Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 25, 2013

Scanning of inner - heart (Scan Report Number - 091 )

                                       இப்படியும் சில அசடுகள் !
" என்னங்க, காலையில் எழும்பும்போதே தலை சுத்துதுன்னு சொன்னீங்க. இப்போ இவ்வளவு தடபுடலா எங்கே கிளம்பறீங்க ?"
"நேத்து பத்மநாபன் பேத்தி வந்து சொல்லிட்டுப் போன விஷயமா அவனைப் பார்த்து பேசிட்டு வரத்தான் " என்று பதில் சொன்னார் சங்கரன்.
"அதை போனிலேயே பேசலாமே "
"இல்லேம்மா. நேரில் போய் பேசினால்தான் ஒரு எபக்ட் இருக்கும். பத்துவை மைலாப்பூர் குளம் பக்கத்தில் வெயிட் பண்ண சொல்லி யிருக்கிறேன். பேசிட்டு சாமி தரிசனம் முடிச்சுட்டு நான் வந்து சேர நாழியாகும். எனக்காக காத்திருக்காமே சாப்பிடு. மறக்காமே மாத்திரை போட்டுக்கோ. மரகதம், நீ மாத்திரை போட்டுக்கறதுக்கு முன்னாடி மறக்காமே கதவை தாள் போட்டுக்கோ " என்ற சங்கரன் அங்கிருந்து நகர்ந்தார்.
சங்கரன் போய் சேருவதற்கு முன்பாகவே அங்கு காத்திருந்தார் பத்மநாபன்.
"என்னப்பா, என் பேத்தி விஷயமா பேசத்தானே வர சொன்னே ? " என்று கேட்டார் பத்மநாபன், சங்கரனைப் பார்த்ததுமே.
"அது எப்படி உனக்குத் தெரியும் ? " 
"நேத்து வந்து உன்னைப் பார்த்த விஷயத்தை மீனா என்கிட்டே சொன்னா. அவசியம் என்னைப் பார்த்துப் பேசியே ஆகணும்னு நீ எனக்குப் போன் பண்ணினே. எங்க வீட்டில் ஓடிட்டு இருக்கிற பிரச்சினையும் எனக்குத் தெரியும். எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்து கேள்வி கேட்டேன்.  என்ன நான் கேட்ட கேள்வி சரிதானே ? "
"இப்போ நானே ஒரு குழப்பத்தில் இருக்கிறேன் "
"என்ன ? "
"பெண்ணியம், பெண் கல்வி, பெண் உரிமை பத்திப் பேசற பத்மநாபன் எங்கே போனார் தெரியலியேன்னு "
"அப்புறம் ? "
"பெண் குழந்தைகளுக்கு படிப்பு ஒன்றுதான் மிகப் பெரிய சொத்துன்னு மேடை போட்டுப் பேசற நீ, உன்னோட பேத்தி விஷயத்தில் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே ? ' படிப்பும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நீ கல்யாணம் பண்ணிட்டுப் போ'ன்னு சொன்னியாமே. ஏன் ? "
"சங்கரா, நான் அவளைப் படிக்க வேண்டாம்னு சொல்லலே. டீச்சர் ட்ரைனிங்  படிக்கப் போறேன்னு சொன்னா. அதைத்தான் வேண்டாம்னு சொன்னேன். அதைத் தவிர டாக்டர், எஞ்சினீயர், லாயர் இப்படி எது வேணும்னாலும் படிக்க வைக்க நான் ரெடி "
"ஏன், உன்னோட பிள்ளை லாயர். வீட்டுக்கு வந்த   மாட்டுப் பொண்ணு டாக்டர். அதனாலேயா  ? டீச்சர் தொழிலும் நல்ல தொழில்தானே. அந்த ஜாப்க்கு நாட்டில் எவ்வளவு மரியாதை இருக்கு "
"இப்போ சொன்னே பாரு, டீச்சர்  ஜாப்க்கு நாட்டில் எவ்வளவு மரியாதை இருக்குன்னு. அந்த தொழிலுக்கான மரியாதை இவளாலே கெட்டுடக் கூடாதுன்னு தான் நான் அவளைத் தடுக்கிறேன் "
"என்ன சொல்றே ?"
"தகுதி இருக்கு , கோட்டாவில் எனக்கு இந்த கோர்ஸ்ஸில் ஈசியா இடம் கிடைச்சிடும்னு கிடைக்கிற ஒன்றை எல்லாரும் கெட்டியா பிடிச்சுக்க ஆசைப் படறதில் தப்பே இல்லைதான் . தகுதி திறமை இருந்தால் எந்த வேலையையும் செய்திடலாம். ஆனா டாக்டர்  டீச்சர் வேலைக்கு வர்றவங்களுக்கு சேவை மனப்பான்மை கண்டிப்பா அவசியம். அதுவும் டீச்சர் வேலைக்கு வருகிறவங்க மற்றவங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணமா வழிகாட்டியா இருக்கணும் . டீச்சிங் என்கிறது ஒரு புனிதமான லைன். அந்தத் தொழிலை செய்கிறவங்க எல்லாரும் அதற்குத் தகுந்த மாதிரி நடந்துக்கிறாங்களா என்பதைப் பற்றி பேச நான் தயாரா இல்லை. ஆனா, மீனாவால் நல்லவொரு டீச்சரா ஷைன்  பண்ணவே முடியாது " 
"புரியும்படி சொல்லு "
"குடம் பாலை உறைய செய்ய துளி மோர் போதும்.நான்கு மணி நேரத்தில் பாலை தயிராக்கிடும். பெண் குழந்தையை கட்டுப்பாடா வளர்க்கணும்னு நானும் என் மனைவியும்  ரொம்ப உஷாரா இருந்தோம். கிட்டத் தட்ட ஒரு பதினேழு வருஷம் நல்லாத்தான் இருந்தா. ஒரே ஒரு வருஷம் மும்பை க்கு  போய் நாங்க என்  பொண்ணு வீட்டில் இருந்திட்டு வந்தோம். இந்த ஒரு வருஷத்தில் அவளோட பழக்கவழக்கம் எல்லாம் இங்கே  தலைகீழா மாறியிருக்கு. 'வேலை வேலை'ன்னு மகனும் மருமகளும் வீட்டுக் கவனமே இல்லாமே இருந்திருக்கிறாங்க. இவ எது செய்தாலும் கேட்க ஆள் இல்லைங்கிற மிதப்பில் ரொம்ப  சோம்பேறியா மாறிட்டா. அதை விட மோசம்  அவ ஒரு சுயநலப் பிசாசா இருக்கிறதும் எதற்கும் எடுத்தெ றிந்து பேசறதும்தான்  "
"அவ படிக்க வேண்டாம்னு நீ சொல்றதுக்கு இது ஒரு காரணமா ? "
"அவளைப் படிக்க வேண்டாம்னு சொல்லலே . டீச்சர் ட்ரைனிங் தான் வேண்டாம்னு சொன்னேன் "
"அதுதான் ஏன் ? "
"டீச்சரா இருக்கிறவங்க குழந்தைகளுக்கு நல்லதொரு ரோல் மாடலா இருக்கணும். எங்க அம்மா ஒரு டீச்சரா இருந்தவங்க தான். பேச்சு செயல் மற்ற நடவடிக்கைகளில்  குழந்தைங்க முன்னாடி ரொம்ப கேர் புல்லா இருப்பாங்களாம். தினமும் மதிய வேளை சாப்பாட்டுக்கு உட்காருவதற்கு முன்னாலே தன்னோட வகுப்பிலுள்ள எல்லாக் குழந்தைகளும் சாப்பிட்டாங்களானு கவனிப்பாங்களாம்.   ஏதாவது ஒரு குழந்தை சாப்பிட லைன்னு தெரிஞ்சா உடனே தன்னோட சாப்பாடை ஷேர் பண்ணி சாப்பிடுவாங்களாம். இதெல்லாம் மற்ற டீச்சர்ஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும் . ஆனா, மீனா கிட்டே இந்த மாதிரி எந்தவொரு நல்ல பழக்கமும் இல்லே. நாலு பேர் சேர்ந்து இருக்கிற ஒரு இடத்திலே ஒரு மரியாதைக்காகவாவது மற்றவர்களை சாப்பிடக் கூப்பிடணும்ங்கிற சின்ன விஷயம் கூட அவளுக்குத் தெரியலே . அந்த மாதிரியான சின்ன சின்ன நாகரிகம் கூட இவளிடத்தில்  இல்லே. ஆணவம் எடுத்தெறிந்து பேசறது  எல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணமா போச்சு "
" என்ன பத்து நீ, இதெல்லாம் சின்ன விஷயம் " என்றார் சங்கரன் 
"நான் ஒன்று சொல்கிறேன் கேளு. அந்தக் காலத்தில் அரச குடும்பத்துக்கு தனி மருத்துவர் சமையல்காரர்  குதிரைப் பாகன் தேரோட்டி எல்லாரும் அந்த அரண்மனையில் இருப்பாங்க. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சேவகம் செய்வாங்க. ஆனா படிப்பு விஷயத்தில் மட்டும் குரு இருக்கிற இடத்தைத் தேடி ராஜகுமாரன் போவான் படிப்பதற்காக. ராஜா நினைச்சா அந்த குருவை தன்னோட  அரண்மனைக்கு வந்து பாடம் நடத்துன்னு சொல்லி யிருக்கலாம். அவ்வளவு பவர் இருந்தும் குரு இருக்கிற இடம் தேடி குழந்தைகளை  அனுப்ப என்ன காரணம்னா, குருமார்கள் துறவு நிலையில் இருப்பவங்க . விருப்பு வெறுப்பு இல்லாதவங்க. எளிய வாழ்க்கை வாழ்கிறவங்க. அந்த மாதிரி சூழ்நிலையில் கல்வி கற்றால்தான் பிற் காலத்தில் ராஜகுமாரன்  நல்லதொரு அரசனாக வருவான் என்கிற காரணத்துக்காகத்தான். நம்ம வீட்டில் கற்றுக் கொள் வதை விட ஸ்கூலில்தானே    நல்ல விஷயங்களைக் கத்துக்கிறாங்க. இதே மீனா குழந்தையா இருக்கிறப்போ, சாப்பிடும் முன்னாலே கை கழுவிட்டுத்தான் சாப்பிடணும்னு  நான் பலமுறை சொல்லியிருக்கி றேன். கையில் அடித்திருக்கிறேன். அவ அதை கேர் பண்ணினதே இல்லை. ஆனா திடீர்னு யாரும் சொல்லாமலே கைகால் அலம்பிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தா. எங்களுக்கு ரொம்பவும் ஆச்சரியம். அவளே சொன்ன செய்தி, சாப்பிடும் முன்னாலே   கை கழுவணும்னு  எங்க டீச்சர் சொல்லியிருக்கிறாங்க என்பதுதான். இவ்வளவு ஏன், டீவீயில் ஒரு விளம்பரம் வரும்,  படை சொறி மருந்துக்கான விளம்பரம். குழந்தை களுக்கு  உடற்பயிற்சி சொல்லிக் குடுக்கிற டீச்சர் தன் உடம்பில் அரிப்பை சொரிய குழந்தைகளும் அதே மாதிரி சொரிவார்கள். ஏனென்றால் டீச்சர் பண்ணுகிற ஒவ்வொரு விஷயமும் அவர்கள் மனதில் ஆழமா பதிஞ்சிடுது. சாதாரண பழக்க வழக்கத்தில் கூட மற்றவங்க பார்த்து விமரிசனம் பண்ணுகிற அளவுக்கு மோசமாக  நடந்துக்கிற இவ,  டீச்சர் ப்ரொபசனுக்குப்  போனா அந்த தொழிலுக்கு உள்ள மரியாதையே போயிடும். வருங்காலத் தலைமுறையில் ஒரு பகுதி ஆடுமாடு மாதிரிதான் இருக்கும். அப்படியொரு பாவத்தை நாம தேடி வைக்க வேண்டாம்னுதான் அவளை வேறு ஏதாவது படிக்க சொல்கிறோம். செய்கிற எல்லா தொழிலும் புனிதமானதுதான்.  ஒரு டாக்டர் தப்பு பண்ணினா ஒரு தனிப்பட்ட மனிதன் பாதிக்கப் படுவான்  ஒரு லாயர் தப்பு பண்ணினா யாரோ ஒரு சிலருக்குதான் நஷ்டம் . ஆனா ஒரு டீச்சர் தப்பு பண்ணினா அது ஒரு சமுதாயத்தையே பாழ் பண்ற மாதிரி. சங்கரா, நீ இன்னொரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். அவ டீச்சர் வேலைக்கு படிக்கப் போறேன்னு சொல்றது அந்தத் தொழில் மேலே உள்ள ஆர்வத்தாலே இல்லை. பிளஸ் டூ படிச்ச பிறகு மேற்கொண்டு ஏதாவது படிச்சு வேலைக்குப் போகணும்னு நாங்க சொன்னோம்.டாகடர் இஞ்சினியர் லாயர்ன்னா  நாலஞ்சு வருஷம் படிக்கணும்.ஆனா  டீச்சர் வேலைக்கு அப்படி இல்லைங்கிறதை கணக்குப் பண்ணித்தான்  அந்தப் படிப்பை படிக்கிறேன்னு சொல்றா. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந் தே  நாட்டுக்காக உழைத்த குடும்பம் எங்க குடும்பம்னு ஒரு பேர் ஒரு மரியாதை இருக்கு. இது அவளாலே கெட்டுப் போக  வேண்டாம்னு நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு சங்கரன் முகத்தைப் பார்த்தார் பத்மநாபன்.
எந்தவொரு உணர்ச்சியும் இல்லாது மழைக்குப் பிறகு வெளிறிக் கிடக்கும் வானம் போல வெளுத்திருந்தது சங்கரனின் முகம்.

No comments:

Post a Comment