Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 25, 2013

Scanning of inner-heart ( Scan Report No.59 )

                   பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா !!     
               வீட்டிலிருக்கிறா  சும்மா  சும்மா !!

படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் வடிவு. சிறிது நேரம் எதுவுமே புரியவில்லை. பிறகு " அம்மாடி, வீட்டில்தான் இருக்கிறேன். கடலுக்குள் இல்லை " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ச்சே, என்ன இது கெட்ட கனவு. கடலுக்குள் போவது போலவும் அலையில் மூழ்குவது போலவும் என்று மனது சொல்லும்போது இயந்திரத் தனமாக கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. மணி 5.35.அடடா இவ்வளவு நேரமா தூங்கியிருக்கிறேன். கனவு வந்ததும் நல்லதுக்குத் தான். இல்லாவிடில் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பேனே என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். கலைந்திருந்த துணிகளையும், கேசத்தையும் கைகள் சரி செய்ய கால்கள் பின் பக்கக் கதவைத் திறக்கப் பரபரத்தன.தண்ணீர்த் தொட்டிக்கு மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு விளக்குமாறும் தண்ணீர் வாளியும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.கால்கள் தன்னிச்சையாக பின்னோக்கி நகர்ந்து பிரிட்ஜ் அருகில் செல்ல பிரிட்ஜ்ல் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து வெளியில் வைத்து விட்டு வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டாள்.
காபியை கையில் வைத்துக் கொண்டுதான் ராகவனை எழுப்ப வேண்டும். காபி வாசனையில்தான் அவன் கண்களைத் திறந்து பார்ப்பான். இல்லையென்றால் எரிந்து விழுவான். கணக்குப் பாட டுயூசனுக்குப் போக மாட்டேன் என்று அடம் 
பிடிப்பான். மாணிக்க வாசகம் இவளை இல்லாத நெற்றிக் கண்ணாலேயே சுட்டுப் பொசுக்குவார்.தினமும் காலையில் சொல்லி வச்ச மாதிரி டாண்ணு 5 மணிக்கு எழும்புவேனே. இன்றைக்கென்று இப்படித் தூங்கி விட்டேனே . அவருக்குத் தெரிந்தால்" ஆமாண்டி. முக்கியமான விருந்தாளி நாளைக்கு வரப் போறார்னு நேத்து நான் சொன்னேன்தானே. அதனால் உனக்கு கண்டிப்பா தூக்கம் வரத்தான் செய்யும் " என்று நக்கலாக சொல்வார்.
மாலு ஸ்பெஷல் கிளாசுக்குப் போகணும். 7 மணிக்கெல்லாம் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறப்பாள். டிபன் மீல்ஸ் ரெண்டுமே ரெடி பண்ண வேண்டும். நேற்றைக்கு நாடார் கடை அடைப்பு. காய்கறி வாங்கவில்லை. வாசலில் வண்டியில் காய் கொண்டு வருபவன் 7 மணிக்கு மேலேதான் வருவான். என்ன செய்யலாம் என்று யோசித்த வடிவு, பால் பாக்கெட்டை  பிரித்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் எரிய விட்டாள். அரிசி பருப்பு  சுத்தம் செய்து குக்கரில் வைத்துவிட்டு அடுத்த தெருவுக்குக் காய்கறி வாங்க ஓடினாள். அரக்கப் பறக்க 5 நிமிடத்தில் ஓடிவந்து காபி கலக்கும்போது கிச்சனில் வந்து எட்டிப் பார்த்த மாணிக்க வாசகம் " இன்னுமா காபி கலக்கறே. மசமசன்னு அசமஞ்சம் மாதிரி வேலை செய்யாமே சுறுசுறுப்பா வேலை பாருடி " என்று சொல்லி விட்டு  பாத் ரூமுக்குள் புகுந்து கொண்டார் .
" மாமி" என்ற குரல் கேட்டு வெளியில் வந்தாள் 
" இன்றைக்கு காஸ் வரும் . வாசலில் காலி சிலிண்டர் இருக்கு . இந்த பணத்தைக் கொடுத்துட்டு சிலிண்டரை வாங்கி  உள்ளே வச்சிடுங்க. இன்னிக்கு அவர் டூரில் இருக்கிறார். நான் பஸ்சில் தான் ஆபீஸ் போகணும்.கொஞ்சம் பார்த்துக்கோங்க மாமி " என்று சொல்லிவிட்டு பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் பறந்தாள் பக்கத்து வீட்டு சுந்தரி 
" சரி " என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழையப் போனவளை, " மாமி  நில்லுங்கோ. உங்களைப் பிடிக்கத்தான் ஓடி வர்றேன். இன்னிக்கு கரெண்ட் பில் கட்டணும். ரேஷனில் சாமான் வாங்கணும் . கார்டும் பணமும் பையில்  இருக்கு. உங்க டைம்மை  வேஸ்ட் பண்றேன். ஸாரி மாமி " என்று சொல்லி வடிவின் கையில் பையைத் திணித்து விட்டு மாடிக்கு ஓடினாள் லலிதா 
வீட்டுக்குள் வந்த வடிவு  பம்பரமாக சுழன்று டிபன் சாப்பாடு என்று தயார் பண்ணிக்கொண்டிருந்தாள்.
" மாமி " என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள் 
" இன்றைக்கு சரண்க்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். மத்தியானம் அவனுக்கு நீங்க  சாப்பாடு எடுத்துட்டுப் போகும்போது மறக்காமல் கட்டிடுங்கோ " என்றாள்  லட்சுமி 
யாருடைய அழைப்பும், வேண்டுதல்களும் வடிவை கொஞ்சமும் தொந்தரவு செய்யவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட். அந்தப் பணம் வருவதால் தான் ராகவனையும் மாலுவையும் ஸ்பெஷல் ஸ்டடிக்கு அனுப்ப முடிகிறது. " ஒரே  ஒரு வாய் காபி கொடேன் "   என்று வயிறு    கெஞ்சியது. காபி கலந்து வாயில்  வைக்கும்போது பாத் ரூமிலிருந்து வந்த மாணிக்கக வாசகம் " அடி அசடு ஹாலை சுத்தம் பண்ணு . சோபா விரிப்பை மாற்று " என்று இரைந்தார். கையில்  எடுத்த காபி டம்ப்ளரை அப்படியே வைத்துவிட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள். அடுத்த நொடியே அவை சரி செய்யப் பட்டது.
7.30 க்கு முன்பாக குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற, டூருக்குத் தேவையான  அய்ட்டங்களை தயார் செய்து கொண்டிருந்தார். " காபி ரெடிதானே ? " வழக்கமா என்னோட சாமான் செட்டை கட்டி எடுத்துக் கொண்டு டூர் போவதற்காக ஆபீசர் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பேன். இப்போ புதுசா  வந்திருக்கிற ஆபீசர் ரொம்ப நல்ல மனுஷன். நேற்று என்னை கூப்பிட்டு அவர் வீட்டுக்கு நான் வரவேண்டாம்னும் இங்கே வந்து அவரே என்னைப் பிக் அப் பண்றதாவும் சொல்லிட்டார் " என்று சொன்னார். இதை நேற்றிலிருந்து குறைந்தது பத்து முறையாவது சொல்லியிருப்பார்.
வாசலில் கார் ஹார்ன் கேட்கவும் ஓடி சென்று கதவைத் திறந்த மாணிக்க வாசகம் " வாங்க சார் உள்ளே வரணும் " என்றார் பணிவாக.
" நோ, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன். இவங்க " என்று ஆபீசர் கேட்கும்  போதே " என்னோட வய்ப் " என்று அறிமுகப் படுத்தினார் மாணிக்க வாசகம் 
" வணக்கம்மா " என்று வடிவுக்கு வணக்கம் தெரிவித்த ஆபீசர் " இவங்க என்ன பண்றாங்க ? " என்று ஒரு பார்மாலிட்டிக்காக மாணிக்க வாசகத்தைக் கேட்க, " வீட்டில் சும்மாதான் இருக்கிறாங்க " என்று சொல்லியபடி மாணிக்கவாசகம் காருக்குள் ஏறிக்கொள்ள " வரேன், வணக்கம் " என்ற ஆபிசரின் விடை பெறுதலு டன் கார் பறந்தது.
" அடியே கிராதகி , காலையிலிருந்து நீ எனக்கு எதுவுமே தரலே " என்று வயிறு  ஞாபகப் படுத்தியது." கொஞ்சம் பொறு கண்ணு, இருக்கிற ஒன்றிரண்டு வேலையை முடிச்சிட்டு நிதானமா புல் மீல்ஸ் சாப்பிடலாம் " என்று பசித்த வயிறுக்கு சமாதானம் சொல்ல , " ஆமா. இப்படித்தான் சொல்வே . பிறகு, அடடா மணி ரெண்டாச்சே , மூணாச்சே . வெறும் காபி மட்டும் போதும்னு அதை மட்டும்தான் எனக்கு தருவே" என்று  சண்டை போட்டது . பொறு கண்ணு . வெளியே இருக்கிறவங்க தான் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறாங்கன்னா  நீயும் சேர்ந்து படுத்தினா நான் என்னடா செய்வேன். கொஞ்சம் கோ-ஆபரேட்  பண்ணு என்று சொல்லி ஒரு டம்பளர் பச்சைத் தண்ணீரை அதற்க்குக் கொடுத்து சமாதானப் படுத்தினாள்.
பதினோறு மணிக்குள் ரேஷன் வாங்கிட்டு வந்தால்தான் ஸ்கூல் வேலையை முடித்துவிட்டு தையல் க்ளாஸ்க்கு போக நேரம் சரியாக இருக்கும் என்று மனதுக்குள் கணக்குப் போட்டபடி ரேஷன் கார்டு, பையை கையில் எடுத்துக் கொண்டு கடையை நோக்கி ஓடினாள் வீட்டில் சும்மா இருக்கும் வடிவு.

No comments:

Post a Comment