இந்த நிலை மாறுவது எப்போது ?
"என்னப்பா ஏதோ பலத்த யோசனையில் இருக்கிறாப்லே தோணுது "
"ஹூம் "
"என்ன லட்சுமணா, எதுக்கு இத்தனை சோகம்? காப்பி குடிக்கப் போகலாம் னு என்னைக் கூட்டிட்டு வந்து, பையன் கொண்டு வந்து வச்ச காப்பியைக் குடிக்காமல் விட்டத்தைப் பார்த்துகிட்டு மௌனமா இருக்கிறே! எவ்வளவு நேரம் இப்படியே இருக்கப் போறே ?" என்று கேட்டார் ரத்தினம்.
"நாட்டில் நடக்கிற ஒவ்வொண்ணையும் பார்த்தால் பயமா இருக்குப்பா ? போகிற போக்கைப் பார்த்தால் எதெது எங்கெங்கு கொண்டு போய் விடும்னு தெரியலே !"
"என்னப்பா சொல்றே ?" என்று கேட்ட ரத்தினத்தின் குரலில் கவலை தெரிந்தது.
"அதான்ப்பா, அந்த பதினோரு மாடி கட்டிடம் இடிஞ்சு விழுந்ததே. அதை டீவீயில் பார்த்ததிலிருந்து மனசே ஆறலே "
"தண்ணீருக்காக ஆழ்குழாய்ன்னு தோண்டுவாங்க.அவங்க எதிர் பார்க்கிற ரிசல்ட் வரலைன்னா அப்படியே போட்டுட்டுப் போயிடறாங்க. தோண்டு னவனும் அதைப் பத்திக் கவலைப்படறதில்லே. அந்த இடத்தை சுத்தி இருக்கிறவங்களும் கவலைப்படறதில்லே.என்னிக்காவது யாராவது அந்தக் குழியில் மாட்டிக்கிட்டா அது மீடியாகாரங்களுக்கு பரபரப்பு நியூஸ் .அதை வச்சு பட்டிமன்றமே நடத்துவாங்க.கேட்டால்,இது மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறோம்னு சொல்வாங்க. அங்கே நடக்கிற பரபரப்பு சம்பவங்களை நாம வீட்டில் இருந்தபடியே, சோபாவில் சாய்ந்து உட்கார்ந்துகிட்டு, எதையாவது கொறிச்சுகிட்டே பார்த்துட்டு இருப்போம். இவ்வளவு நிவாரணம்னு அரசாங்கம் ஒரு அறிக்கை விடும். அதோடு எல்லாம் ஓய்ஞ்சுது. அட,அதுவாவது பாதிக்கப்பட்டவங்களுக்கு ஒழுங்காப் போய்க்கிடைக்குதானு பார்த்தால் அதுவும் இல்லே. இதில் இடைத்தரகர்கள் கமிஷன் வேறே.. நாடு எங்கே போகுதுன்னு தெரியலே"
என்று சோகமான குரலில் சொன்னார் ரத்தினம் .
"எனக்கு எலும்புத்துண்டை வீசினால் போதும், நீ கேட்கிறபடி எல்லாத்தை யும் தயார் பண்ணிக் குடுக்கிறேன்னு மனச்சாட்சியே இல்லாமல் பேசுகிற மனுஷங்க.கண்ணுக்குத் தெரிஞ்சு நடக்கிற எந்த கொடூர செயலை செய்த வனுக்கும் வக்காலத்து வாங்கி வாதாடுகிற நல்ல இதயங்கள். நடக்கிற எந்தவொரு சம்பவத்துக்கும் யாரும் பொறுப்பு எடுத்துக்கிறது கிடையாது .ஒருத்தனுக்கு நேரே மற்றவன் விரலை நீட்டுறான்.அவன் இன்னொரு த்தனை சுட்டிக் காட்டறான். கடைசியில் யாருக்கும் எந்த தண்டனையும் நியாயமாக் கிடைக்கிறதில்லே. எல்லாருமே தப்பிச்சுக்கிறாங்க. மனுஷ ஜென்மங்கள்தான் இப்படி. தெய்வமாவது நியாயத் தீர்ப்பு வழங்குமானு பார்த்தால், 'மனுஷங்களான நீங்களே எந்த அக்கிரமத்தைக் கண்டாலும் காணாத மாதிரி இருக்கிறப்போ , எனக்கு மட்டும் என்ன வந்துச்சு? நான் தெய்வம். உங்க எல்லாரைக் காட்டிலும் நான் ரொம்பவும் பொறுமையா இருப்பேன்னு அடம் பிடிக்குது" - கவலையுடன் சொன்னார் லட்சுமணன்.
"இந்த பில்டிங் இல்லே. இதை விட்டுத் தள்ளுப்பா. எந்த பில்டிங் கட்டுறது னாலும் பிளான் போட்டு அதை அரசாங்கம் அப்ரூவ் பண்ணினாதானே கட்ட முடியும் ..."
"விவரம் தெரியாதஆளா இருக்கீங்களே.நான் குடியிருக்கிறது ஹௌசிங் போர்டு வீடு.எப்போ இடிஞ்சு விழும்னு தெரியாது. மழை காலம் வந்தாலே பயந்து கொண்டுதான் வீட்டுக்குள் நுழைய வேண்டியிருந்தது. இப்ப அந்த பயமெல்லாம் கிடையாது.இருந்து மட்டும் என்னத்தைக் கிழிக்கப் போறோம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமேனு வாத்தியார் ஸ்டைலில் பாடிட்டு இருக்கப் பழகிக்கிட்டேன். இப்போ கேட்டீங்களே அப்ரூவல் பத்தி. ஒவ்வொரு சமாசாரத்துக்கும் ஒவ்வொரு கால்குலேசன் இருக்கும். அதாவது இத்தனை அடி பூமி.. இத்தனை அடி கட்டுமானம் ..இந்த ரக பூமி ... இதுக்கு இதுஇது செய்யணும்னு ஒரு வரைமுறை இருக்கும்.. அது எல்லாமே பேப்பரில் இருக்கும். கட்டுகிற பில்டிங்கில் இருக்குமான்னு நீங்க கேட்டீங்கன்னா அது கண்டிப்பா இருக்காது. என் நண்பர் ஒருத்தர் வீடு கட்டினார். கொஞ்சம் விவரம் தெரிஞ்ச ஆளு. மேஸ்திரி மண்ணைக் குழைக்கிறப்போ, "ஏம்ப்பா, இத்தனை பாண்டு மண்ணுக்கு இவ்வளவு சிமெண்ட் சேர்க்கிறதா எஞ்சினீயர் சொன்னார். நீ குறைவா சிமெண்ட் சேர்க்கிறே.ஏன்'னு கேட்டதுக்கு, ' உங்ககிட்ட சொன்ன அதே எஞ்சினீயர் தான், எங்கிட்டே இது இதை இவ்வளவு சேர்த்தால் போதும்னு சொல்லி இருக்கிறார்னு சொல்லியிருக்கிறான். அது பத்தி அந்த மேதாவி கிட்டே விசாரிச்சா, 'அதெல்லாம் வழக்கமா சொல்றது .. நடக்கிறதுதான். நீங்க கொடுத்த பணத்துக்கு இதைத்தான் செய்ய முடியும்னு சொல்லியிருக்கி றார். இப்படித்தான்னு முதலிலேயே சொல்லியிருந்தா பட்ஜெட்க்கு ஏத்த மாதிரி நான் கட்ட சொல்லியிருப்பேனேனு நண்பர் சொல்ல, அதுக்குப் பிறகு பத்து நாள் வேலையே நடக்கலையாம்.அப்புறம் நண்பரே போய் அந்த ஆள் காலில் விழாத குறையாக கெஞ்சி வீட்டை முடிக்க வச்சிருக் கிறார். "
"டெக்னாலஜி ரொம்ப வளர்ந்துட்டு .. நாம எல்லாரும் எங்கேயோ போகப் போறோம்னு மார் தட்டிகிட்டு இருக்காங்க. டெக்னாலஜினு சொன்னால், அது என்னன்னு தெரியாத காலத்தில் கடலுக்கு நடுவில் கட்டின பாலம் இன்னும் கம்பீரமா நின்னு கிட்டு இருக்குது. லேட்டஸ்ட் டெக்னாலஜி ரெண்டாம் நாளே சிரிப்பா சிரிக்குது "
"என்னதான் காரணம்னு சொல்றீங்க ?"
"மனுஷனோட பேராசை.. அனுபவமின்மை. அந்தக் காலத்தில் ஒருத்தன் எவ்வளவுதான் படிச்சிருந்தாலும்...அது கட்டிட சம்பந்தப்பட்ட படிப்புதான் என்றில்லை.எந்தப் படிப்பு படிச்சவங்களாயிருந்தாலும், அவங்க முதலில் யாராவது ஒரு அனுபவஸ்தர் கிட்டே வேலைக்கு சேருவாங்க . தொழில் ரகசியங்களை அனுபவ முறையில் படிச்சு தெரிஞ்சுகிட்டு அதுக்குப் பிறகு தனியாக தொழில்செய்யத் தொடங்குவாங்க.அவங்களும் நல்லா இருந்தாங்க. மத்தவங்களும் நல்லா இருந்தாங்க. இப்போ என்னடான்னா காலேஜ் படிப்பு முடிச்ச உடனேயே இந்தந்த பீல்டில் நான் எக்ஸ்பர்ட்னு ஒரு போர்ட் போட்டுக்கிட்டு உட்கார்ந்துடுதாங்க. பள்ளிக்கூடப் படிப்பு வேறே ..அனுபவப் படிப்பு வேறே.. எங்க அப்பா வேலை பார்த்த காலத்தில் ,அவரது முப்பது வருஷ செர்விஸ் முடியும் போதுதான் அவரால் ஒரு மனை வாங்க முடிஞ்சுது. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கினார். ரிடைர்மென்ட் செட்டில் மென்டாக வந்த பணத்தில் வீடு கட்டினார். ஆனால் இப்போ உள்ள தலைமுறைக்கு வேலையில் சேர்ந்த உடனேயே சொந்த வீடு, கார் எல்லாம் வாங்க ஆசை இருக்குது. ஆசைப்படறது தப்பில்லே. அந்த ஆசைக்கு முதலில் அவனோட மனசாட்சி அடகில் போயிடுது.அவன் பண்ற தில்லுமுல்லில் எத்தனை பேர் பாதிக்கப் படறாங்க."
"அந்தக்காலம் .. அப்போதைய ஜனங்கள்..அவங்க அணுகுமுறை எல்லா மே தனிதான் ஸார். முதலில் தவழ படிச்சுகிட்டு, கால்களை ஊனி நிற்கக் கத்துகிட்டு அதுக்குப் பிறகு நடக்க ஆரம்பிச்சாங்க. அந்த ஜெனெரேசன் குப்புறப் படுத்துக் கிடக்கும்போதே பறக்க முயற்சி பண்ணுது.. அதுக்காக எதையும் பலி கொடுக்க தயாரா இருக்குது. அதை நினைச்சாதான் வேதனையா இருக்குது "
"மனுஷங்களுக்கு மனசாட்சி என்கிறதே இல்லாமே போச்சு. தப்பு நடந்த நிமிடமே தண்டிக்க வேண்டிய சட்டம், அது என்ன தப்பு என்பதைப் பேசித் தீர்க்கவே பல வருஷம் எடுத்துக்குது. இந்த இடைப் பட்ட காலத்தில் பாதி பேர் பரலோகம் போயிடுதாங்க. சட்டத்தோட மோதிப் பார்த்துட்டு எதுவும் செய்ய முடியாத நம்ம கையாலாகாத்தனத்தை ரொம்ப தாமதமாகத் தெரிஞ்சு கிட்டு, தெய்வத்திடம் நீதி கேட்டால், 'நீதானே என்னைக் கல்லில் செதுக்கி வச்சே. கல்லால் நகர முடியாது'ன்னு நக்கலாகப் பார்க்கிற மாதிரி நமக்குத் தோணுது. இதிலே எனக்கு வருத்தமான விஷயம் என்னன்னா, அவனவன் எந்த ஸ்ட்ரைன்னும் இல்லாமே கோடி கோடியா கொள்ளையடிக்கிறான்.அது சட்டத்துக்கும் தெரியுது. சமுதாயத் துக்கும் தெரியுது.ஆனா அப்படியொன்னு நடக்குன்னு வெளிப்படை யாகப் பேசவே எல்லாருமே பயப்படறாங்க.ஒரே ஒரு சாண் வயித்துக்காக வெயிலிலும் மழையிலும் தன்னை வருத்திகிட்டு, நாம நிமிர்த்து பார்க்க பயப்படற உயரத்திலெல்லாம் இடத்திலெல்லாம் கூட ஏறி நின்று கொண்டு வேலை செய்கிற ஜீவன்களை இயற்கையும் கடவுளும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம் ? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதை யெல்லாம் சீர்படுத்தி ஆகணும்தானே. அது எப்போ ?"
"நல்லாக் கேட்டீங்க ஒரு கேள்வி ! சீர்திருத்தமாவது மண்ணாவது ! உலகம் முழுக்க சுனாமி வரணும் .... புல்பூண்டு கூட இல்லாமல் எல்லாம் அழிந்து பழையபடி உலகம் புதுசா தொடங்கி வரணும் " என்று ரத்தினம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "ஏன்யா.. வேலை நேரத்தில் இப்படி வெட்டிப்பேச்சு பேசிக் காலம் தள்ளறதைக் கொறைச்சலே போதும். உலகம் எவ்வளவோ உருப்பட்டு விடும். காப்பி குடிக்கப்போறேன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கிளம்பி வந்தீங்க.. வேலை அதிகம் இருக்கு ... போனோமா வந்தோமானு இருக்கணும்னு நான் சொன்னதுக்கு 'இதோ ரெண்டு நிமிஷத்தில் திரும்பி வந்துடுவோம்னு சொன்னீங்க.. போனவங்களை காணோமே, போய் ரொம்ப நேரமாச்சேன்னு உங்களைத் தேடி நான் வந்தேன். நீங்க என்னடான்னா வேலைன்னு ஒன்னு இருக்கிறதையே மறந்துட்டு இங்கே உட்கார்ந்து வெட்டிக் கதையா பேசறீங்க. யாரும் யாரையும் திருத்த வேண்டாம்.அவனவன் வாங்குகிற காசுக்கு, மனசாட்சிக்கு விரோதமில்லாமே வேலை செஞ்சாலே போதும் . உலகம் எவ்வளவோ உருப்பட்டுடும் "என்று சூப்ரெண்ட் கத்த, " இதோ நாங்க கிளம்பிட்டோம் " என்று கேண்டீனை விட்டு வெளியேறினார்கள் இருவரும்.
No comments:
Post a Comment