உதயத்தைக் காண மேற்கு நோக்கி ... ?
எப்போதடா பொழுது விடியும் என்று காத்திருந்த வைதேஹி பின் பக்கக் கதவைத் திறப்பதைப் பார்த்ததும் " ஏண்டீ இப்படிப் படுத்தறே ? உனக்கு தூக்கமே வராதா ? முகம் தெரியாத இருட்டில் கதவைத் திறந்துகொண்டு போகிற அளவுக்கு அப்படி என்ன தலை போகிற வேலை ? " என்று முணுமுணுத்தாள் பாஞ்சாலி.
"அட, சும்மா புலம்பாமே தூங்கும்மா. அந்த ஒத்தக் குருவி என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வந்திடறேன் " என்றபடி வெளியேறினாள் வைதேஹி.
" நீயும் உன் குருவியும் ! " என்று முணங்கியபடி போர்வையை இழுத்து மூடிப் படுத்துக் கொண்டாள் பாஞ்சாலி
பதைபதைக்கும் நெஞ்சுடன் குருவிக் கூட்டுக்குள் எட்டிப் பார்த்த வைதேஹி, கூண்டுக்குள் இருப்பதைக் கண்டு " அப்பாடா, நல்ல வேளை. இன்னும் உயிரோடுதான் இருக்கு " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
முதல்நாள் வைத்த தண்ணீரும் தினையும் அப்படியே இருந்தது. உணவையும் தண்ணீரையும் குருவி ஏறெடுத்துக்கூடப் பார்த்திருக்க வில்லை என்பது புரிந்தது.
" நீயுமா என்னைப் படுத்தணும்? உன் துணையோட விதி முடிஞ்சு போச்சு . செத்துத் தொலைச்சுது. அதைத் தூக்கித் தூர வீசியாச்சு. அதை நினைச்சு கிட்டு நீ தண்ணீர் கூட குடிக்காமே இருந்தா எப்படிடா ? " என்று குருவி யுடன் பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தாள் . சோர்ந்து போய், நிற்கக் கூட திராணியற்று நின்று கொண்டிருந்தது துணையை இழந்த ஆண் குருவி.
கொஞ்ச நேரம் கூண்டை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த வைதேஹி, மொபைலை எடுத்து ரவியின் நம்பருக்கு போன் செய்தாள்.
"ஹலோ,குட்மார்னிங் வைதேஹி. என்ன இவ்வளவு காலங் கார்த்தாலே போன். என்ன விஷயம் ? "
" எங்க வீட்டு லவ் பார்டில் பெண் குருவி செத்துப் போச்சு "
" பியூனரலுக்கு நான் வரணுமா ? "
" அதெல்லாம் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு, அறிவு கெட்ட முண்டம். இப்போ இறந்து போன குருவியை நினைச்சுகிட்டு , உயிரோடு இருக்கிற குருவி சோறு தண்ணி எதுவும் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்குது "
" நான் வந்து ஊட்டி விடணுமா ? "
" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உனக்கொரு உருப்படாத உதவாக் கரை பிரெண்ட் இருக்கிறானே, அவன்கிட்டே நான் கேட்டேன்னு கேளு, " ஒரு குருவிக்கு இருக்கிற உணர்ச்சிகூட இல்லாத நீயெல்லாம் இன்னும் மனுஷ ஜென்மம்னு ஏன் நடமாடிக்கிட்டு இருக்கிறே "ன்னு. காசு பணம் கிடைக்கும்னு தெரிஞ்சதும் காதலித்த பெண்ணை கைவிட்டுட்டு, ஓடி ஒளியற புறம்போக்குனு அவனை நான் திட்டினதா சொல் " என்றாள் வைதேஹி கோபமாக
எதிர்ப் புறத்தில் ஒரு நிமிட நேரம் மௌனம் நிலவியது. பின்பு. " அதை நீயே கேட்பதுதானே ? பாஸ்கர் எனக்கு மட்டுமா பிரெண்ட் . உங்க அண்ணன் ராமுக்கும் பிரெண்ட் தானே " என்ற எதிர்க் கேள்வி வந்தது
"நான் கேட்பேன், எனக்கென்ன பயம். ஆனா எந்த நேரமும் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து விடுகிறானே. ஆமாம் .. எங்க அண்ணன் உயிரோடு இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா ? " என்றாள் வைதேஹி
" ஸாரி வைதேஹி. ஒரு முக்கியமான வேலை இருக்கு . நானே அப்புறமா உன்னைக் காண்டக்ட் பண்றேன் " என்றான் ரவி
" இது... இது.. நான் எதிர்பார்த்த ஒன்றுதான் . மலேஷியாவில் ஓடி ஒளிந்து கொண்ட புறம் போக்குக்கு நீ நண்பனாச்சே. உன்கிட்டே இதைத் தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும் ? " என்று வெறுப்புடன் கூறிய வைதேஹி பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் .
"உங்க வீட்டில் நம்ம கல்யாணத்துக்கு பச்சைக் கொடி காட்டிட்டாங்க ஆபீஸ் வேலையா நானும் உன் அண்ணன் ராமும் டெல்லி போகிறோம் அதை முடிச்சுட்டு, சென்னை ப்ராஞ்ச் ஆபீசுக்கு கொடுக்க வேண்டிய டீடைல்ஸ் கொடுத்துட்டு அங்கிருந்து நாங்க ரெண்டு பேரும் மலேஷியா போறோம். போன கையோடு நம்ம லவ் மேட்டர் எல்லாத்தையும் அப்பா அம்மாகிட்டே போய் பேசிட்டு அவங்களை கையோடு அழைச்சுட்டு வர்றேன். என் விருப்பத்துக்கு எதிரா எங்க வீட்டில் எதுவும் சொல்லவும் மாட்டாங்க , செய்யவும் மாட்டாங்க . என்னோட கூட உன் அண்ணனும் வரட்டும் " என்று வைதேஹியிடம் சொல்லி விட்டு ராமுடன் பாஸ்கர் டெல்லிக்கு பயணித்த ஒரு வாரம் கழித்து, ராம் மட்டும் திருச்சி வந்து சேர்ந்தான், உடம்பு முழுக்கக் காயங்களுடன்.
வீட்டிலிருந்த அத்தனை பேரும் பதறிப் போனார்கள். காயத்துக்கு என்ன காரணம், பாஸ்கர் எங்கே என்ற கேள்விக் கணைகள் ராமைத் துளைத்தன.
" வைதேஹி, மனசைத் திடப் படுத்திக்கோ. நான் சொல்றதை முழுசா காதில் வாங்கிக்கோ. அம்மா .. அப்பா .. நீங்களுந்தான். நாம நினைச்ச மாதிரி பாஸ்கர் ஒன்னும் நல்லவன் இல்லே . சரியான ஏமாற்றுப் பேர் வழி. பணத்துக்காக அலைகிற பிசாசு. நம்ம வீட்டில் வச்சு தேன் ஒழுகிற மாதிரி என்னென்ன பேச்சு பேசினான். சொந்த மண்ணில், வீட்டில் காலடி எடுத்து வச்சதுமே எல்லாமே மாறிப் போச்சு . நாங்க போனதும் அவங்க வீட்டில் அவனுக்கு பெண் பார்த்திருக்கிற விஷயத்தை சொன்னாங்க. பெண் பெயரில் கோடிகோடியாய் சொத்து இருக்குனு சொன்னாங்க. உடனே இவன், உங்களுக்குப் பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடுங்கனு சொல்லிட்டான் . நம்ம வைதேஹியைப் பத்தி ஒரு வார்த்தை கூடப் பேசலே. அவனைத் தனியா அழைச்சிட்டு வந்து அது பத்திக் கேட்டேன். எங்க பேச்சு வார்த்தை வாக்கு வாதமா மாறி கைகலப்பில் முடிஞ்சிட்டுது பாஸ்கர் என்னை அடிச்சு துரத்திட்டான் " என்று விசும்பலுக்கிடையே சொன்ன ராம்" வைதேஹி, ரியலி யூ ஆர் லக்கி. அவன் சுயரூபம் இப்பவாவது தெரிஞ்சதேன்னு நீ சந்தோசப்படு. அவன் இனிமே இந்தியா வர்றதா இல்லே . அந்த சனியனைத் தலை முழுகிட்டு நாங்க தேடித் தர்ற வாழ்க்கையை சந்தோசமா ஏத்துக்கோ " என்றான் ராம்
ஆனால் ராம் எதிர் பார்த்ததுபோல், அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை வைதேஹி.
"பணம் . பணம் . பணத்தைக் கண்டதும் புத்தியை மாத்திக்கிற கேடு கெட்ட ஜென்மத்தைப் போய்க் காதலிச்சேனே. ச்சே . அவன் மட்டும் என் எதிரில் வந்தால் அப்படியே வகிர்ந்திடுவேன் . வருவான் .. என்னிக்காவது ஒரு நாள் இந்தியா வராமலா போவான். அன்னிக்கு அவன் சட்னிதான் " என்றாள்,. இது நடந்து ஒன்பது மாதம் ஓடி விட்டது . ஆனால் வைதேஹி மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு மட்டும் தணியவில்லை .
அன்று உணவு இடைவேளையின்போது ராமை சந்தித்த ரவி , வைதேஹி அன்று காலையில் தனக்கு போன் பண்ணி குருவி செத்துப் போன விஷயத்தை சொன்னதாக சொன்னான். ராமிடமிருந்து எந்தவித உணர்ச்சி வெளிப் பாடும் வரவில்லை.
" ராம் நான் சொல்றதைக் கேளு. நீயும் பாஸ்கரும் டெல்லி போயிருந்தப்ப ரோடு ஆக்சிடெண்டில் மாட்டிக் கொண்டதையும், மூன்று நாள் மரணப் போராட்டத்துக்குப் பின் பாஸ்கர் இறந்து போனதையும் வைதேஹி கிட்டே சொல்லு. அவன் பாடியை எடுத்துட்டுப் போய் மலேஷியாவில் உள்ள அவங்க வீட்டில் சேர்த்துட்டு வந்த விவரத்தை சொல்லு . உன்னோட தங்கையை நினைச்சா மனசுக்கு ரொம்பவுமே கஷ்டமா இருக்குடா " என்றான் ரவி
" நீ சொல்றது சரிதான் ரவி . நான் கூட சில சமயம் உண்மையை சொல்லிடலாமா ன்னு நினைப்பேன் . உடனே பாஸ்கர் சொன்னது நினைவு வரும். சாகிற சமயத்தில்கூட என்னோட கைகளைப் பிடிச்சுகிட்டு " நல்லவேளை ராம் , நீ வெறும் காயத்தோடு தப்பிச்சே . நான் பிழைக்க மாட்டேன் . ஆனா நான் இறந்து போன விஷயம் உன் தங்கைக்கு தெரியக் கூடாது. பணத்துக்கு ஆசைப் பட்டு அம்மா அப்பா பார்த்து வைத்த வரனை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா உன் வீட்டில் சொல்லு . நம்ம ஆபீஸ் ஸ்டாப் எல்லார்கிட்டேயும் அப்படியே சொல்ல சொல்லு . நான் ஏமாத்திட்டேன்னு தெரிஞ்சா , என்னைப் பழி வாங்க வேணும்கிற வெறியில் உன் தங்கை தெம்பா உயிரோடு இருப்பா . நான் செத்துட்டேன்னு தெரிஞ்சா அந்த நிமிஷமே அவ உயிர் போயிடும். அவளோட பழகின இந்த கொஞ்ச நாட்களிலேயே அவளைப் பத்தி நான் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் நான் இறந்து போன விஷயத்தை அவளுக்கு சொல்ல வேண்டாம்னு எங்கிட்டே சத்தியம் வாங்கி இருக்கிறப்போ அதை மீறி நான் என்ன செய்ய முடியும் "
என்று குரல் நடுங்கக் கேட்டான் ராம்
No comments:
Post a Comment