Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 09, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 10

                                               
  அச்சுப் பிச்சு அப்புமணி !
அத்தையின் கோபத்தைக் கண்டு அம்மா பயந்து போனாள். " அத்தை, அவன் ஒரு ரெண்டுங் கெட்டான்னு உங்களுக்குத் தெரியாதா ? அவன் பேச்சை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிறீங்களே " என்று கேட்டாள்.
"அவன் ரெண்டுங் கெட்டானா இருக்கிறதில் தப்பே இல்லே. அவனை ஒரு ஆளா மதிச்சு அவனை இங்கே நீ கூட்டிட்டு வந்ததுதான் தப்பு. இப்படி யொரு பைத்தியக்காரப் பிள்ளையை  ஏன் வெளியிடத்துக்கு கூட்டிட்டு வரணும் ?" என்று கோபமாக இரைந்தாள் அத்தை.
"என்னை மன்னிச்சிடுங்க அத்தை. இவன் புத்தி தெரிஞ்சுதான் நான் எந்த ஒரு நல்லது கெட்டதிலும் கலந்துக்கறதே கிடையாது. இருந்தும் மனசு கேட்காமே இங்கே வந்தேன். என்னை  மன்னிச்சிடுங்க அத்தை " என்ற அம்மா, அப்புமணியின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.
"அம்மா ... இப்போ எதுக்கு என்னை இவ்வளவு வேகமா இழுத்துட்டு நடக்கறீங்க? கையை விடுங்க .... வலிக்குது " என்றான் அப்புமணி.
"நான் உன்னை வீட்டில்தானே இருக்க சொன்னேன். கேட்டியா ? அடம் பிடிச்சு வந்ததுதான் வந்தே. வாயை மூடிட்டு  இருந்திக்கலாம்தானே. ஏன் குறுக்கே புகுந்து பேசினே ?"
"நான் பேசினதுக்கா நீ கோபப் படறே ?"
"இல்லே .. குளிர்ந்து போய் நிக்கிறேன் "
"நீ சொல்றதப் பார்த்தா கோபப் படற மாதிரி இருக்குது "
"கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளேயே ஒரு பொண்ணு, அவ புருஷனை இழந்துட்டு நிக்கிறா. எல்லாரும் வயித்தெரிச்சலில் இருக்கிறாங்க. அவங்க கிட்டே போய் "நல்லவேளை .. கல்யாணம் நடந்த பிறகு மாப்பிள்ளை செத்தார்னு சொல்லலாமா ?"
"காளிமுத்து வீட்டில் அவன் பாட்டி செத்துப் போனப்போ அவனோட அப்பா கிட்டே எல்லாரும் இந்த மாதிரிதான் சொன்னாங்க. அவர் கோபப் படவே இல்லை. இந்த அத்தைக் கிழவி மட்டும் ஏன் கத்துது ?"
"அட மண்டு . காளிமுத்து வீட்டிலே செத்துப் போனது ஒரு வயசான பாட்டி . எண்பது  வயசுக்கு மேலே ஆகுது .எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சிட்டு  செத்தாங்க. அத்தை வீட்டில் இறந்து போனது இருபத்தஞ்சு வயசுப் பையன். "
"அப்போ வயசானவங்க செத்தால் பரவாயில்லையா ?" என்று அப்புமணி கேட்க , " அட கடவுளே, இவனுக்கு நான் எதை சொல்லி புரிய வைக்க முடியும்  ?" என்றாள்.
"நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இனிமே யார் செத்தாலும் அவங்க வீட்டுக்கு நான் போக மாட்டேன். அப்படியே தெரியாத்தனமா போனாலும் வாயைத் திறந்து எதுவும் சொல்ல மாட்டேன் .போதுமா ?" என்றான் .
"அப்படியே இருடா என் செல்லம் " என்றாள் அம்மா.
மறுநாள் ....
"அப்புமணி .. நம்ம கோடி வீட்டுத் தாத்தாவுக்கு இன்னிக்குப் பிறந்த நாளாம். அவருக்கு நூறு வயசு நிறையுதாம். பெரியவங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கினா ரொம்பவும் நல்லது. நீ ஸ்கூலுக்குப் போற வழியிலே தாத்தா கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கோ. அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணு. "எல்லார்கிட்டேயும் நான் ரொம்ப நல்ல பேர் வாங்கணும்"னு ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு அவர்கிட்டே சொல்லு. நாலு பெரியவங்க ஆசீர்வாதத்திலேயாவது நீ நல்லபடியா முன்னுக்கு வருவியான்னு பார்க்கலாம்" என்றாள் அம்மா.
"நீயும் வாம்மா. நீயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ." என்றான் அப்புமணி 
"நான் அப்புறம் போய்க்கிறேன். நீ கிளம்பு. ஸ்கூலுக்கு நேரமாயிடும் "
"ஊஹூம் ... நீ வந்தால் நான் தாத்தா வீட்டுக்குப் போவேன். இல்லாட்டா நான் ஸ்கூலுக்குக் கூட போக மாட்டேன்  " என்றான் அப்புமணி.
வேறு வழியில்லாமல் அம்மாவும் கிளம்பிப் போனாள் . தாத்தாவின் வீட்டில் அவரது உறவினர் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என்று கூட்டம் அதிகம்  இருந்தது. அவர்கள் தாத்தாவிடம் கேலி பேசுவதும் வணங்குவது மாக இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்ததும், ராமு சோமு மாமாவின் வீட்டில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சி அப்புமணியின் நினைவுக்கு வந்தது.  தாத்தாவின் அருகில் சென்ற அப்புமணி , அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு "நீங்க நூறு வயசு வரைக்கும் நல்ல,சௌக்கியமா இருக்கணும். சந்தோசமா இருக்கணும் " என்றான். இதைக் கேட்டு தாத்தா சிரிக்க, அங்கு இருந்த உறவினர்களும் நண்பர்களும் அப்புமணியை முறைத்துப் பார்க்க அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியில் வந்தாள்  அம்மா. 
-------------------------------------------  தொடரும் -------------------------------------------

No comments:

Post a Comment