Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 07, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 01

                                               
   அச்சுப்பிச்சு அப்புமணி !
ஹாய்  குட்டீஸ், இப்போ நாம வயல்வெளி கிராமத்துக்குப் போகப் போகிறோம். அது ரொம்பவுமே  சிறிய கிராமம். அந்த கிராமத்தை சுற்றி வளைந்தோடும் ஓடும் நீரோடை-கோடைகாலத்தில் கூட வற்றாத அந்த நீரோடை வயல்வெளி கிராமத்துக்கு பசுமையை வாரி வழங்கி யிருந்தது. ஆனால் மற்றகிராமங்களிலிருந்து வயல்வெளியைப் பிரித்து வைத்திருந்தது. காரணம்,அந்த நீரோடையைக் கடந்துதான் அக்கம்பக்கத்து ஊர்களுக்கோ, பள்ளிக்கூடம் அல்லது கடைவீதிகளுக்கோ செல்ல முடியும் . பெயருக்கு ஏற்ற மாதிரி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல் சூழ்ந்த சிறிய கிராமம் வயல்வெளி.  அந்த கிராமத்தில்   அறுபதுக்கும் குறைவான வீடுகளே உள்ளன. தெருமுனையில் ஒரு பிள்ளையார் கோயில். அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போமா ?

"என்னடா அப்புமணி, இன்னும் தூங்கறே ! எப்போ எழும்பி எப்போ ஸ்கூலுக்குப் போகப் போறே? லேட்டா போனா டீச்சர் திட்டுவாங்க தானே"என்று அம்மா சொல்ல பதிலேதும் சொல்லாமல் படுக்கையில் புரண்டு படுத்தான் அப்புமணி.
"சூரிய உதயத்துக்கு முன்னமே படுக்கையை விட்டு எழுந்திருக்கணும்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். காலையிலே எழுந்திருச்சு  பல் தேய்ச்சு முகம் கழுவிட்டு படிக்க உட்காரு. "காலை எழுந்தவுடன் படிப்பு; பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு"ன்னு பாரதியார்  சொல்லியிருக்கார்தானே "
"காலையில் எழுந்ததும் காப்பியை குடிச்சிட்டு கவுந்தடிச்சுப் படுத்துக்கணும் " என்று பாடினான் அப்புமணி.
"என்னடா பாட்டு இது ! இதை உனக்கு சொல்லித் தந்தது யாரு ?" என்று அம்மா கேட்க, "நானே தான் படிச்சேன். நீ டீவீ யிலே தெய்வமகள் சீரியல் பார்ப்பேதானே. அதிலே முதலில் ஒரு பாட்டு வருமே. அதைத்தான் நான் மாத்திப் படிச்சேன் " என்று பெருமையுடன் சொன்னான் அப்புமணி.
"அடடா .. பாட்டு கட்டுற அளவுக்கு நீ பெரிய ஆளா ஆயிட்டியா ? இப்போ படுக்கையை விட்டு எழுந்திருச்சு ஸ்கூலுக்கு ரெடியாகு கண்ணா " என்று கெஞ்சலான குரலில் சொன்னாள்  அம்மா.
"அம்மா ... இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் "
"ஏன் செல்லம் ?"
"அங்கே எல்லாரும் என்னை " அச்சுப்பிச்சு அப்புமணி "ன்னு கூப்பிட்டு கேலி பண்றாங்க "
"மத்தவங்க கேலி பண்ற மாதிரிதானே நீ நடந்துக்கறே "
"அச்சுப்பிச்சுன்னு சொன்னா அதுக்கு என்னம்மா அர்த்தம் ? கோமாளினு அர்த்தமா  ?"
"என்ன சொல்றே ?"
"அன்னிக்கு பக்கத்து டவுணுக்குப் போய் சர்க்கஸ் பார்த்தோமே, அங்கே வேடிக்கை காட்டின கோமாளியைப் பார்த்து நாம கைதட்டி சிரிச்சோமே. அந்த மாதிரி நானும் ஒரு கோமாளினு சொல்றாங்களா?" என்று சந்தேகம் கேட்டான் அப்புமணி .
"அங்கே கோமாளித்தனம் பண்ணி நம்மள சிரிக்க வைச்சவங்க யாருமே உண்மையில் முட்டாள் இல்லே. முட்டாள் மாதிரி ஏதாவது விஷமத் தனம் பண்ணி நம்மள சிரிக்க வச்சாங்க அவ்வளவுதான். உன்னை கோமாளி லிஸ்டில் சேர்க்க முடியாது "
"அம்மா,  அச்சுப்பிச்சுன்னு சொன்னா அதுக்கு என்னம்மா அர்த்தம்? அதை சொல்லு நீ முதல்லே "
"அப்பு, நீ ஸ்கூலில் ஆறாங் கிளாஸ் படிக்கிறியே தவிர உனக்கு உன்னோட படிக்கிற மத்த பிள்ளைங்க மாதிரி சூட்சுமம்  புத்திசாலித்தனம் கிடையாது. சமயசந்தர்ப்பம் தெரியாமே எதையாவது "தத்துப் பித்து"ன்னு உளர்றே "  
"தத்துப் பித்து"ன்னா என்ன ?"
"ஏடாகூடமா எதையாவது சொல்றது , செய்றது , பேசறது "
"ஏடாகூடம்னா என்னம்மா ?"
"என் பிராணன் போச்சுடா ராமா! இப்படி "குண்டக்க மண்டக்க"ன்னு  எதையாவது கேட்கிறதுக்குப் பேர்தான் ஏடாகூடம்  " 
"குண்டக்க மண்டக்க"ன்னா என்ன ?"
"போதும்டா சாமி. இதுக்கு மேலே உனக்குப் புரியவைக்க என்னாலே முடியாது. உனக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு மூளை வளரலே. போதுமா ? " என்று அம்மா சொன்னதும் அப்புமணியின் முகம் வாடிப் போனது .
"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் .. நீ போய் பல் தேய்ச்சு குளிச்சு முடிச்சிட்டு வா  " என்று சொல்லி அவனது கன்னத்தில் முத்தமிட்டதும் படுக்கையை விட்டு எழும்பி குளிக்கப் போனான் அப்புமணி.
சிறிது நேரத்துக்குப் பிறகு ...
"அப்புமணி, வாளியில் தண்ணி நிறைஞ்சு கீழே வழியிற சத்தம் கேட்குதே  . என்ன செய்ற நீ ?"
"வழியிற தண்ணிய எடுத்து வைக்க ஒரு பெரிய வாளியா தேடிட்டு இருக்கேன்" என்று குளியலறையிலிருந்து பதில் சொன்னான் அப்புமணி.  "மண்டு .. மண்டு .. உனக்கு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க அச்சுப்பிச்சு ன்னு. ஒரு சின்ன ரூமுக்குள் நீ பெரிய வாளியை தேடறியா ? குழாயை மூடினா தண்ணி கொட்டறது நின்னுடுங்கிறதுகூட தெரியாத முட்டாளா இருக்கிறியேடா" என்று கோபமாக சொன்னாள் அம்மா.
"அட .. ஆமாம் ... குழாயை மூடினா தண்ணி கொட்டறது நின்னுடுமே. இது எனக்குத் தோணவே இல்லையே " என்று வியப்புடன் சொன்னான் அப்புமணி .
"உனக்கு தோணலைங்கிறதை மட்டுமாவது சரியா புரிஞ்சு வச்சிருக்கியே. ஈரத் தலையைத் துவட்டிட்டு சீக்கிரம் வா. ஸ்கூலுக்கு நேரமாச்சு.. கரெக்ட் டைம்க்கு ஸ்கூல் போகனும்தானே ?"
"ஸ்கூலுக்குப் போக மாட்டேன். டீச்சரே சொல்றாங்க, "அப்புமணி , நீ ஒப்புக்கு சப்பாணியா இந்த கிளாஸில் உக்காந்திருக்கே"ன்னு. எனக்கு ஸ்கூல் வேண்டாம்மா  "
"அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா குழந்தே.. இன்னிக்கு சனிக் கிழமை . அதனாலே காலையில் மட்டுந்தான் ஸ்கூல் .. மத்தியானம் லீவ் . ஸ்கூல் முடிஞ்சு நீ வீட்டுக்கு வந்த பிறகு, சாயங்காலம் ஒரு மூணு மணிக்குக் கிளம்பி நாம ரெண்டு பேரும்  டவுணுக்குப் போகலாம் . "
"எதுக்கு ?"
"கோவிலில் திருவிழா .. சாமி கும்பிடலாம் ..நீ ராட்டினம் ஏறி சுத்தலாம் . அது உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே. உனக்கு பலகாரம் வாங்கி தர்றேன் . சீக்கிரம் கிளம்புடா செல்லம்  "
"அப்ப சரி ..   அம்மா ... யோசனை பண்ணிப் பார்த்தா அச்சுப்பிச்சுங்கிற பேர் நல்லாவே இருக்குது. இந்தப் பேரையே நான் வச்சுக்கிறேன்ம்மா இப்போ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்.. " என்று அப்புமணி சொல்ல, தனது தலையில் தானே அடித்துக் கொண்ட அம்மா "நீ யூனிபார்ம் போட்டுட்டு, சாப்பிட்டுட்டு சீக்கிரம் கிளம்புடா கண்ணா  " என்றாள். 
பிறகு  ஐந்து நிமிட நேரத்தில் சாப்பிட்டு விட்டு  அம்மாவுக்கு டாட்டா சொல்லி விட்டு ஸ்கூலை  நோக்கி நடக்க ஆரம்பித்தான் அப்புமணி .
---------------------------------------------------------------------------------------------------- ( தொடரும் )

No comments:

Post a Comment