Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 27, 2012

Scanning of inner heart ( Scan Report Number 22 )


 ஐயா, புண்ணியவான்களே, ஏதாவது  ஒரு .......


விதி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமா விளையாடும்னு சொல்வாங்க.  அந்த 'விதிப்படி' பார்த்தா, விதி, நம்ம சந்திரன் வாழ்க்கையில் ஒரு அரசியல் 'புள்ளி' ரூபத்தில் விளையாடியது. 

விவரமா சொன்னாதானே உங்களுக்குப் புரியும். நம்ம சந்திரன் இருக்கிறானே, M .A ., படிச்சிருக்கிறான், வேலை தேடி அவன் போகாத ஊர் இல்லை. பார்க்காத "பெரிய மனுஷங்க" இல்லை.  சென்னையில் இருக்கிற கம்பெனிகளில் ஏதாவது ஒரு கம்பெனி பேரைச் சொல்லி,  அந்த கம்பெனியில் எத்தனை படிக்கட்டு இருக்குனு கேளுங்க; கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள் 'இத்தனை' படிக்கட்டுதான்னு  ரொம்ப கரெக்டா சொல்லிடுவான். அந்த அளவுக்கு அனுபவப்பட்டு ......   தப்பு .. தப்பு... அடிபட்டுப் போயிருந்தான். 

சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது; எப்பிடியோ பிறந்து, எப்பிடி எப்பிடி எல்லாமோ  வளர்ந்து, படிச்சு , பாஸ் பண்ணி, கையில் டிகிரி சர்டிபிகேட்டை வச்சுகிட்டு 'லோ லோ'ன்னு நாய் மாதிரி அலைஞ்சான். ஒரு இடத்திலே,.... இருபத்து நாலு வயசுக்குள் இருக்கணும்; டிகிரி முடிச்சிருக்கணும்; குறைஞ்சது அஞ்சு வருஷம், வேலை பார்த்த அனுபவம் இருக்கணும்னு சொன்னாங்க; அதெப்படிங்க முடியும்? ஒருத்தன் போஸ்ட் கிராஜுவேட் செர்டிபிகட் கையில் வாங்கும்போதே கிட்டத்தட்ட இருபத்து நாலு வயசைத் தொட்டிருப்பானே , பிறகு எப்படி அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்க முடியும்னு ஒரு கேள்வி கேட்டான். கேள்வி கேட்டது மட்டுந்தான் நினைவில் இருக்கு, எப்படி வந்து வாசலில் விழுந்தாங்கிறது இன்று வரை அவனுக்கே புரியாத புதிராகத் தான் இருக்கிறது.

தெருத் தெருவா அலைஞ்சு அடிபட்டு, என்ன வேலை கிடைச்சாலும் பார்க்கலாம்கிற முடிவோடு மீண்டும் வேலை தேடி "படை"எடுத்தான்.

ஒரு இடத்தில் அவங்க சொன்ன கண்டிசன் எல்லாம் ஒத்து வந்தது. ஆனாக்க அவங்க சொன்ன சம்பளம் மட்டும் ஒத்து வரலே. காலையில் எட்டு மணியிலிருந்து ராத்திரி எட்டு மணி வரை வேலைன்னு சொன்னாங்க. அதுக்கெல்லாம் நம்ம சந்திரன் "கோயில்மாடு" மாதிரி தலையை ஆட்டினான். ஆனா, முதல் ஆறு மாசத்துக்கு சம்பளம் மூவாயிரம் ரூபாய்னு சொன்னாங்க; அப்பத்தான் நம்ம 'பையன்' வாயை திறந்து 'சம்பளம் பத்தாதுங்க'ன்னு மெதுவா இழுத்தான். எதிரே இருந்தவர் முறைப்பைக் கூட லட்சியம் பண்ணாமே, ரொம்பவுமே தாழ்ந்த குரலில், "ஐயா, போக வர  பஸ் செலவு, காப்பி டீ செலவுன்னு அதுவே மாசம் மூவாயிரம் ஆயிடுமே. வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவு இதை எல்லாம் நான் எப்படி சமாளிக்க முடியும்"னு ஒரு கேள்வி கேட்டான். கேள்வி நியாயம்னு உங்களுக்கும் எனக்கும் தெரியுது. ஆனா, அந்த கம்பெனியில் M D என்ற போஸ்டில் உக்கார்ந்திருந்த 'மரமண்டை'க்கு அது தெரியலே. வேலைக்கு சேரும் முன்னேயே இத்தனை கேள்வி கேட்கிறியே. உனக்கு வேலை குடுத்தா, நீ வந்து உட்கார்ந்த மறுநாளே யூனியன் 'அது இது'ன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சிடுவே; உன்னாலே, இங்கே இருக்கிற மத்த 'பயபுள்ளை'களும் கெட்டுப் போயிடும். இனிமே இந்த பக்கமே தலையைக் காட்டாதேனு சொல்லி அனுப்புனாங்க. 

எல்லா வகையிலும் அடிபட்டு, மிதிபட்டு, நொந்து நூலாகி, 'இப்படியொரு நாய்ப் பொழைப்பு புழைக்கிறதுக்கு பதிலா, உசிரை விட்டுடுவது உத்தமம்னு நினைச்சி, எந்த வகையில் உயிரை விடலாம்னு யோசனைப் பண்ணிப் பார்த்தான். கயிறு, விஷம், ரயில் எதுவும் சரின்னு தோணலே;  அப்பத்தான் முன்னவங்க  சொன்ன ஒரு பழமொழி ..  அதுதாங்க... சாகத் துணிஞ்சவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவுதான்கிற பழமொழி ஞாபகம் வந்தது. 

" வந்தாரை வாழ வைக்கும் சென்னை"ங்கிறது நம்ம வரையில் பொய்யாப் போச்சு. வாழ தான் வைக்கலே; சாகிறதுக்கு ஒரு சமுத்திரத்தையாவது புண்ணியவாளனுங்க விட்டு வச்சிருக்கானுங்களேன்னு நினைச்சிக்கிட்டு, வாழ்வை முடிக்க மெரீனா பீச்சுக்கு போனான். அன்னிக்கு அங்கே ஒரு பொதுக் கூட்டம் நடந்துட்டு இருந்தது. சரி, கூட்டம் முடிஞ்சு எல்லாரும் போய்த் தொலையட்டும், அப்புறமா நாம போவோம்னு நினைச்சிக்கிட்டு ஒரு ஓரமா உட்கார்ந்திருந்தான். பொதுக்கூட்டத்தில் ஒவ்வொருவர் பேசுவதும், இவன் "கேட்காமலே",  இவன் காதில் வந்து விழுந்துட்டே இருந்துச்சு. 

 கூட்ட முடிவில்,  தலைவர், வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாமல்,. வார்த்தை ஜாலங்களால்  "அறிவுரை"களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார். இந்த உலகத்தில் காசு கொடுக்காமல், 'நமக்கு வேணும்'னு நாம கேட்காமலே இனாமாக் கிடைக்கிற ஒரே ஒரு விஷயம் அறிவுரைதானுங்க. 

அவர், அதுதாங்க "தலைவர்" அளந்து விட்டார்; "கல்விங்கிறது, நம்ம அறிவை நாம வளப்படுத்திக்கிறதுக்காக நாமே கண்டு பிடிச்ச ஒரு சாதனம்.  படிச்சு முடிச்ச அத்தனை கிராமவாசிகளும், கிராமத்தை, பெற்ற தாய் தகப்பனை "அம்போ"ன்னு விட்டுட்டு நகரத்தில் வந்து உட்கார்ந்து விட்டால் விவசாய வேலைகளை  யார் கவனிப்பது ? சரியான பராமரிப்பு இல்லாமல், வயல் வெளிகள் துவண்டு போய் கிடக்கின்றன.  எனவே படித்த இளைஞர்கள் விவசாய வேலைகளைக் கவனிக்க முன் வர வேண்டும் என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனாலும், அவர் பேச்சு நம்ம சந்திரனை ரொம்பவுமே சிந்திக்க வச்சுது. சாகிறதுன்னு முடிவு பண்ணிட்டோம். ஒரு அஞ்சு நிமிஷம் முன்னே செத்தா என்ன, பின்னே செத்தா என்ன. இந்த ஆளும் தண்ணி தவளை மாதிரி நாக்கு வறண்டு போகிற அளவுக்கு இவ்வளவு நேரம் கத்தி இருக்கிறானே, அதுக்காகவாவது ஒரு நடை கிராமத்துலே ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்ப்போம்ன்னு நினைச்சி ஒரு கிராமத்துக்கு வந்தான். ஒரு பழமொழி சொல்வாங்களே, " சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா, அவ ஈச்சம் பாயைக் கட்டிட்டு எதிரே வந்து நின்னாளாம்"னு, அந்த கதையா, இவன் தேடித் போன கிராமம் இவனைவிட வறண்டு கிடந்துச்சு. . வறுமையில் இருந்துச்சு. 

இருந்தாலும், இவன் எதுக்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறானு தெரிஞ்ச கிராம ஜனங்க, இவனோட தவிச்ச வாய்க்கு தண்ணி குடுத்தாங்க. அந்த பண்பாடு, நாகரீகம், நம்ம சந்திரனுக்கு ரொம்பவுமே பிடிச்சு போச்சு. கஷ்டமோ நஷ்டமோ, இங்கேயே காலத்தை ஓட்டிடலாம்னு முடிவு பண்ணினான். 

 எம் ஏ படிச்ச நாம, இந்த வயக்காட்டு வேலையைப் பார்க்கிறதாங்கிற  நினைப்பு இல்லாமே, கௌரவம் பார்க்காமே, உண்மையா உழைச்சான். ஒருநாள் உரம் வாங்கிறதுக்காக, டவுனுக்குப் போனப்ப, இவன் கூட படிச்ச ஒருத்தனை பார்க்கும்படி ஆச்சு. இவன் கதையைக் கேள்விப்பட்ட அந்த "திருவளத்தான்" அவனுக்கு தெரிஞ்ச ஒரு இடத்திலே, ஒரு பொண்ணுக்கு டியுசன் எடுக்க ஆள் வேணும். பெரிய இடம். வீட்டில் போய்தான் டியுசன் எடுக்கணும்; கணிசமான காசு கிடைக்கும்னு சொன்னான். சரின்னு பட்டுது நம்ம பயலுக்கு. ஒத்துக்கிட்டான். 

வயக்காட்டு வேலை பார்க்கிற விசயத்தை டியுசன் எடுக்கிற இடத்தில் சொல்லலே; டியுசன் எடுக்கிற விசயத்தை வயக்காட்டு வேலை பார்க்கிற இடத்தில் சொல்லலே;மூடி வைக்கிற அளவுக்கு அது ஒண்ணும் ராணுவ ரகசியம் இல்லே. சமயத்திலே ராணுவ ரகசியங்களே வீதியில் சிரிப்பா சிரிக்குது. அப்படி இருக்க இதை  ... தான் படிச்சவன்கிதை, கிராமத்திலே சொல்லாதது, ஒரு கிராமத்திலே, வயக்காட்டிலே தான் வேலை பார்க்கிறதை டவுனில் சொல்லாமல் மறைத்தது ஏன்கிறது  இந்த பயபுள்ளைக்கே இன்னும் விளங்கலே. ' விநாச காலே விபரீத புத்தி'ன்னு சொல்வாங்களே, அப்படி ஆயிப்போச்சு. 

ஒரு ஏழெட்டு வருஷம், வாழ்க்கை  வண்டி நல்லாத்தான் ஓடிட்டு இருந்துது. 

விவசாய மாநாடு ஒன்னு ஒருநாள் நடந்துச்சு. அதுக்கு தலைமை தாங்க மந்திரி வந்திருந்தார். என்னவோ ஜனங்களுக்கு பணிவிடை செய்ய மட்டுமே,  தான் அவதாரம்  எடுத்திருக்கிற மாதிரியான ஒரு பீலிங்கை கிரியேட் பண்ணினார். இதிலே ஒரு விஷயம் என்னன்னா, ராத்திரி நடக்கப் போற மாநாட்டுக்காக மந்திரி காலையிலேயே வந்திட்டார். வர வழியில் வயக்காட்டு ஓரமா ஓடிட்டுருந்த வாய்க்காலில் நம்ம சந்திரன் மாடு குளிப்பாட்டிட்டு இருந்ததை பார்த்துட்டு, தன்னோட வந்திருந்த சகாகிட்டே, "இதோ மாடு குளிப்பாட்டுறானே, இவன் எம் ஏ  படிச்சிருக்கிறான். வேலைக்கு சிபாரிசு பண்ண சொல்லி  என் வீட்டுக்கு நடையா நடந்திருக்கிறான்.  தாராளமா மொய் எழுதி இருக்கிறான்.  என்னாலே இவனுக்கு எதுவும் செய்ய முடியாமே போச்சு.  பய கெட்டிக்காரன்தான்.  மாடு குளிப்பாட்டிப் பொழைக்கிறான் போலிருக்குன்னு சொல்ல, கூட வந்த ஒரு 'எடுபிடி' அதானாலே என்ன தலை ? இன்னிக்கு மீட்டிங்கில் பேசறப்ப,  "இந்த ஊரில் மாடு மேய்க்கிவன்கூட  எம் ஏ படிச்சிருக்கிறானு ஒரு 'பிட்'டை போடுங்கனு சொல்ல, சாயங்கால மீட்டிங்கில் தலைவர் ரொம்பவுமே உணர்ச்சி வசப்பட்டு, ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்திட்டுருந்த சந்திரனை மேடைக்கு அழைச்சி. தன்னோட கழுத்திலிருந்து மாலையை கழற்றி அவன் கழுத்தில் போட்டு, எம் ஏ படிச்ச நீ கிராமத்தில் வந்து சேவை செய்றதைப் பார்த்தா எனக்கு பெருமையா இருக்குனு சொல்ல, கூலி வாங்கிக்கிட்டு கூட்டத்துக்கு வந்திருந்தவங்க சமயம் பார்த்து கை தட்டி விசில் அடிக்க, அந்த ... அந்த ... நேரமே நம்ம சந்திரனுக்கு சனி பிடிக்க ஆரம்பிச்சிட்டுது. 

கைதட்டலையும், கலெக்சன் ஆகி இருந்த பணத்தையும்  வாங்கிகிட்டு தலைவர் போயிட்டார். 

மறுநாள்   பேப்பரில் மந்திரி சொன்ன வார்த்தைகளும், மாலையும் கழுத்துமாக சந்திரன் படமும் வெளியாகி இருந்தது. 

அதற்கு  மறுநாளே ஊர் கூடி ஒரு முடிவெடுத்தது. 

"நீ படிச்சவங்கிதை   ஏன் மறைக்கணும்? நீ ஏதாவது தீவிரவாத கும்பலை சேர்ந்தவனா? இங்கே வந்து வேலை பார்க்கிற மாதிரி நாடகம் ஆடிகிட்டு, வேறு யாருக்காவது உளவு சொல்லிட்டு இருக்கிறியா?? 'அப்படியா, இப்படியா'ன்னு குடைய ஆரம்பிச்சிட்டுது.
சந்திரன் சொன்ன எந்த பதிலையும், யாரும் கேட்கிற நிலையில் இல்லை. " படிக்காதவங்க மத்தியிலே ஒரு படிச்சவனை பழக விடறதுங்கிறது, ஆட்டு மந்தையிலே ஓநாயை பழக விடறது மாதிரி ஆகிவிடும். இன்னும் ஒரு மணி நேரம் டைம். அதுக்குள்ளே இந்த ஊரை விட்டே போயிடனும். இன்னொரு தடவை உன் தலை இங்கே தெரிஞ்சுது, பிறகு உனக்கு தலையே இல்லாமே போயிடும்"னு சொல்லி விரட்டி அடிச்சிட்டாங்க. 

சரி, கிராமத்து பொழைப்புதான் போச்சு. டவுனுக்கு போய் முழு நேர டியுசன்  எடுத்துப் பொழைச்சுக்கலாம்னு, அங்கே போனா, "வீட்டுக்குள் காலை வச்சே, தலையை வெட்டிப்புடுவேன். பாடம் சொல்லிக்குடுக்கிற மாதிரி பணக்கார வீடுகளுக்குள் நுழைய வேண்டியது. சமய சந்தர்ப்பம் பார்த்து வீட்டில் இருக்கிற "பொட்டப் புள்ளை"களையும் காசு பணத்தையும் நகர்த்திட்டு போயிட வேண்டியது. இதுதானே உன் ப்ளான். ஏண்டா, என்னைப் பார்த்தா "கேணப் பய"லா உனக்கு தெரியுதா? மாடு குளிப்பாட்டுற பயலுக வந்து பாடம் சொல்லித் தருகிற அளவுக்கு நாங்க யாரும் இன்னும் தரங் கெட்டுப் போயிடலே. இங்கே நிற்காதே, திரும்பிப் பார்க்காமே ஓடு" என்று விரட்ட, அங்கே பிடிச்ச ஓட்டத்தை சந்திரன் இங்கே வந்துதான் நிறுத்தினான். 

இப்ப நம்ம சந்திரன் வேலை தேடிகிட்டு இருக்கிறான். போகாத இடமில்லே,  பார்க்காத ஆள் இல்லே . 3000 ரூபாய் சம்பளம் தர்றேன்னு சொன்ன கம்பெனி என்ன ஆச்சுன்னு நீங்க கேட்கிறது என் காதில் விழத்தான் செய்யுது. அங்கெல்லாம் நம்ம சந்திரன் போயிட்டு வந்துட்டான்.  30 வயசு தாண்டினவங்க வேலைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

ஐயா, புண்ணியவான்களே, நம்ம சந்திரன்  வேலை வெட்டி இல்லாமே  ரொம்பவும் கஷ்டப்படறான்,   யாராவது பெரிய மனசு பண்ணி அவனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தா, கௌரவமா பொழைப்பான். நான் சொல்றது உங்க காதுகளில் விழுதா? யாராவது, ஏதாவது செய்வீகளா?

No comments:

Post a Comment