Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 20, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 8


                  


                              வாழ்க முதியோர் இல்லங்கள் !


 ""என்னங்க, இவ்வளவு சீக்கிரம் வெளியே கிளம்புறீங்களே ?" என்று முனகிய குரலில் கேட்ட மனைவியின் மேல் ஒரு பரிதாப பார்வையை படரவிட்ட கேசவன், பதில் ஏதும் சொல்லாமல் நிதானித்தார்.
"இல்லே. இன்னிக்கு பிள்ளை வருவானே !" என்று வாசுகி  நலிந்த குரலில் சொல்ல "பிள்ளையாம் பிள்ளை. வேலை வெட்டி இல்லாமே இப்படி ஒரு பிள்ளையை பெத்து படிக்கவச்சு ஆளாகினதுக்கு பதிலா  ஒரு தென்னம் பிள்ளைக்கு தண்ணீ  ஊற்றி வளர்த்திருந்தா இந்நேரம்  தாக சாந்திக்கு தண்ணியாவது குடுத்திருக்கும்" என்றார் வெறுப்புடன்.
"அதில்லீங்க. இன்னிக்கு உங்க பிறந்த நாள், உங்களைப்பார்க்க ராகவன் கண்டிப்பா வருவான், அதான்" என்று வாசுகி இழுக்க,
"அந்த ஒரு காரணத்துக்காகதானே இவ்வளவு சீக்கிரம் வெளியில் கிளம்பறேன்" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாலும், "நான் திரும்ப லேட் ஆகும். எனக்காக காத்திருக்காமே நீ நேரத்தோடு சாப்பிட்டுட்டு படு!" என்று சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தார்.
ஒரே ஊரில் இருந்தும், தானும் மனைவியும் முதியோர் இல்லத்திலும்,  மகன் பத்து மைல் தொலைவிலும் இருப்பதைவிட வேதனையான விஷயம் இருக்கவா முடியும் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.
 "உம்" என்ற பெருமூச்சு பெரிதாக வந்தது. மகன் எழுதி நீட்டியிருந்த மடலை மனதுக்குள் ஸ்கேன் செய்து படிக்க ஆரம்பித்தார். இந்த ஒன்றரை வருடங்களில் அந்த கடிதத்தில் இருந்த கமா,  புல் ஸ்டாப் கூட அவருக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. மகன் மீது கோபம் வந்தாலும் சரி பாசம் வந்தாலும் சரி, அந்த கடிதத்தை எடுத்து படிப்பதென்பது அவருக்கு வாடிக்கையாவே ஆகிவிட்டது.
"அப்பா என் கண்ணெதிரிலேயே நீங்கள் இருந்தும் கடிதம் மூலமாக நான் சொல்ல நினைத்ததை சொல்வதற்கு முக்கிய காரணம் உங்களை நேரில் பார்த்து பேசும் தைரியம் எனக்கு இல்லாமல் போனதுதான். அம்மாவுக்கும் புவனாவுக்கும் ஒத்து போகலே. கடந்த நாலு வருசமா நரக வேதனையை அனுபவிக்கிறேன்கிறது உங்களுக்கும் நல்லாவே தெரியும். பெரியவங்ககிட்டே பணிஞ்சு போகிற மனப்பக்குவம் புவனாக்கு இல்லே, சின்ன பொண்ணுதானே, போனா போகட்டும்னு விட்டு கொடுத்து போகிற பக்குவம் அம்மாவுக்கு இல்லே. அப்பா எனக்கு நல்லா தெரியும், இந்த ரெண்டு பேருக்குமே என் மேல் பாசம் அதிகமென்பது . அது உரிமை பிரச்சனையா மாறும்போது என்னோட நிம்மதி போயுடுதேப்பா. அதை ரெண்டு பேரும் புரிஞ்சுக்கலையா இல்லே புரிஞ்சுக்க  மறுக்கிறாங்களாங்கிறது எனக்கு தெரியலேப்பா. போன வாரம் ரெண்டு பேரும் அடிச்ச கூத்தில் வீடு ரெண்டு பட்டு போய், ஆபீசிலும் அதே நினைப்பு என்னை வாட்டி வதைக்க, அந்த உழைச்சலில் நான் பார்த்த வேலையில் தப்பு வந்து 'உங்களாலே சின்சியரா  ஆபீஸ் வேலையை  பார்க்க முடியலைன்னா வேலையை விட்டுட்டு போங்க சார். இருந்து எங்க கழுத்தை அறுக்காதீங்கனு ' மேனேஜர்  கண்டிக்கிற அளவுக்கு என்னோட நிலைமை ஆயிட்டுப்பா. எல்லா வகையிலும் யோசித்து பார்த்து கடைசியில்தான் இந்த முடிவுக்கு வந்தேன். அப்பா என்னை மன்னிச்சிடுங்க. உங்களையும் அம்மாவையும் ஒரு நல்ல ஆஸ்டலில் சேர்க்க முடிவு பண்ணிட்டேன். அங்கே உங்களுக்கு எந்த வசதி குறைவும் இருக்காது. அப்பா ஒரு மனுஷனுக்கு தாயும் தேவை. தாரமும் தேவை,  யாருக்காக யாரை விட முடியும் சொல்லுங்க. அம்மா வாழ்க்கையில் பல மைல்களை கடந்தவங்க. புவனா இப்போதான் முதல் அடியையே எடுத்து வச்சிருக்கிறா. எந்த சூழ்நிலையிலும் அவளை கைவிட மாட்டேன்னு முப்பத்து முக்கோடி தேவர்களை சாட்சியா வச்சு தானே உங்கள் எதிரில் அவளை கை பிடிச்சிருக்கிறேன்.  நம்ம வீட்டு சண்டைக்காக அவளை வெளியே அனுப்பறது நியாயமில்லையே. எங்களை அனுப்பறது நியாயமானு நீங்க கேட்கலாம். அம்மாக்கு உங்க துணை இருக்கு. புவனாக்கும் குழந்தை ரமேஷுக்கும் என்னை விட்டா யாரும் இல்லையே அப்பா. தனி வீடு பார்த்து குடி வைக்கலாமென்றால் இப்போதெல்லாம் அப்பார்ட்மென்ட் வீடுகளில் கூட எந்தவித  பாதுகாப்பும் இல்லையே அப்பா . அம்மாவுக்கு மறதி அதிகமாகிவிட்டது. அடுப்பில் வைத்ததை எடுக்க மறந்திடறா, ஸ்டவ்வை ஆப் பண்ண மறந்திடறா. போன வாரம் சண்டைக்கு காரணமே அதுதானேப்பா. அப்படி இருக்க எப்படி தனி வீடு பார்த்து வைக்க முடியும்? ஆஸ்டல் என்றால் அது உங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா இருக்கும்னுதான் இந்த முடிவுக்கு வந்தேன். உங்க ரெண்டு பேருக்குமான செலவை நானே கட்டிடுவேன். இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலே. என்னை மன்னிச்சிடுங்க ' என்று எழுதிய கடிதத்தை அவர் படித்தபோது, "நீ படிச்சவன்னு நிருபிச்சிட்டே. வெளியே போங்கனு சொல்லாமே சொல்லிட்டே. முதியோர் இல்லம்னு சொல்லாமே  ரொம்ப பாலிஷா ஆஸ்டல்னு சொல்லிட்டே. சந்தோசம்டா மகனே. உன்னை பெத்து வளர்த்ததுக்கு இந்த அளவுக்காவது மரியாதை வச்சிருக்கிறியேனு நினைச்சு சந்தோசபடறேன். உடனே போகணுமா,  இல்லே டைம் லிமிட் எதாவது வச்சிருக்கிறீயா?" என்றார் வெறுப்புடன்.
முழு செலவையும் நானே ஏத்துக்குவேன் என்று மகன் சொன்னபோது உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம். என் பென்ஷன் பணத்தில் நான் பார்த்துக்கொள்வேன் என்று சொல்ல நினைத்தாலும், இவனுக்கென்று எவ்வளவு செலவு செய்திருக்கிறோம், நமக்காக இந்த அளவுக்கு கூட இவன் செலவு செய்யாவிட்டால் எப்படி என்ற குரூர எண்ணம் மனதில் தோன்றியதால் சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டுவிட்டார்.  மகன் வந்து வாராவாரம் பார்க்கவில்லையே தவிர வர வேண்டிய பணம் மிக சரியாக வந்து கொண்டுதான் இருக்கிறது.

முதியோர் இல்லத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாகிறது. வாரவாரம் வந்து பார்த்துவிட்டு போனவன் மாதம் ஒருமுறை வர ஆரம்பித்து இப்போது ஏதாவது நாள் கிழமைஎன்றால் வருவது என்ற நிலைக்கு வந்து விட்டது.
நினைவுகள் இழுத்து சென்ற பாதையில் பயணித்துக்கொண்டிருந்த கேசவன் கால்கள் கல்லில் இடற சற்று நிதானித்தார். வழக்கமாக செல்லும் கோயிலை கடந்து வெகுதூரம் வந்து விட்டது புரிந்தது.
"திருத்தணி, திருத்தணி. இடம் இருக்கு. ஏறுங்க" என்ற குரல் அவரை நிலைக்கு கொண்டு வந்தது.  பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.  பஸ்சுக்குள் ஏறி " திருத்தணி ஒண்ணுப்பா " என்று டிக்கெட் வாங்கினார்.
சீட்டில் உட்கார்ந்ததுமே தூக்கம் கண்களை தழுவிக்கொண்டது.
"சார், இன்னா சார் இது ரோதனையா போச்சு.திருத்தணி வந்திட்டுது . இறங்கி போ சார்" என்று கீழே இழுத்து தள்ளாத குறையாக கண்டக்டர் இறக்கி விட்டு விட்டு போனார்.
மெதுவாக நடந்து கோவில் வாசலை அடைந்தவர் படிக்கட்டு அருகில் இருந்த ஒருவர் விசுக்கென்று எழுந்த போவதை பார்த்தார். பின்னாலிருந்து பார்த்தபோது எதோ பழக்கப்பட்டவர் போல தெரிந்தது. அவர் தற்செயலாக எழுந்து போகிறாரா அல்லது நம்மைக்கண்டபிறகு எழுந்து ஓடுகிறாரா என்ற குழப்பம் எழுந்தது. எதற்கும் பின்னாடி சென்று பார்க்கலாம் என்று தொடர்ந்து சென்றவர் அந்த உருவம் கோபாலன் என்பதை அடையாளம் கண்டு கொண்டு "கோபால் சார், ஏன் ஓடுறீங்க. நில்லுங்க. நான் உங்க கூட வேலை பார்த்த கேசவன்" என்று சொல்லியபடி விரைந்து சென்று, தனக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த உருவத்தை வழி மறித்தவர், கோபாலனின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து போனார். "என்ன சார் இது? பிச்சைக்கார கோலம்?"
"கோலமில்லே. நிஜமே இதுதான்?"
"நம்ப முடியலே சார் ! நீங்க சம்பாதிச்சது என்ன ஆச்சு?"
"ரெண்டு பொண்ணுக. கல்யாணம் செய்து வச்சதில் எல்லா பணமும் காலி. கடன் வேறே இருக்கு. பென்ஷன் பணம் கடனை அடைக்க சரியாபோயிடுது." என்று நாத் தழுதழுக்கக் கூறிய கோபாலைக் கண்டு வாயடைத்து போனார்.
"மகன்தான் சம்பாதிக்கிறானே?" என்று கேட்டார் கோபமாக.
"சம்பாதிக்கிறான். அவனை வீட்டுக்கு அடங்கின பிள்ளையா வளர்த்தேன். இப்போ பொண்டாட்டிக்கு அடங்கின புருசனா இருக்கிறான். இருந்த பணத்தை எல்லாம் மகள்களுக்கு வாரி கொடுத்திட்டே. உன்னை வச்சு தண்ட சோறு போட முடியாது. பணம் கொண்டு வந்தால்தான் சாப்பாடு போடுவேன்னு மருமகள் சொல்லிட்டா. வேலை தேடி நாயா அலைஞ்சேன். இருபதுக்கே வேலை இல்லை. அறுபது வயசிலே நீ என்னத்தை கிழிக்கபோறேனு கேட்டு அடிக்காத குறையா துரத்தி விட்டுட்டாங்க. வயிறு இருக்கே. எது மறந்தாலும் பசி மறக்கறதில்லையே. அதான் இப்படி கோயில் வாசலில் நின்னு பிச்சை எடுக்கிறேன். உள்ளூரில் எடுத்தால் நாலு பேருக்கு தெரிஞ்சிடுமே. அதான் ஊரை விட்டு ரொம்ப தூரத்திலுள்ள கோவிலுக்கு வந்து துண்டை விரிச்சு உட்காருவேன்."
"இப்படி சேர்த்த பணத்தை வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட்டு சாப்பிடுவதைவிட இங்கேயே எங்காவது தங்கிகொள்ளலாமே. ஏன் மகன் வீட்டுக்கு போகணும்?"
"பேர புள்ளைக மேலே இருக்கிற பாசம்தான்ப்பா, தாத்தானு ஓடி வந்து அதுக என் கழுத்தை கட்டி பிடிக்கிறப்போ என் ஜென்மமே கடைதேறின மாதிரி தெரியுதே.  நான் கோயில் வாசலில் கை ஏந்தி நிக்கிறது அரசல்புரசலா என் மருமகளுக்கு தெரியும். மகனுக்கு தெரியாது. அது தெரியாதபடி என் மருமக பார்த்துக்குவா"
கோபாலன் சொல்வதைகேட்டு கேசவன் கண்கள் கலங்கியது.
"நீ ஏன் வருத்தபடறே? இதுவும் பழகி போச்சு. திருடலே பொய் சொல்லலே மத்தவங்களை ஏமாதலே. என் நிலைமையை சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடறேன். நீ குடுத்து வச்சவன்.உன் பிள்ளை உன்னை நடுத்தெருவிலே விட்டுடாமே கௌரவமான இடத்தில் வச்சிருக்கிறான்."
"உனக்கு எப்படி தெரியும்.?"
"இப்போ என்னோட மகன், உன் மகன் வேலை பார்க்கிற கம்பனியில்தான் வேலை பார்க்கிறான்.அங்கே வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆகுது. உன்னோட மகன் மற்றவங்க வேண்டாம்னு சொல்ற ஓவர் டைம் வேலை எல்லாத்தையும் கேட்டு வாங்கி அவன்  பார்க்கிறானாம். ஒரு லீவு நாளைக்கூட விடுறதில்லையாம். கூட வேலை பார்க்கிறவங்க "ஏன்டா இப்படி பணம் பணம்னு பறந்து சாகிறேனு கிண்டல் பண்ற அளவுக்கு உழைக்கிறானாம்".
"அதெல்லாம் எனக்கு தெரியாதே ?" என்றார் கேசவன்.
"குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லைன்னு உன்னோட மருமக வேலையை விட்டுட்டா. நம்மள போல நடுத்தர குடும்பத்திலே ஒரு வீட்டிலுள்ள எல்லாருமே வேலை பார்த்தால்தான் உருப்படியா மூணு வேலையும் சாப்பிடமுடியும்கிற நிலைமையில் விலைவாசி இருக்கு. உன் பையனுக்கு தனி ஆட்டோ அமர்த்தி ஸ்கூலுக்கு அனுப்புவே. இப்போ பெட்ரோல் செலவை மிச்சம் பிடிக்கிறேன்னு உன் பையன் ஆபீசுக்கு கூட   பஸ்சில்தான் வந்து போறானாம். என் பையன் இதையெல்லாம் அவன் பொண்டாட்டிகிட்டே சொல்லி சிரிசிட்டுருப்பான். அப்பப்போ என் காதிலும் விழும். வயதான அப்பா அம்மா கஷ்டப்படக்கூடாதுன்னு பாதுகாப்பான இடத்தில் உட்கார வச்சிட்டு தன்னோட தேவைகளை குறைச்சிட்டு ஓடி  ஓடி உழைக்கிறவனை பார்த்தால் உட்கார்ந்திருப்பவனுக்கு கிண்டலா தெரியுது. காலம் கலி காலம்டா கேசவா ." என்றார் கோபாலன்,
"முதியோர் இல்லத்தில் இருப்பது சந்தோசமான விசயமா? பெற்றவர்களை பாரமா நினைக்கிற பிள்ளைக்கும் பாராட்டா?" என்று வியந்து போய் கேட்டார் கேசவன்.
"நீ நினைக்கிறது போல பாரமா நினைச்சு மட்டும் பிள்ளைகள் பெரியவர்களை இல்லத்தில் விடறதில்லே. நாம வாழ்ந்த காலம் வேறு. இப்போ உள்ள ஓட்டம் வேறு. இள வயசு பிள்ளைக அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து ஓடுதுக.  நம்மாலே  அது முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டு நம்மள ஓரமா நிறுத்திட்டு அதுக ஓட்டிட்டு இருக்குக. இதுதான்ப்பா நிஜம்"
கோபாலன் சொல்வதை யோசித்து பார்த்தார் கேசவன். அவர் சொல்வது எல்லாவற்றையும் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும், முதியோர் இல்லத்தில் இருக்கும் நிலைமை வந்துவிட்டதே. இப்படி ஒரு நரக வாழ்க்கை தேவையா என்று நான் வேதனைப்பட்டுக்கொண்டிருக்க, இதை சொர்க்க பூமியா நினைச்சு, இதிலே இருக்க முடியாமல் தெருவில் நிற்கிறோமே என்று தவிப்பவர்களும் இருக்க தானே செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்த்தார். மகன் எழுதிய கடிதத்தை மீண்டும் மனதில் ஸ்கேன் செய்தார். இப்போது கோபம் வரவில்லை. அவன் பக்கமிருந்த நியாயத்தை உணர்ந்தார். ஒரு ஆணின் மீது இரண்டு பெண்கள் உரிமை பிரச்சினை கொண்டாடிக்கொண்டு வீட்டையே போர்க்களமாக்கி,  ரண களமாக்கி வீட்டின் ஒட்டு மொத்த நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் போது  இதை தவிர வேறு நல்ல  முடிவுக்கு வர ஒரு பாசமுள்ள மகனால் முடியாது என்பதை உணர்ந்தார்.
சட்டைப்பையில் கை விட்டு கையில் வந்த பணத்தை கோபாலிடம் கொடுத்து விட்டு "தப்பா நினைக்காதே. இதை வச்சுக்கோ. நான் கிளம்பறேன்" என்றார்.
"தரிசனம் பண்ணாமே கிளம்புறியே? " என்று கோபால் கேட்க,"இன்னிக்கு என்னோட பிறந்த நாள். என்னை பார்க்க என் பையன் வருவான். நான் சீக்கிரமே   ஆஸ்டல் போய் சேர்ந்திடறேன்" என்றபடி விரைந்து நடக்க ஆரம்பித்தார் கேசவன்,
                                                                
                                                                                      

No comments:

Post a Comment