புத்தி வரும் போது சந்தர்ப்பம் வராது !
"அங்கிள் " என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்த ராஜசேகரன் "வா சுரேஷ் .. உள்ளே வா .. என் பேச்சுக்கு மதிப்பு குடுத்து என் வீடு வரை வந்ததுக்கு நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் " என்றான்
"எங்க அப்பா சொல்றது சரிதான் " என்றான் சுரேஷ்
"என்ன சொல்வார் ?"
"யாரோடேயாவது பேசிட்டு இருக்கிறப்பவும் சரி ... எங்க வீட்டிலும் சரி .. உங்களைப் பத்தி சொல்வார் .. "என் ப்ரெண்ட் ராஜா பேச்சிலேயே எல்லாரையும் பிரைன் வாஷ் பண்ணிடுவான்"னு. அது சரியாத்தான் இருக்கு.நீங்க என்னமா கொக்கி போடறீங்க. அதில் என்னை சிக்க வைக்க நீங்களும் எங்க அப்பாவும் சேர்ந்து போட்ட பிளான்தான் இந்த சந்திப்பா ?" என்று களங்கமில்லா மனதுடன் கேட்டான் சுரேஷ்.
"நீ குழந்தைடா கண்ணு. உன்னை நாங்க ஏன் சிக்க வைக்கணும். உன்னைப் பத்தி உங்க அப்பா அடிக்கடி பீல் பண்ணி பேசுவார். அவர் பிரச்சினை என்னனு எனக்குத் தெரியும். உன் சைட் ப்ராப்ளெம் என்னனு தெரிஞ்சுக்கத் தான் உன்னை வர சொன்னேன். அவ்வளவுதான் " என்று விளக்கிய ராஜசேகரன் "பிரேமா .. நம்ம துரை ஸாரோட பிள்ளை வந்திருக்கிறான். சாப்பிட ஸ்நாக்ஸ் குடிக்க காப்பி எடுத்துட்டு வா " என்றான்
"எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க. எனக்காக என்னோட பிரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க "
"ப்ரெண்ட் வெயிட் பண்ணுவாங்கனு வருத்தப்படறே . உனக்காக எவ்வளவு நல்ல சந்தர்ப்பம் வெயிட் பண்ணுது. அதை நீ மிஸ் பண்றேங்கிறது உனக்கு ஏன் புரியலே ? காலங்கள் நமக்காக காத்திருக்காது தம்பி "
"என்ன சொல்றீங்க அங்கிள் ?"
"சரி ... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். இங்கிலீஷ் பாடத்து மேலே உனக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு. எல்லாரும் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்படுவாங்க. நீ ஏன் அதில் சேர மாட்டேன்னு சொல்றே?"
"டீவியிலே, எங்க ஸ்கூலில் நடக்கிற பட்டிமன்றத்திலே தமிழில் சிலர் பேசறதப் பார்த்துட்டு எனக்கும் அது மேலே ஆசை"
"சரி .. அதுக்கு நீ நிறைய புக்ஸ் படிச்சா போதும் .. கண்ணாடி முன்னாலே நின்னுகிட்டு நீயே பேசிப் பழகினா போதும் "
"அங்கிள் நீங்க தமிழுக்கு எதிரியா ?"
"இல்லேப்பா .. என் அனுபவத்தில் வாழ்க்கையை நல்லா புரிஞ்சுகிட்டவன் ஹை கிளாஸ் குடும்பங்களை விட்டுத் தள்ளு . நம்மளைப் போல மிடில் கிளாஸ் குடும்பங்க படிக்கப் போறதே, நாளைக்கு பிழைப்புக்கு ஒரு வழி கிடைக்குங்கிற நம்பிக்கையில்தான்.காலத்துக்கும் வீட்டில் உட்கார்ந்து கிட்டு காலாட்டி கிட்டே சாப்பிட பாட்டன் சேர்த்து வச்ச சொத்து இருந்தால் நாம எதைப் பத்தியும் கவலைப் படாமே வெட்டி வேதாந்தம் பேசிட்டு இருக்கலாம். நாம உழைச்சாத்தான் நாளைக்கு நமக்கு சோறுங்கிற நிலைமையில் நாம இருக்கோம். நம்ம தமிழ்நாட்டுக்குள்ளே வேலை தேடி உட்கார்ந்தாலும் ஆபீஸ் வேலையா உன்னை வெளி மாநிலத்துக்கு அனுப்புறப்போ அந்த சமயம் நீ அந்த மாநிலத்து மொழியை கத்துகிட்டு இருக்க முடியாது. இங்கிலீஷ் தெரிஞ்சிருந்தா ஓரளவு சமாளிக்கலாம். உலகத்தில் எவ்வளவோ நாடுகள் .. எத்தனையோ மொழிகள். உனக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருந்தா அத்தனை இடத்திலும் நீ சமாளிக்கலாம் அதுக்காகவாவது நீ உங்க அப்பா சொல்றதைக் கேளு "
"சும்மா ரீல் விடாதீங்க அங்கிள் " என்று சுரேஷ் சொல்லும்போதே தட்டு நிறைய பிஸ்கெட்ஸ், ஒரு கப் காப்பியை மேஜை மீது வைத்துவிட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டாள் பிரேமா
"சுரேஷ் நீ குழந்தைப்பா .. நான் என்னோட அனுபவத்தில் சொல்றேன். நம்ம நாடு இந்தியா... நாம இருக்கிறது தமிழ் நாட்டில் ..நான் தமிழில் எக்ஸ்பெர்ட். இங்கிலீஷ் அரைகுறையா பேச வரும். நான் படிச்ச தமிழ் நாம இருக்கிற இடத்தில் மட்டுந்தான் கைகுடுக்கும்னு புரிஞ்சுக்கிற சந்தர்ப்பம் எனக்கும் வந்துச்சு. படிச்சு முடிச்சதும் எனக்கு வேலை கிடைச்சது டில்லியில். டில்லியை நான் மேப்பில் மட்டுமே பார்த்திரு க்கிறேன். மற்றபடி எதுவும் தெரியாது. ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து என்னை ரெப்ரெஷ் பண்ணிட்டு வேலைகிடைச்ச இடத்துக்குப் போகணும். அதுக்கு தங்குவதற்கு ஹோட்டலில் ஒரு ரூம் போடணும். அதை விசாரித்து தெரிந்து கொள்ற அளவுக்கு எனக்கு ஹிந்தி தெரியாது . ஆனா நான் ஒரே ஒரு புத்திசாலித்தனமான வேலையை செய்தேன். "எனக்கு ஹிந்தி தெரியாது . தமிழ் அல்லது இங்கிலீஷ் தெரிந்த யாராவது ஒருவரை எனக்கு அறிமுகம் செய்யவும்" என்கிறதை சென்னை யிலிருந்த ஒரு சேட் கிட்டே ஹிந்தியில் எழுதி வாங்கிட்டேன். அதையே தமிழில் மனப்பாடம் பண்ணிட்டேன். டில்லி ரயில்வே ஸ்டேசனில் இறங்கினதுமே மனப்பாடம் பண்ணி வச்சிருந்ததை கிளிப்பிள்ளை மாதிரி ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே சொன்னேன். அவர் கைட் பண்ணினார். அப்புறம் வேலையில் சேர்ந்தது ... டில்லி குளிரை தாக்குப் பிடிக்க முடியாமே சென்னை வந்தது எல்லாமே பழங்கதை. ஹிந்தி பேசுற ஒரு இடத்தில் அந்த மொழி தெரியாமே, வேறொரு மொழியை வச்சு ஆறு மாசம் சமாளிச்சேன். இன்னிக்கு நீ பிப்த் படிக்கிற ஸ்டூடன்ட். நாளைக்கு உன் படிப்பு முடிஞ்சதும் நீ எந்த நாட்டில் வேண்டுமானாலும் வேலை பார்க்கிற சூழ் நிலை வரலாம். அத்தனை நாட்டு மொழியையும் நீ கத்துக்க முடியாது. ஆனா இங்கிலீஷ்ங்கிற ஒண்ணு தெரிஞ்சிருந்தா நீ எந்த நாட்டிலும் தாக்குப் பிடிக்கலாம். அந்த மொழியோட பெருமையே அதான். உலகத்தில் ஆயிரக் கணக்கான மொழிகள் இருந்தாலும், அந்தந்த மொழி களைப் பேசறவங்களை நாம அண்ணாந்து பார்க்கிறது கூட கிடையாது. ஒருத்தன் இங்கிலிஷில் பேசினால் அவனை திறந்த வாய் மூடாமே பார்க்கிறோம். அதனாலேதான் அந்த மொழி தெரிஞ்சவனை ரொம்ப மேதாவி மாதிரி எல்லாரும் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் ஒருத்தனுக்கு அரிசுவடி கூட தெரிந்திருக்காது ஆனா அது மொழிங்கிறதாலே அதை அவன் ஈசியா கத்துகிட்டு இங்கிலீஷ் காரன் கிட்டேயே சர்வ சாதாரணமா பேசுவான். என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லாட்டா மகாபலிபுரம் கன்னியாகுமரி .. இந்த மாதிரி டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போய்ப் பார். பாசிமணி .. கடல் சிப்பி விக்கிற சின்னப் பையங்க கூட யாராவது ஒரு பாரினர் கிட்டே இங்கிலிஷில் பேரம் பேசிட்டு இருப்பாங்க. நல்லபடியா உழைச்சு பொழைச்சு முன்னுக்கு வரணும்னா உங்க அப்பா சொல்றதை கேளு. அதுக்கு மேலே உன் இஷ்டம் " என்றான் ராஜசேகரன் .
"சரி அங்கிள் ... தின்ங் பண்றேன் " என்று பெரிய மனிதத் தோரணையில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சுரேஷ்.
அவன் போனதும், "உங்களுக்கு எப்போ வேலை கிடைச்சுது.. எப்போ டில்லி போனீங்க .. எப்போ திரும்பி வந்தீங்க ?" என்று கிண்டலான குரலில் கேட்டாள் பிரேமா
"நக்கலா ?" என்றான் ராஜசேகரன் சிரித்துக் கொண்டே.
"இல்லே ... நீங்க ஒண்ணாம் கிளாஸ் படிக்கிறப்போ உங்களுக்கு இங்கிலீஷ் ரைம்ஸ் சரியா சொல்லத் தெரியலேன்னு உங்க டீச்சர் அடிச்சதாலே அதுக்குப் பிறகு ஸ்கூல் பக்கமே போக மாட்டேன்னு சொல்லி நீங்க அடம் பிடிச்சு படிப்பை ஆரம்பிச்ச வருசமே படிப்பை நிறுத்திய கதைதான் எனக்குத் தெரியும். டில்லியில் வேலை பார்த்த விஷயம் தெரியாது.. அதான் கேட்டேன் "
"அந்த சின்னஞ்சிறு வயசில் ஸ்கூல் போகாமே வீட்டில் உட்கார்ந்து விளையாடியது அந்த வயசில் சொர்க்கமா இருந்துச்சு . விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு படிக்காமே போனதை நினைச்சு எத்தனை எத்தனை நாள் மனசுக்குள் அழுதிருக்கேன் தெரியுமா? பாட்டன் சொத்து இருக்குது . பிசினெஸ் பண்ணி நல்லபடியா இருக்கேன். பாழாய்ப் போற இங்கிலீஷ் தெரிஞ்சிருந்தா அக்கம் பக்கத்து மாநிலத்துக்குப் போய் ஆர்டர் பிடிச்சு இன்னும் பெரிசா வளர்ந்திருப்பேன். இப்போ பாரு ... குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டறேன்.. மத்தவங்களை ஏஜெண்டா வச்சு பிசினெஸ் பண்ண வும் பயமா இருக்குது. ஒரு நல்லது கெட்டது எடுத்து சொல்ல ஆளில்லாமே நான்தான் நாசமா போயிட்டேன். இன்னொரு இளங் குருத்து நல்லா வரட்டுமேன்னு கதை சொன்னேன் "
"ஒரு விஷயத்தைப் பத்தி தெரியாத நீங்க அதில் பாடம் நடத்தி இருக்கீங்க .. அடடா ... இந்த சாமர்த்தியம் யாருக்கு வரும் "
"ஒரு பெரிய மனுஷன் ... நல்லவர்தான் .. ஆனால் சில கெட்ட சகவாசம், கெட்ட பழக்கவழக்கம் உண்டாம். ஒரு சமயம் இவர் ஒருத்தருக்கு புத்திமதி சொல்றதப் பார்த்த இன்னொரு ஆளு, "நீயெல்லாம் மத்தவங் களுக்குப் புத்திமதி சொல்ற அளவுக்கு தகுதியானவனா"னு கேட்டாராம். அதுக்கு அந்த பெரிய மனுஷன், " ஒரு மனுஷன் எப்படி எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படி அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதன் பின் விளைவுகள் என்னனு எல்லாரைக் காட்டிலும் எனக்குதான் அனுபவ ரீதியா நல்லா தெரியும். அதனாலே புத்திமதி சொல்ல என்னைவிட தகுந்த ஆள் யாரும் கிடையாது .. நான் உருப்படலே ... மத்தவன் உருப்படட்டும்கிற நல்ல எண்ணத்தில் சொன்னேன்"னு சொன்னாராம். அந்தப் பெரிய மனுஷன் இடத்தில் இன்னிக்கு நான் இருக்கிறேன்" என்று சாதாரணமாக ராஜசேகரன் சொன்னாலும் அந்தக் குரலில் ஒரு சோகம் இருப்பதை பிரேமா உணரத் தான் செய்தாள்.
No comments:
Post a Comment