Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 07, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 19

                                             
                          நன்றி கெட்ட மாந்தரடா !

இனிமேலும் 'பெரிசை' நம்பிப் பிரயோஜனம் இல்லை. இந்த விசயத்தில் ஒல்டை ஓரங்கட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. இன்னிக்கு காலைலே மேனேஜர் இங்குள்ளவர்களை 'வறுத்து' எடுத்ததைப் பார்த்ததும் எனக்கே கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.
"நாளைக்குக் காலையில்  இந்த பைல் குளோஸ் ஆகி என் டேபிளில் இருக்க வேண்டும். நாளைக்கும் ஏதாவது நொண்டி சாக்கு சொன்னால், பாவ புண்ணியத்துக்கு பயப்படாமல் அத்தனை பேரையும் வேலையிலிருந்து தூக்கி விடுவேன்" என்று வேறு எச்சரித்து விட்டுப் போயிருக்கிறார்.
எனக்கே ஒரு வெறி வந்து இப்போதே பைலை குளோஸ் பண்ணி  அவர் முகத்தில் விட்டு எறிய வேண்டும் என்று தோன்றியது. பெரிசோட அனுபவத்துக்கும், அசுர வேகத்துக்கும், இது வெறும் அரை மணி நேர வேலைதான். ஆனால் அதை செய்ய ஏனோ பெரிசு தயங்கியது. அதுமட்டும் இல்லே. 'செய்கிறேன்'னு சொல்ற என்னை 'வேண்டாம், உனக்கு இது வேண்டாத வேலை ' என்று வேறு எச்சரிக்கை செய்யுது. இந்த ஆபீஸ் காண்டீன் சாப்பாட்டை நினைச்ச நேரமெல்லாம் பைசா செலவில்லாமல் சாப்பிட்டு விட்டு, இந்த ஆபீசில் பைசா கூட வாடகை குடுக்காமல் எவ்வளவு காலமா குடியிருக்கிறோம். இங்குள்ள ஆளுங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா அது நம்ம கஷ்டம்னு நினைச்சு ஓடிப் போய் உதவுறதை விட்டுட்டு, 'பெரிசு' வெட்டி வேதாந்தம் பேசறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலே. வயசானாலே புத்தி மழுங்கித்தான் போகும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு. இந்த விசயத்திலே நான் 'பெரிசு' பேச்சை கேட்பதாக இல்லை. பெரிசைப் போல நன்றி கெட்ட தனமா நடந்து கொள்ள என்னால் முடியாது. இன்று விடிய விடிய முழிச்சிருந்தாவது இந்த பைலை குளோஸ் பண்ணிட்டுதான் மறு வேலை என்று சபதமே எடுத்துட்டேன். இனிமே யார் தடுத்தாலும், என் முடிவிலிருந்து மாறப் போறதில்லே .
எல்லோரும் ஆபீசை விட்டுக் கிளம்பிப் போனதும் நான் என்னோட வேலையை ஆரம்பிச்சேன். பெரிசு அப்பப்போ வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போச்சு.
வாசலில் பால் வண்டி சத்தம், மற்ற வண்டி ஓடுற சத்தம் கேட்ட போது தான்    பொழுது விடிந்து விட்டது என்பது என் மண்டையில் உரைத்தது.  ஆச்சு. இதுதான் கடைசி பக்கம். இதையும் சரி பண்ணிவிட்டால் ஒரு பெரிய பைலை குளோஸ் பண்ணின திருப்தி கிடைக்கும். அது போதும். நான் தனி ஆளா நின்னு ஒரு நாள் நைட்டில் ஒரு பைலை குளோஸ் பண்ணும்போது , இங்குள்ள மத்தவங்களுக்கு அது ஏன் முடியாமல் போச்சு என்பதுதான் எனக்கு புரியவில்லை.
வெளியில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.  ஒர்க்கர்ஸ்  வேலைக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்களுக்கு தலைவலியா இருந்த பைலை நான் தனி ஆளா ஒரே ஒரு நைட்டில் குளோஸ் பண்ணி இருக்கிறேன். அது பத்தி அவங்க ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆசை வந்தது.  கதவோரமாக, மறைவாக நின்று கொண்டேன்.
முதலில் உள்ளே நுழைந்தது ஹெட் கிளார்க் பரமசிவம்தான். மேஜை மீது இருந்த பைலைப் பார்த்ததுமே மயங்கி விழாத குறையாக, "எல்லோரும் இங்கே வந்து இந்த பைலைப் பாருங்க " என்று அலறினார்.
அவர் போட்ட சத்தத்தில் அத்தனைபேரும் ஓடி வந்து மேஜையை சுற்றி நின்று கொண்டார்கள்.
" நான்தான் ரொம்ப நாளாவே சொல்றேனே. நீங்கதான் யாரும் அதை காதிலே வாங்கிக்க மாட்டேனுட்டீங்க .  இப்ப என்ன ஆச்சு பார்த்தீங்களா? இன்னிக்கு மத்தியானம் நடக்கப்போற மீட்டிங்கில் வைக்க வேண்டிய பைல் இது !. சார்,  இந்த வேலையை செஞ்ச சனியன்  எங்கேயும் போயிருக்க முடியாது. இங்கேதான் இருக்கணும்.  எல்லா  கதவையும் லாக் பண்ணுங்க. அவங்கவங்க கையிலே கிடைக்கிறதை எடுத்துக்கோங்க. இன்னிக்கு இதற்கு ஒரு முடிவு பண்ணி விட்டுதான் மறு வேலை " என்று பியூன் ஆவேசமாக கத்தியதைக் கேட்டு , பதறிப் போய் நான் கதவருகில் இருந்து எட்டிப் பார்க்க, அவன் கையிலிருந்த  கம்பு பாய்ந்து வந்து என்னைப் பதம் பார்க்க மயங்கி சாய்ந்தேன்.
வெகு அலட்சியமாக என் அருகில் வந்து, செருப்புக் காலால் என்னை எட்டித் தள்ளிய பியூன், "சார், சுண்டெலி மாட்டிகிட்டுது.  சுண்டெலி இருந்த பெரிய எலியும் கண்டிப்பா இங்கேதான் இருக்கணும். அதையும் ஒரு நாள் வேட்டை ஆடிடுவோம் " என்றான்.
" அதை அப்புறம் பார்க்கலாம்.  மொத்த பைலையும் தேங்காய் துருவல் மாதிரி உருத் தெரியாமே இப்படி துருவி வச்சிருக்கே. இப்போ மேனேஜர் வந்து கேட்டால் என்ன பதில் சொல்றது?" தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார் ஹெட் கிளார்க்.
அவரை சுற்றி ஒர்க்கர்ஸ் கூட்டம். என்னை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.
"இந்த ஆபீசில் இத்தனைபேரும் செய்யாத வேலையை ஒரே ராத்திரியில் முடிச்சிடுவேன்னு ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டு ராத்திரி முழுக்க வேலை பார்த்தியே. இப்ப என்ன நடந்தது பார்த்தியா? நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? நம்ம நல்ல எண்ணத்தைப் புரிஞ்சிக்கிற சக்தியை இன்னும் கடவுள் மனுசங்களுக்கு கொடுக்கலே. மனுஷ ஜென்மங்களே நன்றிகெட்ட ஜென்மங்கள்தான். அதை புரிஞ்சுகிட்டு நாமதான் உசாரா இருக்கணும் !" என்று  உயிர் போகும் நிலையிலிருந்த என் காதில் வந்து சொல்லிவிட்டு ஓடி போனது பெரிசு.
பெரிசுக ஏதாவது  சொன்னா  அதில் ஒரு அர்த்தம் இருக்கும்கிறது உயிர் போகிற நிலைமையிலா நான் தெரிஞ்சுக்கணும் ? ஈஸ்வரா ....

No comments:

Post a Comment