Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 25, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 71 )

                            அவரவர் கவலை அவரவர்க்கு !

காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் " அப்பா , ஈஸ்வரா. போதும்டா சாமி பட்ட பாடு . இனி ஏழேழு ஜன்மத்துக்கும் எனக்கு வீடு கட்டும் ஆசை வரக்கூடாதுப்பா ! " என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டார் கணேஷன்.
" படிச்ச முட்டாள்ன்னு சொன்னா அது நான்தான் . ஏமாந்தவங்க அனுபவத்தை  பக்கம் பக்கமா பத்திரிக்கைக் காரங்க எழுதுறாங்க . டிவியில் படம் பிடிச்சுக் காட்டுறாங்க. ஏமாறாமல் இருக்க என்னென்ன செய்யலாம்னு வாய் கிழிய கத்தறாங்க. அத்தனையையும் படிச்சிட்டும், கண்ணாலே பார்த்திட்டும், போயும் போயும் ஒரு கத்துக்குட்டி பில்டர் கிட்டே  ஏமாந்தேன்னு சொன்னா என்னை  விட  மடையன் ,  வடிகட்டின முட்டாள் வேறு யாருமே இருக்க முடியாது" என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார் கணேஷன்.  " காய்கறி வாங்கிட்டு வர்றேன்" னு கணேஷன் சொன்னால்  போதும் . உடனே " இதோ பாருங்க , உங்களுக்கு ஆபீஸ் வேலை , அங்கிருக்கிற பைல் , இதை விட்டா வேறு எதுவும் தெரியாது . குப்பையில் போட எடுத்து வச்சிருக்கிற காய் எல்லாத்தையும் கடைக்காரன் உங்க தலையில் கட்டி அனுப்பிடுவான் . வீட்டில் எனக்கு தலைபோற வேலை எதுவும் இல்லை. அதனாலே நானே போய் வாங்கிக்கிறேன் " என்பாள் காமு. கட்டின பொண்டாட்டிகிட்டே இவ்வளவு நல்ல பேர் வாங்கியிருக்கிற நான், அவளைக் கேட்காமல் வீடு கட்ட முயற்சி எடுத்தது என் தப்புதானே என்று நொந்து கொண்டார் கணேஷன். தன் வருத்தத்தை தன்னோடு கூட வேலை பார்க்கிற முத்து கிட்டே அடிக்கடி அவர்  சொல்லும் போதெல்லாம் " அட, நீங்க ஒண்ணு ஸார், அந்த ஏக பத்தினி விரதன், சாட்சாத் ராமனே, சீதைகிட்டே  நல்ல பேர் வாங்க முடியலியே. உன்கூட இருக்கிறதை விட மண்ணுக்குள்ளே போறது பெட்டெர்ன்னு சொல்லிட்டு பூமா தேவிகிட்டே சரண்டர் ஆயிடலையா " என்று கமாண்ட் அடிப்பார். இப்படி சொல்றதாலே அவரை நாஸ்திகன்னு நினைச்சிடாதீங்க. மனுஷன் பக்கா ராம பக்தன். ஆஞ்சநேயருக்கு அடுத்தபடி இவரை சொல்லலாம். அந்த அளவுக்கு ராம பக்திமான் .
" நான் பண்ணின ஒரே தப்பு, யார்கிட்டேயும் ஆலோசனை கேட்காமல் வீடு கட்ட முடிவெடுத்ததுதான் " என்று தன்னை நொந்து கொண்டார் கணேஷன். 
மனுஷன் கொட்டாவி விட வாயைத் திறந்தாலே போதும் , உடனே, நம்ம கிட்டே ஏதோ கேட்கிறார் போலிருக்குன்னு ஓடி வந்து ஆலோசனை சொல்ல ஆட்கள் மலிந்து கிடந்தும் அவங்க கிட்டே கேட்காமே  ரகசிய முடிவெடுத்தது, தன்னைக் கிண்டல் பண்ற அத்தனை பேர் கிட்டேயும் தான் வீடு கட்டி முடித்து விட்ட விசயத்தை சொல்லி வாய் பிளக்க வைக்கணும் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காகத்தான். ஆபீசில் லோன் அப்ளை  பண்ணும் போது கூட , " நானா சொல்ற வரை , நான் வீடு கட்டும் விஷயம் லீக் ஆகிடாமே பார்த்துக்கணும்  " என்று கேட்டிருந்ததால், நெருங்கிய நண்பர்களுக்கும், வீட்டு மெம்பர்களுக்கும், வீடு கட்டுகிற விஷயம் தெரியாமலே போய்விட்டது .
பூமி பூஜை பண்ணுகிற தினத்தில்தான் மனைவியிடம் விஷயத்தை சொன்னார். அது கூட பூஜைக்கு அவளும் கூட இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் தான். அவர் எதிர் பார்த்ததுபோல, காமு அவர்கிட்டே சண்டையெல்லாம் பிடிக்கலே." உங்களுக்கு சாமர்த்தியம் போதாதுன்னா. ஆளான ஆளுங்களுக்கே  தண்ணி காட்டுறதில் அவனுக கை தேர்ந்தவனுகளா இருப்பானுக.அபசகுணமா பேசறேன்னு நினைக்காதீங்க . உஷாரா இருங்க " என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். எண்ணி ஆறு மாசத்தில் வீட்டை முடித்து விடுவேன்னு பில்டர் சொல்லியிருந்ததை நம்பி குடியிருக்கும் வாடகை வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வாடகையாக கழிக்க ஆரம்பித்தாயிற்று .ஒன்பது மாசம் முடிந்த  பின்னும் வீடு முடிந்த பாடில்லை .ஒவ்வொரு தாமதத்துக்கும் ஒவ்வொரு காரணம் சொன்னார் பில்டர் . லேபர் தட்டுப்பாடு , மெட்டீரியல் விலை ஏறிட்டுது . ஈபிகாரன் பிரச்சினை பண்றான்னு. எல்லாம் நம்பும்படி இருந்ததால் அவனைத் தட்டிக் கேட்க வழியில்லை . தட்டிக் கேட்டால் தலை மறைவாகி விடுவானோ என்ற பயம் . 
பத்து மாதம் பொறுமை காத்த வீட்டு ஓனர் " ஸார் . அடுத்த மாசம் நீங்க வீட்டைக் காலி பண்ணாட்டா சாமான் செட்டை தூக்கி வெளியில் வச்சிடுவேன் . இப்போ நல்லபடியா சொல்றேன் . அடுத்த மாசம் நான் கோபமா சொல்லும்படி வச்சிடாதீங்க " என்று சொல்லிவிட்டுப் போனார்.
இதைக் கேட்டு காமு அழவே ஆரம்பித்து விட்டாள் " ஈஸ்வரா , இது என்ன கருமம் ? இதை நாங்க எங்கே கொண்டு போய்த் தொலைக்க ? " என்று புலம்ப ஆரம்பித்தாள் . அப்போதுதான் கணேஷன் மூளையில் மின்னல் வெட்டியது .
"விஸ்வநாதா, இந்த மாசத்துக்குள் வீடு கட்டி முடிந்து, அதில் நான் குடியேறி விட்டால் உன் சன்னதிக்கு, காசிக்கு வந்து, உனக்கு நன்றி சொல்றேன் "னு மனமுருகி வேண்டிக் கொண்டார் . காசி விஸ்வநாதன் அருளா , அல்லது வேறு யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி  வலிய வந்து இந்த பில்டர் கிட்டே மாட்டினானா  என்பது தெரியவில்லை .  அந்த மாதமே வீட்டு சாவியை கணேசனிடம் ஒப்படைத்தார் பில்டர் . அக்ரீமென்ட் படி டூரிஸ்டோடு சேர்ந்து காசிக்கு வந்து  பிரார்த்தனையை முடித்துக் கொண்டார் கணேஷன். டூரிஸ்ட்களின் அடுத்த இலக்கு ஆக்ரா . தாஜ் மஹாலுக்குள் நுழைந்ததுமே அந்த பிரமாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்றார்கள் பயணிகள் .
" உலக அதிசயத்தில் ஒண்ணுன்னு சும்மாவா சொல்றாங்க . காரணத்தோடு தான் சொல்றாங்க " என்று ஒருவர் சொல்ல, " என்னடா , நாம் இங்கேயே தங்கிடலாமா ? " என்று ஒரு இளம் ஜோடி பேசிக் கொண்டிருக்க, தாஜ் மஹால் எந்த ஆண்டு, யாரால் கட்டப் பட்டது , எவ்வளவு பொருள் செலவானது , என்பது போன்ற விவரங்களை, வாங்கின காசுக்கு வஞ்சனையில்லாமல் சொல்லிக் கொண்டு வந்தார் கைடு . அவரவர் மனதில் பட்ட சந்தேகங்களை கைடிடம் கேட்க, எல்லோருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கைடு.
" என்ன ஸார் நீங்க எதுவுமே கேட்கலியே ? " என்று கணேசனிடம்  கைடு கேட்க, " எல்லாம் தெரிந்தவனுக்கும் சந்தேகம் வராது . எதுவுமே தெரியாதவனுக்கும் சந்தேகம் வராது . இதில் நீங்க எந்த ரகம் ? " என்று இளம் ஜோடி குறும்பாகக் கேட்க சுற்றி நின்றவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள் 
" ஷாஷகானை நினைச்சா எனக்கு பரிதாபமா இருக்கு சார். இவ்வளவு பெரிய பில்டிங்கை கட்டி முடிக்கிறதுக்குள்  அந்த பில்டர்கிட்டே மாட்டிகிட்டு எப்படியெல்லாம் பரிதவிச்சாரோ தெரியலை  " என்று கணேஷன் சொல்ல , சுற்றி நின்ற கூட்டம் வாயடைத்து நின்றது . கணேஷன் ஷாஷகானைப் பற்றிய கவலையில் ஆழ்ந்தார் .

No comments:

Post a Comment