Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 13, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 94 )

                                     அன்பு என்பது ........??
சரஸ்வதி மாமி இப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது. தப்பித் தவறி யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் ஜீவனே இல்லாமல் ஒரு சிரிப்பு சிரிப்பது, மற்றவர்கள் எழும்பும் முன்னே வாசல் தெளித்து கோலம் போடுவது, தண்ணீர் பிடிப்பது, ஒட்டு மொத்த ப்ளாக்கும் டீவீ சீரியல் முன்னே சரண்டர் ஆன பிறகு கடைகளுக்குப் போய் வருவது என்றொரு தலை மறைவு வாழ்க்கைக்கு சரஸ்வதி  தன்னைத் தானே  தயார்படுத்திக் கொண்டிருப்பதை நினைத்து மனதுக்குள்ளேயே அழுதாள் வைதேகி.  இதை இப்படியே விட்டால் சரிப் படாது. குடும்பத்தை, பெத்த தாய்தகப்பனைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல்,  தப்புப் பண்ணிய  தறுதலைப்பிள்ளை, பொண்டாட்டியை ஜோடி சேர்த்துக் கொண்டு தெரு வில்  தடி மாடு மாதிரி வலம் வந்து கொண்டிருக்கிறான். அவனைப் பெற்ற ஒரே ஒரு பாவத்திற்காக மாமி கூனிக் குறுகி நிற்கிறாள். இந்த இருட்டை விட்டு மாமியை வெளியில் கொண்டு வந்தே ஆக வேண்டும். ஆனால் அது எப்படி என்பதுதான் வைதேகிக்குப் புரியவில்லை 
மாமாவுக்கு ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை. சொற்ப வருமானம் தான். இருந்தாலும்  ஸ்ரீதர் விஷயத்தில் எந்தக் குறையும் வைத்ததில்லை. மாமா மாமி ரெண்டு பேருமே தங்களுடைய அத்தியாவசிய  தேவைகளை கூட சுருக்கிக் கொண்டு ஸ்ரீதருக்காக விழுந்து விழுந்து உபசரணை செய் வதைப் பார்த்து வைதேகி பலமுறை சண்டை போட்டிருக்கிறாள்.
" சரசு மாமி, வீட்டுக் கஷ்டத்தை எடுத்து சொல்லியே அவனை வளர்த்து விடுங்க. உங்க குடும்ப நிலைமை, உங்க வருமானம் என்ன என்பதை அவனுக்குப் புரிய வையுங்க. ஆசையை அடக்கி வாழ  நாம யாரும் புத்தன் இல்லே. தகுதிக்கு மீறின ஆசை தர்ம சங்கடத்தில் கொண்டு போய்விட்டு விடும் என்பதை சொல்லிச் சொல்லியே அவனை வளருங்க. உங்க வயிற்றைப் பட்டினி போட்டுக் கொண்டு, பாலும் பழமுமா அவனுக்கு திணிச்சு அவனை வளர்த்து விடணும்னு உங்களுக்கு சொன்னது யாரு மாமி ? நேற்று பூரா முட்டி வலின்னு மூலையில் சுருண்டு கிடந்தீங்க . வாங்க, டாக்டர்கிட்டே போயிட்டு வரலாம்னு எவ்வளவு கெஞ்சினேன். ஆஸ்பத்திரின்னு போய்ட்டா மருந்து மாத்திரைன்னு எக்கச்சக்க செலவு வைப்பாங்க.எங்கிட்டே செல்லாக்காசு கூட கிடையாதுன்னு சொன்னீங்க . நான் தரேன்னு சொன்னதையும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இன்னிக்கு அவன் பிறந்த நாள் பார்ட்டிக்கு ப்ரெண்ட்சை அழைச்சுகிட்டு ஹோட்டலுக்கு போறேன்னு சொன்னதும் ஆயிரக் கணக்கில் பணம் கொடுக்கிறீங்க. நேற்று இல்லாத பணம் இப்போ எப்படி வந்தது  ? " என்று வைதேகி கேட்டபோது கழுத்திலிருந்த தாலிக் கயிறை எடுத்துக் காட்டினாள் சரஸ்வதி. அதில் தங்கத்துக்குப் பதிலாக வெறும் மஞ்சள் மட்டுமே ஒரு துண்டு இருந்தது. வைதேகியின் கோபத்தை மாற்ற  "இந்தப் பிள்ளை வேணும்னு ஒவ்வொரு கோயிலா போய்த் தவம் கிடந்திருக்கி றேன். எங்களுக்கு கல்யாணமாகி இருபது வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை. இன்னிக்கு அவனுக்கு இருபது வயசு முடியுது. அதைக் கொண்டாட பணம் கேட்கிறான். இல்லேன்னு சொல்ல மனம் வரலே " என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சரஸ்வதி.இதையெல்லாம் நினை த்துப் பார்த்தபோது அழுகையே வந்தது வைதேகிக்கு. தாலியை விற்று மகனின் பிறந்த நாள் செலவுக்கு பணம் கொடுத்த விஷயத்தை வைதேகி தன்னுடைய வீட்டில் சொன்னபோது," இவ்வளவு கஷ்டத்திலும் மாமி கையில் உருப்படியா இருக்கிறது குடியிருக்கிற இந்த வீடு ஒன்றுதான். அதற்க்குக் கட்ட வேண்டிய பணமே அதிகம் இருக்கிறது. அதனாலே டாகுமென்ட்ஸ் கைக்கு வரலே. வீட்டை விற்க வழியில்லே. அது மட்டும் கையிலிருந்தால் மாமி வீட்டை விற்றே பையனின் பிறந்த நாள் செலவுக்குப் பணம் கொடுத்திருப்பாள்" என்றார் வைதேகியின் கணவர்.
"இவன் படிப்பு முடிஞ்சு இன்னும் ரிசல்ட் வரலே. இவனுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லே. இருந்தாலும் லட்சக் கணக்கில் செலவு செய்து அப்பா அம்மா, இந்த ப்ளாக்கில் உள்ளவர்கள் தவிர  மற்ற ப்ரெண்ட்ஸ் எல்லாரையும்  கூப்பிட்டு ரிசெப்சன் குடுத்திருக்கிறான். இதுக்கெல்லாம் ஏது பணம் ? " என்று வியந்து போய்க் கேட்டாள் வைதேகி.
"ஒண்ணு ப்ரெண்ட்ஸ் குடுத்திருக்கணும். இல்லாட்டி தலையில் ஒரு ஹெல்மெட்டை முகம் தெரியாதபடி  மாட்டிகிட்டு ரோட்டில் போறவங்க வர்றவங்க செயினை அறுத்திருப்பான். அதுவும் இல்லாட்டா ஏதாவது ஒரு ATM மெசினை உடைச்சிருப்பான் " என்ற அசால்ட்டான பதில் வந்தது வைதேகியின் கணவரிடமிருந்து 
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒரு கொய்யாப் பழம்  கொடுத்தால்கூட மாமி அதை சாப்பிடாமல் மகனுக்கென்று பத்திரப் படுத்துவாள். கிழிந்த புடவையை மேலும் மேலும் தைத்து தைத்து உடுத்தினாலும் உடுத்துவாளே தவிர புதுப் புடவை எடுக்க மாட்டாள். ஆனால்  மகனுக் கென்று புதுத்துணி வாங்குவதில் குறைச்சலே கிடையாது. "மாமி, படிக்கிற பையனுக்கு இவ்வளவு ஆடம்பரம் வேண்டாம். காலேஜ் படிப்பு முடியட்டும். ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து கைநிறைய சம்பாதித்து வேண்டியதை எல்லாம் வாங்கட்டும். உங்களை நீங்களே வருத்திகிட்டு இப்படி செலவு செய்றதை நிறுத்துங்கோ மாமி " என்று வைதேகி உரிமை யோடு கோபிக்கும் போதேல்லாம்,"நான் என்ன தெருவில் போகிற வருகிறவாளுக்கா  செய்றேன். நான் பெத்ததுக்கு நான் செய்யாட்டா   வேறு  யார் செய்வா ? " என்பாள்.
பார்த்துப் பார்த்துப் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளை, யாரோ ஒரு சேரிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் என்ற செய்தி காதுக்கு வந்தபோது சரஸ்வதியைவிட வைதேகியே அதிகம் நிலை குலைந்து போனாள். ஏதோ கொலைக் குற்றம் செய்துவிட்ட உணர்வில் மாமி மூலையில் முடங்கிக் கிடந்தாள். மாமியைப் பார்க்கப் போன வைதேகியை கட்டிப் பிடித்துக் கொண்டு, " இந்தப் பிள்ளை செய்திருக்கிற காரியத்தைப் பார்த்தியாடீ . தன்னோட படிக்கிற பிள்ளையாண்டானைப் பார்க்க  ஸ்ரீதர் அப்பப்போ அந்த ஏரியாவுக்கு போய் வந்திருக்கிறான். அவனோட பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கும் இவனுக்கும் பழக்கம் உண்டாகி கல்யாணத்தில் கொண்டு போய் விட்டுட்டுதுடி. அந்தப் பொண்ணோட அப்பன் ஒரு குடிகாரனாம். ஜெயிலுக்கு போய் வருவது அந்தக் குடும்பத்துக்கு சர்வ சாதாரணமாம். இன்னிக்கு ஒத்துண்டு வீட்டில் இடம் கொடுத்திருக்கிறான். நாளைக்கு ஏதாவது ஒரு கோபத்தில் இவனை ஏதாவது பண்ணிட்டா நான் என்ன செய்வேன். இவரோ வாய்க்கு வாய் 'அவன் செத்துப் போயிட்டான்"னு நினைச்சுக்கோன்னு சொல்றார். எனக்கு உடம்பெல்லாம் பதறுது " என்று கதறித் தீர்த்தாள். அவளை எப்படித் தேற்றுவது என்பது தெரியாமல் தானும் அழத் தொடங்கினாள் வைதேகி.  
அன்று பௌர்ணமி என்பதால், பக்கத்துத் தெருவிலுள்ள அம்மன் கோவிலுக்குப் போனாள்  வைதேகி. தேங்காய்ப் பழத்தட்டு வாங்கிக் கொண்டு திரும்பியபோது  அவள் கண்ணில் ஸ்ரீதர் பட்டான். இந்த நாயை நறுக்கென்று நாலு கேள்வியாவது  கேட்க வேண்டுமென்ற ஆவேச உணர் வில், " ஸ்ரீதர் " என்று கூப்பிட்டாள். அவளை சற்றும் அந்த இடத்தில் எதிர் பார்த்திராத ஸ்ரீதர், சமாளித்துக் கொண்டு " என்ன ஆன்ட்டி ? எப்படி இருக்கிறீங்க?  நானே உங்களைப் பார்த்து பேசணும்னு இருந்தேன் " என்றான் 
"நாங்க இருக்கிறது இருக்கட்டும். நீ எப்படி இருக்கிறே ? அப்பா அம்மாவைக் கூப்பிடாமே கல்யாணம் பண்ணினே. அது திருட்டுக் கல்யாணம். சரி. ரிசெப்சனுக்கு யார் யாரையெல்லாமோ கூப்பிட்டு தடபுடலா செலவு பண்ணி செய்தியாமே. அதற்காவது எங்களை யெல்லாம்  கூப்பிட்டு இருக்கலாமே? எதற்கு என்னைப் பார்க்க நினைச்சே ? " என்று கொக்கி போட்டாள்.
"ஆன்ட்டி, நாங்க இருக்கிறது அவ்வளவு டீசெண்ட் லொகாலிட்டி இல்லே .அதனாலே அம்மாவை வேறு வீடு பார்த்துக்க சொல்லிட்டு அந்த வீட்டை எங்களுக்குத் தர சொல்லணும் . வயசானவங்க எங்கே வேணும்னாலும் இருக்கமுடியும். யங்க்ஸ்டர்சுக்கு சேப்டி முக்கியம். அதனால்தான். அங்கே உள்ள எல்லாரையும்கூப்பிட்டு ரிசெப்சன்  செஞ்சிருக்கலாம்தான்.
நாலு பேர் வர்ற இடத்தில் எப்படி நடந்துக்கணும்னு   அம்மாவுக்குத் தெரியாது. கந்தலைக் கட்டிக் கிட்டு வந்து என் மானத்தை வாங்குவாங்க. என் வொய்ப்பை புரிஞ்சுக்கிற,முக்கியமா அன்பைப் புரிஞ்சுக்கிற பக்குவம் அவங்களுக்கு க்  கிடையாது .அதுவுமில்லாமே ...."
"கோவிலில் பூஜை மணி அடிக்குது .நான் கிளம்பறேன். நீ நல்லா இருப்பா . நல்ல குழந்தை குட்டிகளை பெற்று, உன் அம்மா வளர்த்த மாதிரி யில்லா மே,   நீயாவது அவர்களுக்கு அன்புன்னா என்னன்னு சொல்லிக் குடுத்து வளர்த்து ஆளாக்கு " என்ற வைதேகி அவன் கூப்பிடுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தாள் 

No comments:

Post a Comment