Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 30, 2013

Scanning of inner-heart ( Scan Report Number - 84 )

வாழ்க்கை என்பதே ஜாலி ! அதை வாழ்ந்து பார்ப்பதே  ஜோலி !!

கையில் காபியுடன் வந்த கோதாவரி, ஹாலில் வாசுதேவன் இல்லாததால் மெதுவாகப் படியேறி மொட்டைமாடிக்கு வந்தாள். கைப் பிடி சுவரில் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு. விரல்களில் எதையோ எண்ணிக்கொண்டு தனக்குத் தானே பேசியபடி அவர் இருந்த நிலையைக் கண்டு பதறிப் போனாள்.
" என்னங்க, வீட்டில் உட்கார இடமில்லையா என்ன ? இப்படி சுவர் விளிம்பில் உட்கார்ந்திருக்கீங்க. தவறி விழுந்தால் என்ன ஆறது ? என்று கோபமாகக் கேட்டாள்.
" என்ன ஆகிறதா ? போய்ச்சேர்ந்துட்டா நல்லா இருக்கும் !"
இந்த பதிலைக் கேட்டு அழுகையும் ஆத்திரமும் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, " இப்போ என்ன நடந்துட்டுன்னு இப்படிப் பேசறீங்க ? ஊர் உலகத்தில் நடக்கிறதுதானே. எப்போ வேலையில் சேர்கிறோமோ அப்பவே நமக்கு  நல்லா தெரியும், இந்த வாழ்க்கை, நம்மோட ஆபீஸ் வாழ்க்கை அறுபது வயசுவரை தான்னு. முப்பத்தைந்து வருஷ சர்விசை நல்லபடியா முடிச்சிட்டு கைநிறைய பணத்தோடு வந்துருக்கீங்க. கடவுள் புண்ணியத்தில் நமக்கு எந்த குறையும் இல்லே ......"
அவளது பேச்சை நிறுத்திவிட்டு " ஏண்டீ, என்னோட உட்கார்ந்து பேச இந்த வீட்டில் யாருக்கு நேரமிருக்கிறது ? " என்றார் கோபமாக 
"கோபப்படாமே கொஞ்சம்  பொறுமையா யோசிச்சுப் பாருங்க, நீங்க வேலைக்குன்னு ஓடிட்டு இருக்கிறப்போ, எத்தனை நாள் இந்த  வீட்டிலுள்ளவங்க கிட்டே முகங் கொடுத்து  உட்கார்ந்து பேசியிருக்கீங்க. கேட்ட கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லி இருக்கீங்க. காலையில் பேச வந்தால், 'வேலைக்குப் போற டென்சனில் இருக்கிறேன். எதுவும் கேட்காதேன்னு கத்த வேண்டியது. ராத்திரி பேச வந்தால், ' தலைவலி. நானே செத்து சுண்ணாம்பா வந்திருக்கிறேன்.நான் இருக்கிற  பக்கத்தி லேயே யாரும்  வராதீங்க'ன்னு கத்த வேண்டியது. அதானே இந்த வீட்டில் இத்தனை நாளும் நடந்திருக்கு. ..."
"ஓஹோ .. இதுநாள் வரை  நடந்ததுக்கு இப்போ எல்லாரும் என்னை பழி வாங்கிறீங்களாக்கும் ?"
"ஏனுங்க, பழிவாங்க நாம என்ன விரோதிங்களா ? உங்களுக்கு இருந்த அதே அவசரம் டென்சன் நம்ம பிள்ளைகளுக்கும் இருக்குதுங்க. இது இப்போனு இல்லே . அவங்க ஸ்கூல், காலேஜ், ஜாப்க்கு போக ஆரம்பிச்ச நாளிலிருந்தே இருக்கு . அதையெல்லாம் நின்று கவனிக்க உங்களுக்கு என்றைக்கு நேரமிருந்திருக்குது ? இன்றைக்கு உங்களுக்குப் பொழுது போகலேங்கிறதுக்காக எல்லாரும் என் கூட உட்கார்ந்து பேசுங்கன்னு நீங்க கூப்பிட்டா அத்தனை பேரும்  அவங்கவங்க வேலையை விட்டுட்டு வருவாங்களா என்ன  ? "
 " போச்சுடா, இதுக்கும் நான்தான் காரணமா ? " என்று எரிந்து விழுந்தார் வாசுதேவன்.
"கோபப்படாமே கொஞ்சம்  பொறுமையாநான் சொல்றதைக்  கேளுங்க. நீங்க ரிடைர் ஆகி வந்துட்டதாலே நீங்க ஆபீஸ் பக்கமே போகக் கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ? தினமும் போங்க . லஞ்ச் டைம்க்கு உங்க பழைய தோஸ்துங்க வெளியில் வருவாங்க தானே . அவங்ககூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு வாங்க "
" போடி இவளே, தோஸ்தாவது மண்ணாங்கட்டியாவது? போனவாரம் பேங்க் போயிட்டு, வீட்டுக்கு  வர்றப்போ, கூட வேலை பார்த்தவங்களை, பிரெண்ட்ஸ்சை எட்டிப் பார்த்துட்டு வரலாம்னு ஆபீசுக்குள் நுழைஞ்சா அவனவன் நம்மள ஏதோ வினோதமான பிராணியைப் பார்க்கிறாப்லே பார்க்கிறான். என்னவோ இவன் சொத்தை நம்ம கொள்ளையடிக்க வந்திட்ட மாதிரி அப்படியொரு எச்சரிக்கை யுணர்வோடு பேசறான். மதிப்பு மரியாதை எல்லாம் சர்வீஸில் இருக்கிறவரைதான்டீ . அதுக்குப் பிறகு நீ யாரோ நான் யாரோதான் " என்று மனம் நொந்து பேசினார் வாசு தேவன். 
"அப்படின்னா  உங்களுக்கு முன்னாடியே  ரிடையர் ஆகிப் போனவங்க இருப்பாங்க தானே.  நீங்க , அவங்களப் போய்ப்பாருங்க. ரிடைர்மென்ட் லைப்பை அவங்க எப்படி  ஹான்டில் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க. அந்த லைப் சரிப்பட்டு வரும்னா அப்படியே இருந்துட்டுப் போங்க "
"சமயத்தில் நீயும் புத்திசாலித் தனமாத்தான் பேசறே. எனக்கு முன்னாடி  ஆபீசை விட்டு வெளியில் வந்தது மொத்தம் மூணு பேர். அதில் ரங்கநாத் அவன் பிள்ளையோட பாரீனில் செட்டில் ஆகிட்டான். லாரன்ஸ் கிறிஸ்டி இப்போ விழுப்புரம் பக்கத்தில் எதோ ஒரு கிராமத்தில் நிலபுலங்களைக் கவனிச்சிட்டு இருக்கிறதா கேள்விப் பட்டேன். இன்னொன்னு கற்பகம் மேடம். ஆயிரம் பேர் வேலை பார்க்கிற இடத்தில் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்கிறதே பெரிய விஷயம். அவங்க ரிடைர்மென்ட் ஆகிறப்பதான் அந்த அம்மா எங்க ஆபீசில் வேலை பார்க்கிற விஷயமே எனக்குத் தெரியும். அன்னிக்குத் தான் ஜெயபால் சொன்னான், ' அது சரியான சாவுக் கிராக்கி ஸார். யார்கிட்டேயும் அண்டாது'ன்னு. அவங்க வீடு கூட இங்கே பக்கத்தில்தான். வடபழனி கோயில் பக்கத்தில்தான்னு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னிக்குக் கோயிலுக்குப் போறப்ப அவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு பேசிட்டு வந்திடறேன். வெந்நீர் எடுத்து வை. நான் குளிச்சிட்டுக் கிளம்பறேன் " என்று உற்சாகக் குரலில் சொன்னார்.
"அப்பாடா" என்ற நிம்மதிப் பெருமூச்சுடன், ' இந்த மனுஷனை இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி சமாதானம் செய்ய முடியும்? கடவுளே எல்லா சூழ்நிலையிலும் சந்தோசமா இருக்கிற மனப் பக்குவத்தை நீதான் அவருக்கு தரணும் ' என்ற பிரார்த்தனையும் சேர்ந்து வந்தது கோதாவரி யிடமிருந்து.
வாசுதேவன் கிளம்பி வெளியில் சென்றதும் சமையல் கட்டில்   தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டாள் கோதாவரி.
கற்பகத்தின் வீட்டைத் தேடிக்  கண்டுபிடிப்பது அப்படியொன்றும் பெரிய விசயமாக இல்லை வாசுதேவனுக்கு. அந்த அம்மா சர்வீஸில் இருக்கும் போதே  யாரிடமும் அதிகம் பேசமாட்டங்கணு கேள்விப்பட்டிருக்கிறேன் . இப்போது நான் அவங்களைத் தேடி வருவதை அவங்க எப்படி எடுத்துக்கு வாங்களோ தெரியலையே என்ற தயக்க உணர்வுடனேயே வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார் வாசுதேவன். ஆனால் அவர் எதிர்பார்த்ததுக்கு மாறாக, முகம் மலர ' வாங்க,வாங்க ' என்று வரவேற்றாள் கற்பகம்.
"வாங்க வாங்கக் கடன்தான் !" என்று சொல்லிச்சிரித்தார் வாசுதேவன்.
சிறிது நேரத்திலேயே சுடச்சுட ரவா தோசையும் சட்னியும் அவர் முன்பு வந்தது. " வர்றேன்னு முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் விருந்தே ரெடி பண்ணியிருப்பேன் " என்றாள் கற்பகம் 
" நீங்க ரொம்பவும் ரிசர்வ்ட் டைப்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். நான் வீட்டுக்கு வர்றதை நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு பயந்துகிட்டே தான்  வந்தேன் " என்று சொல்லி சிரித்தார் வாசுதேவன்.
"ஸார், நான் யார்கிட்டேயும் அதிகம் பேசறது கிடையாதே தவிர உங்களை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன், நீங்க என்னைக் கவனிக்கா விட்டாலும்கூட. ஆயிரம் பேருக்கு மேலே வேலை பார்க்கிற இடத்தில் இதெல்லாம் சர்வ சாதாரண விஷயம். எப்படி வேணும்னாலும் வாழலாம்னு ஒரு க்ரூப். இப்படித்தான் வாழணும்னு ஒரு க்ரூப் இந்த உலகத்தில் இருக்கு. நான் ரெண்டாவது க்ரூபில் ஆயுள் மெம்பர். நம்மோட பணத் தேவைக்கு ஆபீசுக்கு வேலை பார்க்க வருகிறோம். சம்பளம் வாங்கிற இடத்தில் விசுவாசமா நடந்துக்கணும். வேலை பார்க்க வந்த இடத்தில் வேலையை மட்டும் நாமப்  பார்த்துட்டுப் போகணும்னு என்னை நானே ட்ரைன்  அப்   பண்ணி வச்சிருக்கிறேன். அந்த வட்டத்தை விட்டு என்னால் வெளியில் வரமுடியாது .அவரவர் செய்வது அவரவருக்கு சரின்னு படுது . அப்படி தோணப் போய் தானே   அதை நாம் திரும்பத் திரும்ப செய்றோம் "
"நல்ல பாலிஷிதான் . எனக்கு ரிடைர்மென்ட் லைப் ரொம்ப போரடிக்குது  நீங்க எப்படி அதை ஹாண்டில் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கத் தான் நான் உங்களைத் தேடி வந்தேன் "
" ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் "
" அந்த ரகசியந்தான் என்னன்னு எனக்கு சொல்லுங்களேன் "
" நீங்க எதை நினைச்சு வருத்தப் படறீங்கனு முதல்லே சொல்லுங்க "
" கிட்டத் தட்ட மிஷின் மாதிரி ஓடியோடி உழைச்சிட்டு இப்போ ஒரே இடத்தில் நிற்கிறது கஷ்டமா இருக்கு "
" அப்புறம் ? "
" வீட்டில் பேச்சுத் துணைக்கு ஆளில்லே "
" அப்புறம் ? "
" மாசாமாசம் நாற்பதாயிரம் ரூபா சம்பளத்தை சுளையா வாங்கிட்டு இப்போ பென்சன் பணமா வெறும் பத்தாயிரம் வாங்கப்போறத  நினைச்சா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு "
" அப்புறம் ? "
சிறிது நேரம் யோசித்த வாசுதேவன், " அப்புறம் வேறே எதுவும் இல்லே " என்றார் சோகம் நிறைந்த குரலில். 
"மிஷின் மாதிரி ஓடியோடி உழைச்சிட்டு இப்போ ஒரே இடத்தில் நிற்கிறது  கஷ்டமா இருந்தா, தினமும் எங்காவது போயிட்டு வாங்க "
" தினமும் எங்கே போக முடியும் ? "
" அடடா,இதெல்லாம் ஒரு கேள்வியா? இந்த சென்னையில் போக இடமா இல்லை ? ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பஸ் பாஸ் வாங்கிட்டு ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி உட்காருங்க. அது எங்கே போய் நிற்க்கிறதோ அந்த இடத்தில் இறங்கி வேறொரு பஸ் பிடிச்சு கோயில் குளம்னு சுத்திப் பார்த்துட்டு ராத்திரி வீடு திரும்பிடுங்க. மறக்காமே கையில் பிஸ்கட் பழம் வாட்டர் பாட்டில் வச்சுக்கோங்க. முடிஞ்சா ஒரு பாக்ஸில் சாப்பாடும் கையில் ஸ்பூனும் வச்சுக்கோங்க . பஸ்ஸில் ட்ராவல் பண்ணிட்டே சாப்பிடலாம். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லைன்னு வருத்தப் படறீங்க. ஏதாவது அநாதை இல்லம், முதியோர் இல்லம்னு போய் அங்குள்ளவங்க கிட்டே ஆறுதலா நாலு வார்த்தை பேசுவாங்க அந்த மாதிரி ஆறுதல் வார்த்தைக்காக நிறைய பேர் தவம் கிடக்கிறாங்க . நீங்க பேசறதைக் கேட்டு அவங்க சந்தோசப் படுவாங்க. அந்த சந்தோசம் உங்களையும் தொத்திக்கும். மாதாமாதம் கைக்கு வரப் போற பணத்தைப் பத்திக் கவலைப் படுறீங்க . ஸார், நீங்க கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க, நாம சர்வீஸில் இருந்த காலத்திலேயும் 'கடன் பிடித்தம், டாக்ஸ் அது இது' ன்னு  போக, இப்போ பென்சனா வரப் போற பணம்தான் அப்போ சம்பளமா வாங்கிட்டு வந்து சந்தோசமா செலவு செய்தோம்  . அப்போ ஓடியோடி உழைச்சு வேலை செய்தால்தான் பணம் கைக்கு வரும் இப்போ ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாமே, வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே சுளையா ஒரு அமௌண்டை கையில் வாங்கப் போறோமே அதை நினைச்சு சந்தோசப் படணும். காலமெல்லாம் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லணும் "
"மேடம், நீங்க கடைசியா சொன்னீங்க பாருங்க,அது எவ்வளவு அனுபவ பூர்வமான வார்த்தை ! " என்று வியந்து போனார் வாசுதேவன்.
" ஸார், நம்ம வீடு என்பது வெறும் நாலு சுவர்தான். நம்ம இதயம்கிறது வெறும் கைப்பிடி அளவு தான். இந்த சின்ன இடங்களில் தேடிக் கண்டு பிடிக்க முடியாத சந்தோசத்தையா  இவ்வளவு பரந்த உலகத்தில் நாம்   தேடிக் கண்டு பிடிக்க முடியும் ? எப்பவுமே வாழ்க்கைங்கிறது அதில் சந்தோசங்கிறது வெளியில் இல்லை ஸார். நம்மோட எண்ணங்களில்தான் இருக்கு.எண்ணங்களை  சீராக்கிட்டோம்னா வாழ்க்கை யோட்டம் ரொம்ப சீராகிடும் சார் "
 இதைக் கேட்டு அமைதியாக இருந்தார் வாசுதேவன்.
" ஸார், ஏதாவது   தப்பா சொல்லிட்டேனா ? "
"என்னம்மா இப்படிக் கேட்டுட்டீங்க. உங்களோட  வார்த்தைகள் எனக்கு  ரொம்பவும்  ஆறுதலா இருக்கு. இந்த மூணு வாரமா என்னையும் வேதனைப் படுத்திகிட்டு வீட்டிலுள்ள மத்தவங்களையும் படுத்திகிட்டு இருந்தேன் . இப்போ வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா ஆயிரம் ரூபா கொடுத்து பஸ் பாஸ் வாங்கிடறேன். உங்களோட பேசினது டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கு. நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இந்த முருகன் கோவிலுக்கு வருவேன் . அப்படியே வந்து உங்களைப் பார்க்கலாம்தானே. அதில் உங்களுக்கு எந்த அப்ஜெக்சனும் இல்லே தானே ?  "
" என்ன ஸார் இப்படிக் கேட்டுட்டீங்க ? அது எனக்குப் ப்ளெசர் " என்று சிரித்துக் கொண்டே கற்பகம் சொல்ல, " நன்றி " என்றபடி வெளியேறினார் வாசுதேவன்.
இப்போது அவர் மனதில் வருத்தமோ பாரமோ இல்லை. இறகுகள் போல இலேசாகி வானவெளியில் பறப்பதைப் போன்ற உணர்வை அவருக்குள் ஏற்படுத்தியிருந்தது  கற்பகத்தின் சந்திப்பு. 
     

No comments:

Post a Comment