Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 22, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 126 )

                        கலக்கம் / கலகம் இல்லா இடம்தான்  எது ?

"ச்சே .. மத்தியானம் ஒரு மணிக்கு முன்னமே வந்திருக்கணும் ... இவ்வளவு நேரம் காத்திருந்தும் இன்னும் பஸ் வர்ற வழியாத் தெரியலையே.. டிரைவர்ஸ் கண்டக்டர்ஸ் எல்லாரும் லஞ்சுக்குப் போயிருப்பாங்க ... அவங்களும் மனுஷங்கதானே.  ஓடி ஓடி உழைக்கிறதெல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்காகத் தானே !  இந்த நேரத்தில் வெளியில் வந்தது நம்ம தப்பு .." என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ராமச்சந்திரன். 
காக்கி கலர் யூனிபார்ம் போட்ட ஒருவர் அங்கு வர அவர் அருகில் சென்ற ராமச்சந்திரன் " என்ன ஸார், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக் காத்துக் கிடக்கிறேன். பஸ் செர்விஸ் உண்டுதானே ?" என்று கேட்டார் 
"நாங்களா செர்விஸ் பண்ண மாட்டோம்னு சொல்றோம். உங்களைப் போல பப்ளிக்தான் பஸ்சை  ஓட விடாமே சாலை மறியல் பண்றாங்க.. செங்கல்பட்டு பக்கம் ஏதோ ப்ராப்ளெம். அது சால்வ் ஆனாதான் பஸ் ஓட பாதை கிடைக்கும் .. வெளியில் போன பஸ் எதுவும் இன்னும் டெப்போக்குத் திரும்பி வரலையே .. அவனவன் பிரச்சனைக்காக ரோடு மறியல் பண்ணிட்டு தெருவில் நிற்கிறாங்க சரி .. அவங்களோடு சேர்ந்து சம்பந்தமே இல்லாமே நாங்களும் சோறு தண்ணி இல்லாமே தெருவில் நிற்க வேண்டியிருக்கே .. எல்லாம் எங்க தலைஎழுத்து " என்று சொல்லி சலித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார் காக்கி சட்டைக்காரர்.
பஸ்சுக்காக  காத்து நிற்பதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்து கொண்ட ராமச்சந்திரன் ஷேர் ஆட்டோ நிற்கும் இடத்துக்கு சென்றார்.. வெயில் மண்டையைப் பிளக்குது.. பத்து பேர் சேர்ந்தால்தான் அவனுக வண்டியை எடுப்பானுக. எஞ்சினையும் ஆப் பண்ண மாட்டானுக .. வெயிலோடு சேர்த்து இந்த அவஸ்தையையும் தாங்க வேண்டுமே என்ற கோபம் வந்தாலும், இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நினைப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் செல்ல," ஸார் .. முடிச்சூர் .. முடிச்சூர் " என்றார் ஆட்டோ டிரைவர்.
உள்ளே ஏறி உட்கார்ந்த ராமச்சந்திரன் "என்னப்பா எப்போ எடுப்பே ?" என்று பயந்த குரலில் கேட்க ,"என்ன ஸார் .. இப்பத்தானே ஏறி உட்கார்ந்தே. கொஞ்சம் பொறு ஸார் .. இன்னும் ஏழெட்டு பேராவது வரட்டும் ...நாங்களும் பொழைக்க வேணாமா ?" என்று தன்மையான குரலில் சொன்னான் டிரைவர்.
ஐந்து நிமிடம் கழிந்தது ... இரண்டு பெண்கள் ஏறி உட்கார்கள்...
"ரேணு, நீ எதுக்கும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்.. ஆபீசுக்குப் போய் சொல்லிப் பார்த்துட்டு அவங்க ஏதாவது சொன்னா அதுக்குப் பின்னாலே லீவு சொல்லிட்டு வந்திருக்கலாம்.. ஆபீஸ் மேட்டருக்காக இப்படியொரு தடாலடி முடிவு எடுக்க வேண்டாம் "
"இல்லே ராதா .. உனக்கு எங்க ஆபீஸ் நிலவரம் தெரியாது. ஆபீசுக்கு  லேட்டாப் போகணும்னு எங்களில்  யாருக்கும் எந்த நேர்த்திக் கடனும் கிடையாது. நாம ஒரு கணக்குப் போட்டு ஆபீஸ் டைம்க்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே ஆபீசுக்கு வர்ற மாதிரி  ப்ளான் பண்ணிக் கிளம்பறோம். ஆனா வழியில் தடங்கல் ஆயிடுத்தே..எதிலோ தேள் கொட்டினால் இதிலே நெறி கட்டுமானு ஏதோ ஒரு பழமொழி சொல்வாங்க அது எனக்கு சரியா ஞாபகம் இல்லே.. ஆனா எங்கோ ஒரு மூலையில் ஏதோ பிரச்சனைனா அது மத்த இடங்களை அப்பெக்ட் பண்ணுதே ..போதும்டா சாமி .. நேத்து லேட்டாப் போனேன் .. " ஊருக்கு வெளியே மலிவா இடம் கிடைக்குதுனு  வீட்டைக்  கட்டி உட்கார்ந்துக்க வேண்டியது. லேட்டா வர்றதுக்கு ஒவ்வொரு காரணத்தை சொல்ல வேண்டியது"னு    என் தலையைப் பார்த்ததுமே சொல்றான், புதுசா வந்து சேர்ந்திருக்கிற அந்தக் கடன்காரன் .. "ஸார் எங்க வீடு இங்கிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குது. பஸ் செர்விஸ் இல்லை.ஆட்டோவில் அவனவன் அடிச்சுப் பிடிச்சு ஏறுறான் .. என்னாலே ஏற முடியலே .. நடந்து வரேன் .  அதான் லேட்"னு சொன்னேன் . அந்தக் கடன்காரன் அதைக் காதிலேயே வாங்கிக்கலே.  இன்னிக்கும் லேட். அவன் முன்னாலே நின்னு ஏன் வாங்கிக் கட்டிக்கணும்னு நினைச்சுதான் உன் வீட்டைப் பார்த்து வந்துட்டேன். நீ குடுத்து வச்சவ .. ஹோம் மேக்கரா ஜாலியா லைப்பை என்ஜாய் பண்றே.. இப்போனு இல்லே, எப்பவுமே என்னோட பிரச்சனைகளை என் ப்ரெண்ட் கல்யாணி கிட்டே சொல்லிப் புலம்புவேன். ஆயிரத்தெட்டு டென்சனுக்கு நடுவிலே வேலைக்கு ஓடி வர்றோம். இதில் வீட்டிலுள்ள பெரியவங்க பிரச்சனையும் சேர்ந்து படுத்துதுனா பேசாமே அவங்களை கொஞ்ச நாளைக்கு ஏதாவது ஒரு ஹோமில் விட்டுப் பாரேன்னு  அவ யோசனை  சொன்னா.. இப்போ இருக்கிற சூழ்நிலையில் அது சரின்னு படுது. எப்படியும் இன்னிக்கு ஆபீஸ் போக முடியாதுங்கிறது முடிவாயிட்டுது. ஹோம் பத்தி விசாரிச்சு அந்த வேலையையாவது முடிப்போம்னு உன்னைக் கூட்டிட்டு கிளம்பறேன்.." என்ற ரேணு, "ஏம்ப்பா.. வண்டியை எப்போ கிளப்புவே .. " என்று டிரைவரிடம் கேட்டாள்.
"இரும்மா .. இன்னும் நாலஞ்சு பேராவது வரட்டும் .. எனக்கும் கட்டுபடி ஆகணும்தானே " என்றான் டிரைவர்  
"அந்த நாலஞ்சு பேருக்கான  காசை நான் தர்றேன். நீ வண்டியை எடுப்பா!" என்று ரேணு சலிப்புடன் சொல்ல, "அப்படின்னா எனக்கு ஓகே தான்" என்று வண்டியை ஸ்டார்ட் பண்ணினான் டிரைவர். இந்த யோசனை தனக்குத் தெரியாமல் போச்சே என்று மனதுக்குள் நொந்து கொண்டார் ராமச்சந்திரன், அந்த ஆட்டோக்கு இருநூறு முன்னூறு அழறதுக்கு வெறும் எழுபது எண்பது இவனுக்குக் கொடுத்தால் போதுமே என்று மனது கணக்குப் போட்டுச் சொன்னது.
"பெரியவங்க ... ஹோமில் தனியா இருக்க முடியுமா ? எப்பவும் வீட்டில் மகன் மகள் மருமகன்  பேரன் பேத்திகளோடு இருந்து பழக்கப்பட்டவங்க ளாச்சே" - இரண்டு பெண்களுக்குமான சம்பாஷணையில் காதைக் கொடுத்து விட்டு கண்களை வெளிப்பக்கம் ஓட விட்டார் ராம சந்திரன்.
"முடியுமா முடியாதான்னு பட்டிமன்றம் நடத்திப் பார்க்கிற அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை . ஆபீசில் இருக்கிற டென்சன் காணாதுன்னு வீட்டில் இவங்களாலே எனக்கு டென்ஷன் " என்று பொருமினாள் ரேணு.
"வயதானாலே அப்படித்தான் "என்றாள் ராது.
"வயதாக வயதாக பக்குவம் வரணும் .. யாருக்கும் உதவ வேண்டாம். முடிஞ்ச வரை உபத்திரவம் இல்லாமே இருக்கலாமே.காலையில் ஸ்கூல் க்கு  கிளம்பற குழந்தைங்க கிட்டே வம்பு .. அப்புறம் ஆபீசுக்குக் கிளம்பற என் ஹஸ்பென்ட் கிட்டே அங்கே நோகுது இங்கே நோகுது காலை இழுத்துக்கிட்டுப் போகுதுன்னு ஒரு புலம்பல். போன வாரம் காஸ் சிலிண்டர் வந்திருக்குது .. அதுக்கான பணத்தை எடுத்து வெளியில் வச்ச நான் எனக்கிருந்த டென்சனில் காஸ் வரும்னு சொல்ல மறந்துட்டேன். நாந்தான் மறந்துட்டேன்  சரி .. ஒருத்தன் வீட்டு வாசலில் சிலிண்டரோடு வந்து நிக்கிறச்சே கண்ணெதிரே இருக்கிற பணத்தை எடுத்துக் குடுத்துட்டு அதை வாங்கி வச்சிருக்கலாம் தானே. அதை விட்டுட்டு. " அவ ஒண்ணும்  சொல்லலியே .. அவ வந்த பிறகு வா"ன்னு சொல்லி அனுப்பி இருக்கிறாங்க.. மூணு நாளைக்கு முன்னே நான் ஏஜென்சிக்குப் போன்  பண்ணினா அவன் நாய் மாதிரி எரிந்து விழுந்து விஷயத்தை சொல்லுதான். அதைக் கன்பார்ம் பண்ணிக்க இவங்க கிட்டே கேட்டால். " ஆமா... யாரோ ஒருத்தன் அடுப்பைத் தூக்கிக் கிட்டு வந்தான்"னு ரொம்ப அசால்ட்டா பதில் சொல்றாங்க. அவங்க கழுத்தை அப்படியே பிடிச்சு நெரிக்கலாம் போல எனக்கு ஆத்திரம் வருது.. காஸுக்கு புக் பண்ணிட்டு இன்னிக்கு வருமா நாளைக்கு வருமான்னு நாம படற அவஸ்தை பத்தி அவங்களுக்கு நினைப்பே இல்லை.. உடம்பு .. உடம்பு ... இருபத்து நாலு மணி நேரமும் உடம்பு நோகிறதைப் பத்தின புராணம்தான் .. நாம வைத்தியம் பார்க்காமலா இருக்கிறோம்...டாக்டரோ "வயதானவங்களுக் கு மெடிசின்ஸ் ஓரளவுதான் கை கொடுக்கும்"னு சொல்றார். வீட்டில் இவங்க கிட்டே நாம கொஞ்சம் அதிர்ந்து பேசிட்டா போதும் ..உடனே "நானும் போகணும்னு தான் பார்க்கிறேன் .. இன்னும் அழைப்பு வரலையே  பகவானே ... இன்னும் எத்தனை காலமோ"னு புலம்பல் வேண்டியது. அன்னிக்கு நான் எரிச்சல் தாங்காமே, " எம்பத்தஞ்சு  வயசுக்கு மேலே நீங்க அந்த மாதிரி எண்ணத்தில் இருக்கிறேன் .. நான் இப்பவே அப்படி யொரு ஆசையில்தான் இருக்கிறேன்"னு  சொல்லிட்டேன். அன்னிக்கு அவங்க அடிச்ச ரகளை இருக்கே .. அப்பப்பா ... போதும்டா சாமி ... முதலில் அவங்களை சேப்டியா வெளியில்   அனுப்பினால்தான் நான் வீட்டில் நிம்மதியா இருக்க முடியும்..இதை சொன்னால் அவருக்குக் கோபம் பொத்து கிட்டு வருது. "பாவம்டி . அம்மா"ங்கிறார்  , என்னோடு தேவை யில்லாமே சண்டை போடறார் "
இந்தப் பேச்சால் எரிச்சலடைந்த ராமச்சந்திரன்," அம்மா .. உன்னை என் பொண்ணு மாதிரி நினைச்சுகிட்டு சொல்றேன் ... நாளைக்கு உனக்கும் முதுமை வரும் .. அவங்க இடத்தில் உன்னை வச்சுப் பாரு .. அப்ப தெரியும் முதுமையோட வலி .. வயசானவங்க வீட்டில் படுத்தறாங்கனு  ஹோமில் கொண்டு போய்விடணும்னு சொல்றியே .. உன் புருஷனைப் பெத்து வளர்த்து ஆளாக்க அவங்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாங்க .. அதை நினைச்சுப் பாரு .. அந்தக் கஷ்டத்துக்கு முன்னாலே நீங்க படற கஷ்டம் ரொம்ப சாதாரண விஷயம் " என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அவர் பேச்சை இடைமறித்த ரேணு, "என் ஹஸ்பெண்டை இவங்க வளர்த்து ஆளாக்கினாங்கனு உங்களுக்கு சொன்ன அந்த புண்ணியவான் யார் ஸார் ?" என்று கேட்டாள் 
அமைதியாக இருந்தார் ராமச்சந்திரன். "என் ஹஸ்பென்ட் பிறந்த சில நிமிஷ நேரத்திலேயே அவரோட அம்மா இறந்து போயிட்டாங்க . இப்போ நான் பேசிட்டு வர்றது என்னோட அம்மாவைப் பத்தி !" என்ற ரேணுவிடம் "வழக்கமா பெண்கள் மாமியார் கிட்டே சண்டை போடுவாங்க .. நீங்க பேசிக்கிறதை வச்சு  தப்பா நினைச்சிட்டேன்" என்றார் ராமச் சந்திரன்.
"மைண்ட் அப்செட் ஆகிறச்சே மனதில் உள்ளதை கொட்டித் தீர்க்கிறது மனுஷ சுபாவம் .. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஸார்.லேடீஸ் அதிகமா சண்டை போடறது அவங்கவங்க அம்மாகிட்டேதான் !வாக்கு வாதம் ... சண்டை ... இதெல்லாம் இல்லாத இடம் , வீட்டை நீங்க காட்ட முடியுமா ? அப்பா அம்மாவுக்கு நடுவுலே , பேரன்ட்ஸ் பிள்ளைங்களுக்கு நடுவிலே, கணவன் மனைவி, லவர்ஸ் ப்ரெண்ட்ஸ்  அக்கா தங்கை அண்ணன் தம்பி இப்படி  எல்லாருக்குள்ளும் சண்டை வரத்தான் செய்யும் . அதைப் பார்க்கிறப்ப சுத்தி நிக்கிற இந்த பொதுஜனம் "குடும்பம்ன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.. இன்னை க்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க"ன்னு சொல்லி தள்ளி நின்னு ரசிப்பாங்க .. ஒரு மாமியார் மருமகளுக்குள் ஒரு வாக்கு வாதம் வந்தால் போதும் . உடனே, அதை நிரந்தர பிரிவாக்க அக்கம் பக்கம் உள்ளவங்க ஆயிரம் யோசனை சொல்வாங்க.. அழையா விருந்தாளியா அந்தக் குடும்பத்துக்குள் புகுந்து நாட்டாமை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க . அவங்க சேர்ந்து குப்பை கொட்ட நினைச்சாலும் இடையிலுள்ள இவங்க குடும்பத்துக்குள் புகுந்து நாட்டாமை பண்ணுவாங்க .. நீங்க நல்ல மனுஷர் ..அதனாலே பொறுத்துப் போக சொல்லி எனக்கு அட்வைஸ் பண்றீங்க.. இதே இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் "ஒத்துப் போகாட்டா அறுத்து விட்டுட்டு வா"னு யோசனை சொல்லி இருப்பாங்க.. வீட்டிலுள்ள வங்க அறுவை தாங்க முடியாமே வெளியில் வந்தால், இங்கே இன்னும் கொடுமையடா சாமி. என்னவோ ஆம்பிளைப் பிள்ளைங்களைப் பெத்தவ ங்க அவங்களைக் கஷ்டப்பட்டு ஆளாக்கி இருப்பாங்கன்னு ஆளாளுக்கு ஜோஸ்யம் சொல்றீங்களே, பொம்பளைப் பிள்ளைங்களை "சூ . மந்திரக் காளி " போட்டா வளர்க்கிறாங்க ? சினிமாவில் டைட்டில் போடறதுக்கு முன்னாடி பிறக்கிற குழந்தை டைட்டில் முடிஞ்சதும் வாலிபப் பிராயத் தில் இருக்கிற மாதிரி காட்டுவாங்க .. ஒரே ஒரு பாட்டு சீனில் ஒரு குழந்தை பெரிசாகி விடும் .. அந்த மாதிரிதான் பொம்பளைப் பிள்ளைங்க வளர்ற மாதிரி பேசறீங்க !" என்று ரேணு பொரிந்து தள்ள, வண்டியின் முன்பக்கமிருந்த கண்ணாடியில் பின் சீட்டில் இருந்தவரைப் பார்த்தான் டிரைவர் . அந்தப் பார்வை " இது உனக்கு தேவைதானா வாத்தியாரே ?" என்று கேட்பது போல இருந்தது .  

No comments:

Post a Comment