Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 11, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 122 )

                     இதுதான் உலகம் .. இதுதான் வாழ்க்கை !

"ஏதோ பத்தி எரியும்போது எவனோ என்னத்தையோ  செஞ்சிட்டு இருந்தானாம். அந்தக் கதையா இருக்கு நீங்க அடிக்கிற கூத்து . நேத்து உங்க பிள்ளை பேசினதைக் கேட்டீங்கதானே?" என்று கேட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்த  தனலட்சுமி, பெருமாள் கையிலிருந்த பேப்பரை பிடித்து இழுத்துக் கசக்கி எறிந்தாள். ரிமோட்டை எடுத்து டீவீ ஸ்விட்சை அவள் ஆப் செய்த வேகத்திலிருந்தே  அவளது கோபத்தைப் புரிந்து கொண்டார் பெருமாள் . 
" என் பிள்ளைன்னு சொல்றே ! அப்படின்னா அவன் உன்னோட பிள்ளை இல்லையா ? "
"ஏதாவது பேசி என் வாயைக் கிளறாதீங்க.. நேத்து அவன் சொன்னது உங்க காதில் விழுந்துச்சு தானே ?"
"விழுந்துச்சு... இப்போ என்ன பண்ணலாம்கிறே ?"
"அப்படியே வெட்டிப் பலி போட்டுடலாம்னு சொல்றேன் "
"அதுக்குப் பதிலா அவனை அவன் போக்கில் போக விட்டுடலாமே "
"கிண்டலா ? கிண்டலான்னு கேட்கிறேன் "
"ஐயோ ராமா .. பேசாமே இருந்தால் அதுக்கும் குத்தம் சொல்றே. பேசினா கிண்டலான்னு கேட்கிறே. நான் என்ன செய்யணும். அதை மட்டும் சொல்லு "
"உங்க பிள்ளையைக் கூப்பிட்டு புத்தி சொல்லணும் "
"என்னன்னு ?"
"அதைக் கூட நான்தான் சொல்லித் தரணுமா ? இந்தக் காதல் கத்திரிக்காய் வியாபாரமெல்லாம் வேண்டாம். நமக்கு ஒத்து வராதுன்னு சொல்லுங்க "
"சொல்றதில் எந்தப் பிரச்சினையும் இல்லே. ஆனால் அதைக் கேட்கிற ஸ்டேஜை அவன் தாண்டி ரொம்ப தூரம் போய்ட்டான். " அப்பா.. அப்பா .. நான் ஒரு பொண்ணை விரும்பறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்க உங்க சம்மதம் வேணும்"னு நம்ம கிட்டே பேசியிருந்தால், அந்தப் பொண்ணு யாரு,அவ குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம்னு வழி வாய்க்கால் எல்லாம் அலசிப் பார்த்துட்டு அது வேணும்னா நாம சம்மதம் தெரிவிச்சிருக்கலாம்.வேண்டாம்னு நினைச்சா  இன்னின்ன காரணத்து க்காக அதை வேண்டாம்னு நாம நினைக்கிறோம்னு அவன் புரியும்படி எடுத்து சொல்லியிருக்கலாம். அதுக்கெல்லாம் உன் பிள்ளை சான்ஸ் குடுக்கவே இல்லையே."அப்பா.. என்னோட வேலை பார்க்கிற  ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கிறேன். அவங்க வீட்டில் சம்மதிச்சிட்டாங்க. நீங்க ஓகே சொன்னால் நம்ம முறைப்படி கல்யாணம் பண்ணிக்குவோம். உங்க சைடில் அப்ஜெக்சன்  இருந்தால் நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு ப்ரெண்ட்ஸ்க்கு ஹோட்டலில்  பார்ட்டி குடுக்கலாம்னு நினைச்சிருக்கோம்"னு இன்பர்மெசன்தானே குடுத்தான். அதுக்குப் பிறகு பேச நமக்கு சான்ஸே இல்லையே .. உன் பிள்ளை புத்திசாலியா வரணும்னு ஆசைப் பட்டேதானே.. அவன் புத்திசாலின்னு ப்ரூப் பண்ணிட்டான்" என்று சொல்லிவிட்டு தனத்தை நிமிர்ந்து பார்த்தார் பெருமாள். அதில் திருவண்ணாமலை தீபமே எரிந்து கொண்டு இருந்தது.
"என்னை ஏண்டீ முறைக்கிறே?"
"ஏங்க .. அவன் பிறந்து எட்டு வருஷம் கழிச்சு பிறந்தவ பிரேமா. இப்போ படிச்சிட்டு இருக்கிறா. நாளைக்கு அவளுக்கும் கல்யாணம் பண்ணனும். பொண்ணோட அண்ணன்காரன் ஜாதி விட்டு ஜாதி, மதம் விட்டு மதம் மாறிக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு தெரிஞ்சா அவளை யார் பொண்ணு கேட்டு வருவாங்க? கூடப் பிறந்த தங்கச்சி வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க வேண்டாமா? இல்லாட்டா அவ கல்யாணம் முடிஞ்ச பிறகாவது இவன் கல்யாணத்தை வச்சுக்கலாமே !"
"இவ இன்னும் ஹை ஸ்கூல் படிப்பே முடிக்கலே.. குறைஞ்சது ஏழு வருஷமாவது ஆகும் அவளுக்கு வரன் தேட.. அது வரை அவன் காத்திருப்பானா ?"
"நீங்களே அவனுக்கு ரூட் போட்டுக் குடுப்பீங்க போலிருக்கு "
"இன்னைக்கு நடப்பு என்னங்கிறதை சொன்னேன் அவ்வளவுதான் "
"பாவி ..இவனுக்காக நாம எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம். இவன் படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்னு நம்ம சௌகரியம் அத்தனையையும் விட்டுக் குடுத்திருக்கிறோம். அது அவனுக்குமே நல்லா தெரியும்.  அது தெரிஞ்சும் இப்படிப் பண்றானே .. படுபாவி.. என் பிள்ளையை எங்கிட்டே இருந்து பிரிக்கிற அந்த குடும்பம் நல்லா இருக்காது "
"ச்சீ .. சபிக்காதே .. அந்தக் குடும்பத்தை நினைச்சு சந்தோசப் படு "
"நக்கலா ?"
"இல்லேடி.அந்தப் பொண்ணும் இவன்அளவுக்குப்படிச்சிருக்கிறா. வேலை பார்க்கிறா. இங்கே  அந்தப் பொண்ணு வேண்டாம்னு  நினைக்கிறோம். அதே போல அவங்க வீட்டில் முடிவெடுத்தால்  இந்தக் கழுதைங்க என்ன முடிவெடுக்கும்னு  யாராலும் தீர்மானமா சொல்ல முடியாது. இதுங்க காதல் ஜோடி தற்கொலை லிஸ்டில் சேர்ந்த பிறகு அழுது புலம்பி என்ன பிரயோஜனம்? இப்போ எத்தனையோ சினிமாவில் பார்க்கிறோம், பேப்பரில் படிக்கிறோமே அந்த மாதிரி அந்தக் குடும்பம்  ஆள் வச்சு அடிக்கிறேன்... வெட்டு குத்துன்னு இறங்கிட்டா அதனோட பின் விளைவுகள் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு. நம்மளையும் யோசிச்சுப் பாரு. அதுக்கு வழியில்லாமே அவங்க டீசெண்டா ஒத்துக் கிட்டாங்களே அதை நினைச்சு சந்தோசப் படு "
"நீங்களும் உங்க லாஜிக்கும் ... நாளைக்கு நாலு பேர் காறித் துப்புவாங்க. கேலி பேசுவாங்க "
"இதோ பாரு .. உலகம் பூரா அந்த "நாலு பேர் " பரந்து விரிஞ்சு கிடக்கறாங்க. அந்த நாலு பேருக்கு பேச மட்டுந்தான் தெரியும் . எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லத் தெரியாது . நாம சம்மதிக்காட்டாலும் அவன் தன்னோட கல்யாணத்தில் உறுதியா இருக்கிறான். கல்யாணத்து க்கு நாம சம்மதிக்காமே போகாமே இருந்து... அந்த நாலு பேர் ... யாரு ... அந்த நாலு பேர் நம்ம வீட்டு நடை ஏறி வந்து   " என்னங்க ... உங்க பையன் இப்படிப் பண்ணிட்டானே"னு போலியா துக்கம் விசாரிச்சு, நமக்குள்ளே எரிஞ்சுக் கிட்டு இருக்கிற நெருப்பை ஊதி விட்டுட்டுப் போவாங்க. நாம அந்த நெருப்பில் வெந்து சாவோம். அவங்க அதே நெருப்பில் குளிர் காய்வாங்க. தெரியாமலா சொல்லி இருக்காங்க ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு. கல்யாணத்துக்கு எத்தனயோ பேர் வருவாங்க.அவங்களில் ஒருத்தரா நாமளும் நின்னு பேருக்குத் தலையைக் காட்டிட்டு வருவோம். பிடிச்சிருந்தால் வீட்டில் சேர்த்துக்கு வோம். வேண்டாம்னு நினைச்சா, இப்படி ஒரு பிள்ளை நமக்கு பிறக்கவே இல்லைன்னு நினைச்சிட்டு  நம்ம பாட்டைப் பார்ப்போம் "
"இதுகளையெல்லாம் ஒரு பிள்ளைன்னு பெத்து வளர்த்து ஆளாக்கினதுக் கு நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் "
"என்னது ? இன்னொரு பிள்ளையா ?!"
"போதும்.அசடு வழியுது. பெத்தவங்களைப் பத்தி, கூடப் பிறந்தவங்களைப் பத்திக் கவலைப்படாமே தன்னோட சந்தோசத்தைப் பத்தி மட்டுமே நினைக்கிற சுயநலப் பிசாசுகள்.. இதுகளுக்குப் பாசம் பெரிசில்லே.  உடம்பு திமிர் ... அது ஒண்ணுதான் முக்கியம் !"
தனலக்ஷ்மியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பெருமாள் .
"ஏன் அப்படிப் பார்க்கறீங்க ?"
"என் பிள்ளையை நினைச்சு நான்  பெருமைப்படறேன். அவன் விருப்பம் என்னனு வெளியில் சொல்லி  அதனால் வருகிற பிரச்சினைகளை பேஸ் பண்ண தயாரா இருக்கிறான் . காதலைப் பத்தி வீட்டில் சொல்லப் பயந்து கிட்டு  மனசுக்குப் பிடிச்சவளைக் கூட்டிட்டு ஓடிப் போகலே, நம்மளைப் போல. பொதுவா சண்டை சச்சரவைக் குறிக்கும்போது  குடும்பம் ரெண்டு பட்டுப் போச்சுன்னு சொல்வாங்க. ஆனால் இருபத்தேழு வருஷத்துக்கு முன்னாலே ரெண்டு குடும்பம் சிதைஞ்சு போச்சு. எங்க அப்பா, உங்க அப்பாவை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போய் தண்டனைக் காலம் முடியும் முன்னாலேயே ஜெயிலிலேயே செத்துப் போயிட்டார். என் தங்கச்சியை எவனும் கல்யாணம் பண்ணிக்க முன் வரலே. உன்னோட குடும்பமாவது அந்த ஊரிலேயே இருக்குது என்கிற விவரம் மட்டுமாவது நமக்குத் தெரியும். என்னோட அம்மா தம்பி தங்கச்சி என்ன ஆனாங்கன்னு இன்னிக்கு வரை நமக்குத் தெரியலே. ஒரு பழமொழி சொல்வாங்க, முன் ஏர் போன வழியிலே பின் ஏர் போகும்னு. கால மாற்றத்துக்குத் தக்கபடி "பின் ஏர்" சரியான பாதையில் போனால் சரிதான்.   நடக்கிற எதையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.ஆனால்  நடக்கிற எல்லா விஷயமும் யாருக்கும் எந்த பிரச்சனையும் தராதபடி பார்த்துக்க நம்மாலே முடியும். உன் மனசை காயப் படுத்தறதுக்காக இதை சொல்லே. இன்றைய உலகம் ... பிள்ளைங்க மனப் பக்குவம் ... அவங்க அணுகுமுறை இதுதான். நல்லது கெட்டதை எடுத்து சொல்வோம். கேட்டால் சரி ... கேட்காட்டா அதது தலையெழுத்துப் போல நடக்கட்டும்னு நம்மைத் தேத்திக்குவோம்.. இதுதான் உலகம் .. இதுதான் வாழ்க்கை ... நமக்குப் பிடிச்சாலும் பிடிக்காட் டாலும் இதை நாம வாழ்ந்தே ஆகணும்!".
எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் தனலட்சுமி. " ஹூம் .. யோசிக்க ஆரம்பிச்சிட்டா .. நல்ல முடிவாக எடுப்பாள் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் பெருமாள்.

No comments:

Post a Comment