Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 16, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 82 )

                        காசு! பணம் !!  துட்டு !!

சுபா, சாந்தி இருவரையும் கண்டதுமே வாசலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி கார்ட் விரைப்பாக நின்று சல்யூட் செய்தான் 
" நாங்க " உங்களுடன் " பத்திரிக்கையிலிருந்து வருகிறோம் " என்று சுபா சொல்லி முடிக்கும் முன்பாகவே, " தெரியும் மேடம். நீங்க வந்ததும் உள்ளே விடச்சொல்லி அம்மா சொல்லியிருக்காங்க " என்ற செக்யூரிட்டி 
மிகப் பணிவாக வாசல் கதவைத் திறந்து விட்டான்.
இவர்களைக் கண்டதுமே பணியாள் ஒருவர் ஓடி வந்து " வாங்கம்மா, உள்ளே வந்து உட்காருங்க. அம்மா பூஜையில் இருக்காங்க. வெயிட் பண்ண சொன்னாங்க. என்ன சாப்பிடறீங்க, கூல் அல்லது ஹாட்?"  என்று  
பணிவாக உபசரித்தான் 
" நோ .. தேங்க்ஸ் " என்றனர் இருவரும் ஒரே குரலில் 
பணியாள் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுமே " என்ன சாந்தி, அப்படியே மலைச்சுப் போய்ப் பார்க்கிறே ? " என்றாள் சுபா 
" மேடம், இது வீடா இல்லாட்டி அரண்மனையா ? நான் குடியிருக்கிற பிளாட், ப்ளாக் எல்லாத்தையும் அப்படியே கொண்டு வந்து இந்த வீட்டில் வச்சுடலாம் போலிருக்கு. இவ்வளவு காலி இடம் ! " என்று வியந்தவள், " என்ன ஒரு ரத்த்னக் கம்பள வரவேற்பு ! " என்றாள் 
"இந்த மாதிரி  வரவேற்பு எல்லா இடத்திலும் கிடைக்கும்னு நீ  எதிர் பார்க்கக் கூடாது. சில வீடுகளில் நாயை விரட்டுற மாதிரி விரட்டி அடிப்பாங்க.  நாங்க அதை ரொம்பவும்  பாலிஷா "காக்கையை  விரட்டுற மாதிரி விரட்டினாங்கன்னு  சொல்லிக்குவோம் " என்று சொல்லி சிரித்த சுபா, "நீ புதுசு.போகப் போக ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கோ. நாம எப்பவும் நம்ம வேலையில்தான் குறியா இருக்கணும். தீயா வேலை செய்யணும் சாந்தி "  என்று சொல்லிச் சிரித்தாள் சுபா 
" மேடம், எனக்கு கடவுள் மேலே கோபம் கோபமா வருது "
" ஏன் கண்ணு ? " 
"ஒரு சிலருக்கு இப்படியொரு அரண்மனை மாதிரி வீட்டைக்  கொடுத்து, அதில் உயிரே இல்லாத பர்நிசர்ஸ், அலங்கார சாமான்களை வைக்க இடம் கொடுத்து விட்டு , உயிருள்ள ஒரு சில மனுஷங்களுக்கு ஒதுங்கக் கூட இடமில்லாத நிலைமையில் வச்சிருக்கிறாரே  " என்று சோகமாகக் கூறினாள்.
" அடடா, என்னவொரு இரக்க குணம்  ! கடவுளா வந்து இவங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இவங்க உழைச்சாங்க. அந்த காசை உருப்படியா சேர்த்து வச்சாங்க.."
" அப்போ பிளாட் பார்மில் தங்கியிருக்கிறவங்க எல்லாரும் உழைக்காத சோம்பேறிகளா ? "
" இதோ பாரு சாந்தி, நீ சின்னப் பொண்ணு . காலேஜ் வாடையே இன்னும் உன்னை விட்டுப் போகலே. இள ரத்தம். அதான் இப்படிப் பேசறே ? சில விஷயங்களைப் பத்தி நாம விவாதிக்கத்தான் முடியுமே தவிர எதையும் மாற்றி அமைக்க முடியாது . பூமியிலே ஒரு பகுதி எப்பவும் குளிராவும், சில பகுதி எப்பவும் நெருப்பாவும் ஏன் இருக்குன்னு நாம யாரையாவது கேள்வி கேட்டுட்டா இருக்கிறோம் ? அது உலக இயற்கைன்னு தானே நாம நினைக்கிறோம் . அது மாதிரி இந்த  ' இருக்கிறவன் இல்லாதவன் ' விசயத்தையும் அவங்கவங்க தலைவிதின்னு நினைச்சுக்கணும் " என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போது, " அம்மா உங்களை உள்ளே  வர சொன்னாங்க " என்று வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள் 
" உள்ளே வந்து 'கம்'ன்னு உட்கார்ந்து, நான் இண்டெர்வியு பண்றதை வாட்ச் பண்ணு . இந்த அம்மா சினி பீல்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்த காலத்தில் நீ பிறந்தே இருக்கமாட்டே . உன்னோட பிள்ளையார் சுழியே ஒரு வயதான அம்மாகிட்டே தான் " என்று சாந்தியின் காதோரம் கிசுகிசுத்தாள் சுபா  
" மேம், ஓல்ட் இஸ் கோல்டு தானே "
" நீ பொளைச்சுக்குவே " என்ற சுபா, ஒரு காலத்தில் பிரபலமாயிருந்த சினிமா நடிகை ஸ்ரீ யை  பேட்டி எடுக்கத் தயாரானாள் 
இருவரையும் முகம் மலர வரவேற்ற ஸ்ரீ, " உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன் போலிருக்கு " என்றாள் 
" எங்க கேரீர்லே இதெல்லாம் சகஜம், மேம் . மேம், நாங்க " உங்களுடன் " மாகசின்  ரிப்போர்ட்டர்ஸ் . சில VIP ஐ அப்ரோச் அவங்க ஒபினியன் கேட்டு ஒரு ஆர்டிகிள் எழுதணும். கேள்வி என்னன்னா, கடவுள் உங்க முன்னே தோன்றி, அப்படி அவர் வருவாரா என்பது வேறே விஷயம், அவர் வந்துட்டார்னே  ஒருபேச்சுக்கு வச்சுக்குவோம் , கடவுள் உங்க முன்னாலே வந்து நின்னு கிட்டு  கடந்த கால நிகழ்வுகளில் ஒன்றை உனக்குத் திருப்பித் தர்றேன். உனக்கு என்ன வேணும்னு கேட்டால், அவர் கிட்டே நீங்க என்ன கேட்க ஆசைப் படுவீங்க ? "என்று சொல்லிவிட்டு ஸ்ரீயின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். 
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்த ஸ்ரீ, "  நான் கஷ்டப் பட்ட நாட்களைத் திரும்பக் கேட்பேன்  " என்றாள் 
"என்ன? ' நான் திரும்பவும் ஒரு ஹீரோயினா ஒரு ரவுண்ட் வரணும்னு கேட்பேன்'னு நீங்க சொல்வீங்கன்னுதான்  நினைச்சோம். எதனாலே அந்த நாட்களைக் கேட்க நினைக்கிறீங்க  ? "
" எங்க அப்பாவுக்கு நாங்க ஆறு குழந்தைங்க. அப்பாவோட வருமானம் தவிர வீட்டில் எந்த வசதியும் கிடையாது. எங்க எல்லோருக்கும் இடையில் ஒரே ஒரு வயது தான் இடைவெளி. மூத்த அக்காவுக்கு எடுக்கும் ட்ரெஸ் , அடுத்த ஒன்றிரண்டு மாதத்தில் அடுத்த அக்காவுக்கு வரும். இப்படியே ஆறுபேரும் அந்த டிரஸ் கிழியும் வரை போடுவோம். வருடத்துக்கு ஒரு முறைதான் எல்லாருக்கும் புதுத் துணி. அதுவும் அது தீபாவளி என்பதால் தான் . அன்றுதான் வடை செய்வாங்க. நாங்க அதற்க் கெல்லாம் ஆசைப்பட்டது கிடையாது. பட்டாசு வெடிக்க ஆசைப் படுவோம். குழந்தைங்க ஆசைப் படறாங்களேன்னு அப்பா கொஞ்சூண்டு பட்டாசு வாங்கி வந்து எங்களுக்குக் குடுத்துட்டு,அம்மாவிடம் நிறையவே வாங்கிக் கட்டிக்குவார். காசை ஏன் இப்படிக் கரியாக்கணும்னு அம்மா சண்டை போடுவாங்க. வாங்கி வந்த பட்டாசை ஆறு பங்காக பிரித்து அப்பா தருவார். ஒருத்தர் தூங்கும் போது , மத்தவங்க, தன்னோட பங்கை சுட்டுடுவாங்களோனு பயந்து போய் நாங்க யாருமே தூங்க மாட்டோம் . மாத சம்பளம் கைக்கு வருகிற அந்த ஒரே ஒரு நாளில் மட்டும் அப்பா ஏதாவது தின்பண்டம் வாங்கி வருவார். அந்த ஒரே ஒரு நாளுக்காக மாதம் முழுக்க காத்திருப்போம். எங்களோட ஒரே ஒரு பொழுது போக்கு கோயிலுக்குப் போறதுதான், அதுகூட அங்கே போக எந்தக் கட்டணமும் கிடையாது என்பதால்தான். வீட்டு வறுமை அக்காவை சினிமாவில் கொண்டுபோய் சேர்த்தது . அப்புறம் விருப்பப் பட்டே நான்  சினி பீல்டுக்கு வந்தேன். நாங்க சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே, எங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நடுவில் பெரிய இடைவெளி வந்து   விட்டது. எப்போதும் ஒரே பரபரப்பு. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியாதபடி ஒவ்வொருவர் ஒவ்வொரு ஊரில் ஷூட்டிங்கில் பிசியாக இருப்போம். விதம்விதமான உணவு, உடை,ஊர் சுற்றுவது எல்லாமே ரொம்ப போரடித்து விட்டது.அவரவர் தொழில் , குடும்பம் அதுஇதுன்னு மூலைக்கு ஒருவராக பிரிந்து வந்தாச்சு.எங்ககுடும்பத்தைவிட்டு நான் தான் பிரிந்தே னென்றால், என்னுடைய குடும்பமும் படிப்பு, பிசினெஸ் அதுஇதுன்னு பிரிந்துதான் வாழ்கிறோம் . என்னுடைய சிறு வயதில் பணம் இல்லை. உறவுகள், அது தரக் கூடிய ஆனந்தம்  இருந்தது . இப்போ பணம் ... பணம் .. பணம் மட்டுந்தான் இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், கடவுளிடம் நான் கஷ்டதிலிருந்த, அந்த சிறு வயது  நாட்களைக் கேட்பேன்னு சொல்றேன் "  என்று சொல்லி முடித்தாள் ஸ்ரீ.
பேட்டியை முடித்துக் கொண்டு இருவரும் வெளியேறினர். இருவருக்கும் நடுவில் மிகப் பெரிய மௌன இடைவெளி. அதைக் கலைப்பதற்காக " ஏன் கண்ணு, எந்தப் பட்டணம் பறிபோச்சு?  என்ன ஒரு கவலை ? " என்றாள் சுபா குறும்பாக 
" மேம், சினிமா இல்லாட்டா அரசியலில் சேர்ந்து நானும் கோடிகோடியா சம்பாதிக்கணும். எல்லாத்தையும் அனுபவிக்கணும். பிறகு, வயதான காலத்தில் " ஒரு ரிப்போர்டராக அலைந்த நாட்கள் எனக்கு வேணும்" ன்னு  ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி குடுக்கணும் " என்றாள் சாந்தி சீரியஸாக 
" அப்புறம் ? "
" மேம். பணம் இருக்கிறதையே ஒரு பாரம் போலவும், அதை சுமக்க    இவங்க  கஷ்டப் படற  மாதிரியும் பேசுறாங்களே, பாரத்தை இறக்கி நம்ம கிட்டே குடுத்துட்டா அதை நாம சந்தோசமா சுமப்போம்தானே ? " என்று சாந்தி கேட்க , " இதுதான் இள வயசுக் குறும்புங்கிறது " என்று சொல்லி அவள் தலையில் செல்லமாக குட்டினாள்  சுபா 

No comments:

Post a Comment