மழலையென்னும் பள்ளி !
" என்னங்க "
" ம் ..ம் .."
" குழந்தை முழிச்சிட்டானா ? "
" ம் .. ம் .. " என்றான் சங்கர் எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தாமலே .
" அடுப்பிலே பால் வச்சிருக்கிறேன். அதெ விட்டுட்டு வர முடியாது. பால் பொங்கி வழிஞ்சுதுன்னா அடுப்படியை சுத்தம் பண்ற வேலையையும் சேர்த்து செய்யணும். தினமும் ஆபீசுக்கு லேட்டாப் போயி கண்டவன் முன்னாலேயும் பல்லைக் காட்ட வேண்டியிருக்கு. நீங்களும் கூடமாட ஹெல்ப் பண்ணினா நான்,நேரத்துக்கு வேலைக்குப் போவேன். இல்லே பேசாமே வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டோடு இருந்துடறேன். உங்களுக்கு எது சௌகரியம்? " என்றாள் சுபா அடுப்பிலிருந்து பாலை இறக்கிக்கொண்டே. காபி சேர்த்து பிளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டு, டவல் புடவை சோப்பை தேடி எடுத்து கொண்டு, பாத்ரூமுக்குள் நுழையும் முன்பாக ஹாலை ஒரு முறை எட்டிப் பார்த்தாள்.
சங்கர் இன்னும் எதையோ எழுதிக் கொண்டிருக்க குழந்தை அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். கோபம் தலைக் கேறியது சுபாவிற்கு.
" நீங்களும் ... உங்க கதையும் .... நாசமாகப் போக ... என்னவோ நீங்க எழுதிக் குவிக்கிறதெல்லாம் பத்திரிக்கையில் வந்து கிழிச்சிடுற மாதிரிதான் .. நான் சொன்னதை காதில் வாங்காமே அப்படி என்ன எழுத்து வேலை . எழுதி அனுப்பற அத்தனையும் போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடுங்கிற மாதிரி திரும்பி வருது. பேப்பர் செலவு, போஸ்டல் செலவு போதாதுன்னு, திருப்பி அனுப்ப தபால் தலை செலவு வேறே. அத்தனையும் சொல்லி வச்சாப்பிலே, சனிக்கிழமையும் அதுவுமா நான் வீட்டில் இருக்கிற நாளாப் பார்த்து திரும்பி வருது. ஒவ்வொரு முறையும் போஸ்ட் மேன் "ஸார் அனுப்பின கதை பத்திரமா திரும்பி வந்துடுச்சும்மா "ன்னு ஒரு கிண்டல் சிரிப்பு சிரிச்சுகிட்டே கொடுத்துட்டுப் போறான். எனக்கு மானம் போறது. உருப்படியா ஒரு கதை எழுத துப்பில்லே. பேப்பர் பேனா ஸ்டாம்ப் க்கு அழுகிற தண்டத்தை மிச்சம் பிடிச்சாலே போதும்.நாலு நாள் காய்கறி வாங்கலாம். சரி .. அந்த எண்ணம் கூட வேண்டாம்.பொண்டாட்டி ஒருத்தி வீட்டிலே மாடு மாதிரி உழைச்சிட்டு ஆபீசுக்கும் போய் சம்பாதிச்சிட்டு வந்து நம்ம கையில் குடுக்கிறாளே. கூடமாட ஏதாவது ஹெல்ப் பண்ணுவோம் என்கிற நினைப்பு கூடவா ஒரு மனுஷனுக்கு வராது ? நான் என்ன, துவைச்சுப் போடுங்க சமைச்சுப் போடுங்கன்னா சொன்னேன் ? நம்ம குழந்தை லேசில் படுக்கையை விட்டு எழும்ப மாட்டான். அவனை எழுப்பி விடுங்க என்றுதானே சொன்னேன் . அதைக்கூட செய்ய முடியாத நீங்க கதை எழுதி எந்த உலகத்தை திருத்தப் போறீங்க ? " என்று பொரிந்து தள்ளிக் கொண்டே, கையிலிருந்த சோப்பு டவல் துணிமணிகளை விட்டெறிந்து விட்டு குழந்தையின் அருகில் வந்தாள்.
" அப்பாடா .. மழை பெய்ஞ்சி முடிச்சிட்டா ? " என்று கிண்டலாகக் கேட்ட சங்கரை சுபாவின் கோபப் பார்வை சுட்டெரித்தது.
" ஸ்ரீ ... ஸ்ரீ கண்ணு .. எழுந்திரு கண்ணு. இன்னிக்கு ஸ்கூல் போகனும்தானே ..ஸ்ரீ நல்ல பையனாச்சே . தங்கமாச்சே ... ஸ்ரீ ன்னா தங்கம் .. தங்கம்ன்னா ஸ்ரீ எழுந்திரு கண்ணு .."..
" ஏய் .. ஐஸை குறையா வை. குழந்தைக்கு குளிர்ச்சி ஒத்துக்காது " என்றான் சங்கர்
குழந்தை உருண்டு படுத்தான்,
" இன்னிக்கு ஒரு நாள் ஸ்கூலாம் . நாளைக்கு லீவாம் , நாளைக்கு ஈவினிங் நான், ஸ்ரீ கண்ணு , அப்பா எல்லாரும் கடற்கரைக்கு போவோமாம் "
" கடற்கரைக்கு வேண்டாம் " என்றான் குழந்தை கண்களை திறக்காமலே.
" சரி.. கடற்கரை வேண்டாம். வேறே எங்கே போகணும் ? "
" பீச்சுக்குப் போகணும் "
" ஒகே .. ஒகே. கடற்கரை வேண்டாம் . பீச்சுக்கே போவோம். அதுக்கு முன்னாடி நீ இன்னிக்கு ஸ்கூல் போவியாம் .. அம்மா ஆபீஸ் போவேனாம். சரிதானே ?"
தூக்கத்தை உதறிவிட்டு படுக்கையில் எழும்பி உட்கார்ந்தான் ஸ்ரீ .
" அம்மாடி " என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது சுபாவிடமிருந்து. அதே சமயம் இன்னும் பல்லைத் தேய்த்து, குளிப்பாட்டி சாப்பாடு ஊட்டி யூனிபார்ம் போட வைக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து வந்தது.
" தலைக்கு எண்ணெய் வச்சிட்டு அப்புறமா குளிக்கலாம். குளிச்ச பிறகு தலைக்கு எண்ணெய் வச்சா முகமெல்லாம் எண்ணெய் வழிஞ்சு முகம் கறுப்பா தெரியும். என் ஸ்ரீ கண்ணு கறுப்பா தெரியலாமா ? "
" ஊஹும் .. தெரியக் கூடாது " என்றான் ஸ்ரீ மழலையாக
" ஆங்க் .. ஸ்ரீயா .. கொக்கா ?.. இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்னு
இருக்கே . .. ஸ்கூலில் மத்த பசங்க எல்லாம் அழுதாலும் ஸ்ரீ அழ மாட்டான் தானே ? சிரிச்சு கிட்டே இருப்பான் .. அப்படித்தானே ? "
" நான் அழாமே சிரிச்சிட்டே இருப்பேன். .. மக்கு பசங்கதான் அழும் .. நான் சமர்த்து " என்று குழந்தை சொல்ல " கரெக்ட் " என்று ஆமோதித்தாள் சுபா.
" ஏண்டி, நீயும் உன் குழந்தையும். நீ குழந்தையை எழுப்புகிற அழகைப் பார்த்தா அவனவன் வீட்டை காலி பண்ணிட்டு ஓடிடுவான் போலிருக்கு " என்றான் சங்கர் எரிச்சலாக .
" எனக்கு வர்ற எரிச்சலில் என்ன சொல்வேன்னு எனக்கே தெரியாது ..ப்ளீஸ் என் வாயைக் கிளறாதீங்க .. வீட்டுக்குப் பக்கத்திலேயே தெருவுக்கு ரெண்டு ஸ்கூல் இருக்கு . அதை எல்லாம் விட்டுட்டு ஊருக்கு வெளியே எங்கோ ஒரு மூலையில் இருக்கிற ஸ்கூலில் சேர்த்துட்டீங்க. காலங் கார்த்தாலே ஸ்கூலுக்கு குழந்தையை ரெடி பண்ண வேண்டியிருக்கு. அடம் பிடிக்காமே அழாமே அவன் கிளம்பிப் போயிட்டு வரணுமேன்னு அவனை பிரைன் வாஷ் பண்ண நான் படுற அவஸ்தை எனக்குத் தான் தெரியும். என் பொழைப்பு உங்களுக்குக் கிண்டலாத் தெரியுது? " என்று எரிந்து விழுந்தாள் சுபா
" சரி நான் வாயை மூடிக்கிறேன் நீ உன்னோட வில்லுப் பாட்டை ஆரம்பி " என்று சொல்லி விட்டு எழுதுவதில் முனைந்தான் சங்கர், . .
பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணையில் ஒரு கரண்டி எடுத்து குழந்தையின் தலையில் தேய்த்து விட்டுஎண்ணைப் பசையாய் இருந்த கைகளை குழந்தையின் கை, முதுகில் தேய்த்தாள் சுபா. முதுகில் சுபாவின் கைகள் பட்டதுமே " ம்ம்ம் " என்று வலியில் நெளிந்தான் குழந்தை ." என்னடா குழந்தை ? "
" முதுகில் எண்ணெய் தேய்க்காதே. வலிக்குது "
" என்னடா சொல்றே ? வலிக்குதா ? எங்கே ? ..இங்கேயா ... இங்கேயா " என்று முதுகுப்புறம் தொட்டுக் கேட்டாள் சுபா
நடு முதுகில் சுபாவின் கை படும்போது " அம்மா " என்று வலியில் அலறினான் ஸ்ரீ .
" என்னாச்சு குழந்தே ? கீழே எங்காவது விழுந்தியா ? இல்லே பசங்க யாராவது அடிச்சாங்களா ? இல்லே பஸ்சில் வரும்போது கம்பி எதிலாச்சும் நீ போய் இடிச்சுகிட்டியா ? "
" மிஸ் ,, மிஸ் .. அடிச்சாங்கம்மா "
" மிஸ் அடிச்சாங்களா ? ஏன் ? " என்று பதறிப் போய்க் கேட்டாள் சுபா
" மிஸ் நேத்து " பாபா ப்ளாக் ஷீப் " சொல்லிக் குடுக்கிறப்போ, நான் பிஸ்கட் சாப்பிட்டேன். அதான் அடிச்சாங்க "
" சின்ன டப்பாவில் அம்மா போட்டுக் குடுத்த பிஸ்கட் எடுத்து சாப்பிட்டியா இல்லே ஸ்கூலில் மத்த பசங்க பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டியா ? "
" அம்மா குடுத்ததைத்தான் சாப்பிட்டேன் .. அதுக்கு அடிச்சாங்க " என்று ஸ்ரீ மழலையில் சொல்ல பெற்ற வயிறு பற்றி எரிந்தது .
" என்னங்க ..இந்த அநியாயத்தை பார்த்தீங்களா ? கிளாஸ் நேரத்தில் குழந்தை பிஸ்கட் சாப்பிட்டான்னு குழந்தையைப் போட்டு அடிச்சிருக்கிறாளே ஒரு ராட்சசி "என்று ஆதங்கத்துடன் கேட்டாள் சுபா
" உன் பிள்ளை செய்ஞ்சது தப்புதானே ? "
" எதுங்க தப்பு ? இன்னிக்கெல்லாம் அவனுக்கு முழுசா மூணு வயசு ஆகலே. அதற்குள் அவனுக்கு என்ன தெரியும். ஏதோ பஸ் வந்து வீட்டு வாசலில் நிக்கிது . ஏறிப் போறோம். திரும்பிக் கொண்டு வந்து வீட்டில் விடுது. அது
மட்டும்தானே தெரியும். நாம வந்திருக்கிறது படிக்கிறதுக்கு. இங்கே இது இதுதான் செய்யலாம். இது இது கூடாதுங்கிற விவரம் அவனுக்குத் தெரியாதே. குழந்தை ஏதோ பசியில் பிஸ்கட் எடுத்து சாப்பிடுகிறான் என்ற நினைப்புகூட இல்லாமல் இப்படி ரத்தம் கட்டுகிற அளவுக்கு அடிச்சிருக்கிறாளே ஒரு ராட்சசி அவ கையில் பாம்புதான் கடிக்கும் . "
" இதோ பார் சுபா .. அந்த மிஸ் மட்டும் நம்ம பையன் மேலே முன் விரோதம் வச்சுகிட்டா இவனை அடிச்சிருப்பாங்க. ஏதோ லேசா ரெண்டு தட்டு தட்டி இருப்பாங்க. நம்ம பயல் கொஞ்சம் வீக் . அதான் உடனே ரத்தம் கட்டிப் போச்சு "
"உங்ககிட்டே சொல்ல வந்தேனே, என் புத்தியை ஜோட்டால் அடிக்கணும். நீங்களும் உங்க லாஜிக்கும் . எதை வச்சுடா அடிச்சா அந்த கடன்காரி ? "
" ஸ்கேல் வச்சு "
" அவ கையில் கரையான்தான் புத்து வைக்கணும் . இப்படிப் போட்டு அடிச்சு இருக்காளே ! "
சுபாவிற்கு மனம் பொறுக்கவில்லை . தனக்கு ஆதரவாக கணவன் பேச முன் வரமாட்டான் என்பது நன்றாக தெரியும். மற்றவர்களிடம் நீதி கேட்க மனம் துடித்தது. பத்து குடித்தனக் காரர்களைக் கொண்ட காலனி அது. போரீங் பைப்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பெண்களை அழைத்தாள்.
"காமாட்சிப் பாட்டி. இங்கே வந்து குழந்தையின் உடம்பைப் பாருங்களேன் "
" ஏம்மா .. ஏதாவது அம்மை கிம்மை வந்திருக்கா ? "
" உங்க வயசிலே இப்படி ஒரு அக்கிரமத்தை நீங்க பார்த்திருப்பீங்களா ? இல்லே கேள்விதான் பட்டிருப்பீங்களா ? ஒரு மூணு வயசுக் குழந்தை கிளாஸ் நேரத்தில் பிஸ்கட் சாப்பிட்டதுக்காக குழந்தையைப் போட்டு அடிச்சிருக்கிறா ஒரு ராட்சசி " என்று சுபா இரைய தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த மற்ற பெண்களும் ஓடி வந்தார்கள். குழந்தையின் முதுகு எக்சிபிசன் ஆக மாறியது .
" ஆமாம் பாட்டி .. நல்ல கன்னி சிவந்து ரத்தம் கட்டி இருக்கே !"
" அடடா பச்சைப் பிள்ளை என்ற உணர்வு கூட இல்லாமலா ஒரு பொம்பளை ஜென்மம் இருக்கும் ? அது ஸ்கூலில் வேலை பார்க்கும் ?"
" பிள்ளை குட்டி பெத்தவதானா அவ ? "
" சனியன் பிடிச்சவளுக . புருசன்கிட்டே சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு கிளம்புவாளுக போலிருக்கு. அவன்கிட்டே காட்ட முடியாத கோபத்தை ஆத்திரத்தை பள்ளிகூடப் பிள்ளைங்க கிட்டே காட்டுவாளுக போலிருக்கு "
குழந்தையின் முதுகை ஒருவர் மாறி ஒருவர் பார்ப்பதும் விமரிசனம் பண்ணுவதுமாக இருந்தனர் . இவர்களுக்கிடையில் நின்று "திருதிரு"வென்று விழித்துக் கொண்டிருந்த ஸ்ரீ, " அம்மா " என்றான் .
" என்னடா ? "
" என்னை மிஸ் அடிக்கலே . நான் சும்மாதான் சொன்னேன் "
" என்ன கண்ணா சொல்றே ? "
" ஆமாம்மா ..நெஜமா சொல்றேன் . மிஸ் என்னை அடிக்கலே . என் முதுகில் ஸ்கேல் வச்சாங்க . அவ்ளோதான் "
" ஸ்கேல் வைக்க வேறே இடமே இல்லேன்னு உன் முதுகில் வச்சாளா ? "
" இல்லேம்மா .. முதுகில் கூட வைக்கலே. நான் சும்மாதான் சொன்னேன் " என்று அவசரமாக மறுத்தான் ஸ்ரீ
" உன் முதுகிலே அம்மா கை பட்டதும் உனக்கு வலிக்குதுன்னு நீ சொன்னே "
" இப்போ கை வைம்மா .. நான் வலிக்குன்னு சொல்ல மாட்டேன் "
" என்ன கண்ணு சொல்றே ? "
" எனக்கு இனிமே வலிக்கவே வலிக்காது ...நீ மிஸ்ஸைத் திட்டாதேம்மா ! "
" சொல்லு கண்ணு , நெஜமாவே முதுகில் வலி இல்லையா ? "
" அம்மா நீ மிஸ்ஸை திட்டாதேம்மா . நீ திட்டினா எனக்கு இங்கே வலிக்குது " என்று நெஞ்சின் மீது கை வைத்துக் காட்டினான் ஸ்ரீ.
சுபா பிரமித்துப் போய் நின்றாள். சுற்றி நின்றவர்களுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது
"சுபா நீ குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, குழந்தையிடம் நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு " என்றான் அதுவரை அங்கு நடந்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சங்கர் .
" இதைச்சொல்ல நீங்க எழுந்து இங்கே வர வேண்டாம். நேரம் வீணாகப் போகுது . உட்கார்ந்து மிச்ச கதையையும் எழுதி முடியுங்க " என்று ஆத்திரத்துடன் சொன்ன சுபா பாத் ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவளையும் அறியாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
அது குழந்தை பட்ட அடியினால் அல்ல. குழந்தை அடித்த அடியால் !
No comments:
Post a Comment