Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, July 19, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 123 )

                       என்னை நினைச்சே நானும் அழுதேன் !!

"எல்லாத்தையும் எடுத்துகிட்டியா . ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா  நல்லா செக் பண்ணிக்கோ. அப்புறம் அங்கே போய் நின்னு கிட்டு அதை எடுத்துட்டு வரலியே, இதை  எடுத்துட்டு வரலியேன்னு டென்ஷன் ஆகாதே" என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்த பார்வதி மீது கோபப் பார்வையை வீசினார் மகாதேவன். அவள் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மகனை தயார்ப்படுத்துவதில் மும்முரமாக இருந்தாள்.
"ஒரு பாக்ஸில் ரெண்டு இட்லியை போட்டுத் தரேனே. பசிக்கும்போது அதில் ரெண்டு வாய் எடுத்துப் போட்டுக்கலாமே. வெளியே அங்கே இங்கேன்னு அலைய வேண்டாம். கையோடு தண்ணீர் பாட்டிலும் வச்சுக்கோ"
" வேண்டாம்மா. நான் ஏதாவது பார்த்துக்குவேன் " என்றான் சிவா.
"என்னத்தைப் பார்த்துக்குவே ? பட்டினி கிடப்பியா ? போற இடங்களில் கான்டீன் இருந்தால் சரி. இல்லாட்டா என்ன பண்ணுவே ? "
"என்னவோ ஸ்கூல் பையனைக் கவனிக்கிறாப்பிலே கவனிக்கிறே? வேலை  தேடி இண்டெர்வியூ தானே போறான். வெளிநாடு எங்கேயும் போகலியே !" என்று கிண்டலாகக் கேட்டார் மகாதேவன்.
"அவன் கிளம்பறப்போ டென்ஷன் பண்ணாமே கொஞ்ச நேரம் பேசாமே இருங்கோ "
"தடிமாடு மாதிரி வளர்ந்து நிற்க்கிறான் தண்ட சோறு. இவனோட சேர்ந்து படிச்சதுங்க தனக்குன்னு ஒரு வேலையைத் தேடிட்டு லைப்பில் செட்டில் ஆயிடுச்சுங்க. இவன் வேலை தேடினான் .. தேடுறான் ........ தேடிக் கிட்டே இருப்பான்.. படிப்புக்காக வாரி இறைச்ச பணத்துக்கு நாலு மாடு வாங்கி விட்டுருந்தால், இந்நேரம் அது பால் பண்ணையா வளர்ந்து இருக்கும்.  இவன் வயசுப் பிள்ளைங்க தாய் தகப்பனை வீட்டில் உட்கார வச்சு சோறு போடுதுங்க. இந்தத் தடிமாட்டுக்கு நாம இன்னும் தண்ட சோறு போட்டுட்டு இருக்கோம்"
"போதும் .. இப்பத்தான் பொழுது விடிஞ்சிருக்கு. பொழுது முடிய இன்னும் நிறைய நேரம் இருக்குது. பிள்ளையை நாம வளர்த்த புராணத்தைப் பொழுது முழுக்கப் பாடிக்கலாம். இப்போ அவன் நிம்மதியாக் கிளம்பிப் போகட்டும் " என்று பார்வதி சிடுசிடுக்கவும் பேச்சைக் குறைத்துக் கொண்டு நியூஸ் பேப்பரில்  தன்னை மறைத்துக் கொண்ட மகாதேவன் , சிவா வீட்டைவிட்டுக் கிளம்பிப் போகும்வரை வாயைத் திறக்கவில்லை வாசல் வரை வந்து மகனை வழியனுப்பி வைத்த பார்வதி " அப்பா சொல்றது எதையும் மனசில் வச்சுக்காதே. அவருக்கு உன் மேலே எந்த கோபமும் கிடையாது. வயதானாலே வீட்டில் இருக்கிறவங்க இப்படித் தான் எதிலும் குறை கண்டு பிடிச்சுகிட்டே இருப்பாங்க.உங்க அப்பாவுக்கு வயதாகிவிட்டது. ரிடயராகி வீட்டுக்கு  வந்து விட்டோம்கிற காம்ப் ளெக்ஸ். முன்னப் போலே கையில் பணப் புழக்கம் இல்லே. அந்த இயலாமையில் ஏதேதோ பேசறார். நீ எதையும் மனசில் வச்சுக்காமே போனோமா வந்தோமானு இருக்கணும்" என்று சொல்ல எல்லா வற்று க்கும் "சரி.சரி" என்று தலையை அசைத்தான் சிவா . கதவை பூட்டிவிட்டு வந்த பார்வதி, " என்னங்க.. நீங்க குளிச்சு ரெடியாக வேண்டாமா  ? டிபன்ரெடி சூடு ஆறுமுன்னே சாப்பிடலாமே" என்றாள்.
"பரவாயில்லையே.. என்னைக் கவனிக்கணும்கிற நினைப்பெல்லாம் கூட உனக்கு இருக்கா  ? குளிச்சு ரெடியாகி எந்த ராஜ்யத்தை பரிபாலனம் பண்ணப் போறேன் ?" என்று கிண்டலான குரலில் கேட்டார் மகாதேவன்.
"என்னங்க இது சிறுபிள்ளைத் தனமா ! அவன் நம்ம பிள்ளை . ஏதோ எதிரி கூட போட்டி போடறாப்லே அவனோட போட்டி போடறீங்க. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலே ? ஏன் அவனை தண்ட சோறுன்னு திட்டறீங்க ? ஒரு குழந்தை வேலை கிடைக்காமே வீட்டில் இருந்தால் அது ஒரு பாரமா ? அதைக் குத்திக் காட்டிப் பேசணுமா ? நாம, நம்ம ஆயுள் முழுக்க நல்லதுக்கும் கெட்டதுக்கும் அவனை நம்பித்தான் இருக்கணும். அது  நினைவில் இருக்குதானே ? "
"நீ கேட்பே! இதுவும் கேட்பே .. இன்னமும் கேட்பே .. இவன் படிப்புக்காக கடன் வாங்கிட்டு மாசா மாசம் வட்டி கட்டுற எனக்குத்தானே வலி வேதனையெல்லாம்!"
"சரி .... நீங்களாக எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு உங்களையும் வருத்திகிட்டு எங்களையும் படுத்தாதீங்க.  சாப்பிட்டு விட்டு அப்படியே உங்க ப்ரெண்ட்  குமார் ஸார் வீடு வரை வாக் போயிட்டு வாங்க " என்று பார்வதி சொல்ல, வெளியில் செல்ல தன்னை தயார் செய்வதில் மும்முரமானார்  மகாதேவன்.
தனது வீட்டு வாசலில் மகாதேவன் வந்து நிற்பதைக் கூட அறியாதவராக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார் குமார்.
"ராஜு ... இந்தா இந்த ரூபாயைக் கையில் வச்சுக்கோ "
"அப்பா .. ஐநூறு ரூபா எதுக்கு ? அம்மாதான் சாப்பாடு தண்ணீர் எல்லாம் பேக் பண்ணி வச்சுட்டாங்களே. டூ வீலரில் போகப் போறேன். இங்கிருந்து பத்து கிலோ மீட்டர். இந்த பணத்துக்கு தேவையே இருக்காதுப்பா".
"தேவை ... தேவையில்லை என்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எமெர்ஜென்சிக்கு கையில் இருக்கட்டும். பணம் நம்ம கையில் இருந்தால் அந்த தெம்பே தனிதான். ட்ராபிக்கில் பார்த்து நிதானமாகப் போ. இண்டர்வியூ ரிசல்ட் இன்னிக்கே தெரிஞ்சுடும்தானே ? வேலை கிடைச்சா சந்தோசம். கிடைக்காட்டாலும் நீ ஒரி பண்ணிக்காதே. நமக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பா கிடைச்சே தீரும். இது இல்லாட்டா இன்னொரு வேலை.எதுவுமே கிடைக்காட்டாலும் ஏதாவது சுய தொழில் செஞ்சு நம்மாலே  முன்னேற முடியும். இந்த இண்டர்வியூ, வேலை தேடல் எல்லாமே ஒரு முயற்சியே தவிர வாழ்க்கையின் முடிவு இல்லை. அதை ஞாபகம் வச்சுக்கோ. நமக்காக ஒரு கதவு எங்காவது கண்டிப்பா திறந்தே இருக்கும்.. உன் வண்டியை நான் காலையிலேயே செக் பண்ணி வச்சிட்டேன். எதுக்கும் உன் திருப்திக்கு செக் பண்ணிட்டு கிளம்பு . பூஜை ரூமில் நமஸ்காரம் பண்ணிட்டுப் போ " என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்த குமார், " அடடா ... மகா ... ஏன் அங்கேயே நின்னுட்டே . உள்ளே வருவதற்கென்ன ? லீலா .. மகா ஸார் வந்திருக்கார் சூடாகக் காப்பி கொண்டுவா? என்று மனைவிக்கு சொல்லி விட்டு, " வா மகா .. உள்ளே வந்து உட்கார் .. ஒரு இண்டர்வியூக்கு ராஜு கிளம்பறான். அதான்... இரு அவனை அனுப்பிட்டு வந்துடறேன் " என்று சொல்லும்போது, புடவைத் தலைப்பில் ஈரக்கைகளைத் துடைத்தபடி அங்கு வந்த லீலாவதி, " வாங்க.. ஒரே ஒரு நிமிஷம் .. அவனை அனுப்பிட்டு வந்துடறேன்" என்று பரபரப்புடன் கூறியபடி வாசலுக்கு விரைந்தாள்.
என்னவோ பிள்ளையை போருக்கு அனுப்பற மாதிரி ரெண்டு பேரும் இப்படிப் பரபரக்கிறார்களே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட மகாதேவன் அங்கிருந்த வாரப் பத்திரிக்கையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் ஹாலுக்கு வந்த குமார் ஸார், " ஸாரி .. மகா .. உன்னைக் காக்க வச்சுட்டேன் " என்றார் 
" சரி .. அதுக்கு ஏன் இத்தனை டென்ஷன் உனக்கு ?"
"இந்தக்காலக் குழந்தைங்க மனசைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம் மகா .  அவங்க புத்தி எப்போ என்ன மாதிரி யோசிக்கும்னு யாராலேயும் சொல்ல முடியாது . நாமளும் அந்த வயசைக் கடந்து வந்தவங்கதானே. காலேஜ் படிப்பு முடிஞ்சு வெளியில் வந்ததும் எந்தத் திசையில் போறதுன்னு தெரியாமல் நின்னதை இன்னைக்கும் மறக்க முடியாதே. குழந்தைங்க உழைக்க ரெடியா இருக்காங்க .. வேலைதான் கிடைக்க மாட்டேங்குது.எல்லா  பீல்டிலும் போட்டி...பொறாமை .. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாரா இருக்காங்க சிலர்.. தகுதியை விட்டு இறங்கி வந்து வேலை பார்க்கவும் குழந்தைங்க  ரெடிதான். ஆனால் வாய்ப்புங்கிறது எல்லாருக்கும் கிடைக்க மாட்டேங்குது. அந்த விரக்தி யில் இந்தக் குழந்தைங்க தப்புத் தண்டா எதிலாவது இறங்கி விட்டால் அதனோட பின் விளைவுகள் ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் தானே! அவன் படிப்புக்காக பட்ட கடன் இன்னும் அடைபடாமல் இருக்குது .   ஆனால் அதையெல்லாம் குழந்தைங்க கிட்டே பேச முடியாதே. நாம கேஷுவலா எதையாவது சொல்ல அதை அவங்க சீரியஸா   எடுத்து கிட்டு பணம் சம்பாதிக்கிறதா நினைச்சுகிட்டு  திருட்டு வழிப்பறின்னு இறங்கிட்டா என்ன பண்றது ? அதிலிருந்து அவங்களை மீட்டுக் கொண்டு வர்றது கஷ்டமாச்சே.  அவங்களை அப்படி ஒரு நிலைமைக்குக் கொண்டு வரவா நாம இப்படி பாடு பட்டு வளர்த்தோம். அவங்க ஒரு நல்ல வேலை தேடி உட்காருற வரை அவங்களைப் பக்குவமா நாமதான் ஹாண்டில் பண்ணனும்.. படிப்பை முடிச்சுட்டு என்ன செய்றதுன்னு தெரியாமே அதுக அங்கே இங்கேன்னு சுத்திட்டு நொந்து போய்  வருதுங்க. அதுக்கு நாம மருந்தாக இருக்கணுந்தானே?." என்று சொல்லியபடி மகாதேவனின் முகத்தைப் பார்த்த குமார் அதிர்ச்சி அடைந்தார்.
"என்ன மகா ... ஏன் அழறே ?... என்ன விஷயம் ?" என்று பதட்டத்துடன் கேட்டார் குமார்  
"ஒண்ணுமில்லே !"
"ஒண்ணுமில்லாததுக்கு யாராவது அழுவாங்களா ? ஏன் அழறே? உனக்கு என்ன பிரச்சினை ?"
"ஒரு பிரச்சினையும் இல்லே..நான் என்னை நினைச்சு அழுதேன் "
"என்ன சொல்றே நீ ? உன்னை நினைச்சு அழறியா ?"
"என் பிள்ளையும் ரெண்டு வருஷமா வேலை தேடி அலையறான். சில சமயங்களில்  என் மனைவிகிட்டே "அம்மா.. பணம்தாம் முக்கியம்னு நினைச்சா எந்த வேலை பார்த்துன்னாலும் அதை சம்பாதிச்சிடலாம். ஆனால் நாம செய்யப் போற வேலையில் என்னோட கௌரவம் நம்ம குடும்ப கௌரவம் ... அப்பாவோட கௌரவம்னு பலதைப் பத்தியும் யோசிக்க வேண்டியிருக்கு.. எல்லாம் சரியா அமைஞ்சு நாம விரும்பிப் போகிற வேலை நமக்குக் கிடைக்காமல் போயிடுது"னு சொல்றதை நான் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். இவனோட கையாலாகாத் தனத்துக்கு இப்படியொரு சமாதானம் சொல்றான்னு நினைச்சுக்குவேன். நீ உன்னோட பையனை ஹாண்டில் பண்றதைப் பார்க்கும்போதுதான் என்னோட  பிள்ளை கிட்டே  நான் எவ்வளவு அல்பத் தனமா நடந்துகிட்டு இருக்கிறேன் என்கிறது எனக்குப் புரியுது. அதை நினைச்சேன். என்னை யும் மீறி கண்ணீர் வந்துட்டுது!"
" சரி .. விடுப்பா .. நீ அவனைப் புரிஞ்சுகாட்டாலும், அவன் உன்னைப் புரிஞ்சுகிட்டு, உன்னோட தர்க்கம் சண்டைனு இறங்காமே, வீட்டை விட்டுப் போகாமே இருக்கிறானேன்னு நினைச்சு சந்தோசப் படு " என்று குமார் சொல்ல மகாதேவனின் அழுகை மேலும் அதிகரித்தது.               
  

No comments:

Post a Comment