Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 01, 2013

Scanning of inner-heart ( scan Report No.60 )

          பெத்த மனசு, அது பித்தத்திலும் பித்தமடா !

" வத்ஸலாம்மா, நீங்க இங்கேயா இருக்கீங்க ? அது தெரியாமே ஒவ்வொரு இடமா சுத்திட்டு வரேன் " என்ற குரல் கேட்டு, நாற்காலியில் உட்கார்ந்தபடியே மேஜை மீது கண்மூடி சாய்ந்திருந்த வத்ஸலா நிமிர்ந்து பார்த்தாள்.
கை நிறைய திருமணப் பத்திரிக்கைகளுடன் பியூன் ஜெயபால் நின்று கொண்டிருந்தான்
" என்னப்பா ? என்ன விஷயம் ? என்ன விஷேசம் ? " என்றாள் வத்ஸலா
" ரெஸ்ட் ரூம் டேபிளில் தலையை சாய்த்து படுத்திருக்கீங்களே, உடம்புக்கு முடியலியா ? "
" கொஞ்சம் டயர்டா இருந்துச்சு. வேறே ஒண்ணுமில்லே. நீ வந்த விஷயத்தை சொல்லு "
" பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். கண்டிப்பா வரணும். கண்டிப்பா  உங்க பொண்ணையும் கூட்டிட்டு வரணும். உங்களுக்கெல்லாம் வசதியா இருக்கணும்னுதான் ஞாயிற்றுக் கிழமையிலே  கல்யாணத்தை வச்சிருக்கேன்.காலையில் முகூர்த்தத்துக்கு வந்துடணும். ராத்திரி ரிசெப்சன் முடிஞ்சுதான் போகணும் .  ஆமா .. இப்பவே சொல்லிட்டேன். முகூர்த்தத்துக்கு தலையைக் காட்டிட்டு, காலில் வெந்நீரைக் கொட்டிகிட்ட மாதிரி விழுந்தடிச்சு ஓடற வேலையெல்லாம் கூடாது " என்று கண்டிப்பான குரலில் உரிமையோடு சொல்லியபடி அவள் கைகளில் கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்தான் ஜெயபால்.
" உன் பொண்ணு இப்பத்தானே பிளஸ் டூ முடிச்சிருக்கா .. அதுக்குள்ளே கல்யாணமா ? " என்று வியந்து போய்க் கேட்டாள் வத்ஸலா
" ஆமாம்மா . எனக்குத் தோதா ஒரு நல்ல இடம் வந்துச்சு. பிடிச்சுப் போட்டுட்டேன் " என்றான் குரலில் பெருமை பொங்க
" உன் பொண்ணுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகியிருக்காதே. பதினெட்டு வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி வைக்கிறது சட்டப்படி தப்பு . அது தெரியுமா ?" என்று  கேட்டாள் சிரித்துக்கொண்டே.
" பதினெட்டு வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி வச்சா போலீஸ் வந்து பிடிச்சிட்டுப் போயிடும்தானே ? வத்ஸலாம்மா, நான் ஒண்ணு கேட்கிறேன், பதினெட்டு வயசுக்கு முன்னாடி பண்ணி வச்சா சட்டம் தண்டிக்கும் . ஆனா இருபத்தெட்டு முப்பத்தெட்டு வயசாகியும் கல்யாணத்துக்கு வழியில்லாமே  எத்தனையோ பொண்ணுங்க நிக்குதே, அதுங்களை எல்லாம்  எந்த சட்டம் வந்து கரை ஏத்தும் ? "
" அப்பா .. உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது .ஆளை விடு .எப்பவுமே பெண் குழந்தைகளை  படிக்க வைக்கணும் . கொறஞ்சது, மாசத்துக்கு ஒரு ஆயிரம் ரூபாயாவது  நிரந்தர வருமானம் வரும்படியான வேலையைத் தேடிக் குடுக்கணும். அதுக்குப் பிறகுதான் கல்யாணப் பேச்சை எடுக்கணும். அதுதான்  பெண்குழந்தைகளுக்கு சேப்டி "
" ஏம்மா அப்படி சொல்றீங்க ? "
" இந்தக் காலத்திலே யாருடைய வாழ்க்கைக்கும் ஒரு உறுதியும் இல்லே, உத்திரவாதமும் இல்லே. ஒரு காலத்திலே " அரைக் காசு உத்தியோக மானாலும்  அரசாங்க உத்யோகம்"னு கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கிறவங்களுக்கு பொண்ணு குடுத்தாங்க, எந்த அளவுக்கு வேணுமானாலும் சீர் செனத்தி குடுத்து.  கவர்ன்மெண்ட் ஆபீசில் வேலை பார்க்கிற பெண்ணா தேடித் பிடிச்சாங்க எந்த சீர் செனத்தியையும் எதிர் பார்க்காமே . காரணம், ஆள் இருந்தாலும் போனாலும் வருமானம் மட்டும் நிரந்தரம்னு கணக்குப் போட்டு.இப்போ, வேலையில் இருக்கிற வரை தான்  சம்பளம். ரிடயர் ஆனபிறகு பென்சன் எதுவும் கிடையாதுன்னு கவர்ன்மெண்ட் சட்டம் கொண்டு வந்துட்டுது. அதனால் வருமானம் நிரந்தரம் இல்லேங்கிற நிலைமை வந்துட்டுது. பிரைவேட் கம்பெனியில் முதலாளிக்கு ஏதாவது ஒரு 
வகையில் நஷ்டம்னா உடனே ஏதோ ஒரு அமௌண்ட் குடுத்து தொழிலாளிகளுக்கு வேலையில்லேன்னு சொல்லிடறாங்க. கம்பெனியை  இழுத்து மூடிடறாங்க. அடுத்தாப்லே ஒரு வேலையைத் தேடி உட்காரும்வரை  அந்த வீட்டிலுள்ள ஒரு பெண் ஏதோ ஒரு வேலை பார்க்கிறவளா இருந்தா அந்த குடும்பம் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கும். இன்னொன்னும் சொல்றேன் . நெருப்புன்னு சொன்னா வாய் வெந்திடாது. உனக்கு சொல்றேன்னு நினைக்காதே . பொதுவா சொல்றேன். இன்னைக்கு இருக்கிற விலைவாசியில், வருகிற வருமானத்தில் கொஞ்சம்கூட சேமிக்க முடியறதில்லே . கடன் வாங்காமெ காலத்தை ஓட்டினா அதுவே பெரிய விஷயங்கிற  அளவுக்கு நிலைமை வந்திட்டுது. இப்போ ஒரு குடும்பத்திலே சம்பாதிக்கிற ஆம்பிளை செத்துட்டான் , இல்லாட்டி வேறே ஒரு பொண்ணுகூட சகவாசம் வச்சுகிட்டு கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு ஒட்டிட்டானு  வச்சுக்கோ, அந்த வீட்டுப் பொண்ணு கையில் ஒரு நிரந்தரமான  வருமானத்துக்கு வழியிருந்தா, உறவுகள் மத்தியில் உதாசீனப் படாமே சொந்தக் காலில் நின்னு கௌரவமா பொழைச்சுக்குவா. அப்படியில்லேங்கிற நிலைமையிலே அந்த குடும்பத்தோட நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உலகத்திலே நாலு பேர் வாயில் விழுந்து எழுந்திருக்காமே கௌரவமா வாழ ஒரு நிரந்தர வருமானம் வேணும்  " என்று வத்ஸலா சொல்லும்போதே. நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் ஜெயபால் 
" ஏம்ப்பா சிரிக்கிறே ? "
" அட நீங்க ஒண்ணு, வேலை பார்த்து வயித்தை கழுவுறவங்களை எல்லோரையுமேவா கவுரவமாப் பார்க்கிறாங்க? நீங்க தினமும் பத்திரிக்கை படிக்கிறீங்க. சினிமா டிவி பார்க்கிறீங்க, அதிலெல்லாம் நகைச்சுவைங்கிற பெயரில் எந்த அளவுக்கு பொம்பளைங்களை கேவலப் படுத்துறாங்கனு தெரியாதா உங்களுக்கு? ஆபீசில் வேலை பார்க்கிற பொண்ணா இருந்தா அவ ஆபீசர் கூட சேர்ந்து கூத்தடிக்கிறாப்லே ஜோக் எழுதுறாங்க. நாலு வீடுகளில் வேலை பார்த்து கௌரவமா பொழைக்கிற பொம்பளைங்க எத்தனை பேர் இருக்கிறாங்க. வீட்டு வேலை பார்க்கிற பொம்பளை அந்த வீட்டு முதலாளி கூட கூத்தடிக்கிறாப்லே  கதை எழுதறாங்க. இதையெல்லாம் விடுங்க. இப்போ ஆஸ்பத்திரியை எடுத்துக்கோங்க. நம்ம வீட்டில் உள்ள ஒருத்தரையோ அல்லது நமக்கு வேண்டிய யாரோ ஒருத்தரையோ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்து அவங்களை நாம பார்க்கப் போயிட்டு வந்தா, கொறஞ்சது ஒரு நாலு நாளைக்கு நமக்கு சோறு தண்ணி இறங்க மாட்டேங்குது . வாய்கிட்டே எதைக் கொண்டு போனாலும் ஆஸ்பத்திரி நாத்தம்தான் அடிக்கிறாப்லே இருக்கு. ரத்தம், நோயாளி , முக்கல் முனகல் மருந்து நெடி இதுதான் ஞாபகத்துக்கு வருது. நம்ம உடம்பு, நம்ம துணிமணி நாறுகிறமாதிரி ஒரு பீலிங் நமக்கு வருது. அத்தனைக்கும் மத்தியில்தானே டாக்டர்ஸ் நர்ஸ் மத்த எல்லோரும் வேலை பார்க்கிறாங்க தினமும். ஆனா டாக்டர்ஸ் நர்ஸ்கூட  கூத்தடிக்கிறாப்லே ஜோக்ஸ் வரத்தானே செய்யுது. வேலைக்கு போகிற எல்லோருமா கெட்டுப்  போறாங்க. அந்த ஜோக்ஸ் படிக்கிறவங்க எதோ ஒரு சூழ்நிலையில் அவங்க வீட்டுப் பொம்பளைங்களை அந்த இடத்தில் வைத்துக் கற்பனை செய்து பார்த்தால் அவங்க மனசு என்ன பாடுபடும் ? சிலசமயம் சந்தேகத்தால் குடும்பமே சிதறிப் போயிடுமே. அம்மா, இந்த உலகம் இருக்கே இது உருப்படியா யாரையும் வாழவிடாது . அதான் அந்தக் காலத்திலேயே ஒருத்தர்  " வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் "ன்னு  இந்த உலகத்தைப் பத்தி  சரியாப் புரிஞ்சுகிட்டு பாட்டெழுதிட்டுப்  போயிட்டாரு . உலகத்தைப் பத்தியோ அது தரப் போற கௌரவத்தைப் பத்தியோ கவலையே படாதேம்மா. தர்ம நியாயத்துக்கு கட்டுப் பட்டு உன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ  உனக்கு எது சரிப் பட்டு வருமோ அதை செஞ்சிட்டு போய்க்கிட்டே இரும்மா. சரிம்மா நான் கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஜெயபால்.
அவன் போன பிறகு, மழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி அங்கு நிலவியது. நினைவுகள் பின்னோக்கி ஓடியது. நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில்  " தலைச்சனாக " தலையெடுத்து  வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் போராடிய போராட்ட காலங்கள் இன்னும் அவளுக்குள் பசுமையாக இருந்தது. ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தவளை கல்யாண வலையில் கொண்டு போய்  தள்ளினார் அப்பா. வத்ஸலாவின் கண்ணீர், போராட்டம் எதுவும் அப்பாவின் மனத்தைக் கரைக்கவில்லை, " மூத்த பொண்ணா லட்சணமா  நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோம்மா. உங்கள் எல்லாரையும் சீர்செனத்தியோட கல்யாணம் செய்ஞ்சு அனுப்பற அளவுக்கு நான் ஒன்றும் லட்சாதிபதி இல்லே. முடிஞ்ச அளவுக்கு ஒவ்வொருத்தரையும் வீட்டை விட்டு அனுப்பணும், ஒரு நயாபைசா கூட எதிர் பார்க்காமே ஒரு வரன் வருது. இதைவிட்டா அடுத்த சான்ஸ் வருமா என்பது தெரியாது.கையில் ஒரு கிளை வந்து மாட்டும்போது  கப்னு பிடிச்சுகிட்டு சட்டென்னு முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம் என்று புத்திமதி சொன்ன அப்பாவிடம் "அப்பா. எனக்கு கல்யாணம் முக்கியமே இல்லை. முதலில் ஒரு வேலை தேடிக்கிறேன். உங்க பாரத்தை நானும் பகிர்ந்துக்கிறேன். தம்பி தங்கைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறேன்" என்று சொன்னபோது, " கேட்க நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு சரிப்பட்டு வருமான்னு தெரியலே. நீ எனக்கு யோசனை சொல்றதை நிறுத்திட்டு நான் சொல்றதைக் கேளு" என்றார்  கல்யாணம் முடிந்து புகுந்த வீடு போன பின்புதான் தெரிந்தது, புருஷன் ஒரு  ஸ்திரீ லோலன் என்பதும் . கால்கட்டு போட்டால் திருந்திவிடுவான் என்ற நினைப்பில் அவனுக்கு வீட்டில் பெண் தேட அவன் யோக்கியதை தெரிந்து யாருமே பெண் தர தயாராக இல்லாத சூழ்நிலையில்தான்,கல்யாணம் வலையில் இவள் வந்து விழுந்த விஷயமும் இது பற்றி அப்பாவிடம் சொன்னபோது " பெரிய இடத்துப் பிள்ளை. அப்படி இப்படித்தான் இருப்பான் . இதையெல்லாம் பெரிசு பண்ணாமே புத்திசாலித் தனமா பிழைக்கப் பாரு " என்றார். வீட்டிலிருந்த மாமனார் மாமியாரோ " இதோ பாரும்மா அவனுக்கு ஒரு பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்ததோட எங்க கடமை முடிஞ்சுது. இனி " உன்பாடு அவன் பாடு ". நாங்கள் எதிலும் தலையிட மாட்டோம் என்றார்கள்
நாளாக நாளாக அவன் ரகளை அதிகரித்ததே தவிர, திருந்துவான் என்ற நம்பிக்கை போய்விட்டது. குடித்துவிட்டு வந்து அடித்தது, சிகரெட் நெருப்பால் சுட்டது, யாராவது ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இவர்கள் பெட்ரூமில் அவர்களோடு சேர்ந்து கூத்தடித்தது எல்லாவற்றையுமே மறந்து மன்னித்துவிட வத்ஸலா தயாராகத்தான் இருந்தாள். ஆனால். குளித்துவிட்டு ஈரப் புடவையுடன் வெளியில் வரும்போது  மொஸைக் தரையில் கால் வழுக்கி கீழே  விழ இருந்தவளை அங்கு தரை துடைத்துக் கொண்டிருந்த வேலைக்கார தாத்தா, ஓடி வந்து தாங்கிப் பிடிக்க, அந்த நேரம் அங்கு வந்த சங்கர் " ஏண்டி, வீட்டுக்குள் உனக்கொரு கிழட்டுப் புருஷன் தேவையா இருக்குதா ? நீ எனக்குப் புத்தி சொல்றே ? " என்று இரைந்தபோது, அதைக் கேட்டு இருவருமே நொறுங்கிப் போனார்கள்.
" தம்பி. தப்பா பேசாதீங்க . அது என் பேத்தி மாதிரி. கீழே விழப் போச்சு ..." என்று சொன்ன வேலையாளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்ட சங்கர், "ஓஹோ , வேலிக்கு ஒணான்  சாட்சியா ? " என்று கேட்டு இருவரையுமே கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினான். தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. மாமனார் மாமியார் வழக்கம்போல மௌன விரதம் இருந்தார்கள்.
பிறந்த வீட்டில் அப்பா நடையேற்ற மாட்டார். உதவியென்று ஓடிவந்து செய்ய எந்த நட்பு வட்டமும் கிடையாது. எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் பிரமித்து  நிற்கும்போது, யாருமே எதிர்பாராத வகையில் வத்சலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு " வாம்மா, வீட்டுக்குள் இருந்துகொண்டு அசிங்கப் பட்டு வாழ்வதைவிட வெளியில் கௌரவமாகப் பிழைக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு அநாதை விடுதி இருக்கு. நான் சொன்னா அங்குள்ள அம்மா  மறுக்க மாட்டங்க. இங்கே செய்ற வேலையை அங்கே செய்துகிட்டு நல்லபடியா இரு" என்று அழைத்து சென்று விடுதியில் சேர்த்து விட்டார். விடுதியில் வந்து சேர்ந்த தினத்தில்தான் தெரிந்தது அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம். இனி எனக்கென்று எந்த  கணிப்பும் கிடையாது. விதி என்னை எங்கெங்கு அழைத்து செல்கிறதோ அங்கெல்லாம் செல்ல நான் தயார் என்ற நிலைக்கு தன்னைத் தயார் செய்து கொண்டாள்  வத்சலா.
விடுதியில் வேலை செய்து கொண்டே பகுதி நேரப் படிப்பை முடித்து, ஒரு நல்ல வேலை தேடிக் கொண்டு தனி வீடு பார்த்து வெளியேறியது, உதவிக்கு ஒரு ஆயாவை வைத்துக் கொண்டு குழந்தை கமலியை கல்லூரிப் படிப்பு வரை கொண்டு வந்து  சேர்த்திருப்பது , இதை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால் ஏதோ சினிமாக் கதை போலத்தான் இருந்தது . இது அத்தனையும் தனது வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வேதனை ஆச்சரியம் அத்தனையும் சேர்ந்தே வந்தது. இத்தனைப் போராட்டங்களுக்கு நடுவிலும் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கிறதென்றால் அதற்க்கு ஓரே ஒரு காரணம் அவள் பெண் கமலிதான்.
" மே ஐ கம் இன் " என்ற கேள்வியுடன் கதவு தட்டப் படுவது கேட்டு பழைய நினைவலைகளில் இருந்து வெளியேறி, " உள்ளே வா. இது என்ன பார்மாலிட்டி புதுசா ? " என்றாள், வருவது அவளுடைய தோழி மெலிதா தான் என்பதை அறிந்தவளாக.
" நீ வந்திருப்பது ஜெயபால் சொல்லித்தான் எனக்குத் தெரியும். நீ லீவ் அப்ளை பண்ணியிருந்தேதானே. இரு ரெண்டு காபிக்கு ஆர்டர் பண்ணிடறேன் " என்று சொல்லி இண்டர்காம் எடுத்து  காண்டீன் ஐயரைக் கூப்பிட்டு " ரெண்டு காபி சூடா வேண்டும். வேறு ஏதாவது சூடா இருந்தாலும் எடுத்திட்டு வாங்க. அதுக்காக ஸ்டவ்வை தூக்கிட்டு வந்துடாதீங்க, இதுதான் சூடா இருக்குன்னு " என்று மூச்சு விடாமல் பேசியவள் ஒரு சேரை இழுத்துப் போட்டு வத்சலா அருகில் வந்து அமர்ந்தாள்
" சொல்லு , லீவை கான்சல் பண்ணிட்டியா ? "
" லீவில்தான் இருக்கிறேன். மனசு சரியில்லே "
" அட அது என்னிக்குதான் சரியா இருந்தது ? யாருக்கு இருந்தது ? டாக்டரைப் பார்க்கப் போறதா சொன்னே. போனியா ? என்ன சொன்னார் ? "
" போனேன். அவர் நெக்ஸ்ட் வீக் பாரீன் போறாராம். திரும்பி வர ஆறுமாதம் ஆகுமாம். அதனால் இந்த வாரத்தில் எப்போ வேணும்னாலும் வந்து அட்மிட் ஆகலாம்னு சொன்னார் . அட்மிட் ஆன மறுநாள் ஆபரேஷன் வச்சுக்கலாம்னு சொன்னார். ஆபரேஷனை தள்ளிப் போட்டா, பின்னாடி அது வேறே மாதிரி பிரச்சனைகளில் கொண்டுபோய் விடும்னு சொல்றார். வீட்டுக்குப் போய் யோசனை பண்ணி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு ஆறு மாசம் கழிச்சு வச்சுக்கலாமான்னு யோசிக்கிறேன் ."
" இதுலே யோசிக்க என்ன இருக்கு ? பணத்தை ஏன் வீண் செலவு பண்ணனும்னு வீட்டுக்குப்போய் கணக்குப் போட்டுப் பார்த்தியா ? "
" வீட்டில் எனக்கும் கமலிக்கும் ரெண்டு நாளா ஒரு சின்ன பிரச்சினை. அது இன்னிக்குக் காலைலேயும்  கண்டினியு ஆச்சு. அதான் வீட்டில் இருக்கப் பிடிக்கலே. கிளம்பி ஆபீஸ் வந்துட்டேன் "
" என்னனு விவரமா சொல்லித் தொலையேன்டி "
" காலேஜில் அவ குரூப் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் டூர் போறாங்களாம். இவளும்  போகணும்னு அடம் பிடிக்கிறா "
" அனுப்பிடறதுதானே ? "
" இவ கொஞ்சம் " துறுதுறு  " டைப். எந்த ஒரு விஷயத்திலும் அதன் சீரியஸ்னஸ் தெரியாது. அவ போகப்  போறேன்னு சொல்றது மகாபலிபுரம். இவளுக்குத் தண்ணீரைக் கண்டால் அப்படி ஒரு குஷி கிளம்பிடும். மெரினாவில் என் கண் முன்னில் கடலில் இறங்கினாலே லேசில் வெளியில் வராமல் ஆட்டம் போடுவாள் . அங்கு ரோந்து வரும் போலீஸ் காரர்களிடம் சொல்லி அவளை மிரட்டி வெளியில் கொண்டு வர சொல்வேன். அப்படியிருக்கு காலேஜ் பசங்க சேர்ந்து போறபோது கும்மாளம் கொண்டாட்டத்துக்கு அளவே இருக்காது. அதுவும் மகாபலிபுரம் பீச், நம்ம மெரினா மாதிரி கிடையாது . ஆழம் அதிகம். இவளுக்கு பதினெட்டு வயசில் ஒரு கண்டம் இருக்குனு ஒரு ஜோசியர் சொல்லி இருக்கிறார் . அடிக்கடி பேப்பரில் படிக்கிறோமே , அந்தக் கடலில் மூழ்கி அத்தனை மாணவர் சாவு , இந்தக் கடலில் மூழ்கி இத்தனை மாணவர் சாவுன்னு. அது நினைவுக்கு வந்து என்னை மெண்டல் டார்ச்சுர் பண்ணுது அதான் வேண்டாம்னு சொல்றேன். அடம் பிடிக்கிறா."
" உன் பயத்தை எடுத்து சொல்றதுதானே ? "
" சொன்னால் கேட்பான்னு நினைக்கிறியா ? என்னை , என் பயத்தைக் கிண்டல் பண்ணுவா  "
இண்டர்காம் ஒலிக்கும் சத்தம் கேட்டு  ஓடி சென்று ரெசீவரைக் கையில் எடுத்த மெலிதா, கவலை தோய்ந்த முகத்துடன் பேசிவிட்டு. வத்சலா அருகில் வந்து " வா, ஆஸ்பிடல் வரை போய் வரலாம் " என்றாள்
" இப்ப எதுக்குடி ? " என்றாள்
" கேள்வி கேட்காமே என்னோட வா " என்ற மெலிதா, வத்சலாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை வெளியே அழைத்து வந்து, ஆட்டோ ஒன்றை நிறுத்தி வலுக் கட்டாயமாக ஏற்றினாள்
ஜீ.ஹெச் வாசலில் ஆட்டோ நின்றது .கீழே இறங்கியவுடன் ஒரு மர நிழலுக்கு வத்சலாவை அழைத்து சென்ற மெலிதா, " வத்சூ, டென்சன் ஆகாதே . உன் பொண்ணு பாய்சன் சாப்பிட்டு சூஸைட் பண்ண முயற்சி பண்ணி இருக்கிறா. காலேஜில் உள்ளவங்க அவளை இங்கே அட்மிட் பண்ணி இருக்கிறாங்க. போன் பண்ணினது அவளோட ப்ரின்சி. விஷயம் தெரிஞ்சு போலீஸ்காரங்க வந்து தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம், காதல் தோல்வியா, 'அதுவா. இதுவா'ன்னு  கேட்டு குடையறாங்கலாம். டூர் போக வீட்டில் அனுமதிக்கலேன்னு அவ கைப் பட லெட்டெர் எழுதி வச்சிருக்காளாம். அதை நம்ப மறுக்கிறாங்களாம் " என்று சொன்னாள்
அதைக் கேட்டு ஒரு விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்த வத்ஸலா, வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.
" இதோ பாரு வீட்டில் நடந்ததை போலீஸ் நம்பும்படி நீதான் பக்குவமா எடுத்து சொல்லணும். ஏதாவது இட்டுக் கட்டி எழுதி, பேப்பரில் நியூஸ் வந்துவிட்டால் அவளோட  பியுசர் பாழாயிடும். அதுமட்டுமில்லே, அந்த ப்ரின்சி மேடம் போன் பண்ணும்போதே  "இப்படி ஒரு பொண்ணு எங்க காலேஜுக்கு வேண்டவே  வேண்டாம்"னு கத்தினாங்க. அவங்களையும் கன்வின்ஸ் பண்ணணும். அவங்க பேசறதை வச்சுப் பார்த்தா உயிருக்கு ஆபத்து இருக்காதுன்னு தோணுது. நீ மனசை திடப் படுத்திகோ. நாம  உள்ளே போகலாம் " என்றாள் மெலிதா எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தாள் வத்சலா.
" அடியே ஏதாவது பேசு .. இல்லே அழவாவது செய். நீ மௌனமா இருக்கிறதைப் பார்த்தா  எனக்குப் பயமாயிருக்கு, உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு "
" இல்லே எனக்கு எதுவும் ஆகாது. இனி ஆகிறதுக்கு எதுவுமே இல்லை. இப்படி ஒரு பைத்தியத்தை பெத்து வளர்த்திருக்கிறேனேனு எனக்கு என் மேலேயே கோபம் வருது. வாழ்க்கையில் எத்தனைப் போராட்டங்களை சந்திச்சு. என்னென்ன அவமானமெல்லாம் பட்டு, வாழ்க்கையையே இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையோடு   தைரியமாப் போராடி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பிறந்த வீடு, புகுந்த வீடு மனுஷங்க துணையில்லாத நிலையிலும் என்னோட சொந்தக் காலில் நின்று போராடி இருக்கிறேனென்றால் அது இவளுக்காகத் தானே? ஒரு சின்ன விஷயத்தில் ஏமாற்றத்தைத் தாங்கமுடியாத இவ, நாளைக்கு  பொய்யும் சூதும் ஏமாற்றமும் மிகுந்த இந்த உலகத்தில் எப்படி வாழப் போறா?  பிறந்ததிலிருந்து இதுவரை எது கேட்டாலும் வாங்கித் தந்த நம்ம அம்மா இன்றைக்கு இந்த டூர் வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இது ஒண்ணும் கம்பல்சரி டூர் இல்லையே ஆப்சனல்தானே என்று நினைக்கும் அளவுக்குக் கூட பக்குவம் இல்லாத ஒரு பொண்ணு இந்த உலகத்தில் எதை சாதிக்கப் போறா?  ஒரு சின்ன ஏமாற்றத்தைத் தாங்க முடியாத இவளுக்கு, மனித உருவில் நம்மை விழுங்க வரும் மிருகங்களை எதிர்த்துப் போராடும் தைரியம் எங்கிருந்து வரும் ? தூங்குகிற தெய்வம் துரத்துகிற மிருகங்களுக்கு நடுவில்தானே நாம வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு பக்குவம் இல்லாத பொண்ணு வாழ்வதைவிட போய்ச்சேருவதே மேல். இதோ பார் மெலிதா, நான் உள்ளே வரவோ அவளைப் பார்க்கவோ விரும்பலே. அவ உயிரோடு இருந்தா அவளை ஏதாவது ஒரு ஆஸ்டலில் சேர்க்க ஏற்பாடு பண்ணு. அவ சம்பாதிக்க ஆரம்பிக்கும்வரை அவளுக்கு செலவழிக்க நான் தயாரா இருக்கிறேன் . செத்துப் போயிட்டான்னா இங்கிருந்தே அவளை பியுனரெலுக்கு  எடுத்துட்டுப் போக ஏற்பாடு பண்ணு  " என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாள் வத்ஸலா
 
        

No comments:

Post a Comment