Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 14, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 74 )

தொட்டால் சுடுவது நெருப்பு !தொடாமலே சுடுவது  உறவு !!

" நாட்ச்சியாரு,  ஏ, நாட்ச்சியாரு " என்ற குரலைக் கேட்டதுமே, " ஆமா , நான் இங்கே முறுக்குக்கு மாவு பிசையும்போதே இவளுக்கு மூக்கில் வியர்த்திட்டு போலிருக்கு " என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மாவு படிந்திருந்த கையைக் கழுவிவிட்டு, புடவைத் தலைப்பில் துடைத்தபடியே வாசலுக்கு வந்தாள் நாச்சியார்.
" என்னளா அடுப்படியில் வேலையா இருந்தியா ? " என்று கேட்டாள் சொர்ணம் 
" ஆமாம்க்கா, தீபாவளிக்கு திரிச்ச மாவு, தூக்கிலேயே  இருந்திட்டுருக்கு. அது எனக்கு ஞாபகமே இல்லை. இன்னிக்கு மிளகாத்தைப் பொடி திரிக்கப் போகணும்னு தூக்கை எடுக்கும் போதுதான் ' அடடா, மாவு அப்பிடியே இருக்கே. அதை முறுக்கு சுத்தி வச்சா பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைக வந்ததும் திங்கக் கொடுக்கலாமேனுட்டு மாவு பிசைஞ்சிட்டு இருந்தேன். வீடு தேடி வந்திருக்கே, என்ன சங்கதி ? "
" பெரியவக போயட்டாகளாம் " என்றாள் சொர்ணம் 
" என்னக்கா சொல்லுதே ? மேட்டுத் தெரு பெரியவகளா ? " என்று பதறிப் போய்க்கேட்டாள் நாச்சியார் 
" ஆமாம் ..இப்பத்தான் கணக்குப் பிள்ளை வந்து சொல்லிட்டுப் போனாக. 'நான் வெளியூருக்கு தகவல் சொல்லப்போறேன், நீங்க இங்கிட்டு இருக்கிற நம்ம சாதி சனத்துக்கு தகவல் சொல்லிடுங்க'னு சொல்லிட்டுப் போனாக "
"ஒரு ரெண்டு நாளைக்கு  முந்தி நாஅவகளைக் கோயில்லே பார்த்தேனே. நல்லாத் தான் இருந்தாக . அதுக்குள்ளே போயிட்டாகனு சொன்னா நம்ப முடியலே " என்றாள் நாச்சியார் 
" உசிரோடு இருந்தவரை சொந்தபந்தம் எதையும் பக்கத்திலே அண்ட விடலே . செத்துப் போனதும் தான் உறவுக வேண்டிக் கிடக்கு. மனுஷன் மாரடைப்பில் பொட்டுனு போயிட்டாக. நோய்நொடியில் விழுந்து கிடையில் கிடந்து செத்திருந்தாகனு வச்சுக்கோ, அரைகுறை உசிர் இருக்கும் போதே ' நா செத்ததும் யாருக்கும் சொல்லியனுப்ப வேண்டாம்' னு  சொல்லிட்டு செத்திருப்பாக " என்றாள் சொர்ணம் 
" சொத்தெல்லாம் அவளுக்குத் தானே போய்ச்சேரும் ? ஆமா , அவளுக்கு தகவல் சொல்லியிருப்பாகதானே, அவ வருவாதானே? " என்று கேட்டாள் நாச்சியார் பரபரப்புடன்.
" முதல் தகவல் அவளுக்குத் தான் போச்சாம். கிளம்பி வந்துட்டே இருக்கேன்னு சொன்னாளாம் . அவ வந்த பிறகுதான் எடுபபாகளாம் " என்று உபரி தகவல் கொடுத்தாள் சொர்ணம் 
" நாம் போகணும்தானே ? "
" பொறகு ? போனாத்தான் நல்லது. பிள்ளையில்லாதவன் சொத்தை எவளோ ஒருத்தி சுருட்டிட்டு போறதை வேடிக்கை பார்க்கவா நாம இங்கே இருக்கோம். நான் இப்பவே போய் மேலத் தெரு கீழத் தெருலே இருக்கிற நம்ம சாதி சனத்துக்கு தகவல் சொல்லிட்டு வந்துடுதேன். நான் இப்பவே சொல்லிப்புட்டேன், நமக்குள்ளே ஆயிரத்தெட்டு பிணக்கு இருந்தாக் கூட இந்த ஒரு விசயத்தில் ஒத்துமையா இருந்தாதான் சொத்து நம்ம கைக்கு வந்து சேரும். அதை எல்லாரும் மனசிலே வச்சுகிட்டு சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்தாப்லே பக்குவமா நடந்துக்கணும் " என்று எச்சரித்து விட்டுப் போனாள் சொர்ணம் 
" சரி சரி நீ போய் மிச்ச சாதி சனத்துக்கு சங்கதி சொல்லிட்டு வா. நான் அதுக்குள்ளே பிசைஞ்சு வச்ச மாவை பிழிஞ்சு எடுத்துடுதேன் . மூடி வச்சிட்டுப் போய் வந்த பிறகு பிழியலாம்னா, மாவு புளிச்சுப் போயிடும் " என்று சொல்லியபடி அடுக்களைக்குள் நுழைந்தாள் நாச்சியார். 
சிறிது நேரத்துக்கெல்லாமே  " பெரியவக " வீடு இருந்த சுற்று வட்டாரமே பரபரப்பானது. துக்கப் பட்டு வந்த கூட்டத்தைக் காட்டிலும் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே அதிகம்.வழக்கமாக ஆத்துட்டிலும், பிள்ளையார் கோயில் மதிற்சுவர் மீதும் தொற்றிக் கொண்டு அந்த வழியாக  போகிற வருகிற பெண்களைக் கிண்டலடிக்கும்  " விடலைகள் " கூட. " ஏலேய், இன்னிக்கு ஊருக்குள்ளேயே ஒரு " சூப்பர் சீன " நடக்கப் போகுதுலேய். எங்கிட்டும் போகாமே இங்கிருந்து வேடிக்கை பார்க்கலாம் லேய் " என்று சொல்லி " பெரியவக " வீட்டு முன்பு தவம் கிடந்தார்கள் 
சொத்தை யார் பெயருக்கு எழுதி வச்சிருப்பாக பெரியவக என்ற கேள்வி எல்லோர் மனதையும் உறுத்திக் கொண்டிருந்தது. அப்படியெல்லாம் எழுதி வைக்கப் படவில்லை என்பது தெரிந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டது உறவுக்காரக் கும்பல். பெரியவகளைப் பத்தியும் " அவளை"ப் பத்தியும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டார்கள். 
" நேரம் ஆச்சு . இன்னும் அவளைக் காண்கலியே ? "
" பெங்களூரில் இருக்கிறாளாம். அதனாலே வந்து சேர நேரமாகும் "
" அய்யோ, இது முன்னமே தெரிஞ்சிருந்தா துணியைத் துவைச்சு காயப் போட்டுட்டு வந்துருப்பேனே "
"அட எஞ்சாமி பகவானே  எம்புட்டு  நேரந்தான் நாம இப்பிடியே  இந்தப்   பொணத்தைப் பார்த்துட்டு உட்காந்திருக்கிறது  ? "
" ஏளா, ரத்னா டாக்கீஸில் MGR படம் நாடோடி மன்னன் நடக்குது .நானும் ரொம்ப வருஷமா பார்க்கணும் பார்க்கணும்னு நினைச்சிட்டிருந்த படம் . எப்படியும் அவ வந்து அழுதுகிழுது ஆர்ப்பாட்டம் பண்ணி  பொணத்தை எடுக்க எப்பிடியும் இன்னும் நாலு அஞ்சு மணி நேரமாகும். அதுக்குள்ளே நாம படம் பார்த்துட்டு வந்துடலாமா ? " என்று சொர்ணம் கேட்க' " நான் கிளம்பி வர்றப்ப கையிலே காசு எதுவும் எடுத்துக்கலே " என்று தனம் சொல்ல " ஆமாம், பொல்லாத காசு . இப்ப நான் தர்றேன் . பொறகு நீ அதை மறக்காமே தந்துரு " என்று சொர்ணம் சொல்ல, அடுத்த நொடி பெண்கள் கூட்டம்  நாடோடி மன்னனை முற்றுகையிட்டது. 

பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை 

"மேடம், நாம கிளம்பினதிலிருந்து நீங்க எதுவும் சாப்பிடலே. மீட்டிங், ஒர்க் டென்சனில் நேற்றே நீங்க சரியா சாப்பிடலேன்னு ரேவதி மேடம் சொன்னாங்க. போகிற வழியில் ஏதாவது சாப்பிட வச்சு கூட்டிட்டு போக சொல்லியிருக்கிறாங்க . வழியில் எங்காவது நிறுத்தட்டுமா ? " என்று கேட்டான் கார்  டிரைவர் வேலுமணி.
" எதுவும் வேண்டாம்ப்பா. நான் போய் பெரியவர் முகத்தைப் பார்க்கணும். நாம போகிறவரை பாடியை எடுக்காமே இருக்கணும்.அதுமட்டும் இல்லே என்னோட கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட வரக்கூடாது . என்னோட பரிதவிப்பு பிரார்த்தனை எல்லாமே இது ஒண்ணுதான், இதைத் தவிர பசி தாகம் எதுவுமே என் நினைவில் இல்லை " என்றாள் கீர்த்தனா 
" மேடம், இன்னிக்கு நடக்கப் போறது முக்கியமான மீட்டிங். நம்மோட, நம்ம கம்பெனி தலைஎழுத்தை முடிவு பண்ணப் போறதே இந்த மீட்டிங் தான். இதிலே முக்கியமான ஆள் நீங்கதான். நேற்றுவரை ஓடியோடி வேலை செஞ்சுட்டு முக்கியமான நேரத்தில் நீங்க இல்லைன்னா எப்படி ? MD இன்னிக்கு யாரையும் பார்க்கிற மூடில் இல்லாட்டாலும்கூட நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்து விஷயத்தை விளக்கி சொல்லிட்டு அவரோட பெர்மிசனோட கிளம்பியிருக்கலாம். நம்ம சர்வீஸ், தராதரம் எதையுமே நினைச்சுப் பார்க்காமே எடுத்தோம் கவுத்தோம்னு காரியம் பண்ற புண்ணியவாளன். நீங்க அவரைப் பகைச்சுக்கும்படி ஆகிவிட்டதே. பெர்மிசன் லெட்டெர் எழுதி பேடில் கட்டி அனுப்பிட்டு வந்திட்டீங்களே " என்றான் வேலுமணி 
" என்னப்பா, அதிக பட்சம் வேலை போகும் , அவ்வளவுதானே ? தலையை வாங்கிட மாட்டாரே உங்க MD ? " என்றாள் கீர்த்தனா எரிச்சலுடன்.
" இறந்தவர் உங்களுக்கு என்ன வேணும் மேடம் ? "
" என்ன வேணும்னா ? "
" இல்லே, தப்பா நினைச்சிக்காதீங்க.என்ன உறவுமுறை ? "
" எந்த வகையிலும் உறவில்லை "
" என்ன மேடம் சொல்றீங்க ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டான் வேலு  மணி,  முன்பக்க மிர்ரர் வழியாக கீர்த்தனாவைப் பார்த்தபடி.
" அதெல்லாம் பெரிய கதைப்பா "
" இஷ்டமிருந்தா சொல்லுங்க "
" கண்டிப்பா, எனக்கும் மனசு பாரம் குறையணுமே. இப்போ இறந்துபோன பெரியவர் பேர்  மாசிலாமணி. பேருக்கேத்தபடி நல்ல மனுஷர். இப்போ அவருக்கு எழுபது வயதாகுது .அந்தக் காலத்திலேயே காதல் கல்யாணம் பண்ணிகிட்டவர். குடும்பமும் ஊர் உறவும் அவரைத் தள்ளி வச்சது. அதை அவர் பெரிசா எடுத்துக்கலே. அவர் மனைவிக்கு பிரசவ நேரம். அந்த சமயம் பார்த்து அவர் பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருந்தார் . இவர் திரும்பி வர்றதுக்குள் அந்த அம்மாவுக்கு  பிரசவ வலி வந்து, அவங்களை சரியா  கவனிக்கவோ ஆஸ்பிடலில் சேர்க்கவோ ஆள் இல்லாமல் ஜன்னி கண்டு   வீட்டிலேயே இறந்துட்டாங்க. அந்தம்மா இறந்து போன பிறகு, இவரோட  உறவுகள் இவரைத் தேடி வந்துச்சு . ஆனா யாரையுமே இவர் பக்கத்தில் சேர்த்துக்கலே. தனியாவேதான் இவர் இருந்துட்டு வந்திருக்கிறார்.கவலையை மறக்க பிசினெஸில் முழு மூச்சா இறங்கி கோடிகோடியா சம்பாதித்து வச்சிருக்கிறார். எனக்கு கன்னியாகுமரி. பிசினஸ் விஷயமா கன்னியாகுமரி வந்த பெரியவர் கடல்லே குளிக்கப் போனப்போ, பாறையில் கால் வழுக்கி விழுந்து   கடல் அலையில் மாட்டிக்கிட்டார், நீச்சல் எதுவும்  தெரியாது. அந்த நேரத்தில் எங்க அப்பா  இவரைக் காப்பாற்றப் போய் அவரும் கடல்   அலையில் மாட்டி யிருக்கிறார். அப்பாவுக்குமே நீச்சல் தெரியாது. இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்றனும்கிற வேகத்தில் ஓடி உயிரை விட்டது தான் மிச்சம் . அப்பா வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த எங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வர இருந்தது. பெரியவர் எங்களை எல்லாம்  தன்னோட கிராமத்துக்குக் கூட்டிட்டு வந்து பராமரிச்சார். இதை அக்கம்பக்கம் தப்பாப் பேசுச்சு. சாப்பாட்டில் மருந்து கலந்து குடுத்து அவரை மயக்கி வச்சிருக்கிறதா ஊர் பேசுச்சு .அங்கு இருக்கப் பிடிக்காமே வீட்டைவிட்டுக் கிளம்பினோம். இது தெரிந்த பெரியவர் எங்களை பெங்களூரில் தங்கவைத்து எங்க சாப்பாடு படிப்பு செலவுக்கு மாதாமாதம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். என்றைக்கு நான் முதல் மாச சம்பளத்தைக் கையில் வாங்கினேனோ அன்னிக்கே, பெரியவர் தர்ற உதவிப் பணம் வேண்டாம்னு சொல்லிட்டேன் . மாதம் ஒருமுறை  பெங்களூர் வருவார். எங்களைப் பற்றி விசாரிப்பார். ஆனால் எங்க அம்மா எங்க வீட்டில் இதுவரை அவர் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கக் கூட அனுமதிச்சது கிடையாது. என்னோட சின்ன தங்கச்சி விவரம் தெரியாத வயசில் அவரை அப்பான்னு கூப்பிடுவா. அதைக் கூட எங்க அம்மா கண்டிப்பாங்க. விவரம் தெரியாத சின்னப்பிள்ளை ஏதோ சொல்லுது. போகட்டும் விடும்மானு பெரியவர் சொல்லுவார். அதுக்கு அம்மா  ' என் தாலிக்குச் சொந்தக்காரனைத் தவிர வேறு யாரையும் ' அப்பா'ன்னு என் பிள்ளைக கூப்பிடறதை நான் ஒத்துக்க மாட்டேன்'னு சொல்வாங்க.  என் தங்கைங்க, அம்மா எல்லோருமே அவரை, அவரோட கிராமத்து ஜனங்க " பெரியவக " ன்னு சொல்றது போல  சொல்வோம். "அய்யா"ன்னுதான் அவரைக் கூப்பிடுவோம். வெங்காயம் உரிக்கும்போது கண்ணில் தண்ணீர் வந்தால் கூட அவருக்குப் பிடிக்காது. எந்த சூழ் நிலை யிலும் உங்க கண்ணிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரக் கூடாது அப்படி வந்தா, நான், என்  கடமையிலிருந்து  தவறிட்டேன்னு அர்த்தம் என்பார். நாங்க விளையாட்டுக்காக, 'யாரும் செத்தால்கூட நாங்க  அழக்கூடாதா ' ன்னு கேட்போம் . யாராவது என்ன ? நான் செத்தால்கூட அழக் கூடாது. உங்க கண்ணிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வந்தாக் கூட என் மனசு தாங்காது ன்னு அடிக்கடி சொல்வார். என்னவோ தெரியலை, அந்த அறிவுகெட்ட கிராமத்து ஜனங்க அவருக்கும் எங்க அம்மாவுக்கும் எதோ தப்பான உறவு இருக்கிற மாதிரி ஒரு ஜோடனையை உண்டு பண்ணி கிட்டே இருக்கிறாங்க. எங்கம்மா ஒரு நெருப்பு மாதிரி. போன வருஷம் எங்க அம்மா இறந்து போனது கூட இந்தப் பெரியவரைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை . இந்த முட்டாள் ஜனங்களுக்குத் தெரிந்துதான்  என்ன ஆகப் போகிறது? ரத்த சம்பந்தமோ உறவுமுறையோ இல்லாத யாரோ ஒரு சிலர், ஒருத்தொருக் கொருத்தர் உதவிபண்ணினா அது தப்பான உறவு முறையின் அடிப்படையில்தான் இருக்கும்னு நினைக்கிற ஜனங்க இருக்கிற பூமியில் எத்தனை புத்தன் இயேசு பிறந்து போதனை சொல்லித்தான் என்ன பிரயோஜனம். திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்  " என்று வெறுப்புடன் சொன்னாள்   கீர்த்தனா
" ஸாரி மேடம், உங்க சொந்த வாழ்க்கை, ஏதோ சினிமாக் கதை போல இருக்கு. உங்ககூட இவ்வளவு காலம் பழகுறோம் . யாருக்குமே இந்த பேக் ரவுண்டு தெரியாம போச்சே " என்றான் வேலுமணி 
" நல்ல விஷயங்களை நாலு பேரோடு பகிர்ந்துக்கணும். சோகங்களை நமக்குள்ளேயே போட்டு புதைச்சுக்கணும் . இதுதான் என் பாலிசி . இப்போ இவ்வளவு விஷயத்தையும் நான் ஏன் உன்கிட்டே சொல்றேன்னா, வெறி பிடிச்ச அந்த முட்டாள் ஜனங்க என்னைப் பார்த்ததும் எப்படி ரீயாக்ட் பண்ணுவாங்க என்பது எனக்கே தெரியாது. என்னோடு துணைக்கு வர்ற நீ எதுவும் புரியாமே தடுமாறக் கூடாதுன்னுதான் உன்கிட்டே இத்தனையும் சொல்றேன். அங்கே எது நடந்தாலும் கண்டுக்காமே அமைதியா இரு "
" சரி மேடம் "
அதன்பிறகு வேலுமணி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. வயல்வெளி கிராமத்துக்குள் கார் நுழையும்போது மாலை மணி ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது . அதே சமயம் சினிமா பார்த்துவிட்டு வந்த பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு " அய்யோ, அய்யோ " என்று கதறிக் கொண்டு ஓடி வந்தார்கள்  
பெரியவர் பிணத்தின் முன்பாக அழகிய இளம்பெண்ணைக் கண்டதும், அழுகைக்கு சிறிது இடைவெளி விட்டு விட்டு " யாருளா இது ? " என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். கணக்கப் பிள்ளையை கை ஜாடை காட்டி அழைத்த சொர்ணம், " யாரு அது ? " என்றாள் ரகசியக் குரலில்.
" அந்த அம்மாவோட பொண்ணு "
" ஆத்தாக்காரி வரலையா? கத்தலே, கதறலே, அவ கண்ணிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணிகூட   வரலே. பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நிற்க்கிறா.  இதுதான் ஒட்ட வந்த மத்ததுக்களுக்கும் உறவுக்கும் உள்ள வித்தியாசம். பெரியவக போய்ட்டாகணு கேள்விப்பட்டதும் நாமல்லாம் பதறித் துடிச்சிகிட்டு கதறியழுதுகிட்டு  வீட்டைப் பூட்டினோமா இல்லையா என்கிறது கூட தெரியாமே ஓடியாந்தோம். பெரியவக இந்தக் குடும்பத்துக்குத் தானே படியளந்துகிட்டு இருந்தாக. அத்தனையையும் ஜீரணம் பண்ணிட்டு, இப்ப அலுங்காமே குலுங்காமே வந்து நிக்கிறதைப் பாரேன். ஆத்தாக்காரி வருவாளா ? " என்று சொர்ணம் கேட்க "அந்தம்மா வரலே" என்று பதில் சொல்லி விட்டு விரைவாக  அங்கு இருந்து  நகர்ந்தார்.
"யக்கா, ஆம்பிளைக அத்தனைபேரும் வாயை மூடிகிட்டு இங்கிட்டு நடக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்காக. நாமதான் ஏதாவது செஞ்சாகணும் " என்றாள் நாச்சியார்.
" ஆமா ... நம்ம வீடுகள்லே திங்கிறதுக்குத் தவிர வேறு எதுக்காவது அவக வாயைத் திறக்க விட்டுருக்கோமா ? முன்னே பின்னே பழக்கம் இருந்தா தானே   இப்ப வாயைத் திறப்பாக " என்றாள் கல்யாணி.
இதுக்கு மேலும் சும்மா இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்த சொர்ணம் "தெய்வம் போல  இருந்து எங்களை ஓடி ஓடி வழி நடத்துனீகளே . இப்படி கட்டையா கிடக்கீகளே, எங்களை யெல்லாம் பார்த்துப் பார்த்து வழி நடத்தின   ஆலமரம் அடியோடு சாய்ஞ்சு போச்சே . இப்படி பொட்டுனு போயிடுவோம்னு தெரிஞ்சுதான் அடிக்கடி  ' நான் போயிட்டாலும் நம்ம சொந்த பந்தம் எதுவும் என் வீட்டை விட்டு  எங்கிட்டும் பிரிஞ்சு போயிடக் கூடாதுன்னு அடிக்கடி சொன்னீகளா ? தெய்வமே, நாங்க எங்கிட்டு போகப்  போறோம் .  உங்களை விட்டால் எங்களுக்குப் போக்கிடம் ஏது ? " என்று சொல்லி அழ, பின்பாட்டுப் போல  அவள்  விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஒப்பாரியைத் துவக்கினார்கள் பெண்கள். 
கீர்த்தனா அருகில் வந்த கணக்குப் பிள்ளை " தாயீ , மத்த காரியங்களை ஆரம்பிக்கிறோம் " என்று சொல்ல, " அதுக்கு அவகிட்டே ஒப்புதல் வாங்க அவ என்ன நமக்கெல்லாம்  ஒட்டா உறவா " என்றார்கள் சுற்றி நின்ற ஆண்கள். பயபுள்ளைக இப்பவாச்சு வாயைத் திறந்ததுகளே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது பெண்கள் கூட்டம். 
அதன் பின் காரியங்கள் மளமளவென்று நடந்தேறியது.
பெரியவர் பிணத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலம் கிளம்பும்போது தானும் பின் தொடர்ந்த கீர்த்தனாவை " நீ பொம்பளப் புள்ள தாயீ, சுடுகாடு பக்கமெல்லாம் வரக் கூடாது " என்று தடுத்து நிறுத்தினார் கணக்கப் பிள்ளை 
திரும்ப வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்த கீர்த்தனாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்துப் பெண்கள் 
சுடுகாட்டுக்குப் போனவர்கள் திரும்பி வந்ததும், கணக்கப்பிள்ளையிடம் 
" நான் கிளம்பறேன் " என்றாள் கீர்த்தனா 
" என்ன தாயீ இது , தலைக்கு  முழுக வேண்டாமா? சாப்பிட வேண்டாமா? பெரியவக கடைசி வரை உங்க எல்லாரையும்தான் தன்னோட குடும்பமா நினைச்சிட்டு இருந்தார். அவக  சொத்து பத்து பத்திப் பேசி முடிவு பண்ண வேண்டாமா? " என்று கேட்ட கணக்குப்பிள்ளையை எரித்து விடுவது போல பார்த்தது உறவுக்காரக் கும்பல்.
" போகிற வழியில் ஏதாவது ஹோட்டலில் அதை எல்லாம் பார்த்துக் கிறேன். எங்க குடும்பத்துக்காக பெரியவர் ஏதாவது எழுதி வச்சிருந்தாக் கூட அது எதுவும் எங்களுக்கு வேண்டாம் . அவரோட அன்பு கருணையை விட வேறே எதுவும் எங்களுக்குப் பெரிசா தெரியலை. இந்த கிராமத்து ஜனங்க, உறவுக்காரங்க எல்லாரையும் விட, அந்த அன்பை நாங்கதான் மொத்தமா அனுபவிச்சிருக்கிறோம். அதைத் தவிர வேறே எதுவும் எங்க குடும்பத்துக்குத் தேவையில்லை " என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தாள்  கீர்த்தனா 
" என்னடா இது ? ஒரு உப்பு சப்பு இல்லாமே ஒரு திரில் இல்லாமே மொக்கையா முடிஞ்சு போச்சு விஷயம் ? இங்கிட்டு உட்கார்ந்தி ருக்கிறதுக்குப் பதிலா ஆத்தங்கரையில் பொம்பளைங்க குளிக்கிறதை வேடிக்கை பார்த்துட்டாவது உட்கார்ந்திருந் திருக்கலாம்  " என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது வேடிக்கை பார்க்க வந்து காத்துக் கிடந்த விடலைக் கூட்டம்  .
ஏதும் சொத்துக்கு அடிபோடுவாளோன்னு நினைச்சி பயந்திட்டுருந்தோம்.
நல்ல வேளை. எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டுது பீடை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் சொந்த பந்தங்கள்.
காரை ஸ்டார்ட் செய்த வேலுமணி, " போகலாமா ? " என்று கேட்டபடி ஒரு நொடி  கீர்த்தனாவைத் திரும்பிப் பார்த்தான் 
வாயில் கர்சிப்பை அடக்கிக் கொண்டு,  மனதுக்குள்ளேயே கதறிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா        

No comments:

Post a Comment