Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 29, 2013

Scanning of inner- heart ( Scan Report No. 65 )

               பாவம் இந்தக் கடவுள் !!

கையிலிருந்த நியூஸ் பேப்பரை கோபமாக விட்டெறிந்தார் சாரதி."  ச்சே .. எங்கே  பார்த்தாலும் கொலை. கொள்ளை, கற்பழிப்பு, பொய், புரட்டல், பித்தலாட்டம் . இதைத் தவிர வேறு எதுவுமே உலகத்தில் கிடையாதா? இதை எல்லாம் சட்டம் போட்டும் தடுக்க முடியவில்லை. சட்டத்திலிருந்து தப்பியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தெய்வமும் கண்களை இறுகக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தால் எப்படி ? " என்று மனதுக்குள் கேட்டபடியே பூஜை அறைப்பக்கம் கண்களைத் திருப்பி " பெருமாளே, இதெல்லாம் உனக்கே நியாயமாப் படுதா? இன்னும் அனந்த சயனத்தில்தான் இருக்கிறாயா ?அக்கிரமத்தைக் கண்டு கொதித்தெழுந்து ஓடி வர வேண்டாமா ? "  என்று கடவுளை பார்வையாலேயே கேள்வி கேட்டார் 
படத்திலிருந்த பெருமாள் மந்தகாசப் புன்னகை மாறாமல் இருந்தார். சரிதான் போ . என்னைக்கு நான் நினைச்சது நடந்திருக்கு .. இப்போ நடக்கிறதுக்கு என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார். நினைப்பது நடந்துவிட்டால், கேட்பது கிடைத்து விட்டால் பிறகு தெய்வம்தான்  எதற்கு என்று நினைத்தபடியே ஈஸி சேரில் சாய்ந்தார்.
யாரோ தட்டி எழுப்புவதை உணர்ந்து கண்களைத் திறந்து பார்த்தார். புன்னகை முகமொன்று கண்ணெதிரே மங்கலாகத் தெரிந்தது . " யார் ஸார் நீங்க ? பூட்டின வீட்டுக்குள் எப்படி வந்தீங்க ? பாகீ ... அடியே பாகீ .. கதவைத் திறந்தது யார் ? " என்று சாரதி கூச்சலிட ' " தூங்கிறவங்களை எல்லாம் ஏன் எழுப்பறீங்க ? எப்படியோ நான் உள்ளே வந்திட்டேன் . உங்களை எழுப்பிட்டேன் . அப்படியே என்னோட வெளியே வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு உண்மையை சொல்வேன் " என்றார் எதிரே நின்றவர்
" யார் ஸார் நீங்க ? பூட்டின கதவு பூட்டினாபிலேயே இருக்கு.எப்படி உள்ளே வந்தீங்க ? "
" என்னங்க .. குழந்தை மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு ! .இப்போ உங்களுக்கு நான் யார்னு தெரியணும் . அவ்வளவுதானே ?  நான்தான் கடவுள் "
இதைக் கேட்டு ஒருகணம் பேயறைந்தது போல திகைத்த சாரதி' " என்ன இது .. பெருமாளே நீயா ?  நீயா வந்திருக்கே ? அடியே பாகீ ... பாகீ  " என்று இரைய,
" இன்னும் நான் உங்களை " நீங்க .. நாங்க ... ஏனுங்க 'ன்னு மரியாதையா தான் சொல்லிட்டு இருக்கிறேன்.... ஹும் .. நேரில் வந்தால் கடவுளுக்குக் கூட மரியாதை கிடைக்காது .  பூட்டின கோவிலுக்குள் இருந்தால்தான் அர்ச்சனை ஆரத்தி, மத்த மரியாதையெல்லாம் " என்று சொல்லி மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தார் எதிரே நின்றவர்
" நீ நெஜமாவே கடவுளா இருந்தா உனக்கு ஒன்று சொல்றேன் கேட்டுக்கோ. பக்தனுக்கும் பரமனுக்கும் நடுவில் மரியாதை என்ன வேண்டிக் கிடக்கு ? " நீ நான்" னு உன்னை நான் ஒருமையில் சொன்னா, அது உனக்கும் எனக்கும் உள்ள  நெருக்கத்தைக் காட்டுது "
" சரி .. சரி . நான் விளையாட்டா சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளவு கோபம் ? வாங்க   வெளியில் போகலாம் "
" எங்கே ? "
" பக்தர்கள் தினந்தோறும் என்கிட்டே எவ்வளவோ விஷயங்களை பகிர்ந்துக்கிறாங்க. எவ்வளவோ கேள்விகள் கேட்கிறாங்க ..கொஞ்சமுன்னாடி நீங்க கூட கேட்டீங்க , " நினைக்கிறது எதுவுமே நடக்காதா ? அக்கிரமத்தை உடனே உடனே தண்டிக்க கூடாதான்னு . அந்த ரெண்டு கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லப் போறேன்  " என்றவர் சாரதியின் பதிலுக்குக் காத்திராமல் அவர் கைகளை இறுகப் பற்றியபடி வெளியில் வந்தார்
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள் .இருவருக்கும் இடையில் ஒரு மௌனம் நிலவியது. மௌனத்தைக் கலைக்க நினைத்த சாரதி  " பதில் சொல்றதா சொன்னீங்க " என்று இழுத்தார் .
" கண்டிப்பா .. நான் என்னோட வாயால் சொல்வதைவிட நீங்களே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் .இன்று முழு நிலவு நாள் .. அதாவது பௌர்ணமி .. இன்று என்னை வழிபட ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவர்களில் ஒரு சிலரின் மனதுக்குள் நினைப்பது என்ன ? வேண்டிக் கொள்வது என்ன  என்பதை அறியும் சக்தியை உங்களுக்குத்    தருகிறேன். அறிந்து கொண்ட விசயத்தை எனக்கு சொல்ல வேண்டும் "  என்று அவர் சொன்னதுமே உற்சாக துள்ளல் ஒன்று வெளிப் பட்டது சாரதியி டமிருந்து.
கிட்டத் தட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு அலுத்துக் களைத்துப் போய்  வந்து நின்றார் சாரதி
" ஏன் இத்தனை களைப்பு ? "
" தலையே சுத்துது ! "
" ஏன் ? "
" போதும்டா சாமி .. பக்தர்களில் ஒருவர் போலீஸ்காரர். தனக்கு நிறைய கேஸ் கிடைக்கணும்னு  வேண்டிக்கிட்டார். ஒரு பக்கத்திலே ஒரு திருடன் தனக்கு தொழில் நல்லா நடக்கணும் யார்கிட்டேயும் எப்பவும் மாட்டிக்கக் கூடாதுன்னு வேண்டிகிட்டான். ஸ்கூல் குழந்தைங்க, அவங்க நல்லா பரீட்சை எழுதி நிறைய மார்க் வாங்கி பாஸ் ஆகணும்னு வேண்டிக் கிட்டாங்க . ஒருத்தர், டுடோரியல்  காலேஜ் வச்சு நடத்தறவராம். அவர் காலேஜ்க்கு நிறைய பேர் வந்து சேரணும்னு வேண்டிகிட்டார் . நோய் நொடி இல்லாமே நல்லா இருக்கணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டாங்க. தன்னோட கிளினிக்கு நிறைய  பேசண்ட்ஸ் வரணும். கிளினிக் மூணாவது ப்ளோரை இந்த வருஷம் கட்டி முடிச்சிடணும்னு ஒரு டாக்டர் வேண்டிகிட்டார்.  மழை வேணும்னு விவசாயிகள் வேண்டிக்கிறாங்க .மழை வந்தால் இயல்பு வாழ்க்கை வியாபாரம் கேட்டுப் போயிடும்னு கொஞ்ச பேர் வருத்தப் படறாங்க. உலகம் பூரா அமைதி நிலவணும்னு  கொஞ்ச பேர் வேண்டிகிட்டா , " எல்லாத்தையும் அழிச்சிட்டுதான் மறுவேலைன்னு ஒரு கும்பல் கூச்சல் போடுது மனசுக்குள்ளேயே  ... " என்று சாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, " சரி .. இவங்க வேண்டுதல் உங்களை எப்படி சிந்திக்க வைக்கிறது ? " என்று கேட்டார் கடவுள்
" என்னத்தை சொல்றது ? அத்தனைபேருமே அவங்க நினைக்கிறது நியாயம் , அது நடக்கணும்னு  தானே வேண்டிக்கிறாங்க ... அம்மாடி ....நீ எப்படி இதை சமாளிக்கப் போறே ? "
" அதை விட்டுத் தள்ளுங்க. இப்போ இங்கிருந்தே சில காட்சிகளை நீங்க பார்க்கும்படி செய்றேன் .  அதோ பாருங்க என்று கைகாட்டிக் காட்டிய இடத்தில் , ஒரு அம்மா, ஒரு சிறுவனை அடித்துக் கொண்டிருந்தாள்
" ஏம்மா பச்சைப் புள்ளையப் போட்டு அடிக்கிறே ? " என்று கேட்டது தெருவில் நின்ற " திருவாளர் பொதுஜனம் "
" திருட ஆரம்பிச்சிட்டான் .. நான் , மாடு மாதிரி வேலை  பார்த்துட்டு வந்து இவனை ராஜா  மாதிரி உட்கார வச்சு சோறு போட்டு இஸ்கூல்க்கு  அனுப்பறேன் இவன் என்னடான்னா ஸ்கூல் மிஸ் பணத்தையே திருடி இருக்கிறான் . அவங்க நல்லவங்களா இருக்கப் போய் கண்டிச்சு விட்டுட்டாங்க. இல்லாட்டி படிப்பு பாழாகி  இருக்கும் " என்று சொல்லி விட்டு மேலும் அடிக்க ஆரம்பித்தாள்
" அட விடும்மா . ரெண்டும் கெட்டான் குழந்தைங்க . இந்த வயசில் அப்படி இப்படித் தான் இருக்கும். போக போக சரியாயிடும். இதுக்குப்போய் கண்மண் தெரியாமே அடிக்கிறியே " என்று ஒரு பெரிசு சொல்ல , அம்மா அடிப்பதை நிறுத்திக் கொண்டாள்
" சரி இப்போ .. அதோ அந்த இடத்தைப் பார் " என்று கடவுள் கை நீட்டிக் காட்டிய இடத்தில்  ..... ரத்த வெள்ளத்தில் ஒருவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க , அதை சிறிதும் பொருட் படுத்தாமல் மற்றவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள் . " ஏய் நான் போய் என்னனு பார்த்து அவனுக்கு ஒரு வாய் தண்ணியாவது கொடுக்கட்டுமா  ? " என்று கணவன் கேட்க, " வாயை மூடிகிட்டு சும்மா வாங்க . இவனுக்கும் குத்தினவனுக்கும் என்ன தகராறோ ஏதோ . அவன் ஆத்திரப் படற அளவுக்கு இவன் என்ன செய்தானோ ? கத்தி எடுத்தவன் கத்தியாலேயே அழிவான்னு  சும்மாவா சொல்லி இருக்கிறாங்க " என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள்
" அதோ அந்த இடத்தைப் பார் " என்று கடவுள் சொல்ல " போதும்டா சாமி , இதுக்கு மேலே என்னாலே எதையும் பார்க்க முடியாது  " என்றார் சாரதி
" உலகத்தில் நடக்கிற சில தப்புகளை நீங்களே நியாயப் படுத்தும்போது, அதை அநியாயம்னு நான் ஏன் நினைக்க வேண்டும். மனிதர்களாகிய நீங்களே அக்கிரமத்தை நியாயப் படுத்தி பொறுமை காக்கும்போது , தாய்மை குணம் படைத்த நான் ஏன் கொதித்தெழுந்து தண்டிக்க வேண்டும் ? "
" போதும் .. போதும் .. எதுவும் வேண்டவே வேண்டாம் " என்றார் சாரதி
" என்னங்க இது ! வெறும் காபி மட்டுந்தானா, அதைக் கொண்டா இதைக் கொண்டானு ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்க .நான் காபி கலக்க இப்பத்தான் ஆரம்பிச்சேன் அதுக்குள்ளே  எதுவும் வேண்டாம்னு சொல்றீங்க ? " என்று   அவரைத் தட்டி எழுப்பிக் கேட்டாள் பாகீரதி
" எங்கேடி அவர் ? "
" யாருன்னா ? "
" கடவுள் ? "
" ஏதாவது சொப்பனம் கண்டேளா ? இப்படிப் பிணாத்தறேள், கடவுள் அது இதுன்னு ? கடவுள் எப்பன்னா நேரில் வந்தார் இப்ப வாறதுக்கு ?  போதும் யாராவது கேட்டால் சிரிக்கப் போறா . கைகால் முகம் அலம்பிண்டு வாங்கோ காபி கலந்து தர்றேன் . சாபிட்டுட்டு கோவிலில் போய் பகவானைப் பார்த்துண்டு வாங்கோ " என்று சொல்லியபடி காபியை எடுத்து வர  சமையலறைக்கு செல்ல சாரதி சிந்தனையில் ஆழ்ந்தார் 

No comments:

Post a Comment