நல்லா இருந்து யார் பொழைச்சா ? அந்த
நாணயத்தை இங்கு யார் மதிச்சா ?
நாணயத்தை இங்கு யார் மதிச்சா ?
" செல்வம், கையில் கொண்டு போக வேண்டியதை எல்லாம் செக் பண்ணி எடுத்து வச்சிட்டியா "
" ஆமாம்மா "
" எதுக்கும் சீக்கிரமே கிளம்பிப் போயிடுப்பா "
" சரிம்மா "
" கவனமா நடந்துக்கோப்பா. யார் கிட்டேயும் தேவையில்லாமே வாக்கு வாதம் வச்சுக்காதேப்பா "
" சரிம்மா "
" செல்வா, அம்மா திரும்பத் திரும்ப சொல்றேன்னு நினைக்காதே. நம்மாலே யாரையும் திருத்த முடியாதுப்பா. புத்தன், இயேசு, காந்தி இவங்கள்லாம் புத்திமதி சொல்லி திருந்தாத உலகம், நீ சொல்லியா திருந்தப் போகுது. நம்மைப் பொறுத்தவரை, நம்ம மேலே தப்பு இல்லாதபடி நடந்துக்குவோம். வேறே எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் நாம கவலைப் படவேண்டாம்.
" சரி "
" சாப்பாடை எடுத்து வச்சுக்கலையே. என்ன வேலை இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிடு. நாம ஓடி ஓடி உழைக்கிறதே இந்த ஒரு சாண் வயித்துக்காகத்தான். அதப் பட்டினி போட்டுடாதே. பூஜை ரூமில் சாமியை நமஸ்காரம் பண்ணி நெத்திக்கு விபூதி இட்டுக்கோ "
" சரிம்மா " என்று சொல்லி பூஜை அறைக்கு சென்ற செல்வம், சாமி படத்துக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன் வெளியில் வந்தான்.
" என்னடா இது ? நெத்திக்கு விபூதி பூச சொன்னா, இப்படி சாமியார் சந்நியாசி மாதிரி பட்டை போட்டுக்கிட்டு வந்து நிற்கிறியே " என்று கடிந்து கொண்ட ராதா, தனது புடவைத் தலைப்பால் அவனது நெற்றியில் மிகுந்திருந்த விபூதியை துடைத்து எடுத்தாள்
" நான் வர்றேன்ம்மா .. அப்பா நான் வர்றேன் " என்று சொல்லி வெளியேறினான் செல்வம்
வாசல் வரை வந்து வழியனுப்பிய ராதாவிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப் பட்டது . மேஜை மீதிருந்த டிபன் பாக்ஸைப் பார்த்ததும் பதறிப் போய் " இவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொல்லியும் சாப்பாட்டு பாக்ஸை எடுக்க மறந்து போய் விட்டானே " என்றாள், பேப்பர் படித்துக் கொண்டிருந்த முத்துராமனிடம்.
"உன் பிள்ளைக்கு மத்தியானம் வரை கூட அந்த கம்பெனியில் தாக்குப் பிடிக்க மாட்டோம்கிறது தெரிஞ்சிருக்கும் . எதுக்கு வீண் சுமை . வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கலாம்னு நினைச்சு வச்சிட்டுப் போயிட்டான் போலிருக்கு " என்றார்
" அவனை கரிச்சு கொட்டாட்டா உங்களுக்கு தூக்கம் வராதே "
" ஏண்டி, தெரியாமேதான் கேட்கிறேன். இது அவன் போகிற எத்தனையாவது கம்பெனி ? "
" தப்பு எல்லாம் நம்ம மேலேதான். நம்ம பிள்ளையை ஒழுக்கமான, நீதி நேர்மைக்குக் கட்டுப் படற நல்ல பிள்ளையா வளர்க்க நெனைச்சு. புராணக் கதைகள் நீதிக் கதைகள்னு அவன் தலையில் திணிச்சோம். அதை அவன் அப்படியே மனசிலே உருப் போட்டுக்கிட்டு நேர்மையா நடக்கணும்னு நினைக்கிறான். உலகம் பூராவும் எல்லாரும் நல்லவங்களா இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லே, எல்லோரும் கெட்டவங்களா இருந்துட்டாலும் பிரச்சினை இல்லை .நல்லவனுக்கும் நல்லவனுக்கும் ஒத்துப் போகும். கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒத்துப் போகும். எங்காவது நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் ஒத்துப் போகுமா ? செல்வத்தோட பிரச்சினையே அதுதான். "
" எவன் எக்கேடு கேட்டுப் போனா என்ன ? நம்ம டுயூடியை நாம பார்த்துட்டு வந்துகிட்டே இருக்கணும்னு அவனுக்கு இனிமே கதை சொல்லு " என்றார் முத்து ராமன் கிண்டலாக.
" எல்லாம் நேரந்தான் "
குறித்த நேரத்தில் அலுவலகம் வந்து சேர்ந்த செல்வம்,அங்குள்ள தலைமை அதிகாரியிடம், வேலையில் சேர சொல்லி தனக்கு வந்த கடிதத்தை எடுத்து
நீட்டினான்
அலுவலக விதிமுறைகளை அவனுக்கு விவரித்த அதிகாரி " உங்களுக்கு ஸ்டேஷனரி ஐட்டங்களை, ஐ மீன் , பென், பென்சில் , கால்குலேட்டர் இதை எல்லாம் கேட்டு வாங்கிக்கோங்க. உங்க வொர்க் என்னெங்கிறதை இங்குள்ள ஸ்டாப் சொல்லுவாங்க " என்றார்
" எனக்கு தேவையான ஸ்டேஷனரி ஐட்டங்களை, நான் வீட்டிலிருந்து கொண்டு வந்து விட்டேன் " என்றான் செல்வம்
" என்ன ? " என்று கேட்டு வியந்து போனார் அதிகாரி
" நம்ம தேவைக்கு நாம கேட்போம். இதைத் தான் தருவேன், அதைத் தான் தருவேன்னு ரூல்ஸ் பேசுவாங்க. இந்த வம்பெல்லாம் வேண்டாம்னு நானே கையில் எனக்கு தேவையானதை கொண்டு வந்துட்டேன் "
இதைக் கேட்டு சிரித்த, அருகிலிருந்து மற்றொருவர் " ஆபீஸ் வொர்க்க்கு தேவையானதை வீட்டிலிருந்து கொண்டு வர்றவங்க, வீட்டுக்குத் தேவை யானது ஆபீசில் இருந்தால், அதை கொண்டு போக மாட்டாங்க என்பது என்ன நிச்சயம் ? " என்றார் வேடிக்கைக்காக.
ஒரே ஒரு நிமிடம் தயங்கிய செல்வம், " ஸார், அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் .எனக்கு இங்கு சரிப் பட்டு வராது. நீங்க அனுப்பிய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இதோ. நான் கிளம்பறேன் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர , அதிகாரிகள் இருவரும் வாயடைத்து போய் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்
No comments:
Post a Comment