Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 27, 2013

Scanning of inner - heart ( Scan Report No. 67 )

                                                                   பக்குவம் !              

" என்னங்க , குழந்தைக்கு பிஸ்கட் தீர்ந்து போச்சு . வாங்கிட்டு வாங்க. ரெண்டு பாக்கெட்டா வாங்கிட்டு வந்துடுங்க "
" அது என்ன கிடைக்காத சரக்கா ? ரெண்டா வாங்கி ஸ்டாக் வைக்கிறதுக்கு ? "
" குழந்தைக்கும் அம்மாவுக்கும் சேர்த்து சொன்னேன் "
" இப்போ கடைக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன் . வேறே என்னென்ன வேணும் சொல்லு . வீட்டுக்குள் நுழைஞ்சதும் ' அது இல்லே இது இல்லே'ன்னு பஞ்சப் பாட்டு பாடாதே "
பதிலேதும் சொல்லாமல் சேதுவை ஏறிட்டுப் பார்த்தாள் லக்ஷ்மி 
" சரி சரி ,கூல் கூல் " என்று சொல்லி வெளியில் சென்ற சேது பத்து நிமிடத்தில் திரும்பி வந்தான் 
ஒரு பாக்கெட் பிஸ்கெட்டைப்  பிரித்து, ஒன்றை எடுத்து குழந்தையின் கையில் கொடுத்து விட்டு மற்றொரு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு அம்மா சிவகாமி இருக்கும் அறைக்குள் நுழையப் போன சேதுவை, லக்ஷ்மியின் அவசரக் குரல் தடுத்து நிறுத்தியது.
" இங்கே வாங்க. அந்த பாக்கெட்டை பாட்டிலில் போட்டு மூடி வையுங்க "
" அம்மாக்கு வேணும்னு சொன்னியே "
" ஆமாம் சொன்னேன் .  இப்போ நான் சொல்றதை செய்யுங்க "
கோபப் பார்வையை லக்ஷ்மி மீது பதித்த சேது, பிஸ்கட் பாக்கெட்டை மேஜை மீது எறிந்துவிட்டு டிவி முன்னால் உட்கார்ந்தான் 
கிச்சனை விட்டு வெளியில் வந்த லக்ஷ்மி, சோபாவில் சாய்ந்து கொண்டு பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டு, சிவகாமி இருக்கும் அறைப் பக்கம் கையைக் காட்டினாள். அதைப்  புரிந்து கொண்ட சரண் " பாட்டி  " என்று குரல் கொடுத்த படி அறைக்குள் ஓடினான்.
" என்னடா கண்ணு , ஓ .. குழந்தை பிஸ்கட் சாப்பிடுதா ? பாட்டிக்கு இல்லையாடா ? " என்று சிவகாமி கேட்பது சேதுவின் காதில் விழுந்தது 
சற்று நேரத்தில் வெளியில் ஓடி வந்த சரண் " அம்மா. பிச்சு " என்றான் 
" அடடா குழந்தே சமர்த்தா சாபிட்டுட்டா ? " என்றபடி இரண்டு பிஸ்கெட்டை எடுத்துக் கொடுத்தாள் லக்ஷ்மி 
அறைக்குள் ஓடிய குழந்தை " இந்தா பாட்டி, இது உனக்கு , இது குழந்தைக்கு " என்றான்  
" அம்மாடீ, எம்புட்டு ருசியா இருக்கு . இன்னொன்னு இல்லையா " என்று   சிவகாமி கேட்பது காதில் விழுந்ததும், கோபத்துடன் எழுந்த சேது ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு  தாயின் அறைக்குள் நுழையும் முன் அவனை ஓடி வந்து தடுத்து அவன் கையிலிருந்து பாக்கெட்டைப் பறித்தாள் லக்ஷ்மி 
" ஓங்கி ஒன்னு விட்டேன்னா தெரியும். வயசான ஒரு மனுஷி, குழந்தை கிட்டே பிஸ்கட்னு வாய் விட்டு கேட்கிறாங்க . குடுக்கப் போகிறவனை தடுக்கிறே . மனுஷ ஜென்மமா நீ " என்று இரைந்தான் சேது 
" நீங்களும் வீட்டுக்கு வர்றப்போ எல்லாம் குழந்தைக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றீங்க. ' இந்தாம்மா, சாப்பிடு'ன்னு உங்க அம்மா கிட்டேயும் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கறீங்க. அவங்க அதை சாப்பிட்டாங்களான்னு என்னைக்காவது  எட்டிப் பார்த்திருக்கீங்களா ? கொடுத்ததோட உங்க கடமை தீர்ந்து போச்சு அப்படித்தானே ? நான் எதைக் கொடுத்தாலும் அதை அவங்க வேண்டான்னுதான் சொல்லுவாங்க . நாம வலுக் கட்டாயமா கொடுத்தாக் கூட நாம் வச்சது வச்ச இடத்திலேயே இருக்கும் . ஆனால் குழந்தை சாப்பிடுவதைப் பார்த்தால் அதைக் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. அவங்க வயசில் அவங்க சாப்பிடாத ஒண்ணா  அது ? இல்லே இப்போ வாங்கி சாப்பிட முடியாத ஒண்ணா  ? இந்த வயசில் அவங்களுக்கு எதுவும் தேவை இல்லை. அதான் நாம கொடுத்தா வேண்டாங்கிறாங்க . குழந்தை கையால் வாங்கி சாப்பிடுவதில் அவங்களுக்கு ஒரு தனி சந்தோசம் . உங்க அம்மான்னு இல்லே, எங்க அப்பா , இன்னும் எல்லா வயசானவங்களுக்குமே பேரக் குழந்தைங்க கிட்டே வாங்கி சாப்பிடுவதில் ஒரு தனி சந்தோசம் " என்று விளக்கினாள் லக்ஷ்மி 
" ஸாரி " என்று அசடு வழிந்தான் சேது.
இவர்களின் உரையாடல் அறைக்குள்ளிருந்த சிவகாமியின் காதிலும் விழுந்தது  அவளையும் அறியாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது ." இந்த வயசில் இந்தப் பொண்ணுக்கு இருக்கிற பக்குவம் அன்றைக்கு எனக்கு இல்லாமல் போயிட்டுதே. சேது குழந்தையா இருக்கிறப்போ, என் மாமியார் கை நீட்டி சேது சாப்பிடுவதைக் கேட்கும் போதெல்லாம் எரிச்சல் பட்டு   குழந்தையை வெளியில் கொண்டு போய் அவங்களுக்குத் தெரியாமல் சாப்பிட வச்சிருக்கிறேனே. என்ன ஒரு அல்ப புத்தி எனக்கு ? அவங்களுக்கு ஆசை குழந்தை கையால் வாங்கி சாப்பிடுவதில்தானே தவிர குழந்தை சாப்பிடுவதை சாப்பிட வேண்டும்  என்ற எண்ணத்தினால் இல்லை என்பது கூட தெரியாத ஜென்மமாகத் தானே இருந்திருக்கிறேன். என்ன இருந்தாலும் இந்தக் காலப் பெண்கள் நிறைய விசயங்களில் ரொம்பவும் பக்குவப் பட்டவங்களாத்தான் இருக்காங்க " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் 

No comments:

Post a Comment