சுட்டுது. நாங்க தலைமுறை தலைமுறையா இதை சுட்டுட்டு இருக்கிறோம். இதை நாங்க சொல்றதாலே உனக்கு என்ன பிரச்சனை? இல்லாத ஒண்ணை, மத்தவங்களுக்குத் தெரியாத ஒண்ணை, மத்தவங்க மறந்த ஒண்ணை எடுத்துச்சொல்லியே ஆகணும்தானே!என்றேன்.
" அப்படி என்னதான் அதில் இருக்குது?" என்றான்.
அப்போது அவனுக்கு சில விஷயங்களை புரிய வைத்தேன்.
"ஓ !" என்றான்.
உங்கள் வீட்டிலும் குழந்தைகளுக்குக்  காக்கா கதை சொல்லும் பழக்கம் உண்டா? அதை உங்களது வாரிசுகள் கிண்டல் பண்ணுகிறார்களா? நான் சொல்வதை நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்.
மனுஷன் அறிவாளியாக வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. மனுஷன் மனுஷனாக இருக்கணும்.
மனிதனெல்லாம் தெரிந்து கொண்டான் வாழும்வகை புரிந்து கொண்டான் .  மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை.
அப்படி இருக்க சில நல்ல பழக்க வழக்கங்கள் அவனுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனுக்குப் புகட்டப்பட வேண்டும்.
"பாலோடு சேர்த்து நம்ம பண்பை ஊட்டணும்" என்கிறது பழைய சினிமாப் பாடல் ஒன்று.
"நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்!
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கணும் !!" என்கிறது மற்றொரு பாடல் .
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பதைப் பாடம் நடத்தி (சிறுசு/பெருசுகளுக்கெல்லாம்) விளங்க வைக்க வேண்டிய நிலை. பாடம் நடத்தினால் போதுமா? (சாட்டைஎடுத்து அடித்தால் நிலைமை மாறுமா?)
"அளவில்லாமே படிச்சுப்படிச்சு மூளை குழம்பிப் போச்சு!" என்கிற நிலை தான்  இன்றைய தலைமுறைக்கு.
இந்தப்பாடல்கள் எல்லாம் வருவதற்கு முன்பே நம்ம முன்னவங்க நிறைய விஷயங்களை நமக்கு கதைகளாக சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஒவ்வொரு கதையுமே ஒரு நல்ல நீதியை சொல்லுது.
பாட்டி வடை சுட்ட கதையில், வயதான காலத்திலும் தன்னால் முடிந்த ஒரு வேலையை செய்து பாட்டி பிழைப்பு நடத்தினாள். முதுமையை காரணம் காட்டி யாசகம் கேட்கலே. தவறான வழியில் அடையும் பொருள் நிலைத்து இருப்பதில்லை. நீ ஒருத்தனை ஏமாத்தி பிழைக்க நினைச்சா உன்னை ஏமாத்த ஒருத்தன் கண்டிப்பா இருப்பான் என்பது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லத்தான்  கதை சொல்லும் பழக்கம் / முறையைக் கையாண்டார்கள் முன்னோர்கள் .
திராட்ஷை பழத்துக்கு முயற்சி செய்து ஏமாந்த நரி, "ச்சீ... ச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று சொன்னதாக சொல்வதன் கதையின் மூலம் "ஒரு பொருள் உனக்குக் கிடைக்காட்டா அதை நினைச்சு ஏங்காதே..அதையே நினைச்சிருந்து மத்த விஷயங்களைக் கோட்டைவிட்டுடாதே. கிடைக்காத ஒன்றுக்காக மற்றவர்களைப் பழிவாங்க நினைக்காதே!" என்று எப்பேர்ப் பட்ட விஷங்களை நமக்கு சொல்லி வைத்திருக்கிறார்கள். (இது எல்லார் மனசிலும் பதிந்திருந்தால் ஒருதலைக்காதல் கொலைகள், ஆஸிட்வீச்சு சம்பவங்களும் நடந்திருக்காதே. .)
குறுகியபாதையில் இரண்டு ஆடுகள் ஒன்றை ஒன்று கடக்க முயலும் போது "நீயா நானா?" போட்டியில் இரண்டு ஆடுகளுமே நீரில் விழுந்தன என்றொரு கதை உண்டு. ஒருவருக்கு வழி விட்டு அவர்கள் கடந்து செல்லும்வரை பொறுமை காத்தால் இரண்டு பேருமே SAFE ஆக பயணம் போக முடியும் என்ற நீதியை சொல்கிறது. இதை இந்த தலைமுறைக்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும்.
எலெக்ட்ரிக் ட்ரைனில் தினமும் பார்க்கும் காட்சி. ட்ரைனில் ஏறுபவர்கள், உள்ளே வருவது கிடையாது.எண்ட்ரன்ஸ்ல் நின்று கொண்டு மொபைலை நோண்ட வேண்டியது. ( இதில் 90% காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ).
இது பற்றி நிறையவே பேச வேண்டும்.
எலெக்ட்ரிக் ட்ரைனில், லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் தினமும் நடக்கும் வாக்குவாதம் மீன் மார்க்கெட்டை விட மோசமாக இருக்கும். (இதை யாராவது ரிக்கார்ட் செய்து கூகுளில் ஏற்றினால் viewers record ஒரு ரிக்கார்ட் பிரேக் பண்ணும்.
ஒரு ஸ்டேஷன் வரும்போது அதில் இறங்குபவர்கள் மட்டும் எண்ட்ரன் ஸ்ல்  நின்றால், அவர்களை அடுத்து மற்றவர்கள் நிற்பார்கள். ஆனால் அந்தப் பழக்கம் கிடையாது. யார் இறங்க நிக்கிறாங்க... யார் சும்மா பிலிம் காட்ட நிக்கிறாங்க என்பது யாருக்கும் தெரியாது. யாரையாவது "நீங்க இங்கே இறங்கப் போறீங்களா ?" னு கேட்டால் அதற்கு ஒரு வாக்கு வாதம்.
இதை தவிர்க்க, இறங்குபவர்கள் முன்னால் வந்து நின்று கொண்டால், "நாங்க எதுக்கு நிக்கிறோம் ... இறங்கத்தானே !" என்பார்கள்.
"அது உன் முகரக்கட்டையில் எழுதியா ஒட்டி இருக்குது ?" என்று கேட்பார்கள் வாய்த்துடுக்கு லேடீஸ். தினமும் யாராவது ஒருத்தர் விழுந்து எழுகிறார்கள். ஆனாலும் புத்தி வரலே. 
வீட்டிலுள்ள பெண்கள் எப்பவும் சீரியல் பார்ப்பது பற்றி ஜோக்ஸ் எழுதற புண்ணியவான்களே, நிற்கும்போதும், நடக்கும்போதும், ரோடு க்ராஸ் பண்ணும்போதும் மொபைலை நோண்டிக்கொண்டே போகிறவர்களில் 99 சதவிகிதம் பேர்  சினிமா பாட்டு, காமெடி, அல்லது பால்ஸ் உடைச்சு விளையாடுற கேம்ஸ் என்றுதான் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். மொபைல் கையில் இருப்பதால் அறிவுஜீவிகள் என்ற நினைப்பில் மிதப்பு . கோடிக்கணக்கில் தினமும் பிசினெஸ் பண்றவன், மொபைலைக் கண்டு பிடிச்சவன்கூட இந்த அளவு நோண்டி இருக்க மாட்டான்.
(சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு நாடு. (ஜப்பான் என்று நினைக்கிறேன்) ட்ரெயின் வந்து நின்றதும் எண்ட்ரன்ஸ் அருகில் இருபுறமும் வரிசையாக நிற்கிறார்கள். இறங்குபவர்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் இறங்கி செல்ல, நிற்பவர்கள் எந்த அசௌகரி யமும் இல்லாமல் ஏறி செல்கிறார்கள் . அது யாருடைய முகநூல், என்ன தலைப்பு என்பதை நோட் பண்ண மறந்துவிட்டேன். உங்களில் யாருக்காவது   அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஒவ்வொரு கல்லூரிக்கும், ஸ்கூல்களுக்கும் காப்பி எடுத்து அனுப்புங்கள், ஸ்டூடெண்ட்ஸ் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.
பொதுஇடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பெரியவர் களுக்கு எடுத்துசொல்லி புரியவைக்க முடியாது. குழந்தைகளுக்கு சொன்னால் குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்பு கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை !.
நாங்கள் பள்ளியில் படித்த நாட்களில் முதல் பீரியட் எடுக்கும் டீச்சர் வகுப்புக்குள் நுழைந்தததுமே எல்லோரும் தலையில் எண்ணெய் வைத்து, ஜடை பின்னி ரிப்பன் கட்டியிருக்கிறோமா என்பதைத்தான் முதலில் கவனிப்பார். தலைமுடி கலைந்து அலை பாயக்கூடாது. எல்லாருமே ரிப்பன் கட்டி ஜடை போட்டுத்தான் போயிருப்போம். வளர்ந்த மாணவிகள் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் தலைக்குக் குளித்துவிட்டு தலைமுடியை பின்னல் போடாமல் வந்து நின்று வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.
"கதை புக் படிக்கிற பழக்கம் உண்டுதானே ... சினிமா பார்க்கும் பழக்கம் உண்டுதானே..அதிலெல்லாம் பித்துப் பிடித்தவனையும் மனநோயாளியை யும் சித்தரித்துக் காட்ட கலைந்த, வாரப்படாத தலையுடைய ஒருவன்"னு சொல்றது தெரியும்தானே. துக்கவீட்டில்தான் தலைவிரி கோலமாக இருப்பார்கள்.   நீ ஏன் இந்தக் கோலத்தில் வந்தே ?" என்று டீச்சர் கேட்பார்.
இப்போ காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாமே தலைவிரி கோலத்தில்தான் வருகிறார்கள். பொது இடங்களில் நிற்கும்போது அது காற்றில் பறந்து மற்றவர்கள் மேல் படுகிறதே என்ற சிந்தனை எல்லாம் கிடையாது.  அதை எத்தனை பேரால் சகித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமும் கிடையாது.
ஒரு விஷயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை வீசி நடக்கும் உரிமை நமக்கு உண்டு. அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது. ஆனால் நம்  கைகள் மற்றவர்கள் மீது படாமல் பார்த்துக்  கொள்வது அவசியம் !
விமானப் பயணத்தின் போது ஏர் - ஹோஸ்டஸ் அதை நடித்தே காட்டுவார் "நீங்கள் விமானத்தின் உள்ளே நடக்கலாம். ஆனால் நடக்கும் போது கைகளை முன்புறம் கட்டிக் கொள்ள வேண்டும். யார் மீதும் இடித்து விட கூடாது என்று பிளைட் பறக்கும் முன்பாகவே சொல்வார். அதை ஒவ்வொரு பஸ்ஸிலும் ட்ரெயினிலும் நடித்துக் காட்டினால் நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக பார்க்கும் காட்சி. ஒரு சினிமா வெளி வருவதற்கு முன்பே அதில் பங்கேற்பவர்கள் நடத்தும் ஒரு ஷோ வரும். அதில் ஒரு பெண் கண்டிப்பாக இருப்பாள். அங்குள்ள அத்தனை ஆண்களும் ரொம்ப டீசென்ட் ஆக டிரஸ் பண்ணி கைகளைக் காட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். பெண் மட்டும் முழங்கால் தெரியும் உடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார். தலைமுடியை ஒரு நொடிக்கொரு தடவை பின் பக்கமாகக் கோதிவிட்டபடி.
அதை பார்க்கும்போது எங்கள் அம்மா சொல்லும் வசனம் : சூப்பின பனங்கொட்டை மாதிரி தலைமுடி. அதை விரிச்சு வேறே போட்டிருக்கே. அது உனக்கு இடஞ்சலா இருந்தா ஒரு கேர் பின்னை எடுத்துக் குத்து. இல்லாட்டா முடியை பறக்க விட்டுகிட்டு பைத்தியம் மாதிரி உட்கார்ந்திரு. ரெண்டும் இல்லாமே  மண்டையைத்தடவி கிட்டு ஏன் உட்கார்ந்திருக்கிறே ? கூட உட்கார்ந்திருக்க அத்தனை ஆம்பிளையும் ஒழுங்காதானே இருக்கிறான். கடை போட்டு எல்லாரையும் கூப்பிட வேண்டியது ... பிறகு அது நடந்தது இது நடந்ததுனு ஒப்பாரி வைக்க வேண்டியது. இதுக சொல்றதை தத்துவம் மாதிரி உக்கார்ந்து கேக்கிறியே. உனக்கு வேறே வேலை இருந்தால் போய்ப்பார்.
இதைப் பார்த்து அப்படியே ரிப்பீட் பண்ற நட்டு கழண்ட கேஸ் எத்தனை எத்தனை ?
குழந்தைகள் வளர்ச்சியில் அக்கறை காட்டுபவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை நல்லதொரு சிட்டிஷனாக தயார் பண்ணி வைத்திருக்கிறீர்கள் என்பதை சொல்லுங்களேன். நம் வீட்டுக் குழந்தைகள் மேதையாக அறிவாளியாக வல்லவனாக வருவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பொது இடங்களில் மற்றவர்கள் மதிக்கும்படி நடந்து கொள்ள கற்றுக் கொடுங்கள்.!

No comments:

Post a Comment