Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, June 05, 2016

Dear Viewers

(இது 22.11.2015ல் நான் தொகுத்து வைத்திருந்த ஒருசெய்தி.அதை அப்போது பதிவு செய்யவில்லை. நேற்று டீவி நியூஸில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்ததைப் பார்த்தேன். அதன் விளைவு இந்தப் பதிவு.)             
                                                                   காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ?


                                        
விவசாயிகள் விவசாயம் பற்றிய செய்திகள் டீவீ யில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் நாம் பார்க்கக் கூடிய இரண்டே இரண்டு காட்சிகள் :
1. விவசாயிகள் தங்களது காய்ந்து  வறண்டுபோன விளை நிலங்களைக்   
காட்டிக் கண்ணீர்வடிப்பார்கள்.அல்லது தண்ணீருக்குள் மூழ்கிக்  கிடக்கும் நாற்றுகளையும் கதிர்களையும் சாய்ந்து கிடக்கும் நெல் பயிர்களையும்       காட்டிக்கண்ணீர்வடிப்பார்கள்.இந்த காரணங்களால் இந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறது என்பது அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கக்கூடிய ஒரு விஷயந்தானே.   
அதை சரிசெய்ய அவர்கள் முயற்சி செய்யவில்லையா அல்லது எதற்குமே இயலாத வகையில் சூழ் நிலை இருக்கிறதா ?
பெய்து கெடுப்பேன் அல்லது பெய்யாமல் கெடுப்பேன் என்பது வருண பகவானின் சங்கல்பமா ?
2.கடலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீரைத்தவிர வேறு எதுவும் கிடையாது. ஆனாலும் கடலுக்குள் செல்பவர்கள் கையில் கண்டிப்பாக தண்ணீர்பாட்டில் இருந்தே ஆகவேண்டும். பலரது வீட்டைச்சுற்றி மழைநீர் நின்றாலும் குடிப்பதற்கு குழாய்த் தண்ணீர்தானே தேவைப்படுகிறது . கோடையில் தண்ணீர் கேட்டு மக்கள் சாலை மறியல் செய்வதும் மழைக் காலத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு கண்ணீர் மல்க பேட்டி கொடுப்பதும் ரொம்பவும் பழக்கப்பட்டுப் போன ஒரு காட்சியாகி விட்டது. 
உலகத்தில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் . அதையெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு இந்த தண்ணீர் பிரச்சினை பற்றி நாம கொஞ்சம் பேசுவோமே. 
1. "தண்ணிதானே" என்று நினைச்சு இதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. (இந்தத் "தண்ணீ" எத்தனை கட்சிகளின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டு விட்டது என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். முக்கியமாக கட்சித்தலைவர்களுக்குத் தெரியும்).  உலகப் பொது மறையான திருக்குறளில்  "நீரின்றி அமையாது உலகு " என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.  
2. உலகில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்கும் வறுமைதான் தாயகம். நீர் இல்லாவிட்டால் விவசாயம் இல்லை. இந்தத் தண்ணீர் பிரச்சினை என்பது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை என்று நினைக்காமல்  ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரச்சினை என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.( ஐயா...நீங்க எவ்வளவு பெரிய பணக்காரராக வேணும்னாலும் இருந்துட்டு போங்க. காசை வீசி எறிந்தால் எதுவும் உங்கள் காலடியில் வந்து விழும். ஒத்துக்கொள்கிறேன். தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு போய் தானியம் எதுவும்விளையவில்லை என்றால்,  உங்களுக்குத் தேவையான அரிசி...கோதுமை...அல்லது சாப்பிடத்தேவையான ஒன்று எங்குமே இல்லை என்றால் உங்ககிட்டே பணம் இருந்தும் பிரயோசனம் இல்லை யே  )
அடுத்தவர்களை குறை சொல்லிப் பிழைக்கும் பழக்கத்தை விட்டு விட்டு எல்லோரும் பிழைப்பதற்கான ஒரு வழியை  எல்லோரும் சேர்ந்து கண்டு பிடிக்க முயற்சி செய்வோமே .
இந்தந்த இடங்களில் இந்த காரணத்தால்தான் தண்ணீர் தேங்குகிறது. அல்லது இந்தந்த இடங்களில் இது போன்ற காரணத்தால்தான் தண்ணீர் கிடைக்கவில்லை  என்பதைக் கண்டு பிடியுங்கள். அதை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள். நியாயமான விஷயங்கள் அநியாய மாக மறுக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது சாலை மறியல் . நாம்தான் அதில் எக்ஸ்பெர்ட் ஆச்சே. அது நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே.  நம் வீட்டுக் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதில் அக்கறை காட்டும் நாம்,அடுத்த தலைமுறைக்கு தண்ணீர்பிரச்னை என்றால் என்னவென்றே தெரியாது என்ற சூழ்நிலையை உருவாக்கித் தர ஒன்று படலாந்தானே.
இந்த தண்ணீர் பிரச்சினை இன்று அல்லது நேற்றைய பிரச்சினை அல்ல. காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. இப்போது மீடியாக்கள் மூலம் நிலைமை வெளிஉலகுக்கு படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அப்போதைய நிலவரம் வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவ்வளவுதான்.
போனமாதம் ரயிலில் திருச்சிக்குப் பயணித்துக்கொண்டிருந்தேன். கடலூர் மாயவரம் தஞ்சாவூர்  வழியாக செல்லும் ரயில் அது. ஒரு சில இடங்களில் நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. சில இடங்களில் நெற் பயிர் ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்தது (அந்த அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டே பயணித்தேன். அதாவது சென்னையில் பெருவெள்ளத்துக்கு முன்பாக).வெள்ளப்போக்கை டீவியில் பார்த்தபோது அவை எல்லாமே இப்போது அழிந்து போயிருக்குமென்ற நினைப்பு எனக்கே அடி வயிற்றை கலக்கும்போது, அந்தவயலில் பாடு பட்டவர்கள் இப்போது பரிதவித்துப் போயிருப்பார்கள் என்பதையும் நான் கவலையோடு இப்போது நினைத்துப்பார்க்கிறேன்). சகபயணிகள் இருவர் இதே டாபிக் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்குள் நடந்த உரையாடலை உங்கள் பார்வைக்குப் பதிவு செய்கிறேன். 
ஒருவர் : "தண்ணீர் இல்லே அது இல்லேன்னு புலம்பறதை விட்டுட்டு அதுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யணும். அதுக்கு ஆகிற செலவை எல்லாரும் சேர்ந்து பங்கு போட்டுக்கணும். யார் யார் எவ்வளவு கொடுத்தாங்க என்கிறதையும் எழுதிவச்சுக்கணும். நாமஎன்ன சொன்னா லும் அதை காதிலேயே வாங்காமே இருந்துட்டு எலெக்சன் சமயத்திலே நம்ம வீட்டைத்தேடி வந்து ஓட்டு கேட்க வருவாங்கதானே, அவங்க கிட்டே,"நீங்க எந்தக்கட்சியை சேர்ந்தவங்களாக வேணும்னாலும் இருந்து ட்டுப் போங்க. அதைப்பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் பகுதிக்கு நாங்க இவ்வளவு செலவு பண்ணியிருக்கோம். அதுக்கு பேங்க் வட்டி போட்டால் இவ்வளவு தொகை வரும். அதை எந்தக் கட்சி எங்களுக்கு தருதோ அவங்களுக்கு நாங்க ஓட்டு போடுவோம்"னு சொல்லணும் "
மற்றவர்  : அதிலும் ஆயிரத்தெட்டு சட்டப் பிரச்சினை இருக்கப் போகுது. 
முதலில் பேசியவர் : அப்படியொரு பிரச்சினை வந்து உங்களைக் கைது செய்வோம்னு சொல்லிட்டு யாராவது வந்தால், அப்போ தீக்குளிக்கிற நாடகம், சாலை மறியல் நாடகத்தை எல்லாம் இவங்க நடத்தட்டும். விஷயம் வெளிச்சத்துக்கு வரட்டும். எல்லாரும் சேர்ந்து நீதி கேட்போம். நீயும் செய்ய மாட்டே. நாங்க செலவழிச்ச காசையும் தரமாட்டேன்னு சொல்றது எந்த ஊர் நியாயம்னு கேட்போம்.
இந்தப் பேச்சு நடந்து கொண்டு இருக்கும்போது கும்பகோணம் வந்து விட்டது. இவர்கள் அருகில் வந்த ஒருவர் " ஸார் இது என்னோட இடம் " என்று சொல்ல, அவர்கள் இருவரும் அங்கிருந்து எழுந்து அடுத்தாற்போல் இருந்த காலி இடத்துக்குப் போய் விட்டார்கள். அதன் பிறகு அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்பதை விட்டு விட்டு, ஒருவரை ஒருவர் குறை சொல்வதை விட்டு விட்டு  நெடுங்காலமாக இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்ன முடிவு கட்டலாம் என்பது பற்றி யோசியுங்கள். நல்ல முடிவுகளை எதிர் காலந்தான் சொல்ல வேண்டும். காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ? ஹூம் .... நான்தான் தவிச்சேன். என்னோட பேரக் குழந்தைகளுக்காவது  இந்த நிலைமை வராமல் இருக்கட்டும் என்று நாம் ஒவ்வொருவரும் நினைப்போம். அட்லீஸ்ட் கனவாவது காண ஆரம்பிப்போம். உங்களை எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டு ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன். விவசாயப் பிரச்சினை என்பதை தனிப்பட்ட ஒரு வர்க்கத்தின் பிரச்சினை என்ற கோணத்தில் பார்ப்பதை விட்டு விட்டு அது ஒரு ஒட்டு மொத்த சமுதாய / உலகப் பிரச்சினை என்ற அளவில் அலசி ஆராயப் படவேண்டும்.   
யாராக இருந்தாலும் சரி ; ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகின் நடக்கும் சட்டத்துக்கு, நியாயத்துக்குப் புறம்பான அத்தனை செயல்களுக்கும் காரணம் வறுமை ; பசிதான். கையில் காசு இருந்தாலும் கடையில் தானியம் இல்லையென்றால் காசு என்பது தூசிக்குச் சமம்.  நாமோ நமக்கு வேண்டிய ஒருவரோ பசியோடு இருக்கும் போது தர்மநியாயத்தைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. அவங்க பசிக்கு என்ன கொடுக்கலாம், அதை எப்படி கொண்டு வரலாம் என்று மட்டுமே யோசிப்போம். 
2015ன் முடிவில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.. 2016ன் முதல் பாதிப் பகுதி முடிவதற்கு முன்பாகவே  வறட்சி ..... ஐயோ கடவுளே.... இது எங்களை எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியலையே/ 

No comments:

Post a Comment