Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 08, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 125 )

                  சில அசடுகள் ... எங்கேயும் ... எப்போதும் !!

மேஜை மீது சிதறிக் கிடந்த பைல்களை கையில் எடுத்துப் பிரிப்பதுவும் பின் அதைக் கட்டி வைப்பதுமாக இயந்திரம் போல் இயங்கிக் கொண்டு இருந்தாள் இந்துமதி. ஆபீஸ் வேலையில் லயிக்க மனம் மறுத்தது. ச்சே .. நானா இப்படி? எவ்வளவு கேவலமாக சீப்பாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். மற்றவர்கள் ஆயிரம் சொன்னாலும் நம்மோட சொந்த புத்தியைக் கடன் கொடுத்தது நம்மோட முட்டாள் தானம்தானே என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
"நான் அதிபுத்திசாலி, வேலையில் கெட்டிக்காரி, பங்க்சுவாலிட்டியை  கீப் அப் பண்ணுவதில் என்னை அடிக்க ஆளே கிடையாது என்றெல்லாம் சொல்ல நான் தயாரில்லை. ஆனால் கவெர்ன்மெண்ட் செர்வீசில் இருந்தும், யாரிடமிருந்தும்  ஒரு பைசா நான் கை நீட்டி  வாங்கியதில்லை என்று மார் தட்டி பகிரங்கமாக  முழக்கமிட என்னால் முடியும" என்று நாடக பாணியில் நட்பு வட்டங்களிடம் எத்தனை முறை வாய்  சவால் விட்டிருப்பேன், நம்மைப் போல ஒன்றிரண்டு பேர் அங்கே இங்கேன்னு இருப்பாங்க என்பதைக் கூட மறந்து !
லஞ்சம் வாங்கிய கேசில் மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டு போலீசுடன் போகிற அரசு ஊழியர்களை டீவீ நியூஸ்ஸில் பார்க்கும் போது, "ஹும்.. கை நீட்டி காசு வாங்கும்போது கூச்சம் இல்லே. பிடிபட்டுப் போகும்போது மட்டும் வெட்கம் வருதா ? எதுக்கு முகத்தை மூடிக்கிறே ? என்னவொரு ரைட் ராயலா பேரம் பேசறே ! உங்களையெல்லாம் கையில் விலங்கு போட்டு இழுத்துட்டுப் போகணும்.. லஞ்சம்  வாங்குகிறவனை மட்டுமில்லே, கொடுக்கிறவனையும் சேர்த்து உள்ளே தள்ளனும்.. என்ன தகிடு தத்தமாவது பண்ணி உங்க வேலையை சாதிச்சுக்கணும்.. அப்படித் தானே? வாங்குகிறவனுக்கு ஆறுமாசம் ஜெயில் தண்டனைனா, லஞ்சம் குடுக்கிறவனுக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனை கொடுக்கணும்"னு நான் ஆவேசமாகப் பேசும் போதெல்லாம், "மம்மீ , சீரியல் பார்க்கிறவங்க டென்சன் ஆவாங்க .. நீங்க நியூஸ் பார்க்கும்போது டென்சன் ஆயிடறீங்க! என்ன ப்ராப்ளெம் ?" என்று குழந்தைகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பதை பதைக்கிற நான் எதனால் தடுமாறிப் போனேன் ? என்னோட புத்தியைக் கடன் கொடுத்தேன் ?
"ஹாய், இந்து !" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் இந்துமதி.
"வா லட்சு "
"மேடம் நேத்து  சொல்லிக்காமே ஆபீசுக்கு திடீர் மட்டம்  போட்டுட்டீங்க ? நேத்து ஸாருக்கு ஆப் ஏதாவதா? சேர்ந்து மூவி அதுஇதுன்னு கிளம்பிட் டீங்களா ?"
"ஆமாம் .. இப்பத்தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சுது ... அதான் சேர்ந்து சுத்தறோம்..போடீ.. நீயும் உன் கற்பனையும்.. இன்னும்  ரெண்டு வருசத்தி ல் என்னோட பொண்ணுக்கு வரன் தேடணும் "
"ச்சீ .. சீரியஸா எடுத்துக்காதே . சும்மா விளையாட்டுக்காக கேட்டேன் . ஏன் நேத்து வரலே? நேத்து சக்கரைப் பொங்கல் செஞ்சு கொண்டு வந்திருந்தேன் . சூடு ஆறுமுன்னாலே உனக்குக் குடுக்கணும்னு  ரெண்டு மாடி இறங்கி வர்றதும்  வந்து உன் சீட்டைப் பார்த்துட்டுப் போறதுமா இருந்தேன் . உங்கிட்டேயிருந்து போனை எதிர்பார்த்தேன். பதினோரு மணிக்கு மேலே தான் வனஜா வந்து  உங்கிட்டேயிருந்து லீவ் மெசெஜ் வந்த  விவரம் சொன்னா .. என்ன ப்ராப்ளெம் ?"
"லஞ்சத்தைப் பத்தி என்ன நினைக்கிறே ?"
"நான் என்னத்தே நினைக்கிறது ? நீதான் அதைப் பத்தி வாய் கிழிய பேசுவியே. லஞ்சம் என்பது அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்ட எழுதப்படாத சட்டம் .. இது நாட்டுடைமை ஆக்கப் பட்டு எவ்வளவோ காலமாச்சு !"
"நாட்டுடைமை ஆயிட்டுன்னா அப்புறம் ஏன் லஞ்சம் வாங்குகிறவனைப் பிடிக்கணும் "
"மீடியாக்காரங்க பரபரப்பு நியூஸ் இல்லாமே வருத்தப்படக் கூடாதே. அது க்காகத்தான்"
"ஒரு பழமொழி சொல்வாங்க .. கால்காசுக்காக அழிந்த மானம் கதறி அழுதாலும் திரும்பி வராதுன்னு .. ஒரு செய்தி மீடியாவில் வந்து .. அதை எல்லோரும் பார்த்து .. அக்கம் பக்கத்தில் உள்ளவங்க துக்கம் விசாரித்து ... அந்த வீட்டுக் குழந்தைகளை அவர்களோடு சேர்ந்து விளையாடும் மற்றக் குழந்தைகள்  அந்த விஷயத்தை சொல்லிக் கிண்டல் பண்ணி .. அப்பப்பா .. இதெல்லாம் தேவையா ?"
"ஸ்டாப் ... ஸ்டாப் ... என்ன இது எங்கே பார்த்தாலும் இதே பேச்சு .. இப்போ ஒரு சீரியலில் கூட இதே டாபிக் தான் ஓடுது .. ஒரு வீடு. அந்த வீட்டில்  லஞ்சம் வாங்கின மகனை அப்பா எதிர்க்கிறார் வெறுக்கிறார் ... அந்த அப்பா காந்தி பக்தர் ..அதே வீட்டில் அவரோட இன்னொரு மகன் குடிபோதையில் எப்போதும் படுத்திருப்பார் .. அந்த மகனுக்கு, சரக்கு வாங்க அந்த வீட்டு மருமகளே பகிரங்கமாக காசு கொடுப்பா . அதையெல்லாம் அப்பா கண்டுக்கவே இல்லே. காந்தியக் கொள்கையில் முக்கியமானது மதுவிலக்குதானே  .. மது தன்னோட வீட்டுக்குள்   சர்வ சாதாரணமா நடமாடியபோது பேசாமே இருந்த பெரிசு, இன்னொரு பையன் லஞ்சம் வாங்கிறது தெரிஞ்சு ஓவரா சவுண்ட் விடுது "
"அதுக்கொரு  காரணத்தை சீரியலின் கடைசிப் பகுதியில் சொல்வாங்க.நீ அப்போ தெரிஞ்சுக்கோ. இப்போ என் பிரச்சினைக்கு வாடீ "
"தாம்பரத்துக்கு அந்தப் பக்கம் மொபசில் ஏரியாவில் எனக்கொரு இடம் இருக்குது. அதை விற்க்கிறதுக்கு  முன்னாடி சில டீடைல்ஸ் சரி பார்க்க ரெஜிஸ்ட்ரார் ஆபீசுக்குப் போக வேண்டியதிருந்தது. என் ஹஸ்பண்ட் கூட   வேலை பார்க்கிறவங்க, ஆபீஸ் இருக்கிற இடத்தையெல்லாம் சொல்லி  அந்த வேலையை ஹாண்டில் பண்றவங்க கிட்டே பணத்தைக் கொடுங்க. அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க. நீங்க கேட்கிற டீடைல்ஸ்  அவங்க குடுத்துடுவாங்கன்னு சொல்லியிருந்தாங்க. இவரும் அதை என்கிட்டே  சொல்லி என்னை அங்கே அனுப்பினார் "
"நேத்து அந்த வேலை இருந்ததால் தான் நீ ஆபீசுக்கு மட்டமா ?"
"ஆமாம் .. அந்த சீட்டில் இருந்தது ஒரு லேடி. நான் கேட்ட இன்பர்மெசன் எல்லாம் குடுத்தாங்க. நான் தேங்க்ஸ் சொல்லிட்டு கையிலிருந்த பணத்தை அவங்க முன்னாலே நீட்டினேன். அவங்க ஒரு பார்வை பார்த்தாங்க பாரு .. நான் அங்கேயே செத்துட்டேன் .. கூனிக் குறுகிட்டேன். என்னோட செய்கை எனக்கே அறுவெறுப்பாய் இருந்துச்சு. கவெர்ன் மெண்ட் ஆபீசில் லஞ்சம் வாங்காமே நம்மளப் போல வேலை செய்கிற வங்க கொஞ்ச பேராவது இருப்பாங்க என்கிற விஷயத்தை நான் ஏன் மறந்தேன்? லஞ்சம் வாங்க சந்தர்ப்பம் இல்லாமே, வழி இல்லாததாலே வாங்காமே இருந்தா அது ஒரு விஷயமே இல்லை. வழியிருந்தும் கட்டுப் பாடா  இருக்கிறவங்களும்  இருக்கத்தானே செய்றாங்க. கவெர்ன்மெண்ட் ஆபீசில் வாங்குகிறவனுக்கு ஆறுமாசம் ஜெயில் தண்டனைனா, லஞ்சம் குடுக்கிறவனுக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனை கொடுக்கணும்" னு ஆவேசமாகப் பேசும் நான், ஒருத்தங்க அந்தத் தப்பை செய்வாங்களா மாட்டாங்களா என்கிறதே தெரியாமல்  பணத்தை எடுத்து நீட்டியதை நினைச்சா என் மேலேயே எனக்குக் கோபம் வருது.. அவமானமா இருக்கு " 
"அட விட்டுத் தள்ளு ... அதுக்காக இங்கே லஞ்சம் வாங்கப்படும்னு போர்டு வைக்க முடியுமா என்ன  .... நீ பேசறதைக் கேட்டால் எனக்குத் தலையை வலிக்கிறது.. வா .. கேண்டினில் போய் காபி குடிச்சிட்டு வந்து ப்ரெஷ் மூடில் வேலைத் தொடங்கலாம் "
பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள் இந்துமதி. 

No comments:

Post a Comment